தோழர் என்கே நம்மை விட்டு பிரிந்து இரண்டாண்டுகளாகின்றன. 2022, டிசம்பர் 10 (மனித உரிமை நாள்) அன்று திண்டுக்கல் மாவட்டக் கமிட்டிக் கூட்டத்திலிருந்தபோது, இறந்தார் என்ற செய்தி ஒட்டுமொத்த கட்சியையும் அதிர்ச்சியடைய வைத்தது. எழுபதுகளின் பிற்பாதியில் திண்டுக்கல்லிலிருந்து தொடங்கிய தோழர் என் கே வின் புரட்சிகர பயணம் 2022 ல் திண்டுக்கல்லிலேயே முடிவுக்கு வந்தது. ஆனால், ஏறத்தாழ அவரது அரை நூற்றாண்டுகால கம்யூனிஸ்ட் வாழ்க்கைப் பயணம் நம்மை தொடர்கிறது.
கம்யூனிஸ்ட்களுக்கே உரிய எளியவாழ்க்கை, மக்கள் மீதும் மக்கள் போராட்டங்கள் மீதும் மாறாத நம்பிக்கை, மிகக் கடினமான சூழலிலும் தளராத முன்முயற்சி, கட்சி முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் அசைக்க முடியாத உறுதி இவைதான் தோழர் என் கே வின் அடையாளம்.
2020 ல் அவர் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆனதற்கு முன்பு புரட்சிகர தொழிற்சங்க மய்யமான ஏஅய்சிசிடியூ வின் மாநிலத் தலைவர்களுள் ஒருவராக கணிசமான காலம் பணிபுரிந்தார். கொடூரமான சுரண்டலாலும் ஒடுக்குமுறையாலும் சிதறடிக்கப்பட்ட நாமக்கல் விசைத்தறி தொழிலாளரை அணிதிரட்டி போராடச் செய்ததில் முக்கியப் பங்கு வகித்தார். எவ்வித பாசாங்கும் பகட்டுமின்றி தொழிலாளரோடு தொழிலாளியாக பழகி தொழிலாளரை வழிநடத்தினார். தலைவராக உயர்ந்தார்.
பிரிக்கால் தொழிலாளர் சங்கம் மூலம் மீண்டும் கோவை தொழிலாளர் வர்க்கம் மத்தியில் கால்பதித்த ஏஅய்சிசிடியூ, பிரிக்கால் தொழிலாளரை பல வீரமிக்க போராட்டங்களில் வழிநடத்தியது. பிரிக்கால் தொழிலாளர் தமிழக தொழிற்சங்க இயக்கத்தில் பல முன்னுதாரணங்களை படைத்தனர். பிரிக்கால் பெரு நிறுவனம் “நக்சல்” பூச்சாண்டி காட்டி காவல்துறை, நீதித்துறை உதவியுடன் தொழிற்சங்கத்தையும் தொழிலாளர் தலைவர்களையும் வேட்டையாடி சுடுகாட்டு அமைதியை ஏற்படுத்த கடுமையாக முயற்சித்தது. தொழிலாளரும் ஏஅய்சிசிடியுவும் போராட்டத்தைக் கைவிட மறுத்தனர். தலைவிரித்தாடும் ஒடுக்குமுறைக்கு மத்தியிலும் சற்றும் நிலைகுலையாது தோழர் என் கே, மறைந்த தோழர் ஸ்வப்பன் முகர்ஜியுடன் கரம் கோர்த்து தொழிலாளரை வழிநடத்தினார். ஒடுக்குமுறை, சுற்றிவளைப்பை உடைத்து தொழிலாளரை, வெகுமக்களை போராட்டத்தில் முன்னேறச் செய்வது இகக(மாலெ)-ஏஅய்சிசிடியூவின் புரட்சிகர போராட்ட மரபு. அந்த மரபின் அடையாளமாக களத்தில் நின்றார் தோழர் என் கே. அந்த மரபின் தொடர்ச்சியாக, 10 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் தோழர்கள் ராமமூர்த்தி, மணிவண்ணன் விடுதலை இயக்கத்தை நடத்தியாக வேண்டும். ஏஅய்சிசிடியூ 11வது அகில இந்திய மாநாடு நடைபெறும் பின்னணியில் இந்த இயக்கத்தை தமிழக தொழிலாளர் வர்க்க இயக்கமாக, முற்போக்கு, ஜனநாயக சக்திகளின் துணையோடு ஒரு ஜனநாயக இயக்கமாக நடத்திட உறுதி ஏற்க வேண்டும்.
அசாதாரணமான ஒரு சூழ்நிலையில் மாநிலச் செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தோழர் என்கே, ஒரு அசாத்தியமான முயற்சியுடன் கட்சி மத்தியக்கமிட்டி வழிகாட்டுதலை உணர்வுபூர்வமாக ஏற்று கட்சியை முன்னோக்கிய தடத்தில் வழி நடத்தினார். புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சிக்கு எப்போதும் தங்கு தடையின்றி சீறிச் செல்லும் நெடுஞ்சாலை கிடையாது. உள்ளும் புறமும் சவாலான சூறாவளிக்கு மத்தியிலேயே பயணம் செய்தாக வேண்டும். அந்தப் பணியை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் மத்தியக்கமிட்டி உறுப்பினர் என்ற வகையிலும் செய்து காட்டினார். தமிழ்நாட்டின் சங்கிகளை எரிச்சலூட்டிய தஞ்சை பாசிச எதிர்ப்பு மாநாட்டை இடது, ஜனநாயக சக்திகளின் பங்கேற்புடன் வெற்றிகரமாக வழி நடத்தினார்.
கட்சியின் பீகார் தேர்தல் வெற்றியை தொடர்ந்து, இகக(மாலெ) வை ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் அரசியல் சக்தியாக கண்ட தமிழ்நாட்டிலுள்ள இடது சக்திகள் வரிசை வரிசையாக இகக(மாலெ) வை நோக்கி ஈர்க்கப்பட்டனர். அவர்களை கட்சிக்குள் கொண்டு வருவதிலும் கட்சிக்குள் உறுதிப்படுத்துவதிலும் அளப்பரிய ஆர்வத்துடன் செயல்பட்டது என்றென்றும் நினைவு கூரத்தக்கது.
நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க ஆணவக் கொலைகள், தீண்டாமை ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, விவசாயத்தில் இரும்புப்பிடியாக உள்ள கார்ப்பரேட்- குலக் ஆதிக்கத்துக்கு எதிராக விவசாய தொழிலாளர், ஏழை விவசாயிகள் உள்ளிட்ட நாட்டுப்புர விவசாய வர்க்கத்தை அணிதிரட்ட உறுதியுடன் பாடுபட்டார். அதே சமயம் அவர்கள் சீர்திருத்த சிறைக்குள் அடைபட்டுப்போகாமல், புரட்சிகர வெகுமக்கள் இயக்கத்தின் அடித்தளமாக மாற்றும் தீவிர முயற்சியுடன் தமிழக கிராமங்களில் பயணம் செய்தார். அதுபோலவே பெண்கள், சுதந்திரமான வெகுமக்கள் அரசியல் இயக்கத்தில் அணிதிரள வேண்டுமென ஊக்கப்படுத்தினார். மனுநீதி சங்கிலிகளை உடைத்து நொறுக்கும் முற்போக்கு பெண்கள் இயக்கத்தை வளர்ப்பதற்கும் பெண் முன்னோடிகளை அடையாளப் படுத்துவதிலும் அவர்களது முன்முயற்சிக்கு ஊக்கமளிப்பதிலும் கவனம் செலுத்தினார்.
தமிழ்நாட்டின் நீண்டகால திராவிட அரசியல், பாசிச சக்திகளிடமிருந்து கடும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது. பாசிச அச்சுறுத்தல்களுக்கு எதிராக, பெரியார் மரபுகளால் அறியப்படும் முற்போக்கு விழுமியங்களை உயர்த்திப்பிடிக்கிற அதேசமயத்தில் அதை காலத்தின் தேவைக்கேற்ப மறுவீரியம் கொள்ளச் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தும் கட்சியின் நிலைப்பாட்டை மாணவர், இளைஞர் சமூகம் முன்னெடுத்துச் செல்லவேண்டுமென விரும்பினார். இதற்காக, சமூக மாற்றத் துடிப்பும் வெகுமக்கள் முன்முயற்சியும் கொண்ட மாணவர், இளைஞர் அமைப்புகளை உருவாக்க பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார். தமிழ்தேசியம், திராவிட தேசியம்; தேசியம், தெய்வீகம் பேசி இளம் தலைமுறையை வசீகரிக்க முயற்சிக்கும் சக்திகளிடமிருந்து இளைஞர், மாணவர்களை வென்றெடுக்க தீவிரமாக பாடுபட்டாக வேண்டும். தோழர் என் கே வின் விருப்பத்தை இயக்கமாக்கிட வேண்டும்.
அனைத்துக்கும் மேலாக அவர், கட்சி அடித்தளத்தை விரிவுபடுத்த, வலுப்படுத்த இடைவிடாது வலியுறுத்தி வந்தார், முயற்சி மேற்கொண்டார். விரிவான கட்சி உறுப்பினர் எண்ணிக்கையும், கட்சிக் கிளைகள் முதல் மாவட்ட, மாநிலக் கமிட்டிகள் வரை முன்முயற்சியும் உறுதிப்பாடும் கொண்டதாக இருக்கும் கட்சி அமைப்புக்காக, கட்சி மறுசீரமைப்பு இயக்கத்தை முன்னெடுப்பதில் கவனம் செலுத்தினார்.
இந்தப்பணிகளின் முத்தாய்ப்பாக கட்சியின் பதினோராவது மாநில மாநாட்டை திருச்சியில் வெற்றிகரமாக நடத்திக் காட்டி தலைமைப் பங்காற்றினார். ஒட்டுமொத்த கட்சியின் ஜனநாயக விருப்பத்தின்படி மாநிலச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் பதினோராவது காங்கிரசில் பங்குபெறும் பேரார்வத்துடன் தயாராகிக் கொண்டிருந்தார். ஆனால், கட்சிக் காங்கிரசில் அவரது உருவப்படத்தைதான் நம்மால் பார்க்க முடிந்தது. மற்ற புரட்சியாளர்களைப் போலவே கட்சிப்பணிக்கு முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட என்.கே, தனது உடல்நிலைப்பற்றி தேவையான அக்கறையை காட்டாமல் ஓடிக்கொண்டே இருந்தார்.
மாநிலக் கமிட்டி வழிகாட்டுதலின்படி, அவர் மறைந்த நாளான டிசம்பர் 10 அன்று, மாநிலம் முழுவதுமுள்ள கட்சிக்கிளைகள் தோறும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. கட்சிக் கிளைகளை செயலூக்கப்படுத்துவது, கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, மக்களுடன் நெருக்கமான பிணைப்பைக் கொண்டுவர மக்களை நோக்கி ஆதார கட்சி அமைப்புகளை உந்திச் செலுத்துவது, கட்சி ஏடு தீப்பொறியை விரிவாக பரப்பும் நோக்கோடு அதிக எண்ணிக்கையில் சந்தா சேர்ப்பது என்ற கடமைகளை நிறைவேற்ற உறுதி ஏற்கப்பட்டது. தோழர் வி எம் மின் 26 வது ஆண்டு உறுதி ஏற்பு நாளில் இந்தக் கடமைகளை நிறைவேற்ற மறுஉறுதி ஏற்கப்பட்டது.
தோழர் என் கே வின் வாழ்வையும் பணியையும் நினைவுகூரும் அரசியல் நிகழ்ச்சியாக, திண்டுக்கல் எரியோட்டில் ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடைபெற்றுள்ளது. அவரது வாழ்வும் பணியும் ஒட்டுமொத்த கட்சிக்கு உத்வேகம் அளிப்பதாக, பல மடங்கு உறுதிப்பாட்டை அளிப்பதாக இருக்கும். துடிப்பும் வீரியமும் கொண்ட வெகுமக்கள் அமைப்புகள், அரசியல் முன்முயற்சியும் உறுதிப்பாடும் கொண்ட வலுவான கட்சி என்ற தோழர் என் கேவின் பெருவிருப்பத்தை நிறைவேற்ற நாம் நம்மை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்வோம்! புரட்சிகர கம்யூனிஸ்ட் அரசியல் கட்சியாக முன்னேறிச் செல்வோம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)