2015, 2020 இல் நடைபெற்ற அடுத்தடுத்த தேர்தல்களில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பிறகு, தற்போது 2025 இல் ஆம் ஆத்மி கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. 53 லிருந்து 43 ஆக, அதுபெற்ற வாக்கின் பங்குகளில் கிட்டத்தட்ட பத்து விழுக்காடு இழந்துள்ளது. இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 22 ஆக குறைந்துவிட்டது. பாஜக பெற்ற வாக்கின் பங்கு 38 லிருந்து 45 ஆக, ஏழு விழுக்காடு அதிகரித்துள்ளது. அது வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 8 லிருந்து 48 ஆக, ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. 27 ஆண்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு நாட்டின் தலைநகரில் பாஜக அதிகாரத்திற்கு மீண்டும் திரும்பியுள்ளதை இது குறிக்கிறது. 2024 மக்களவைத் தேர்தல்களில் தனிப் பெரும்பான்மையை பாஜக இழந்துவிட்ட பிறகு என்டிஏ விற்கு கிடைத்துள்ள மூன்றாவது சட்டமன்ற தேர்தல் வெற்றியாகும். 

தில்லியில் நிகழ்ந்துள்ள இந்த பாரதூரமான மாற்றத்திற்கு பல்வேறு காரணிகள் பங்களித்துள்ளன. 2020 தேர்தல்களில் தில்லியில் எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றி விட வேண்டும் என்ற விரக்தியில் பாஜக இருந்தது. அந்தத் தேர்தலில் குடிமக்கள் இயக்கத்தை நசுக்க மதவெறி வன்முறையை வெளிப்படையாக தூண்டிவிட்ட தீய பரப்புரை இயக்கத்தை அது நடத்திய போது இது தெள்ளத் தெளிவானது. உடனடியான தேர்தல் ஆதாயங்களை அவை வழங்காத போது, மோடி அரசாங்கம் மாற்றுக் கருத்துகளை மவுனமாக்க கொடிய அடக்குமுறை இயக்கத்தைக் கட்டவிழ்த்து விட்டது. மாணவர் செயல்பாட்டாளர்கள், மனித உரிமை இயக்கத்தவர்கள், எதிர்க்கட்சி கவுன்சிலர்களும் கூட தொடர்ந்து அடுத்தடுத்து  கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணிஸ் சிசோடியா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் தொடர் கைதுகள் மூலம், ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக அரசியல் ரீதியாக தண்டிக்கும் இயக்கப் போக்கு வந்தது.

அரசியல் ரீதியாக பழி வாங்குவதைத் தாண்டி, ஒன்றிய அரசாங்கம், துணைநிலை ஆளுநர் அலுவலகம் என்ற கருவிகளை பயன்படுத்தி, ஆம் ஆத்மி கட்சியின் அரசாங்கத்தை திட்டமிட்ட வகையில் சுற்றி வளைத்துத் தனிமைப்படுத்துவதை பாஜக மேற்கொண்டது. தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து கோரியதை பாஜகவும் கூட வழக்கமாகக் கொண்டிருந்த நேரம் ஒன்று இருந்தது. ஆனால் ஆம் ஆத்மி அரசாங்கத்திற்கு தடங்கல் ஏற்படுத்த, பாஜக உச்ச நீதிமன்றத்தை மீறி, சந்தேகத்திற்கிடமான தில்லி சேவைகள் சட்டத்தை (தேசிய தலைநகர் பிரதேச அரசாங்கத் திருத்தச் சட்டம், 2023) நிறைவேற்றியதன் மூலம், தில்லி அரசாங்கத்தின் அதிகாரங்களை கடுமையாகக் குறைத்து, கிட்டத்தட்ட அதனை ஒரு நகராட்சியின் தரத்திற்கு தாழ்த்தியது. தில்லி அரசாங்கத்தைத் தடுக்கும் விதத்திலான சுற்றி வளைத்தல், அதன் அதிகாரங்களை சிதைத்தல் ஆகியவற்றுடன் தில்லியின் வாக்காளர் பட்டியலில் கச்சிதமான முறைகேடுகளும் சேர்க்கப்பட்டு, வாக்காளர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நீக்கங்கள், சேர்ப்புகள், இடமாற்றங்கள்  என முழுமை பெற்றது.

ஜார்க்கண்ட்டில் பாஜக இதே போன்றதொரு தந்திரத்தை முயற்சி செய்தது. முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இடைக்கால முதலமைச்சர் பாஜகவிற்கு தாவினார். தேர்தல் பரப்புரை என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிராக பழங்குடியினரை நிறுத்துவதற்கான நச்சுத்தன்மை மிகுந்த வெறுப்புப் பரப்புரை இயக்கம் கட்டவிழ்த்து விடப்பட்டது. இருப்பினும் அந்தத் திட்டம் வீழ்ச்சியுற்றது. அடுத்தடுத்த இரண்டாவது சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக தோல்வியுற்றது. ஜார்கண்டில் தோல்வியுற்ற பாஜகவின் திட்டம் தில்லியில் வெற்றிபெற்றது ஏன்? இந்த இரண்டு மாநிலங்களிலும் எதிர் கட்சிகள் தேர்தல்களில் போராடிய வழியில் இதற்கான பதிலின் ஒரு பகுதி உள்ளது. ஒன்றுபட்ட பாஜக எதிர்ப்பு முகாமை ஜார்க்கண்ட் கொண்டிருந்தது. அரசமைப்பு சட்டம், கூட்டாட்சி உரிமைகள், மாநிலத்தின் விருப்பங்களை பாதுகாப்பதை நோக்கிய உயிர்த் துடிப்பான பரப்புரை இயக்கத்தை கொண்டிருந்தது. தில்லியில் இந்தியா முகாமிற்குள் ஒற்றுமை இல்லை. பாஜகவின் பாசிசத் தாக்குதலை முறியடிக்க வேண்டும் என்ற வலிமையான அரசியல் நோக்குநிலை, தேர்தல் விவாதத்தில் கண்ணுக்கு புலப்படும் வகையில் காணாமல் போய்விட்டது. 

பரந்த மக்களிடையே ஆம் ஆத்மி கட்சிக்கான வரவேற்பும், அரவிந்த் கெஜ்ரிவாலின் 'சாமான்ய மனிதன்' என்ற பிம்பம் சரிந்து விட்டது வெளிப்படையாக தெரிந்தது. 200 யூனிட்டுகள் இலவச மின்சாரமும், மேம்பட்ட பொதுக் கல்வி மீதான அதிகரிக்கப்பட்ட முக்கியத்துவமும் தில்லியின் ஏழை, கீழ் நடுத்தர வர்க்க மக்களிடையே இன்னமும் கூட சாதகமான எதிரொலிப்பை கொண்டிருந்தன. ஆனால் தில்லியின் தொழிலாளர் வர்க்கக் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டது, நகராட்சி சேவைகள் வழங்குவதில் மோசமான செயல்பாடுகள், தில்லியில் ஜனநாயகத்தின் மீதான அடக்குமுறை, வெறுப்பை ஊக்குவித்தல் பற்றிய பிரச்சினைகளில் கிட்டத்தட்ட முழுமையான மவுனம் ஆகியவை ஆம் ஆத்மி கட்சிக்கு முந்தைய இரண்டு தேர்தல்களில் பிரமிக்கத்தக்க பெரும்பான்மையை வழங்கிய, துடிப்பான மக்கள் ஆதரவை பலவீனமடையச் செய்து விட்டது. மது மோசடி, ₹33.6 கோடிக்கு புதுப்பிக்கப்பட்ட முதலமைச்சரின் பங்களா குறித்த குற்றச்சாட்டுகள், கறைபடியாத, எளிமையான ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் குறித்த பிம்பத்தைக் குறிப்பிடத்தக்க அளவில் சிதைத்து விட்டது. ஆக மக்கள் மத்தியில் அவரது மங்கிப்போன பிம்பத்தின் பின்னணியில் வெற்றியை கொண்டு வரும் நிலையில் கேஜ்ரிவால் இல்லை.

தில்லியின் மீது பாஜகவின் புதுப்பிக்கப்பட்ட முழுமையான கட்டுப்பாடு, பொது மக்களுக்கும் முற்போக்கு, ஜனநாயக சக்திகளின் ஒட்டுமொத்த பிரிவினருக்கும், நாட்டின் தலைநகரின் செயல்பாடுகளுக்கும் பெரும் சவாலை முன்னிறுத்தும். இந்த மாறிவிட்ட அரசியல் கள நிலவரம் நாடாளுமன்ற அவைக்குள் ஒருங்கிணைப்பு என்ற வரம்புக்குட்பட்ட கட்டமைப்பை தாண்டி, தில்லியிலுள்ள பாஜக அல்லாத பரந்த அரசியல் முகாம் மத்தியில் கூட்டுறவின் உணர்வை வளர்க்கும் என நம்பிக்கை கொள்ளலாம். அகில இந்திய பார்வை என்ற அடிப்படையில் அனைவரின் கண்களும் 2025 இல் தேர்தல் நடைபெறப் போகும் ஒரேயொரு மாநிலமான பீகாரை நோக்கியே இருக்கும். தில்லியில் கடந்த 27 ஆண்டுகளுக்கு பாஜக அதிகாரத்திற்கு வெளியே இருந்தது. ஆம் ஆத்மி கட்சியின் மீது பரந்த மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றத்திலிருந்து அது பலன்பெற்றது. பீகாரில் பாஜக, ஜேடியு உடனான கூட்டணியில் அநேகமாக கடந்த 20 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்து கொண்டிருக்கிறது. மேலும் அங்கே பாஜக-ஜேடியு ஆட்சியின் அனைத்து மட்டத்திலான தோல்வி, துரோகத்திற்கு எதிரான கோபம் பரந்த மக்களிடையே வளர்ந்து வருகிறது.

ஜார்கண்டில் ஒரு ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகள் பாஜகவை தடுத்து நிறுத்துவதில் வெற்றி பெற்றன, என்றால், பீகாரிலும் அதே போன்று ஏன் நிகழாது என்பதற்கான ஒரு காரணமும் இல்லை. இந்தியா கூட்டணிக்குள் தேர்தல் போராட்டங்களுக்கு இடையில் நெருக்கமான பிணைப்பு, களத்தில்  பல்வகைப்பட்ட போராட்டங்கள், கூடுதல் அறிவார்ந்த தேர்தல் உடன்பாடு ஆகியவற்றைக் கொண்டு, பாஜகவின் மகாராஷ்டிரா-ஹரியானா-தில்லியின் தொடர் வெற்றிகளை பீகார் தடுத்து நிறுத்த முடியும். மேலும் சங்கிப் படையணியின் பாசிசத் தாக்குதலுக்கு தீர்மானகரமானதொரு அடியை வழங்க முடியும். மோடி அரசாங்கம் அமெரிக்காவிடம் சரணடைவதன் மூலமாக, இந்தியாவினுடைய காலனிய எதிர்ப்பு விடுதலை இயக்கத்தின் மரபை இழிவுபடுத்துகிறது; விடுதலை இயக்கத்திலிருந்து உருவாகி வந்த அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற, ஜனநாயக குணம்சத்தை பலவீனப்படுத்துகிறது. இந்த நேரத்தில் காலனிய எதிர்ப்பு, நிலப்பிரப்புத்துவ எதிர்ப்பு போராட்டங்களில் வரலாற்று ரீதியான ஒரு முக்கிய அரணாக விளங்கிய பீகார், உண்மையான ஜனநாயகம், சமூக மாற்றத்திற்கான நீண்ட நெடிய போராட்டத்தின் கொத்தளமாக விளங்கும் என நிச்சயமாக மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும்.