2022 மே 7,8 தேதிகளில் கொடைக்கானலில் இகக(மாலெ) மாநில ஊழியர் பயிற்சி முகாம் நடைபெற்றது. 23 மாவட்டங்களிலிருந்து 15 பெண் தோழர்கள் உட்பட மொத்தம் 100 பேர் கலந்துகொண்டனர். இதில் கட்சி, வெகுமக்கள் அமைப்புகளின் முன்னணி தோழர்கள் கலந்து கொண்டனர்.

இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராசன் அறிமுக உரையாற்றினார். கட்சித் திட்டம் தலைப்பில் நடைபெற்ற முதல் அமர்விற்கு தோழர் தேசிகன் தலைமை தாங்கினார். தோழர் பாலசுந்தரம் விளக்கவுரையாற்றினார். பாசிசம் குறித்த மதிப்பீடு, நிலைப்பாடு, அதன் பரிமாணங்கள், எதிர்ப்புப் போராட்டங்கள் தலைப்பிலான இரண்டாம் அமர்விற்கு தோழர் ஜி.ரமேஷ் தலைமை தாங்கினார். தோழர் .சந்திரமோகன் விளக்கவுரையாற்றினார். பாசிச எதிர்ப்புப் பின்னணியில் தமிழக அரசியலும் நமது அணுகுமுறையும் என்ற மூன்றாம் அமர்விற்கு தோழர் .சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். தோழர் பாலசுந்தரம் விளக்கிப் பேசினார். கட்சி மறுசீரமைப்பு&முக்கிய அம்சங்கள் அதன் தேவை&ஊழியர் கொள்கை, கமிட்டி செயல்பாடு தலைப்பிலான நான்காம் அமர்விற்கு தோழர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். தோழர் பழ.ஆசைத்தம்பி விளக்கிப் பேசினார். மறுசீரமைப்பு அமலாக்கம்&மாவட்ட, மாநில மாநாடுகள், தீப்பொறி&நிதி திரட்டல் தலைப்பில் நடந்த ஐந்தாம் அமர்விற்கு தோழர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தோழர் என்.கே.நடராஜன் விளக்க வுரையாற்றினார். கட்சித் திட்டத்தின் பின்னணியில் மாநில, மாவட்ட மாநாடுகள், கட்சியின் 11வது காங்கிரஸ் ஆகிய பொருட்கள் மற்றும் விவாதங்கள் குறித்து ஆறாவது அமர்வு நடைபெற்றது. ஒவ்வொரு அமர்விலும் பங்கேற்பாளர்கள் கருத்துகளை தெரிவித்தனர். ஒவ்வொரு அமர்வின் முடிவிலும் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் வீ.சங்கர் நிறைவுரை ஆற்றினார்.

மே 15-&31 தேதிகளில் கட்சி மத்தியக் கமிட்டி அறிவித்துள்ள புல்டோசர் ஆட்சிக்கெதிரான பரப்புரை இயக்கத்தை மாவட்ட கட்சி அமைப்புகள் திட்டமிட்ட வகையில் நிறைவேற்றிட வேண்டுமென்றும் பயிற்சிமுகாம் முடிவுசெய்தது. இரண்டு நாள் நிகழ்ச்சியிலும் தோழர்கள் ஆவுடையப்பன், மங்கையர்க்கரசி பாடல்கள் பாடினர்.

இரண்டு நாள் நிகழ்ச்சியை வெகுசிறப்பாக  நடத்திக்காட்டிய திண்டுக்கல் மாவட்ட ஊழியர்கள், தொண்டர்கள், மண்டப ஊழியர்கள், நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.

ஏற்கனவே பொய் வழக்கில் ஒரு மாதத்திற்கு மேலாக திண்டுக்கல்லில் தங்கியிருந்த தஞ்சாவூர் தோழர்களை வெகுசிரமங்களுக்கிடையே வெகு சிறப்பாக திண்டுக்கல் மாவட்டக்குழு பராமரித்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து இந்த பயிற்சி முகாமையும் சிறப்பாக நடத்திக் கொடுத்துள்ளது திண்டுக்கல் மாவட்டக் கமிட்டி.

பயிற்சி முகாமில் மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் உரையிலிருந்து

தோழர்களே,

மறுசீரமைப்பு இயக்கத்தின் ஒருபகுதிதான் ஊழியர்கள் பயிற்சிமுகாம். கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள்தான் ஊழியர்கள். முதலாளித்துவ கட்சிகள் ஓரிரு தலைவர்களின் சர்வ அதிகாரத்தில் இயங்கும். மாறாக கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களின் கூட்டுத் தலைமையில் இயங்கும்ஜனநாயக மத்தியத் துவக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இயங்கும். எனவே கம்யூனிஸ்ட் கட்சியில் ஊழியர்கள் முக்கியமானவர்கள். இங்கு ஊழியர்களே தலைவர்கள். தலைவர்களே ஊழியர்கள். அந்தவகையில் இங்கு முக்கிய கட்சி ஊழியர்கள் கலந்து கொள்ளும் ஊழியர்கள் பயிற்சி முகாம் குறிப்பிடத்தக்கது. கட்சியின் ஊழியர்கள் கொள்கை பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள். மறுசீரமைப்பு இயக்க ஆவணத்தின் இணைப்பில் ஊழியர்கள் கொள்கை பற்றி குறிப்புகள் இருக்கிறது. அதை மீண்டும் படித்துக் கொள்ளலாம்.

2021 ஆகஸ்ட் 8ம் தேதி கந்தர்வக் கோட்டையில் பொதுச் செயலாளரால் துவக்கிய இயக்கம் இன்றோடு 9 மாதங்கள் நிறைவு பெற்றுவிட்டது.

எந்த இயக்கமும் வெற்றி பெற வேண்டும் என்றால் ஊழியர்கள் முன்முயற்சி எடுத்தால் தான் வெற்றி பெறமுடியும். இந்த இயக்கம் செப்டம்பர் மாதம் கட்சியின் மாநில மாநாட்டோடு நிறைவு பெரும். நிறைவு பெறுகிறது என்றால் மறு சீரமைப்பு வலியுறுத்துகிற அடிப்படை அம்சங்களை தன்மயமாக்கிக் கொள்ளும்.

மறுசீரமைப்பு என்ன நோக்கத்திற்காக மாநிலக் கமிட்டியால் வலியுறுத்தப்பட்டது என்பதை மீண்டுமொருமுறை நினைவு கொள் வோம்.

நடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் வாங்கிய ஓட்டு மிகவும் அற்பமானது. இது இந்த தேர்தலில் மட்டுமல்ல கடந்த நீண்டகாலமாகவே இதே நிலைமைதான். நாம் செயல்படும் தளம் மிகவும் குறுகலானது. குறுகிய மக்கள் அடித்தளத்தை கொண்டிருக்கிறோம். நாம் ஒரு சிறிய வட்டத்திற்குள் திரும்ப திரும்ப சுற்றி வந்துகொண்டிருக்கிறோம் ஒரு வகையான விஷச்சுற்றில் மாட்டிக் கொண்டிருக்கிறோம்.   ஒருவகையான கெட்டி தட்டிய வேலை நடைக்கு ஆளாகியிருக்கிறோம். இத்தகையை நீண்டகால இந்த வகையான வேலை நடை கட்சி வளர்ச்சியைத் தடுத்துநிறுத்தும் தடைகல்லாக எழுந்து நிற்கிறது. இத்தகையை நிலைமையில் வேலைத் தளத்தை மாற்றியமைக்க வேண்டும். சிந்தனையில் செயல்பாட்டில் குறுகிய தன்மையை, இறுக்கமான, கமுக்கமான வேலைநடையை மாற்றியமைக்க வேண்டும். நாம் செயல்படும் குறுகியதளத்தை உடைத் தெறிய வேண்டும்.அதற்காக தேரந்தெடுத்த பகுதியில் கவனம் குவித்த ஆழமான வேலை, திட்டமிட்ட விரிவாக்கம் என்ற நோக்கில் திட்டமிட்டோம். மாவட்ட கமிட்டிகளை அடிப்படையாக கொண்டு திட்டமிட்டோம். மறுசீரமைப்பு இயக்கம் துவங்கி 9 மாதங்கள் நிறைவு பெற்றுவிட்டது. ஏதாவது புதிய மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறதா?

ஏதோ ஒரு வகையில் செயலூக்கம் பெற்று இருக்கிறது என்று சொல்லலாம். மைய முடிவுகள் அறை கூவல்கள் ஆகியவற்றை மாவட்டக் கமிட்டிகள் கவனத்தில் கொண்டுள்ளன. ஆனால் அவை சம்பிரதாயமாய் சுருங்கி நிற்கிறது.

நாம் இயக்கத்தை ஆய்வில் இருந்து துவங்கினோம். பல இடங்களில் அவை துவங்கவே இல்லை. அல்லது துவங்க மறுத்தது. கெட்டி தட்டிய வேலைமுறை பல தோழர்களுக்கு வேதனையையும் வருத்தையும் உருவாக்கியது. நமது வேலை நடையில் ஆய்வு படிப்பு என்பது இயல்பாக மாறவேண்டும். கம்யூனிஸ்ட்கள் விவரங்களில் இருந்து உண்மையை தேடு பவர்கள். ஆய்வு படிப்பு ஊழியர்களுக்கு இயல்பாக வில்லை என்றால், சமூகத்தின் சீரழிந்த சிந்தனைகள் ஆக்கிரமிக்கும். வரும் பிரச்சனைகளுக்கு பின்னால் ஓடிக்கொண்டே இருப்போம். நமது உணர்வு பூர்வமான திட்டமிட்ட வேலை இருக்காது. நோக்க மில்லாத, குறிக்கோள் இல்லாத எல்லைக்கு போயி ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யும் அரசியலற்ற நடவடிக்கையாக மாறும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆய்வுகள் அங்கொன்றும் இங்கொன்றும் நடந்தது. அதற்கான விளைவுகளும் ஏற்பட்டு இருக்கிறது என்பதை ஊழியர்கள் படித்து அறிய வேண்டும்.

இதற்கு அடுத்து ஊராட்சி மட்ட அணி திரட்டல். பல ஊராட்சிகளில் நடந்தி ருக்கிறது. சில நல்ல விளைவுகளைக் கூட ஏற்படுத்தி இருக்கிறது. நாம் நிர்ணயத்த இலக்குகளை எட்டவில்லை. நாம் ஆழமான வேலையை வளர்த்தெடுக்க நினைத்தோம். ஆனால் அவை மேலோட்டமான வேலையாக தொடர்கிறது என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும். தற்போது ஒன்றிய மட்ட அணிதிரட்டல் அல்லது பகுதி மட்ட அணிதிரட்டல். எந்த வேலை இருந்தாலும் இந்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியது. உற்சகமாக துவங்கி ஒரு கட்டத்தில் நின்று விட்டதுபோல் தெரிகிறது.

கட்சி உறுப்பினர் புதுப்பித்தல், தீப்பொறி சந்தா சேர்த்தல் ஒரு எல்லைக்கு மேல் நகர மறுக்கிறது.

இதற்கெல்லாம் இந்த பயிற்சி முகாம் தீர்வு கண்டு எழுச்சி பெறவேண்டும்.

இம்மாத இறுதிக்குள் எஞ்சியுள்ள ஒன்றிய அணி திரட்டலை முடித்தாகவேண்டும்.

ஜூன் மாதம் மாவட்ட மட்ட அணிதிரட்டல் முடித்தாக வேண்டும்.

ஜூலை, ஆகஸ்டில் மாவட்ட மாநாடுகள் நடத்தியாகவேண்டும்.

செப்டம்பர் மாதம் அநேகமாக மாநில மாநாட்டை நோக்கி செல்லவேண்டும்.

மாநில மாநாட்டிற்கு செல்லும் முன் 10000 உறுப்பினர் எண்ணிக்கையை எட்டியாக வேண்டும்.

11வது கட்சி காங்கிரஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரி நடுவில் நடக்க இருக்கிறது. அதற்கு மாநில இலக்கு ரூ. 5 லட்சம் அது அல்லாமல் வெகு மக்கள் அமைப்பிற்கு தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

மாவட்ட, மாநில மாநாடு கட்சி காங்கிரஸ் என நிதியின் தேவைகள் அதிகரித்து உள்ளன. அப்படியானால் நாம் தீவிர நிதி திரட்டலுக்கு திட்டமிடவேண்டும்.