களஆய்வு
தமிழ்நாட்டில் திமுக 2021-ல் ஆட்சிக்கு வந்தபின்னரும் உழைக்கும் மக்களுக்கு எதிராக, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தாக்குதல்கள் தொடர்கிறது. சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட இராஜா அண்ணாமலை புரம் பகுதியில் உள்ள கோவிந்தசாமி நகரில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் மக்கள் குடியிருப்பு களை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அகற்றுகிறோம் என்ற பெயரில் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கி வாக்களித்த மக்களை நடுரோட்டில் நிறுத்தி வைத்துள்ளது திராவிட மாடல் அரசு!
கோவிந்தசாமி நகரில் மேற்படி இடத்தில் ஏற்கனவே குடியிருந்து வந்த அவர்களுக்கு 1971ல் அன்றைய திமுக அரசு 310 வீடுகளுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் அங்கீகாரம் வழங்கியது. ஒவ்வொரு வருக்கும் தலா 420 சதுரடி நிலம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டு அந்த இடத்தில் தான் குடியிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு குடிநீர் வசதி, மின் இணைப்பு, கழிவுநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத் துள்ளது. அங்கு வசிப்பவர்கள் அன்றாடக் கூலித் தொழிலாளர்கள். அந்த குடியிருப்புக்கு எதிராக பக்கிங்காம் கால்வாய் ஒடுகிறது. அந்த கால்வாயின் நடுவில் நீர்நிலையை ஆக்கிரமித்து திமுக அரசால் பறக்கும் இரயில் திட்டம் போடப் பட்டு அது செயல் பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் 2006ல் கோவிந்தசாமி நகர் குடியிருப்புக்கு பின்புறமாக உள்ள அப்பார்ட் மென்ட் குடியிருப்பில் உள்ள ராஜிவ் ராய் என்பவர், கோவிந்தசாமி நகர் குடியிருப்பு நீர்ப் பிடிப்பு பகுதிக்குள் வருகிறது என்றும் அதனை காலி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் ராஜீவ் ராய்க்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இந்த வழக்கை தமிழக அரசு சரியான முறையில் கையாளவில்லை என்றும் அதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் சேர்ந்து உச்சநீதிமன்றம் 6 மாத காலத்திற்குள் குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என்று 25.10.2021 அன்று உத்தர விட்டது. அதன்படியே இந்த வெளியேற்றும் நடவடிக்கை என்று தெரிவிக்கின்றனர்
திமுக அரசால் 1971-ல் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வழங்கப்பட்ட இடத்தில் மக்கள் தங்களுக்கான வீடுகளை கட்டியுள்ளனர் அரசாங்கம் வழங்கிய நிலத்திற்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்கவில்லை. 70 ஆண்டுகளுக் கும் மேலாக குடியிருந்துவரும் மக்களை, திடீரென வீட்டை இடித்துவிட்டு அவர்களை வெளியேற்றுவதும், அவர்களுக்கு மாற்று இடமாக 30 கிலோமீட்டருக்கு அப்பால் செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு அவர்களை துரத்தி அவர்களின் வாழ்வாதரத்தை அழிக்கிறார்கள்.
சிங்காரச் சென்னை, பொலிவுறு சென்னை என்ற பெயரில் உழைக்கும் மக்களை சென்னையை விட்டு துரத்துவது என்பது தொடர்கதையாகி உள்ளது. சென்னையில் நீர்ப் பிடிப்புப் பகுதியில் உள்ளவர்கள் என்று சொல்லி உழைக் கும் மக்களை சென்னையை விட்டு வெளியே துரத்தும் அதே நேரத்தில், பெரிய கல்விக் கொள்ளையர்கள், பெருமுதலாளிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ள நீர்நிலைகளைப் பற்றி வாய் திறக்காமல் இருந்துவரும் திமுக அரசின் திராவிட மாடல் பல் இளிக்கிறது. உழைக்கும் மக்களின் கட்டிடங்களை ஒழுங்குபடுத்துவதற்கு பதிலாக கட்டிடங்களை காலி செய்வது வாக் களித்த மக்களை காவு கொடுக்கும் செயலுக்கு ஒப்பானது.
இது குறித்து கோவிந்தசாமி நகர் பகுதியில் அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கத்தின் வழக்கறிஞர்கள் சிவக்குமார், அதியமான் ஆகியோர் 09.05.2022 அன்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தபோது, அங்கு ஐஸ் வியாபரம் செய்யும் அண்ணாமலை என்பவர் அந்த பகுதியில் 70 வருடங்களாக குடியிருந்து வருவதாகவும் அங்கு குடியிருக்கும் பெண்கள் பெரும்பாலும் வீட்டு வேலை செய்து வருவதாகவும் ஆண்கள் பெயின்டர், கொத்தனார் போன்ற தினக்கூலி வேலைகளை செய்து வருவதாகவும், இதுவரை இங்கு பயமில்லாமல் வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில் கடந்த மே 8-ம் தேதி குடியிருப்புகளை தமிழ்நாடு அரசாங்கத்தின் நீர்வளத்துறை மற்றும் சென்னை பெருநகர, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் காவல்துறையுடன் வந்து வீடுகளை இடித்ததாகச் சொன்னார்.
அவ்வாறு இடித்துக் கொண்டிருந்த நேரத் தில் அங்கு குடியிருந்த இருந்த கண்ணையன் என்பவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சிறுகச்சிறுக சேர்த்து உருவாக்கிய வீட்டை இடிப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியா மல் தீக்குளித்து விட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் 09.05.2022 அன்று இறந்துவிட்டார். அவரின் இறப்பிற்கு திமுக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். அரசாங்கம் வழங்கிய வீட்டை இடிக்கச் சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிடும் நிலையில்தான் தமிழக அரசின் வாதம் இருந்துள்ளது. தமிழக அரசு ஏழை மக்கள் பக்கம் நிற்கவில்லை என்பதும் வழக்கு போட்ட ராஜீவ் ராயுடன் கூட்டு சேர்ந்து விட்டதும் சொல்லாமலேயே தெரிகிறது.
இறந்த கண்ணையன் குடும்பத்திற்கு தமிழக முதல்வர், ரூபாய் பத்து லட்சம் இழப்பீடு அறிவித்தார்.
காலம் காலமாக வாழ்ந்த மக்களை அவர்க ளுடைய வாழ்விடங்களில் இருந்து துரத்திவிட்டு அங்கு பூங்காக்களை அமைக்க திட்டம் தீட்டு கிறார்கள். பூர்வகுடி மக்களை நகரத்தை விட்டு வெளியே துரத்துவதற்கு திட்டம் தீட்டுகிறார்கள். அதிமுக அரசு அன்று இப்படி குடியிருப்புகளை அகற்றியபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுகதான் தற்பொழுது ஆட்சிக்கு வந்தபிறகு மக்களை சென்னையை விட்டுத் துரத்துகிறது. சென்னை நகரில் ஏழைகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடமில்லை என்கின்றன திமுகவும் அதிமுகவும்.
மாற்றம் வரும் என்று நம்பித்தான் ஆட்சி அதிகாரத்தில் திமுகவை அமர வைத்தார்கள் உழைக்கும் மக்கள். குறவர் வீட்டில் இட்லி சாப்பிடுவதிலும் சாலையோர கடைகளில் தேனீர் அருந்துவதிலும் சமூகநீதி கிடைத்துவிடாது. நடைமுறையில் அந்த மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதில்தான் சமூகநீதி உள்ளது.
2021 தேர்தலில் ஸ்டாலின்தான் வராரு விடியல் தரப்போறரு என்று பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் அந்த விடியல் யாருக் கானது என்பது இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது.
வீட்டை இடிக்கும் பொழுது 10ம் மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வீடுகளை குறியீடு செய்திருந்தனர். தேர்வு நேரம் என்பதால் அவர்களுக்கு மட்டும் தேர்வு முடியும்வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது. தன்னை சுற்றி இருக்கும் வீடுகளை இடித்துவிட்டு, தேர்வு எழுதிய பிறகு உன் வீட்டை இடிக்க வருவோம் என்று சொல்லும்பொழுது அந்த இளம் சிறார்களால் எப்படி தேர்வில் கவனம் செலுத்த முடியும். இன்னொரு கண்ணையன் பலியாகாமல் இருக்க குடியிருக்கும் மக்களை அந்தப் பகுதியிலேயே அவர்களின் குடியிருப்புகளை ஒழுங்குபடுத்துவதும், அவர்களின் வாழ்வாத ரங்களை பாதுகாப்பதும்தான் உண்மையான சமூகநீதிக்கான அரசாக இருக்க முடியும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)