ரலாற்றின் முக்கியமான பிரச்சனைகள் எப்போதும் தெருக்களில்தான் தீர்வு காணப்படுகின்றன என்று தோழர் வினோத் மிஸ்ரா, 1998 டிசம்பரில் மத்தியக் கமிட்டிக்கு  அளித்த இறுதிக் குறிப்பின் மூலம் நமக்கு நினைவூட்டியிருந்தார். ஏற்கனவே, தனது அருவறுப்பான தலையைத் தூக்கத் தொடங்கிவிட்டிருந்த பாசிசத்தின் அச்சுறுத்தலுக்கெதிராக  அனைத்தும் தழுவிய முன்முயற்சியை மேற்கொள்ளுமாறும், போராட்டத்தை தீவிரப்படுத்துமாறும் இளம் கம்யூனிஸ்டுகளுக்கு தோழர் வி எம் அழைப்பு விடுத்திருந்தார். புரட்சிகர மார்க்சிய சிவப்பு பதாகையை இறுகப்பற்றி உயர்த்திப்பிடிக்கும் ஒரு வலுமிக்க கம்யூனிஸ்ட் கட்சி, கிராமப்புர ஏழைகளின் சக்திமிக்க இயக்கம், காவி-சதிக்கெதிரான அனைத்தும் தழுவிய முன்முயற்சி- திறவுகோலான இம்மூன்றையும் தோழர் வி எம் தனது குறிப்பில் முன்னிறுத்திக் காட்டியிருந்தார். இன்று அவரது இறப்பின் 26வது ஆண்டை நாம் கடைப்பிடிக்கும்போது, அவரது சொற்கள் எப்போதையும் விட இப்போது உண்மையென சுட்டிக் காட்டுகிறது.

மோடி அரசாங்கம், பத்தாண்டுகளுக்கு மேலாக அதிகாரத்திலிருந்து வருகிறது. அரசாங்கத்தின் பாசிச திட்டநிரல் கணிசமான அளவு அம்பலத்துக்கு வந்துள்ளது, அதற்கெதிராக பல முனைகளிலும் நல்லதொரு எதிர்ப்பும் வளர்ந்து வருகிறது. இந்தப் பாசிச பயணத்திற்கெதிரான எதிர்ப்பு, அவ்வப்போது அதற்கு தேர்தல் அடி கொடுப்பதிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும் பாசிஸ்டுகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் எவ்வளவு மூர்க்கத்தனமாக இருக்கிறார்கள் என்பதை சமீபத்திய அரியானா, மகாராஷ்ட்ரா சட்டப்பேரவைத் தேர்தல்கள் காட்டியுள்ளன.

இந்தப் பாசிச தாக்குதலை தடுத்து நிறுத்த இன்னும் நீடித்த, சக்திமிக்க மக்கள் எழுச்சி நமக்குத் தேவைப்படுகிறது. பாசிஸ்ட்கள் தங்களுக்குரிய வலுவை மதவெறி வெறுப்பு அணிச் சேர்க்கையிலிருந்தும் சாதி, பால் ஒடுக்குமுறைகளிலிருந்தும், பெருங்குழும அதிகாரத்தின் முழுமையான ஆதரவிலிருந்தும் பெறுகிறார்கள். எனவே, பாசிசத்திற்கெதிரான நமது எதிர்ப்பு, கூர்மையான மதவெறி எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, ஆணாதிக்க எதிர்ப்பு, பெருங்குழும முதலாளித்துவ எதிர்ப்பு முனையைக் கொண்டிருக்க வேண்டும்.

தோழர் விஎம் வழிகாட்டுதலில் கட்சி, வெகுமக்கள் அமைப்புகளின் விரிவான வலைப்பின்னலைக் கட்டத் தொடங்கியிருந்தது; போராட்டங்களின் பலதரப்பட்ட அரங்குகளிலும் தொடர் அணிவரிசை அய்க்கிய முன்னணிகளையும் வளர்க்கத் தொடங்கியிருந்தது. பாசிச அச்சுறுத்தலின் இன்றைய காலகட்டத்தில், இந்தக் கொள்கைகளை, எந்தக் காலகட்டத்தில் இருந்ததைவிடவும் இப்போது இன்னும் அதிக விரிவான வகையில் பின்பற்றி வருகிறோம். வெகு மக்கள் அமைப்புகள், பல்வேறு வர்க்கங்கள், வகுப்புகள், தொழில் பிரிவினருக்கான பரப்புரை மேடைகளுக்கு கூடுதலாக அகில இந்திய அளவிலான எதிர்க்கட்சி அணியின் உறுப்பாகவும் பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் செயல்மிக்க தேர்தல் அணியின் உறுப்பாகவும் இருக்கிறோம். மேற்கு வங்கத்தில் பரந்த இடது ஒற்றுமை வடிவெடுத்து வரும் சில தொடக்க அறிகுறிகளும் கூட காணப்படுகின்றன.

இந்த டிசம்பர் 26ல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கிறோம். எதிர்முரணாக 2025, ஆர்எஸ்எஸ் ன் நூற்றாண்டும் கூட. எனவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டை, கம்யூனிச இயக்கத்தின் புகழ்மிக்க வரலாறு, மரபுக்கு வணக்கம் செலுத்துகிற வகையிலும், இன்றுள்ள சவால்களான பாசிசத்தை தோற்கடிப்பது, மேலும் உண்மையான சமூக மாற்றத்தையும் மானுட விடுதலையையும் அடைவதற்காக சோசலிச, மதச்சார்பற்ற, இறையாண்மை கொண்ட, ஜனநாயக இந்திய குடியரசு என்ற அரசமைப்புச் சட்ட உறுதிப்பாட்டை பாதுகாக்கவும், விரிவுபடுத்தும் விதமாகவும் நினைவுகூர்வோம்.

தோழர் வி எம்மின் 26 வது நினைவு நாளில், இன்றைய சவால்களை எதிர்கொள்ள, அவரது அன்பிற்குரிய கட்சியை எல்லாவகையிலும் வலுப்படுத்திட உறுதி ஏற்போம். சில மாதங்களுக்கு முன்பு, தோழர் ஏகே ராய் அவர்களால் நிறுவப்பட்ட மார்க்சிஸ்ட் ஒருங்கிணைப்புக் கமிட்டி கட்சியோடு இணைந்ததையடுத்து கட்சி ஜார்க்கண்டில் பெரும் ஊக்கத்தைப் பெற்றது. ஜார்க்கண்டில் பாஜகவை தோற்கடிப்பதிலும் முக்கியமான தன்பாத்-பொக்காரோ தொழிலாளர் வர்க்க பகுதியிலிருந்து இரண்டு சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெறுவதிலும் கட்சிக்கு மிகவும் தேவைப்பட்ட வலுவை அளித்திருக்கிறது. இயக்கத்தில் சேர்ந்துள்ள அனைத்து தோழர்களுக்கும், கட்சி அமைப்புக்கும் இந்திய குடியரசின் இந்த வரலாற்றுக் கட்டத்தில் இகக(மாலெ) மத்தியக் கமிட்டி, தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. நமது அன்பிற்குரிய நாடு முழுவதுமுள்ள மக்கள் மத்தியில் இகக(மாலெ) வை ஆழமாக கொண்டு செல்லவும், நவீன இந்தியாவின் புரட்சிகர பயணத்தை முன்னோக்கி எடுத்துச்செல்லவும் கட்சியை இன்னும் வலுவான, துடிப்பான இயங்காற்றல் கொண்டதாக ஆக்கவும் கடினப்பட்டு உழைப்போம். இதுதான் தோழர் வி எம்-முக்கும் இகக (மாலெ) வின் மறைந்த எல்லா தலைவர்களுக்கும், தியாகிகளுக்கும் இந்திய கம்யூனிச இயக்கத்துக்கும் ஆகச்சிறந்த புகழ் சேர்ப்பதாக இருக்கும்.