கோவையைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள பிரிக்கால் ஆட்டோமொபைல் உதிரி உறுப்புகள் தொழிற்சாலையில் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலைசெய்து வருகின்றனர். பல நூறு கோடிகள் முதலீடும் உள்நாட்டு, வெளிநாட்டு சந்தையும் பெருத்த லாபமும் கொண்டுள்ள இந்த ஆலையில் பல்லாண்டு காலமாக தொழிலாளர் தேர்ந்தெடுத்த சங்கமில்லாமலும் சட்டரீதியான உரிமைகளுமின்றி சக்கையாக கசக்கிப் பிழியப்பட்டு வந்தனர். நூற்றுக்கணக்கான பெண் தொழிலாளர்கள் முதுகுத் தண்டு பாதிப்பு, கருச்சிதைவு உள்ளிட்ட சொல்லொனா துயரங்களைச் சுமந்து வந்தனர்.
இந்தநிலையில் மார்ச் 2007 ல் பிரிக்கால் தொழிலாளர்கள் ஏஅய்சிசிடியு தொழிற்சங்கத்தை தேர்ந்தெடுத்தனர். தொழிலாளரது சட்டரீதியான, ஜனநாயக உரிமையை மறுத்தும் அரசியல் சட்டத்துக்கு புறம்பாகவும் சங்கத்தை அங்கீகரிக்க பிரிக்கால் நிர்வாகம் மறுத்து வந்தது. தொழிலாளர்கள் உறுதியுடன் இருந்த காரணத்தினால், ஆத்திரமுற்ற பிரிக்கால் நிர்வாகம் அடக்குமுறை யுக்திகளை கையாண்டது.தொழிலாளர் முன்னோடிகள், தலைவர்கள் மீது கடும் அடக்குமுறையை ஏவியது. பழிவாங்கும் நடவடிக்கைகளாக சம்பளவெட்டு, இடைநீக்கம், பணி நீக்கம் உள்ளிட்ட அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது. பழிவாங்கும் நடவடிக்கையின் உச்சகட்டமாக தொழிலாளர் முன்னோடிகள் 6 பேரை நிர்வாகம் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு இடம்மாற்றம் செய்தது. அடுத்து 65 தொழிலாளர்கள் எவ்வித விசாரணையுமின்றி ஒரே நாளில் பணி நீக்கம் செய்யப்பட்டனர். நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகள் தொழிலாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பான நிலையை ஏற்படுத்தியது. செப்டம்பர் 2009 ல் ஆலைக்குள் நடந்த விரும்பத்தகாத, அசாதாரண சூழ்நிலையால் மனிதவள அதிகாரி ராய் ஜார்ஜ் உயிரிழந்தார்.
கொலை என பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் (557/2009), போலீஸ் வேட்டைக்கு அஞ்சி சம்பத் என்ற தொழிலாளியின் மனைவியும் மணிகண்டன் என்ற தொழிலாளியும் தற்கொலை செய்து கொண்டனர். ஏஅய்சிசிடியு தலைமையிலான தொழிலாளரது நீண்ட போராட்டத்துக்குப் பிறகு சங்கத்தை அங்கீகரிக்க வேண்டிய நெருக்கடி நிர்வாகத்துக்கு உருவானது. மட்டுமின்றி, ஊதிய உடன்பாடு, ஊதிய உயர்வு என பறிக்கப்பட்ட உரிமைகளையும் பெற்றனர். தொழிலாளர் கவுரவத்துடனும் சுயமரியாதையுடனும் பணியாற்றும் நிலையும் உருவானது. இச் சூழலில், செப்டம்பர் 2, 2015 அன்று விசாரணை நீதிமன்றம், தோழர்கள் மணிவண்ணன், ராமமூர்த்தி உள்ளிட்ட 8 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனை விதித்தது. தொழிலாளரது மேல்முறையீட்டு மனுவை 2016ல் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு சரிவர விசாரிக்கப்படாததைச் சுட்டிக்காட்டி மணிவண்ணன், ராமமூர்த்தியின் இரட்டை ஆயுள் தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்தும் மற்ற 6 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு சீராய்வு மனு நிலுவையில் உள்ளது.தோழர்கள் மணிவண்ணன் (50), ராமமூர்த்தி (50), இருவரும் 9 ஆண்டுகளுக்கு மேலாக சிறைக் கொடுமையை அனுபவித்து வருகின்றனர். இருவரது துணைவியார்களும் பிள்ளைகளும் பெரும் துயரத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இருவருடைய வயது மற்றும் அவர்களது குடும்ப நிலைகள், தொழிலாளரது உரிமைகளுக்காகவும் தொழிற்சங்க ஜனநாயக உரிமைக்காகவும் போராடியவர்கள் என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு, இருவரையும் நல்லெண்ண அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும். இதற்கு பல முன்னுதாரணங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. தோழர்கள் மணிவண்ணன், ராம்மூர்த்தி இருவரையும் நல்லெண்ண அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி தமிழ்நாடு மாநில ஏஐசிசிடியு அதற்கான இயக்கத்தைத் துவங்கியிருக்கிறது. பிரிக்கால் தொழிற்சங்கத் தோழர்கள் மணிவண்ணன், ராமமூர்த்தி விடுதலைக்கு தமிழக தொழிற்சங்க இயக்கம், ஜனநாயக சக்திகள், மனித உரிமை, குடியுரிமை அமைப்புகள், ஜனநாயகம், மக்கள் உரிமைகள் மீது பற்று கொண்ட அரசியல் கட்சிகள் ஆதரவு கொடுக்க வேண்டுமாய் ஏஐசிசிடியு தமிழ் மாநிலக் குழு வேண்டுகோள் விடுக்கிறது.