ஜுன் 13, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுக்கா, ஆரியநத்தம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் எதிரில் பகுதி கோரிக்கைகள் முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) CPIML சார்பில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை தோழர் K.வீரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தோழர் T. கலியமூர்த்தி கண்டன உரையாற்றினார். மற்றும் தோழர்கள் K. ஆறுமுகம், P. அன்பழகன், E. புஷ்பராஜ், K. கொளஞ்சி, K.ரமேஷ், ஏழுமலை, கந்தசாமி, காமராஜ் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.

கோரிக்கைகள்:-

✓ கூட்டடி கிராமத்தில் வீட்டுமனை இல்லாதவர்கள் அரசு வழங்கும் இலவச வீட்டுமனைக்கு விண்ணப்பித்தும் கிடைக்காததால் 2018 ஆம் ஆண்டிலிருந்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியதை அடுத்து வட்டாட்சியர் முன்னிலையில் அமைதிக்கூட்டம் நடத்தியும் இதுவரை வீட்டுமனை வழங்கவில்லை. விண்ணப்பம் அளித்த அனைவருக்கும் வீட்டுமனை வழங்கவேண்டும்.

✓ கூட்டடி கிராமத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் சர்வே எண் 7/2-ல் 4 ஏக்கர் உள்ளது. இந்த இடத்தை வட்டாட்சியர் பார்வையிட்டு, யாரும் அத்துமீறி பிரவேசிக்கவோ அனுபவிக்கவோ கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது . இந்த இடத்தில் வட்டாட்சியர் பட்டா வழங்குவதாக உறுதியளித்ததின் அடிப்படையில் பட்டா வழங்க வேண்டும்.

✓ கூட்டடி கிராம சர்வே எண் 6/4-ல் 3.40 ஏக்கரில் 1 ஏக்கர் சுற்றளவில் நல்லதண்ணி குளம் உள்ளது . இக்குளத்தின் நீரை குடிநீராக பல ஆண்டுகள் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர், பிறகு ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் குடிக்க பயன்படுத்தி வந்தனர்.மீதம் உள்ள குளத்துப்புறம்போக்கு தனி நபர் ஆக்கிரமித்துள்ள இடத்தை பார்வையிட்ட வட்டாட்சியர் ஆக்கிரமிப்பு அகற்றுவதாக கூறிவிட்டு தனிநபருக்கு ஆதரவாக செயல்படும் வட்டாட்சியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

✓ கூட்டடி கிராமத்தில் 50 குடும்பங்கள் பட்டா இல்லாமல் ஒவ்வொரு குடும்பத்திலும் திருமணமானவர்கள் இரண்டு மூன்று குடும்பங்கள் உள்ளார்கள். இவர்களுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிட வேண்டும்.

திமிரெட்டிப்பாளையம் கிராமத்தில் மந்தைவெளி புறம்போக்கில் 60 ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருக்கும் மக்கள் பலமுறை மனுகொடுத்தும் வட்டாட்சியர் பார்வையிட்டும் இதுவரை மனைட்டா வழங்கப்படவில்லை உடனே மனைப்பட்டா வழங்கிட வேண்டும்.

✓ சின்னமாரனோடை கிராமத்தில் விதவை மற்றும் முதியோர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பம் செய்தவர்களிடம் தலா ரூ.2000/- லஞ்சம் கேட்டு கொடுக்காததால் சமூக நலத்துறை வட்டாட்சியர் மனுவை ரத்துசெய்துவிட்டார். வசதி படைத்தவர்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு உதவித்தொகை வழங்குகிறார் இவர்மீது மாவட்ட ஆட்சியர் துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்!