தொழிலாளர் வர்க்கத்தின் மீதான மோடி அரசாங்கத்தின் அனைத்தும் தழுவிய தாக்குதலுக்கான ஆண்டாக 2025 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் அமலாக்கம், பொதுத்துறை, அரசுத்துறை நிறுவனங்களை கண்மூடித்தனமாக தனியார் மயமாக்குவது, தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் அமல்படுத்துவதற்கு எதிரான தொழிலாளர்களின் கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்கு மூன்று குற்றவியல் சட்டங்களை பயன்படுத்துவது ஆகியவை தான் மோடி வகுத்துள்ள திட்டங்களாகும்.

 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு எதிராகவும் விவசாயிகள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு விவசாய சட்டங்களை பின் கதவு வழியாக கொண்டு வருவதற்கு எதிராகவுமான தொழிலாளர்கள் விவசாயிகளின் ஒன்றுபட்ட இயக்கத்தை குறிக்கின்ற ஆண்டாகவும் 2025 இருக்கப் போகிறது. விவசாய சந்தைக் கொள்கை என்பது மிகச் சமீபத்தில் இந்த அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பிற்போக்கான நடவடிக்கையாகும். இந்த அரசாங்கத்துக்கு எதிராக ஏற்கனவே ஜனவரி 26 அன்று விவசாயிகள் டிராக்டர்களுடனும் இதர வாகனங்களுடனும் பேரணியை நடத்தி போராட்டத்தை துவக்கி இருக்கிறார்கள். தொழிலாளர்களின் விருப்பத்தை மீறி மோடி செயல்படுவாரேயானால் ஏ ஐ சி சி டி யு உட்பட அனைத்து மையத் தொழிற்சங்கங்களும் இணைந்து அகில இந்திய வேலை நிறுத்தம் நடத்த தயாராகி வருகிறார்கள். மத்தியத் தொழிலாளர் அமைச்சர் மன்சுக், மார்ச் 31 தொழிலாளர் சட்ட தொகுப்புகளுக்கான மாநில அரசுகளின் விதிகளை வெளியிடுவாரானால் தொழிலாளி வர்க்கம் விவசாயிகளுடன் இணைந்து இந்த நாட்டின் சக்கரங்களை நிறுத்த மார்ச் 31 தயாராகும்.

 ஏ ஐ சி சி டி யு உட்பட அனைத்து மையத் தொழிற்சங்கங்களையும் பட்ஜெட்டுக்கு முந்தைய கலந்தாய்வுக் கூட்டத்திற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைத்திருந்த போதிலும், மத்திய பட்ஜெட்டில் தொழிலாளர் தரப்பில் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை.ஆகவே, மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்த அறைகூவல் படி 2025 பிப்ரவரி 5 அன்று நாடு முழுவதும் பட்ஜெட் நகல் எரிப்புப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

 மோடி 3.0 பாஜக அரசாங்கம் தொழிலாளர்களின் உரிமைகள் மீதான  தாக்குதலை புதுப்பித்துள்ளது. தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கான விதிகளை எல்லா மாநில அரசாங்கங்களும் சட்டப்படி உருவாக்குவதற்கு முன்னமே கூட அதை அமுல்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரல் பற்றி பேசுகிறது. பின் கதவு வழியாக அமல்படுத்துவதற்கான வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறது. பீடி துறையில் அதுபோன்ற முயற்சி ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளது. 2025 மார்ச் 31 சட்டத் தொகுப்புக்கான விதிகளை மாநில அரசாங்கங்கள் வெளியிட்டு விடுவார்கள் என தொழிலாளர் அமைச்சர் நம்பிக்கையுடன் இருக்கிறார். இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி முதல் எல் அண்ட் டி சுப்பிரமணியம் வரை உள்ள நாட்டின் கார்ப்பரேட்டுகள் 70 மணி நேரம் முதல் 90 மணி நேரம் வரையிலான வார வேலை குறித்து பேசி அக்கருத்துக்காக அணி திரட்டி வருகிறார்கள். கார்ப்பரேட் குழும தலைவர்களுக்கும், மேல்மட்ட நிர்வாகிகளுக்கும் வீட்டில் செய்வதற்கு என்று வேலை எதுவும் இல்லை. ஆனால்,தொழிலாளர்கள் வேலை முடித்து பல மணி நேர பயணத்திற்குப் பிறகு பல்வேறு குடும்ப பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியிருப்பதால் போதுமான தூக்கம் கூட இல்லாமல் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, இந்த கார்ப்பரேட்டுகளுக்கு அடுத்த நாள் உழைப்பதற்காக அவர்கள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டியுமுள்ளது. சட்டவிரோதமாக தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய நிப்பந்திக்கப்படுகிறார்கள். நீண்ட நேரம் உழைப்பதால் உற்பத்தித் திறன் உண்மையிலேயே உயராது என்பதையும் உற்பத்தித்திறன் குறையும் என்பதையும் கார்ப்பரேட்டுகள் தங்கள் லாபத்திற்கான பேராசை காரணமாக மறைக்கிறார்கள். குறைந்த அளவு நேர வேலையும் நல்ல சம்பளமும் கிடைக்கும் போது உற்பத்தித் திறனும் இன்னும் சொல்லப்போனால் லாபமும் கூட அதிகரிக்கும் என பல்வேறு தரவுகள் உறுதி செய்கின்றன. உலகின் பல்வேறு நாடுகள் 6 மணி நேர வேலை நாளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. எவ்வித உருப்படியான நலத்திட்டங்களும் இல்லாத இ- ஸ்ரம் இணையதளத்தில் 30 கோடி தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகத்தின் ஆண்டு இறுதி அறிக்கை தம்பட்டம் அடித்துக் கொள்கிறது. ஏற்கனவே இருக்கக்கூடிய சில நலத்திட்டங்களை இ - ஸ்ரம் போர்ட்டலில் இணைத்திருக்கிறார்களே ஒழிய மற்றபடி புதிய திட்டம் எதுவும் இல்லை. தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டத்தின் கீழ் சில மருந்தகங்களும் மருத்துவமனைகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அந்தத் திட்டம் இதுவரை நீட்டிக்கப்படவில்லை. அப்படியே தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என்றாலும் அந்தத் திட்டத்தின் கீழ் தொழிலாளர்கள் காப்பீட்டுக்கான பங்களிப்பு தொகை செலுத்தும் விதமாகவே அது உருவாக்கப்படுகிறது. தொழிலாளர்கள் தங்கள் பையில் இருந்து கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். வேலை அளிப்பவர் /முதன்மை வேலை அளிப்பவர் என்ற அடையாளம் முழுவதுமாக நீர்த்துப் போக செய்யப்படுகிறது அல்லது மறுக்கப்படுகிறது. வேலை, ஊதியத்துக்கான பாதுகாப்பு பறித்தெடுக்கப்படுகிறது. ஆனால், அரசாங்கம் ஜிக் மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு பற்றி மட்டுமே பேசி வருகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் நிறைவேற்றியுள்ள சட்டங்களிலும்  கூட சில சொற்ப சமூக பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் தாண்டி வேறு எதுவும் இல்லை என்ற நிலையே இருக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் கூட்டப்படும் இந்தியத் தொழிலாளர் மாநாடு, மோடி மத்தியில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்பு கடந்த 10 ஆண்டுகளில் கூட்டப்படவில்லை. அது பழங்கதையாய் போய்விட்டது. மோடியின் பாஜக - தேஜகூ காலத்திற்கு முன்பு முதலாளிகள், தொழிற்சங்கங்கள், ஒன்றிய அரசாங்கம் ஆகியோர் அடங்கிய இந்திய தொழிலாளர் மாநாட்டில் எடுக்கப்பட்ட எந்த முடிவுகள் குறித்தும் இந்த அரசாங்கம் கவனம் செலுத்தாமல் இருந்து வருகிறது.

 சுகாதாரம், கல்வி இன்ன பிற துறைகள் சம்பந்தப்பட்ட ஒன்றிய அரசின் திட்டங்களை மக்களின் வீட்டு வாசலுக்கு எடுத்துச் செல்பவர்களாக ஒரு கோடிக்கும் அதிகமான திட்டத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மதிய உணவுத் திட்ட தொழிலாளர்கள், ஆஷா தொழிலாளர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள் இன்னும் இதுபோல நூற்றுக்கணக்கான வேறு வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள். ஆனால், இவர்களையெல்லாம் தொழிலாளர்கள் என்று அங்கீகரிக்கவே இந்த அரசாங்கம் தயாராக இல்லாத போது, தொழிலாளர்களுக்கான உரிமைகள், குறைந்தபட்ச சம்பளம் என்பதைப் பற்றி எப்படி பேச முடியும்? இது அரசாங்கமே நடத்துகிற ஈவிரக்கமற்ற கொடிய சுரண்டலாகும். மோடி முதலைக் கண்ணீர் வடிப்பாரே ஒழிய இவர்களுடைய ஊதியத்தை, பணிநிலையை மேம்படுத்துவது பற்றி ஒரு சொல் கூட பேச மாட்டார். தூய்மை இந்தியா திட்டத்தின் பகுதியாக அதில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கு எதுவும் செய்யாத மோடி, சில தேர்ந்தெடுத்த தொழிலாளர்களின் கால்களைக் கழுவி சுத்தம் செய்து நாடகமாடிக்கொண்டார்.

 3.89 கோடி காலிப் பணியிடங்கள் தேசிய வேலைவாய்ப்புச் சேவை இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக மோடி சொல்கிறார். இரயில்வே துறையில் மட்டும் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோயுள்ளன. எல்லா துறைகளிலும் நாட்டின் இளைஞர்களுக்கான கண்ணியமான வேலை வாய்ப்பை மறுத்துவிட்டு, அக்னிவீர் திட்டத்தைப் போல ‘குறித்த கால வேலை’ என்ற முன்மாதிரியை ஊக்குவித்து வருகிறபோது, எந்த ஒரு அரசாங்க காலிப் பணியிடமும் நிரப்பப்படுவதில்லை. பீகார் மாநில தேர்வாணைய ஊழலை அடுத்து போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. காலிப் பணியிடங்களை நிரப்பப்படுவதில்லை என்பது அரசாங்கத்தின் கொள்கையாக இருக்கும் போது, தேசிய வேலைவாய்ப்புத் திட்ட இணையத்தில் ( National Career Scheme Portal) காலிப் பணியிட எண்ணிக்கையை சேர்த்துக் கொண்டு போவதால் பயன் ஏதும் இல்லை. நமது நாட்டில் ஓராண்டுக்கு குறைந்தபட்சம் 2 கோடி வேலை வாய்ப்புகள் தேவைப்படுகிறது. ஆனால் மோடி அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி வேலை வாய்ப்புகளை இழந்து வருகிறது. மோடி அரசாங்கத்தால் எல்லோருக்கும் வேலை அளிக்க முடியவில்லை. அதுபோல் இளைஞர்களுக்கு வேலை இல்லா கால நிவாரணத்தையும் வழங்க முடியவில்லை. பதிலாக, அது கார்ப்பரேட்டுகளுக்கு வேலை வாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை (employment linked incentive)என்பதை வழங்கி வருகிறது. ஆனால், கார்ப்பரேட்டுகளோ பெரிய அளவிலான வரிச் சலுகை மூலம் கிடைக்கும் பயன்களை பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை. மாறாக, சம்பள வெட்டு, ஊதிய தேக்கம், கடுமையான ஊதியக் குறைப்பு, உழைப்பு பெண்மயமாவதை அகற்றுதல், ஊரக வேலைத் திட்ட நிதி ஒதுக்கீட்டை குறைப்பதன் மூலம் கிராமப்புர மக்களை வேலை தேடி நகரங்களுக்குள் தள்ளுவது இன்ன பிற ஆகியவையே இன்றைய நிலவரமாக உள்ளது.

 பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது, வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்சம் பஞ்சப்படியுடன்  ரூபாய் 10,000 ஓய்வூதியம், குறைந்தபட்ச ஊதியமாக ரூபாய் 35,000 அறிவித்தல், தரைமட்டக் கூலி, குறித்த கால வேலை போன்ற கருத்தாக்கங்களை நீக்குவது, 85% கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர் சட்ட அமலாக்கத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில் லேஆப், கதவடைப்பு போன்றவற்றுக்கு அனுமதி பெறுவதற்கான தொழிலாளர் எண்ணிக்கையை 300 ஆக உயர்த்தும் முடிவைக் கைவிடுதல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ எஸ் ஐ, பி எஃப் திட்ட அமலாக்கம் ஆகியவை இன்றைய தொழிலாளி வர்க்கத்தின் முதன்மை கோரிக்கைகளாக எழுந்து வருகின்றன.

  தொழிலாளர் சட்டத்  தொகுப்புகளை அமல்படுத்தும் பிரச்சனை மீது மோடி மற்றும் பாஜக அரசாங்கத்துடன் மோதுவதற்கு தொழிலாளி வர்க்கம் தீர்மானகரமாக உள்ளது.

 தொழிலாளர் வர்க்க இயக்கம் மேலெழுந்து வரும் காலகட்டமாக இப்போதைய காலகட்டம் உள்ளது. ஈவிரக்கமற்ற தொழிலாளர் விரோத கார்ப்பரேட் ஆதரவு திட்டங்களை கொண்டுள்ள மோடி அரசாங்கத்துக்கு எதிராகவும், அதுபோல் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை கொண்டுள்ள பிற அரசாங்கங்களுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்து வருவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அதற்கு மிகச் சமீபத்திய உதாரணம் சென்னை சாம்சங் தொழிலாளர்களின் போராட்டமாகும். அங்கு பெரும்பான்மை தொழிற்சங்கத்திற்கு சங்கப் பதிவும் மறுக்கப்பட்டது. அங்கீகாரமும் மறுக்கப்பட்டது. ஜிக் பொருளாதாரமும், இணைய வழி பிளாட்பார்ம் பொருளாதாரமும் வளர்ந்து வரும் போது டிஜிட்டல் ஸ்டிரைக் என்பது புதிய போராட்ட வடிவமாக முன்னுக்கு வந்திருக்கிறது. தொழிலாளர்கள் கடும் கோபத்துடன் இருக்கிறார்கள். மூலதனம் நாட்டை விட்டு வெளியேறிவிடப் போகிறது  என்றும், கார்ப்பரேட்டுகளின், பன்னாட்டு நிறுவனங்களின் நலன் கருதியும் பாஜக தலைவர்கள் ஊடகங்களில் கண்ணீர் வடிக்கிறார்கள். தொழிலாளர்களின் நிலைமை குறித்து அவர்கள் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. மோடிக்காகவும் அவருடைய கார்ப்பரேட் நண்பர்களுக்காகவும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கையை, வாழ்வாதாரத்தை தியாகம் செய்ய வேண்டும் என்று அவர்கள் உபதேசம் செய்கிறார்கள். மாருதி தொழிலாளர்கள் அதிலும் குறிப்பாக அமைப்புசாரா, நிரந்தரமற்ற தொழிலாளர்கள் மாருதி நிர்வாகத்தை எதிர்கொள்ள மீண்டும் தங்களுக்குள் அமைப்பாகி வருகிறார்கள். பாக்ஸ்கான் நிறுவனத்துக்கு எதிராக மேம்பட்ட ஊதியம், மேம்பட்ட பணி நிலைமைகளுக்கான பெண் தொழிலாளர்களின் போராட்டம் இன்னும் கனன்று கொண்டிருக்கிறது. உத்திரபிரதேசத்திலும் சண்டிகரிலும் ஸ்மார்ட் மீட்டருக்கு எதிராகவும் இரத்தத்தை உறிஞ்சும் மின் கட்டண உயர்வுக்கு எதிராகவும் உத்தர பிரதேச, சண்டிகர் மாநில விவசாயிகள் தீரமிக்க போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். விவசாயிகள் தலைவர் தல்லேவால் நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார். விவசாயத்தை வணிகமயமாக்கும் கார்ப்பரேட்மயமாக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்துக்கு எதிராக பல்வேறு விவசாய அமைப்புகள் ஒன்றாக இணைந்து தீர்மானகரமான யுத்தத்தை தொடுக்க இருக்கின்றன. 2025 ஆம் ஆண்டு கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான, அதன் பாதம் தாங்கியான மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்துக்கு எதிரான விவசாயிகள், தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டங்களின் ஆண்டாக நிச்சயம் அமையும்.