போர் வேண்டாம்... அமைதி வேண்டும்...
ரஷ்ய படைகளே உக்ரைனை விட்டு வெளியேறு...
அமெரிக்காவே - நேட்டோவே விரிவாக்கத்தைக் கைவிடு...
உக்ரைன் ரஷ்யாவிற்குப் பக்கத்தில் உள்ள நாடு. அன்றைய சோவியத் ரஷ்யா ஒன்றியத்தில் ஒன்றாக இருந்த நாடு. தோழர் லெனினின் “பிரிந்துபோகும் உரிமையுடனான சுய நிர்ணய உரிமை” காரணமாக சுதந்திரம் பெற்ற நாடு. கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள டொனட்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய இரண்டு சுதந்திரமான மக்கள் குடியரசுகளை இராஜதந்திர ரீதியாக அங்கீகரிக்கும் முடிவை ரஷ்ய அதிபர் புடின் அறிவித்து, ‘அமைதிப்படை’ என்ற பெயரில் ரஷ்யப் படைகளை உக்ரைனுக்குள் நிறுத்தியதே இந்தப் போருக்கு முன்னோடிக் காரணம். டொனட்க் மற்றும் லுகன்ஸ்க் பகுதியில் ரஷ்ய மொழி பேசுபவர்கள் அதிகமாக உள்ளார்கள் என்பதால் அவர்களைக் காக்கவே அமைதிப் படை என்றார் புடின். இலங்கைக்குள் இந்திய அமைதிப்படை போனது இப்போது நம் நினைவிற்கு வரலாம்.
இந்தப் போர் தொடங்கிய உடனேயே உலகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. அதிலும் முக்கியமாக ரஷ்யாவிற் குள்ளே மக்கள் இப்போருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். டொனட்க் மற்றும் லுகன்ஸ்க் மக்கள் குடியரசுகளுக்கு புடினின் இராஜதந்திர ரீதியான முடிவுக்கு ஆதரவு தெரிவித்த ரஷ்ய மக்கள்கூட உக்ரைன் மீதான இப்போரை விரும்பவில்லை. ஆர்ப்பாட்டக் காரர்களை ரஷ்ய போலீஸ் கைது செய்தபோதும் ரஷ்ய மக்கள் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து தெருக்களில் திரண்டு கொண்டேயிருக் கிறார்கள். ரஷ்யாவின் பிரபலங்கள் எல்லாம் போருக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறார்கள். 4000த்திற்கும் மேலான ரஷ்ய விஞ்ஞானிகளும் அறிவியல் பத்திரிகையாளர் களும் போருக்கு எதிராகத் திறந்த மடலை எழுதிக் கையெழுத்திட் டுள்ளார்கள். ரஷ்ய மக்களும் உக்ரைன் மக்களும் நெருக்கமான கலாசாரம் உடையவர்கள். சமூக உறவுகள் கொண்டவர்கள்.
ஒரு நூற்றாண்டிற்கு முன்பு, இந்தப் பகுதியில் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போர் ஒரு யுகப் புரட்சியாக மாறியது. ரஷ்யாவின் உலகைக் குலுக்கிய பத்து நாட்கள், ஏகாதிபத்தியச் சங்கிலியில் அதன் பலவீனமான கண்ணியில் கொடுத்த அடியில் நொறுங்கிப்போய் ரஷ்யாவின் ஜார் மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு, உலகின் முதல் சோசலிச நாடாக ரஷ்யா உருவானது. அந்த மாபெரும் புரட்சியின் மூலம் தேசிய இனங்களுக்கு ஒரு மெய்யான சிறையாக இருந்த ஜார் பேரரசு, ஒரு சோசலிச கூட்டமைப்பாக மாற்றப்பட்டு,(USSR)சோவித் சோசலிச குடியரசுகளின் ஒன்றியமானது. தேசிய இனப் பிரச்சினைக்கு ஒரு மார்ச்சிய அணுகுமுறையும் சோசலிசக் கட்டமைப்பும் ஏற்பட்டது. ஒவ்வொரு தேசிய இனங்களுக்கும் ‘பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை’ அங்கீகரிக்கப்பட்டது. பல்வேறு இனங்களின் ஒற்றுமைக்கு ஒரு புதிய மாதிரி உருவாக்கப் பட்டது. இது ஜாரின் ஏதேச்சதிகாரம் ஒழிக்கப் பட்டதால் மட்டுமல்ல, நவம்பர் புரட்சியி னாலேயே சாத்தியமானது. அது மாபெரும் ரஷ்யப் பேரினவாததைத் தூக்கியெறிந்தது.
ஆண்டுகள் ஓடின. சோவியத் சோசலிசம் அதன் பாதையை இழந்தது. சோசலிசத்தின் அதிகாரத்துவ சீரழிவும் தேசிய இனங்களின் சோசலிசக் கூட்டாட்சி ஒன்றுமையில் ஏற்பட்ட அரிப்பும் இறுதியாக (ஹிஷிஷிஸி)சோவித் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் சரிவதற்கும் சிதைவ தற்கும் இட்டுச்சென்றது. 1991ல் உக்ரைன் ஒரு இறையாளுமையுடைய குடியரசாக உருவானது. பல ஆண்டுகளாக உக்ரைன் ஒருபுறம் ரஷ்யாவுடனான உறவை தொடர்ந்து கொண்டே ஐரோப்பிய ஒன்றியத்துடனும் உறவு பாராட்டிக் கொண்டு வந்தது. அந்த நிலை, தேர்ந்தெடுக்கப் பட்ட யானுகோவிட்ச் ஆட்சியைக் கவிழ்க்கும் வரை நீடித்தது. அதனைத் தொடர்ந்து உக்ரைன் ரஷ்யாவிற்கு எதிராக, அமெரிக்கா மற்றும் நேட்டோ (வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளின் அமைப்பு) ஆகியவற்றுடன் நெருக்கத்தை ஏற்படுத்தும் ஒரு போர்த்தந்திர நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால், கிரிமியாவை இணைத்துக் கொண்டு, ரஷ்யர்கள் பெரும் பான்மையாக உள்ள டான்பாஸ் பகுதியிலிருந்த பிரிவினைவாத இயக்கத்திற்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்து ரஷ்யா பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது.
2014 நெருக்கடிக்கும் பகைமைக்கும் இராஜதந்திர ரீதியாக முடிவு கட்டுவதற்கு சமரசம் பேசும் முயற்சியில் பிரான்ஸூம் ஜெர்மனியும் இறங்கின. பெலாரஸின் தலைநகர் மின்ஸ்கில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த உச்சி மாநாட்டில் ரஷ்யா, உக்ரைன், பிரான்ஸ், ஜெர்மனி, லுகான்ஸ்க் மற்றும் டொனெட்க் குடியரசுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 2014 செப்டம்பர் மற்றும் 2015 பிப்ரவரியில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் மின்ஸ்க் 1, மின்ஸ்க் 2 ஒப்பந்தங் கள் என்றழைக்கப்பட்டன. இதன் மூலம் பகைமை குறைந்து சண்டை நிறுத்தம் வரும் என்றிருந்தவேளையில், ரஷ்ய ஊடுருவலால் உருவாக்கப்பட்ட சக்திகளின் ஏற்றத் தாழ்வுகள் ஒப்பந்தங்களில் பிரதிபலித்தன. அதனால், ஒப்பந்தங்கள் முழுமையாக அமல்படுத்தப்பட வில்லை. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்குமான முரண்பாடுகள் ஒரு புதிய கட்டத்திற்குள் மீண்டும் நுழைந்தன. புடின் உக்ரைன் அரசை, ‘லெனினின் உக்ரைன்’ என்று விவரித்தார். இந்த லெனினிஸ்ட் மரபை இல்லாமல் செய்வேன் என்று சபதம் செய்தார். உக்ரைன் தன்னுடைய எதிர்காலத்திற்காக அமெரிக்காவையும் நேட்டோ வையும் நோக்கி ஓடியது.
ரஷ்யா&உக்ரைன் இடையே உள்ள பிரச்சினையை இப்பவும் பேச்சுவார்த்தை மூலம் உக்ரைனின் இறையாளுமைக்கு பாதிபில்லாமலும் சிறுபான்மை ரஷ்ய இன மக்களின் உரிமை களுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையிலும் ஒப்பந்தம் ஏற்படுத்தி தீர்வு காண முடியும். ஆனால், நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கமும் உக்ரைனின் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினுடனான போர்த் தந்திர உறவுமே அதற்கு முட்டுக் கட்டையாக இருக்கிறது. அன்றைய சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக பனிப்போர் காலத்தில் இராணுவக் கூட்டணிக்காக உருவாக்கப்பட்டதுதான் நேட்டோ. எப்போது சோசலிச சோவியத் ரஷ்ய ஒன்றியம் சிதைந்து, நொறுங்கிப்போனதோ, வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டுவிட்டதோ அப்போதே நேட்டோவிற்கான நோக்கமும் இல்லாமல் போய்விட்டது. இருப்பினும், நேட்டோ ஏகாதிபத்தியப் போர்களைத் தொடங்குவது மட்டுமின்றி, ஐரோப்பாவிற்குள் தொடர்ந்து ஆழமாக வேரூண்றிக் கொண்டி ருக்கிறது. நேட்டோ உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 1949ல் 12 ஆக இருந்தது 2020ல் 30 ஆகியுள்ளது.
நேட்டோ உக்ரைனை இன்னும் ஒரு முழு உறுப்பினராக சேர்த்துக் கொள்ள வில்லை என்றபோதிலும் உக்ரைனுக்கு இராணுவ உத்தரவாதங்களை வெளிப்படையாகவே வழங்குகிறது. ஐரோப்பிய ஒன்றியம், அது ஒரு வணிகச் சந்தை, உக்ரைனுடன் உண்மையான இராணுவக் கூட்டணியை தொடங்கிவிட்டது. மேலும் ஆயுதங்களுக்கான நிதியை உக்ரைனுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கும் நேரத்தில் பிரச்சினையை மேலும் அதிகரிக்காமல் சீக்கிரம் உடன்பாட்டிற்கு வர வேண்டும்.
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் உலகளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிற கவலை உள்ளது. நேட்டோ மற்றும் ரஷ்ய&சீனக் கூட்டணிக்கு இடையேயான ஆயுதப் போட்டி மற்றும் புதுப்பிக்கப்பட்ட உலகளாவிய பகைக்கான அடையாளங்கள் தெளிவாகவே தெரிகின்றன. ஐரோப்பாவிற்குள் அமெரிக்கா மூக்கை நுழைப்பது அதிகரிக்கிறது. அது ரஷ்யா மற்றும் மேற்கு ஐரோப்பாவிற்கிடையே சாத்தியமான ஒத்துழைப்பைப் பயன்படுத்திக் கொண்டு அமெரிக்காவின் இராணுவ தொழிற் சாலைகளின் நலன்களை மேலும் முன்னெடுத்துச் செல்லும். ரஷ்யா&ஜெர்மனிக்கிடையேயான நார்ட் ஸ்ட்ரீம் 2 வாயுக்குழாய் பாதைத் திட்டம் ஏற்கனவே செத்துப் போய்விட்டது. உலகம் கோவிட் 19 பெருந்தொற்றால் நாசமாக்கப்பட்டு, உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அதிகரிக்கும் வானிலை மாற்றங்கள் போன்ற சூழலில் இப்போது போர் வெடிக்கும் அபாயமும் நம் முகத்திற்கு நேரே தெரிகிறது.
சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானத் திற்குள் ஆக்கிரமிப்பு செய்து அதன் பின்னர் ஏற்பட்ட நிகழ்வுகளின் வரலாறானது ரஷ்யாவிற் கும் ஒட்டுமொத்த உலகத்திற்கும் சில பாடங்களை வெளிப்படையாகவே கற்றுக் கொடுத்திருக்கிறது. ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவி, ஆக்கிரமிப்பு செய்ததுதான் சோவியத் ஒன்றியம் வீழ்வதற்கும் சீரழிந்து போவதற்கும் வழி ஏற்படுத்தியது. அமெரிக்க ஏகாதிபத்தியம், ஆப்கானிஸ்தானில் முஜாகிதீன்களுக்கு ஆதரவ ளித்ததுதான் பல பத்தாண்டு கால பயங்கர வாதத்திற்கும் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்புப் போர்களுக்கும் கொள்ளைக்கும் கட்டியம் கூறியது. சமீப ஆண்டுகளாக வெளிப்படையாகவே மேற்குலகு, உக்ரைனில் உள்ள பாசிச துணை இராணுவ அமைப்புகளுக்கு நிதியும் பயிற்சியும் கொடுத்துவருவது மிகவும் ஆபத்தானதாகும். இன்னும் சொல்லப்போனால், உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்குலகு காட்டும் ஆதரவு என்பது பாசாங்கு ஆகும். நன்றாகப் பார்த்தால், பாலஸ்தீனத்திற்கு எதிராகவும் சிரியாவில் இருந்து, ஈராக்கில் இருந்து, ஆப்கானில் இருந்து புகழிடம் தேடிவரும் அகதிகளிடமும் மற்றவர்களிடமும் மேற்குலகு காட்டும் மனிதாபிமானமற்ற செயலும் பிரச்சாரமும் நன்கு இதைப் புலப்படுத்தும். இதையெல்லாம் நாம் கண்டு கொள்ளாமல் போக முடியாது. பெருங் கூட்டணி என்று, துல்லிய மாகச் சொன்னால் செசன்யா மீது புடின் மோசமாக போர் தொடுத்தபோது, புஷ்ஷூம் பிளேயரும் புடினை ஆரத் தழுவிக் கொண்டதை நாம் மறந்துவிட முடியுமா? இந்த பாசாங்கிற்குப் பின்னால் இருப்பது அப்பட்டமான இனவெறி மட்டுமில்லை, மேற்குலகின் நலன்களுக்காக உக்ரைனைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதேயாகும்.
விந்தை என்னவென்றால், இரண்டாம் உலகப் போரின்போது, ரஷ்யாவும் உக்ரைனும் ஒன்றாகச் சேர்ந்து சண்டையிட்டு, பெரும் மனித விலை கொடுத்து ஹிட்லரின் பாசிச ஒடுக்கு முறையைத் தோற்கடித்தன. இன்று தீவிர தேசியவாதி, அதிதீவிர வலதுசாரி சக்திகள், இந்த நெருக்கடிக்கு மத்தியில் ஒட்டு மொத்த பிராந்தியத்திலும் பயனடையப்பார்க்கின்றனர். இன்னும் அதிகமான நீடித்த துன்பங்களை மக்களுக்குத் தர அச்சுறுத்துகின்றன. அமெரிக்கா புடினின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டுகிறது. இந்தியாவில் அதிதீவிர தேசியவாத இந்துத்துவ சக்திகள், புடினை தங்கள் முன்மாதிரியாகப் பார்க்கிறார் கள். உக்ரைன் போரை வைத்து இந்தியாவின் பக்கத்து நாடுகளை, குறிப்பாக பாகிஸ்தானை எப்படி நடத்தவேண்டும் என்று சொல்கிறார்கள். இதற்கிடையே மோடியும் பாஜக தலைவர்களும் உக்ரைன் போரை உத்தரப் பிரதேசத்தில் ஓட்டு வாங்குவதற்காகப் பயன் படுத்துகிறார்கள். வலிமையான அரசின் தேவை பற்றி அங்கு பேசுகிறார்கள். மோடியின் கூற்றால் உக்ரைனில் பரிதவித்துக் கொண்டிருக்கிற மாணவர்களுக்குக் கூட பாதுகாப்பு கிடையாது. அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகும். உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை அழைத்து வருவதற்கு எந்தவொரு நடவடிக் கையும் உரிய காலத்தில் மோடி அரசு மேற்கொள்ளவில்லை.
ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் பொதுமக்கள் உயிரிழக்கிறார்கள். பலர் உயிர் பிழைக்க அண்டை நாடுகளில் தஞ்சமடைய ஓடுகிறார்கள். உக்ரைனில் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வில் போடப்பட்ட குண்டு பாய்ந்து இந்தியாவின் கர்நாடகா மாநில மாணவர் இறந்து போய்விட்டார். தெற்காசிய மற்றும் ஆப்ரிக்க மாணவர்கள் ரயிலில் ஏறுவதற்கோ எல்லையைத் தாண்டி போலந்திற்குள் செல்வதற்கோ முயற்சிப்பவர்கள் மீது இனவெறித் தாக்குதல்கள் நடத்தப்படு கின்றன. எல்லையை கடக்கும் மாணவர்கள் சந்திக்கும் இனவெறித் தாக்குதலுக்குக் கூட ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை மோடி அரசு.
உலகெங்கும் உள்ள அமைதியையும் ஜனநாயகத்தையும் விரும்பும் சக்திகள் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர குரல் கொடுக்க வேண்டும். உக்ரைனின் இறையாளு மையை மதிக்கிற, உக்ரைனில் உள்ள இனச் சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்கிற ஒரு இராஜதந்திர முடிவை ஏற்படுத்தவும் பிராந்தி யத்தில் அமைதியையும் நிலைத் தன்மையையும் உத்தரவாதப்படுத்தவும் குரல் கொடுக்க வேண்டும். உண்மையான, நிரந்தர அமைதி வேண்டுமென்றால், அமெரிக்கா- நேட்டோ விரிவாக்கம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நேட்டோ கலைக்கப்பட வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)