கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சினை:
பிஜேபியின் தெற்கு ஆய்வகத்தில் இருந்து வரும் எச்சரிக்கை மணி
உத்தரபிரதேசம் மற்றும் வேறு சில நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, பிஜேபி வகுப்புவாதத் துருவச் சேர்க்கையை கூர்மை யாக்குவதற்கான வழிவகைகளைத் தீவிரமாகத் தேடிக்கொண்டிருக்கிறது. ஹரித்வாரில், தர்ம நாடாளுமன்றம் என்ற ஏமாற்று வித்தையின் பெயரில், முஸ்லிம் இன அழிப்பிற்கு வெளிப் படையாக அறைகூவல் விடுத்த, ஒரு வெறுப்பு ணர்வுக் கூட்டத்தை நாம் கண்டோம். அதே போன்ற கூச்சல்கள் வேறு பல பொதுக் கூட்டங்களிலும் அதைத்தொடர்ந்து உடனடியாக எதிரொலித்தன. இந்த சமயத்தில், சங்-பிஜேபி படையின் தெற்கு ஆய்வகமான கர்நாடகா, பல முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாபில் ஒரு வலிமையான ஆயுதம் இருப்பதைக் கண்டு கொண்டது. உடுப்பியில் உள்ள ஒரு கல்லூரியில் துவங்கிய ஹிஜாப் அணிவதற்கான தடையானது, தற்போது கர்நாடகா முழுவதுமுள்ள கல்வி நிலையங்களில் வெற்றிகரமாக அமல்படுத்தப் பட்டு விட்டது. அரசாங்க ஆணைக்குத் தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கர்நாடகா முழுவதிலும் ரவுடிக் கும்பல்கள் ஹிஜாப் அணியும் பெண்களை விரட்டிச் சென்று கூச்சல் எழுப்பி, அச்சுறுத்தியதும் நிகழ்ந்தது.
மாற்று மதங்களுக்கு இடையிலான திருமணங்களைக் 'காதல் விடுதலை' (லவ் ஜிஹாத்) என குற்றமயமாக்கியதைப் போலவே, கல்வி நிலையங்களுக்குள் ஹிஜாப் அணியும் முஸ்லிம் பெண்களின் உரிமையை மறுக்கும் இந்த செயலானது 'ஹிஜாப் விடுதலை' (ஹிஜாப் ஜிஹாத்) என ஏற்கனவே அழைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. உத்தரகண்டின் பிஜேபி முதலமைச்சர் பொதுக் குடிமை சட்டத்தை அமல்படுத்துவேன் எனக் வாக்குறுதி கொடுக் கிறார். உத்தரபிரதேசத்தின் பிஜேபி எம்எல்ஏ, முஸ்லிம்கள் தலையில் குல்லா அணிவதை தடை செய்து, அவர்களது நெற்றியில் திலகம் இடச் செய்வேன் என சொல்லி வாக்கு கேட்கிறார். இதன்மூலம், இந்த ஹிஜாப் பிரச்சனை என்பது தேர்தலை சந்திக்கும் மாநிலங்களில் பிஜேபியின் தேர்தல் பிரச்சாரத்தை 'ஊக்கப்படுத்துவதற்காகவே' திட்டமிடப்பட்ட ஒன்று என மிகத் தெளிவாகவே தெரிகிறது. முஸ்லிம் மத அடையாளத்தின் மிக முக்கியமான குறியீடுகளாக ஹிஜாபும், குல்லாவும் இருக் கின்றன. 'பொதுக் குடிமை சட்டத்திற்கான' பிஜேபியின் கூக்குரலானது, இந்த முஸ்லீம் மத அடையாளங்களைக் காணாமல் போகச் செய்து, பல்வேறுபட்ட இந்திய அடையாளங்களையும் ஒருமையாக்கி, ஆர்எஸ்எஸ்ஆல் கட்டுப் படுத்தப்படும் பொது அடையாளமாக்குவதற்கான தெளிவான குறிக்கோளைக் கொண்டதாகும்.
பல்வேறு வகைகளிலும் அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதப்படுத்தப் பட்டுள்ள அடிப்படை உரிமைகளை இந்த 'ஹிஜாப் தடை' என்பது மீறுகிறது. தனது உடையை தேர்வு செய்வதற்கான பெண்களின் அடிப்படை உரிமையை இது தெளிவாகவே மறுக்கிறது. குங்குமம், வளையல்கள், டர்பன் எனப்படும் தலைப்பாகை, ஹிஜாப் உள்ளிட்ட மதக் குறியீடுகளை பள்ளி மற்றும் கல்லூரிச் சீருடைகள் எப்போதுமே ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் சமீப வருடங்களில், பெண்களுக்கு உடைக் கட்டுப்பாடுகளை விதிக்கும் போக்கு நிச்சயமாகவே வளர்ந்துள்ளது. பெண்கள் ஜீன்ஸ் அணிவதற்கு எதிராக, ஆடைக் கட்டுப்பாட்டை அமல்படுத்த காப் (கிராமத்து கட்டப் பஞ்சாயத்துகள்) பஞ்சாயத்துகளின் கட்டுப்பா டுகள் போன்றே இந்த ஹிஜாப் மீதான தடையும், தங்களுடைய உடையை தேர்ந்தெடுப்பதற்கான பெண்களின் அடிப்படை உரிமையை அப்பட்ட மாக மீறுவதாகும். சீக்கிய ஆண்களுக்கு டர்பன் எப்படியோ, அப்படித்தான் இந்த ஹிஜாபும் மத நம்பிக்கை மற்றும் அடையாளத்தோடு நெருக்க மாக பிணைக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்தத் தடையானது மத சுதந்திரத்தை மீறுவதுமாகும்.
சட்டம் -ஒழுங்கை பராமரிக்க என்று சொல்லி கர்நாடக அரசாங்கம் கல்வி நிறுவனங்களை மூடிவிட்டது. கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்லும் பெண்களால் எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் வந்ததில்லை. ஏபிவிபி, சங் படையினரின் வேறுபல அமைப்புகள் நிகழ்த்திய கும்பல் அணிதிரட்டல்களே, மனித உரிமை அச்சுறுத்தலுக்கும், வளாக அமைதிக்கும் பங்கம் விளைவித்தன. காவித் துண்டு அணிந்திருந்த ஆண்கள் கூட்டம், முஸ்கான் கான் என்ற தனி யொரு பெண்ணை விரட்டிச் சென்று கூச்சல் எழுப்பி, அச்சுறுத்திய காணொலி, இந்த உண்மையை ஒட்டு மொத்த உலகத்திற்கும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. இருந்த போதிலும், கர்நாடக உயர்நீதிமன்றம் தன்னுடைய இடைக்கால உத்தரவில், இந்த அப்பட்டமான உண்மையை கண்டு கொள்ள மறுத்துவிட்டது. மேலும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவ தற்கான பெண்களின் உரிமையை உயர்த்திப் பிடித்த பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் இருந்த போதிலும், மாநில அரசாங்கம் வெளியிட்ட தடையை அது உறுதியாக உயர்த்திப் பிடித்தது.
மத நம்பிக்கை மற்றும் கல்விக்கு இடையி லான ஒரு குரூரத் தேர்வை வற்புறுத்தியதன் மூலம் அல்லது சுதந்திரம் மற்றும் கல்வி என்ற விசயத்தில், கர்நாடக உயர்நீதிமன்றம் பெண்களின் கல்விக்கு மாபெரும் கெடுதலைச் செய்துள்ளது. இந்தத் தடையின் தொடர் விளைவாக, மாணவர்கள் வகுப்புகளில் இருந்தும், தேர்வு களில் இருந்தும் வெளியேறுகின்றனர் என்பதை நாம் ஏற்கனவே கண்டு கொண்டிருக்கிறோம். நீதிமன்ற இடைக்கால உத்தரவின் வெளிப்படை யான நடுநிலைமையானது, ஒரு பொய்யான சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. முஸ்லிம் பெண்கள் அணியும் வழக்கமான உடையின் ஒரு பகுதியாக ஹிஜாப் உள்ளது. ஆனால், முரட்டுத்தனமான அல்லது அச்சுறுத்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தவே காவித் துண்டுகள் பயன்படுத்தப்பட்டன. கல்லூரி வளாகங்களில் காவிக் கொடியேற்றப்பட்ட சம்பவங்களையும் நாம் கண்ணுற்றோம். காவித் துண்டுகளுக்கும், காவிக் கொடிகளுக்குமான உந்துதல், நிச்சயமாக ஆர்எஸ்எஸ் கருத்தியலில் இருந்தே வந்தி ருக்கிறது. எந்தவொரு மரபுவழி அல்லது வழக்க மான நடைமுறையில் இருந்தும் வரவில்லை. பாரபட்சத்தையும் அவமதிப்பையும் எதிர் கொண்ட முஸ்லிம் பெண்களுக்கு ஒருமைப் பாட்டைத் தெரிவிக்க, சில மாணவர்கள் நீலத் துண்டுகளை அணிந்துகொண்டு ஜெய் பீம் என்று முழங்கினார்கள். ஆக, இந்த அனைத்து செயல் களையும் ஒரே தட்டில் வைத்ததால், கர்நாடக உயர்நீதிமன்றம் வலியச் சென்று வம்பிழுத்தவர் களுக்குத் தைரியம் கொடுத்துள்ளது. பாதிக்கப் பட்டவர்களைக் கைவிட்டு விட்டது.
இந்த ஹிஜாப் பிரச்சினையின் ஒட்டுமொத்த அரசியல்-கலாச்சார பின்னணியையும் கவனத்தில் கொள்ளாமல், தடம்புரண்டு சென்றுவிட்ட தாராளவாதக் கருத்து ஒன்றும் உள்ளது. முஸ்லிம் பெண்கள் அதிகாரம் பெறுவதை நோக்கிய ஒரு படியென இந்தத் தடையை அது வரவேற்கிறது. உண்மையிலிருந்து இவ்வளவு நெடுந்தொலைவில் வேறெதுவும் இருக்க முடியாது. இந்தியாவிலுள்ள முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது சம்பந்த மான எந்தவொரு தாலிபானிய மதக்கட்ட ளையையும் எதிர்கொள்ளவில்லை. தாலிபான் வகை முரட்டுத்தனத்திற்கு ஒப்பீடாக எதையாவது காட்டவெண்டுமானால், அது கர்நாடகாவின் தெருக்களில் ஹிஜாப் அணியும் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக, அரசு மற்றும் படுகொலை கும்பல்களின் அதிகரித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகளே. ஹிஜாப் அணியும் உரிமையை உயர்த்திப் பிடிப்பதற்கான மனுவிற்கு ஆதரவாக வாதாடிய, இந்து வழக்கறிஞர் ஒருவரும் 'இந்து நலனுக்கு' விரோதி என சமூக வலைதளங்களில் தாக்குதலுக்கு உள்ளானார். அதேநேரத்தில் பிஜேபி, முஸ்லிம் மனுதாரர்களின் விவரங்களை வெளியிட்டு, அவர்கள் மிரட்டப்படுவதற்கும், வன்முறைக்கு ஆளாகும் வாய்ப்பையும் கூட ஏற்படுத்தியது. இந்த நிலைமைகளின் கீழ், முஸ்லிம் பெண்கள் அவர்களுடைய குடும்பத்தாரி டமிருந்தும், அவர்களின் சமூகத்திற்குள் இருக்கும் பழமைவாத பிரிவினரிடமிருந்தும் தங்களுடைய சமூகத்தின் வழக்கங்களையும், ஒழுக்க விதிகளையும் கடைபிடிக்க வேண்டுமெனும் மாபெரும் எதிர் நெருக்கடியை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள் என்பதை சொல்லவேண்டிய தேவையில்லை.
குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசத்தை போலவே, இஸ்லாமிய வெறுப்பு மற்றும் வகுப்புவாதத் துருவச்சேர்க்கை எனும் அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்கொண்டு செல்வதற்கான பல்வகை ஆயுதங்களையும், பல்முனைகளில் தாக்குதல் தொடுப்பதற்கான போர்முறைகளையும் வளர்த்தெடுப்பதற்கான சிறப்பு ஆய்வகமாக சங்-பிஜேபி அமைப்புகளினால் கர்நாடகாவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தத் தீயச் செயலை நிறைவேற்றுவதற்காக அரசு அதிகாரத் தின் முழு ஆதரவையும் திரட்டும் நோக்கில், பிஜேபி முதலில் இந்த மாநிலத்தின் பிஜேபி அல்லாத அரசாங்கத்தைக் கவிழ்த்தது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு, களத்தில் கொடிய வகுப்புவாத அணிதிரட்டலுடன், முழு அளவி லான பாசிசத் தாக்குதலை நிகழ்த்துவதற்காக ஆட்சித் தலைமையில் மாற்றத்தை உறுதி செய்தது. சட்டங்கள் மாற்றப்படுகின்றன. புதிய விதிகள் வடிவமைக்கப்படுகின்றன. முஸ்லிம் சமூகத்தினரைத் தாக்குவதற்கான இலக்காக்கியும், எதிர்ப்புக் குரல்களை நசுக்கவும் மெய்யான பயங்கரத்தின் ஆட்சி கட்டவிழ்த்து விடப் படுகிறது. எம்எம் கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோரின் படுகொலைகளுக்குப் பிறகு, இந்த ஹிஜாப் பிரச்சினையானது சங்-பிஜேபி படையினரின் தெற்கு ஆய்வகத்தில் இருந்து விழித்துக் கொள்வதற்காக வரும் மற்றுமொரு எச்சரிக்கை மணியோசையாகும். இருபது வருடங்களுக்கு முன்பு, குஜராத் ஆய்வகம் ஒரு இனப்படுகொலையை உருவாக் கியது. ஒரு மாபெரும் ஊழல் நிறைந்த, காவல் துறையின் அரசு அதிலிருந்து உயிர்த்தெழுந்தது. உபி ஆய்வகம் வேறொரு காவல்துறையின் அரசினையும், மிகவும் கொடூரமான, இரக்கமற்ற ஆட்சி நிர்வாகத்தையும் நமக்குத் தந்தது. சிறிதும் காலம் தாமதிக்காமல், கர்நாடகாவில் இருந்து வரும் எச்சரிக்கைகளுக்கு இந்தியா கண்டிப்பாக விழித்துக் கொள்ளவேண்டும்.
- லிபரேஷன் மார்ச் 2022, தமிழாக்கம் - செந்தில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)