நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோல்வியைத் தழுவினார். அதனைத் தொடர்ந்து ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயற்சித்தார். அதுவும் தோல்வியைத் தழுவியது. அதன்பிறகு தற்போது நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று திரும்பவும் ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ளார். அதுவும் கடந்த இருபதாண்டுகளில் குடியரசு கட்சி பெற்றிராத வியத்தகு வெற்றியுடன் இதனை அரங்கேற்றியுள்ளார். பரந்த மக்கள் நேரடியாக அளித்த வாக்கின் அடிப்படையிலும் வெற்றிபெற்ற குடியரசு கட்சியின் முதல் அதிபராகவும் அவர் மாறியுள்ளார். இதன்மூலம் குடியரசு கட்சி செனட்டிலும் காங்கிரசிலும் தனது கட்டுப்பாட்டைப் பெற்றுள்ளது. இது டிரம்ப் 1.0-வை விட டிரம்ப் 2.0 வை அதிக வலிமை உடையதாக்கும். அதன்மூலம் அவரது வெறித்தனமான இனவாத, ஏகாதிபத்திய வலதுசாரி நிகழ்ச்சி நிரலை தீவிரமாக மேற்கொள்ள மேலும் கூடுதல் சாதகமான நிலைமையை அவருக்கு வழங்கும். ஜனநாயக கட்சியைப் பொறுத்தவரையில், இந்தத் தேர்தல் முடிவுகள் தெளிவாகவே அவர்களது மிகமிக மோசமான தோல்விகளில் ஒன்றாகும். டிரம்ப்புடன் நிகழ்ந்த மூன்று அடுத்தடுத்த போட்டிகளில் இதுதான் ஜனநாயக கட்சியின் இரண்டாவதும், மிகவும் தீர்மானகரமான, ஒருங்கிணைந்த தோல்வியுமாகும். அமெரிக்க மக்கள், டிரம்ப் அதிபர் பதவியும் அதன் பேரழிவு தரவல்ல பின்விளைவுகளுக்கும் தாக்கங்களுக்கும் ஒரு திறன்மிக்க பதிலை தற்போது கண்டுபிடித்தாக வேண்டும். ஜனநாயக கட்சியின் வரம்புக்குட்பட்ட, வீழ்ந்து கொண்டிருக்கும் வலிமைக்கப்பால் இதனை அவர்கள் தேடியாக வேண்டும்.

2020 இல் டிரம்பின் குறுகிய தோல்விக்கு அவர் பெருந்தொற்றை தவறாகக் கையாண்ட விதம் முக்கியப் பங்காற்றியது. இந்த முறை ஜனநாயக கட்சியின் தோல்விக்கு பிடன்-ஹாரிஸ் நிர்வாகத்தின் மோசமான பொருளாதார சாதனை காரணமாகியது. பெருந்தொற்றுக்குப் பிந்தைய பெரும பொருளாதாரத்தின் மீட்சி குறித்த புள்ளியியல் கூற்றுகள் அதிகரித்துவரும் வாழ்க்கை செலவு, தேங்கிப்போன வருமானம் ஆகியவற்றுக்குக் கீழே தள்ளாடிக் கொண்டிருந்த அமெரிக்க உழைக்கும் மக்களிடையே சிறு அசைவை மட்டுமே ஏற்படுத்தியது. அதிகரித்த வறுமை, வீடின்மை, ஆழமான சமூக, பொருளாதார பாதுகாப்பின்மை ஆகியவற்றால் வாட்டப்பட்டு வதைபடும் பெருவாரியான மக்களைப் பற்றி குறிப்பிட வேண்டியதில்லை. தற்பெருமை கொண்ட ஜனநாயக கட்சியினர் உழைக்கும் மக்களின் கோபத்தையும் கவலைகளையும் போக்குவதைப் பற்றி கவலைப்படவில்லை. உழைக்கும் மக்களின் இந்தப் பாதுகாப்பின்மையை டிரம்ப் பரப்புரையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளவும், சட்ட விரோதமாக புலம் பெயர்ந்தவர்கள் என்ற பூச்சாண்டிக்கு எதிராக இந்தப் பாதுகாப்பின்மையை நிறுத்தவும் ஜனநாயக கட்சியினர் தவறவிட்டுவிட்டனர். இதன் முடிவுகள் இந்த ஒட்டுமொத்த உலகத்தின் கண்களுக்கும் தற்போது காணக் கிடைக்கிறது. அமெரிக்க மக்கள் ஏற்கனவே டிரம்ப் 1.0 இன் கசப்பை அனுபவித்துள்ளனர். தற்போது டிரம்ப் 2.0 வின் வடிவிலான மிகப்பெரிய பேரழிவை எதிர்கொள்ளும் பாதுகாப்பற்ற நிலையில் அவர்கள் உள்ளனர்.

பெருமளவிலான எண்ணிக்கையில் புலம் பெயர்ந்தவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவது என்ற அவரது வாக்குறுதியை நிறைவேற்றுவதே டிரம்பின் மிகப்பெரிய நிகழ்ச்சி நிரலாகும். மிகப்பெரிய அரசு எந்திரத்தை ஈடுபடுத்தியும் மிகத் தொன்மையான அன்னிய எதிரிகள் சட்டம் 1798 உள்ளிட்ட அனைத்து வகைப்பட்ட சட்டங்களையும் பயன்படுத்தியும் அவர் இதனை அமல்படுத்த முயற்சிப்பார். கோடிக்கணக்கான மக்கள் இதற்கு இலக்காவார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அமெரிக்கக் கூட்டாட்சி முறையின் நிறுவனக் கட்டமைப்புத் தடுப்புகளைக் கணக்கில் கொண்டால் இந்த அளவிற்கு மக்களை வெளியேற்றுவது அவ்வளவு எளிதாக செய்ய முடியக் கூடியதல்ல. ஆனால் இதன்மூலம் கட்டவிழ்த்து விடப்படும் அன்னிய வெறுப்பு, இனவெறிவாதம், இஸ்லாமிய வெறுப்பு ஆகியவற்றால் கறுப்பர்கள், முஸ்லிம்கள், வெள்ளையர் அல்லாதவர்கள், பொதுவாக புலம் பெயர்ந்தவர்கள் ஆகியோர் வெள்ளை மேலாதிக்கவாத வெறுப்பினாலும் வன்முறையினாலும் பாதிப்புக்குள்ளாவார்கள். முதலில் 2016 இல் ஹிலாரி கிளின்டன் மீதும் எட்டாண்டுகளுக்குப் பிறகு தற்போது கமலா ஹாரிஸ் மீதும் அவர் அப்பட்டமான பெண் வெறுப்பு அரசியலை மேற்கொண்டார். இத்தகைய பெண் வெறுப்பு அரசியலுடன் டிரம்பிற்கு கிடைத்த இந்த வெற்றி அமெரிக்க அரசியலில் ஆழமாகப் படிந்துள்ள ஆணாதிக்க சிந்தனையையும் நன்கு வெளிப்படுத்துகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் உலகம் முழுவதற்கும் தொடர்ந்து நிச்சயமான எதிர் விளைவுகளை ஏற்படுத்துகின்றது. பல்லாண்டுகளாக அதன் பொருளாதாரம் சரிவை சந்திக்கிற போதிலும் அமெரிக்கா, உலகின் மிகப்பெரிய இராணுவ வல்லரசாகத் தொடருகிறது. மேலும் உலகை மேலாதிக்கம் செய்யும் அதன் கொள்கைகள் உலகம் முழுவதும் போர்களை, இனப்படுகொலைகளை, அடக்குமுறை ஆட்சிகளை வழங்குகிற அதன் அரசியல்-இராணுவ போர்த்தந்திரத்தை சுற்றிச் சுழலுகிறது. ஜனநாயக வாக்காளர்களின் ஏமாற்றத்திற்கு முக்கியக் காரணம் என்னவென்றால், இந்தத் தீவிர ஏகாதிபத்திய, மேலாதிக்கவாத வெளியுறவுக் கொள்கையில் குடியரசு கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையேயுள்ள இருதரப்பு ஒப்பந்தமாகும். இது இஸ்ரேல் மூலம் பாலஸ்தீனியர்கள் தொடந்து படுகொலை செய்யப்படுவதில் வெளிப்படுகிறது. தேர்தல் பரப்புரை இயக்கத்தின் போது கூட முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் காசாவில் நடத்தப்படும் இனப்படுகொலையை நியாயப்படுத்தினார். அதனை 'வேறுவழியில்லாத' இஸ்ரேலின் எதிர்வினை என்கிறார். அதனை வரவழைத்து கொண்டதற்காக ஹமாஸ் இயக்கத்தினர் மீது குற்றம் சுமத்துகிறார். ஜனநாயகக் கட்சியினருக்கு பரந்த மக்கள் நேரடியாக அளித்த வாக்கின் எண்ணிக்கை 2020 இல் 8.1 கோடி என்பதிலிருந்து 2024 இல் 7 கோடியாக குறைந்து போனது குறித்து ஆச்சரியப்படத் தேவையில்லை தான்.

இந்தியாவில் சங்கிப் படையினரும் மோடி ஆதரவு அமெரிக்க வாழ் இந்தியர்களும் டிரம்புக்கு உரத்த ஆதரவாளர்களாக உள்ளனர். டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு திரும்பவும் வந்துள்ளதால் அவர்கள் அதீத மகிழ்ச்சி அடைந்துள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஏற்கனவே புலம்பெயர்ந்து சென்றவர்களும் புலம்பெயர்ந்து செல்ல விருப்பம் உள்ளவர்களும் டிரம்பின் குடியேற்ற எதிர்ப்பு கொள்கைகளுக்கும் அரசியலுக்கும் முதன்மை குறியாக உள்ளனர். இருந்த போதிலும் கூட மோடி அரசாங்கம் அதே வாய்ச்சவடாலை தானும் செய்ய முயற்சிக்கிறது. அதேபோன்ற செயல்திட்டத்தை இந்தியாவில் மேற்கொள்ளவும் அது விரும்புகிறது. நவ அடிப்படைவாத சமூக செயல்திட்டம், நவ தாராளவாத பொருளாதார திசைவழி, பாசிச ஆட்சி முறை ஆகியவை இன்றைய உலகில் உலகளாவிய அதிதீவிர வலதுசாரிகளின் வரையறையாக உள்ளன. இவற்றை செயல்படுத்துவதிலும் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைப் போருக்கு வழங்கும் ஆதரவின் அடிப்படையிலும், நீண்டகால நோக்கிலான இந்திய-அமெரிக்க கூட்டுறவுக்கு அச்சாணியாக டிரம்ப்-மோடி இடையேயான நல்லிணக்கம் திகழும். 

அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு நாட்டிலுமுள்ள ஜனநாயக சக்திகளுக்கும், சமூக, பொருளாதார, காலநிலை நீதிக்கான சக்திகளுக்கும் ஜனநாயகக் கட்சியின் தோல்வி, டிரம்பின் வெற்றியிலிருந்து கற்றுக்கொள்ள முக்கிய பாடங்கள் உள்ளன. பாசிச சக்திகள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டுமானால் அல்லது அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலிருந்து அவர்களை விலக்கி வைக்க வேண்டுமானால், ஜனநாயகம் குறித்து ஆசை வார்த்தைகளைக் கூறுவதோடு மட்டுமே பாசிச எதிர்ப்பு அரசியல் சுருங்கிப் போய்விடக் கூடாது. மாற்றத்திற்கான பார்வைகளில், முன்னுரிமைகளில் பாசிச எதிர்ப்பு நங்கூரமிட்டுக் கொண்டிருக்க வேண்டும். மேலும் அமைதி, நீதி, மானுட நல்வாழ்வு, மனித உரிமைகள் ஆகியவற்றுக்கான பரந்துபட்ட மக்களின் தேடலில் இருந்து பாசிச எதிர்ப்பு ஆற்றலை வரவழைத்து கொள்ள வேண்டும். அப்போது மட்டுமே பாசிச எதிர்ப்பு வெற்றிபெற முடியும். டிரம்ப், மோடி, நெதன்யாகு என்ற மூவர் கூட்டணி ஏகாதிபத்தியம், இனப்படுகொலை, அந்நியர் வெறுப்பு, கார்ப்பரேட் கொள்ளை, சர்வாதிகார ஆட்சி ஆகிய பேரழிவுகளின் தொகுப்பை நம்மீது சுமத்த வரும். எனவே உலகம் முழுவதிலும் உள்ள ஜனநாயக சக்திகள், இந்த பேராபத்தான பாதையிலிருந்து இந்த உலகைக் காப்பாற்ற ஒருமைப்பாட்டுணர்வுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வளர்த்தெடுக்க வேண்டும்