இந்தியாவையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாப்பதுதான் மகா கூட்டணியின் நோக்கமாகும்
(பாட்னாவில் நடைபெற்ற முழுப் புரட்சி கருத்தரங்க நிகழ்வில் தோழர் திபங்கர் ஆற்றிய உரை)
இன்று வரலாற்று முக்கியத்துவம் மிக்க நாள். '74 இயக்கத்தின் முழு புரட்சி என்ற .தீர்மானகரமான அறைகூவல் இதே நாளில்தான் துவங்கியது. 48 ஆண்டுகள் கடந்துவிட்டன. வரலாற்றைப் பற்றி நாம் கொஞ்சம் பேசிக் கொள்வோம். நாம் நிச்சயமாக செயலிலும் ஈடுபடுவோம். வரலாற்று பின்புலம் பற்றி நான் இங்கே கொஞ்சம் சொல்லியாக வேண்டும். நாம் வெகுதூரம் பின் செல்ல வேண்டியதில்லை. 7 ஆண்டுகள் பின் சென்று 1967ஐ பார்ப்போம். அப்போது ஒட்டு மொத்த நாடும் பெரிய அரசியல் மாற்றத்தைக் கண்டது. சமூக மாற்றத்திற்கான போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்த 1967ல் இரண்டு குறிப்பிடத்தக்க சம்பவங்கள் நடந்தேறின. முதலாவதாக பல மாநிலங்கள் தேர்தலை சந்தித்தது. அவற்றில் ஒரு மாநிலம் அல்ல 9 மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத அரசாங்கங்கள் நிறுவப்பட்டன. அந்த நாட்களில் காங்கிரஸ் அரசாங்கம் என்பதுதான் வாடிக்கையான ஒன்றாக இருந்து வந்தது. காங்கிரசுக்கு பெரிய செல்வாக்கு இருந்தது. இன்று பாஜகவுக்கு இருக்கும் செல்வாக்கை விட காங்கிரசுக்கு அதிக செல்வாக்கு இருந்தது. அப்படியாக நாடு நாடாளுமன்ற எதிரணியில், நாடாளுமன்ற நீரோட்டத்தில் பெரிய மாற்றத்தை கண்டது. இரண்டாவதாக, நக்சல்பாரி இயக்கம் பற்றி நான் பேச வேண்டும். அங்கிருந்துதான் எமது கட்சி எழுந்து வந்தது. நக்சல்பாரி விவசாயிகள் எழுச்சி என்பது சுதந்திரத்திற்குப் பிறகு வறியவர்களின் ஆட்சியை நிறுவுவதற்கான போராட்டமாகும். அது வறிய மக்களுக்கு உரிமைகளை வழங்குவதும் ஆட்சி அதிகாரத்தில் விவசாயிகள் தொழிலாளர்களுக்கான பங்கை வழங்குவதற்கான போராட்டமும் ஆகும். பீகாரில் நக்சல்பாரியின் பொறி முதலில் முசாபர்பூரில் உள்ள முசாகரியிலும் அதற்கடுத்து போஜ்பூரி லுள்ள ஏக்பாரியிலும் விழுந்தது. 1974க்கு முன் 1972 பற்றி பேசுவோம். மிகப்பெரிய தியாகம் 50 ஆண்டுகளை நிறைவு செய்யப் போகிறது. அது தோழர் ஜெகதீஸ் மாஸ்டர் தனது இன்னுயிரை ஈந்த தியாகமாகும். தோழர் ராம் நரேஷ் ராம், ஜெகதீஷ் மாஸ்டர், ராமேஸ்வர் யாதவ், பூடன் ராம் ஆகியோர் துவங்கிய போராட்டம் தேர்தலுக்கான போராட்டம் அல்ல. மாறாக, அது நிலப்பிரபுத்துவ அதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவந்து வறிய மக்களுக்கு மரியாதையையும் கௌரவத்தையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கான போராட்டமாகும். '74 இயக்கமும் கூட அந்த வரிசையில் வரும் இயக்கமாகும். அப்போது நகரங்களில் மாணவர், இளைஞர் எழுச்சியும் கிராமப்புறங்களில் வறிய மக்களின் எழுச்சியும் நடந்து கொண்டிருந்தது. அரசியல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் இரண்டு போராட்டங்களும் தனித்தனியாக இருந்தன. 3 கம்யூனிஸ்ட் கட்சிகளுமே '74 இயக்கத்தில் இல்லை. இன்று 48 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் அனைவரும் ஒன்றாக நிற்கிறோம். அதேவேளை கங்கா-கோசி-சோனே ஆறுகளில் ஏராளமான தண்ணீர் ஓடி விட்டது. ஆட்சி அதிகாரத்திலிருந் தவர்கள் ஜெபி இயக்கத்தின் மீதும் அதேபோல நமது இயக்கத்தின் மீதும் ஒடுக்குமுறையை கட்ட விழ்த்து விட்டார்கள். ஜெபி இயக்கத்தில் பல தலைவர்களும் சிறைக்குள் தள்ளப்பட்டார்கள். எங்களது இரண்டாவது பொதுச் செயலாளர் சுப்ரத் தத்தா 1975 போஜ்பூர் இயக்கத்தின்போது தியாகியானார். இரண்டும் தனித்தனியான போராட்டங்கள். ஆனால், ஆட்சி அதிகாரத்திலிருந்தவர்கள் இரண்டையும் ஒடுக்கி நசுக்கிவிட வேலை செய் தார்கள். ஆனால், அந்த ஒடுக்குமுறை எடுபட வில்லை. அவசர நிலை முடிவுக்கு வந்து கற்பூரிதாகூர் பீகாரில் முதலமைச்சரான பிறகு பெரும் மாற்றம் முகிழ்ந்தது.
இன்று நிலைமை வேறாக இருக்கிறது. இன்று ஜெபி இயக்கத்தின் 2 நீரோட்டங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு நீரோட்டம் ஜெபிலிருந்து பிஜேபி ஆக மாறி இருக்கிறது. அந்த நீரோட்ட மக்கள் இந்த அரங்கத்திற்குள் இல்லை. அரங்கத்திற்கு வெளியே இருக்கிறார்கள். மட்டுமல்ல, அவர்கள் நாட்டை அழிவுக்கு இட்டுச் செல்கிறார்கள். இன்னொரு நீரோட்டமானது பாஜகவுக்கு எதிராக போராட வேறு வகையான அணிச் சேர்க்கையை உருவாக்கிக் கொண்டுள்ளது. மகா கூட்டணி என்பது இப்போது நான்கு கட்சிகளால் ஆனது. வேறு கட்சிகளும் இதில் இணைய வாய்ப்புகள் உண்டு. 3 கம்யூனிஸ்ட் கட்சிகளில் இகக (மாலெ) கட்சியுடனான உறவு என்பது புதியது. ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் 15 ஆண்டுகள் ஆட்சியில் நாங்கள் எதிர்க் கட்சியாக இருந்தோம். எங்களது உறவு என்பது கசப்பு- இனிப்பு என்பதாக இருந்துள்ளது. கடந்த 1 1/2 ஆண்டு காலமாக ஒன்றாக நாம் இணைந்து நிற்கிறோம். ஏனென்றால், இது காலத்தின் தேவையாகும்.'75 அவசரநிலை முடிந்து விட்டது.
ஆனால், இன்று நாடு அறிவிக்கப்படாத அவசர நிலையின் பிடியில் இருக்கிறது. இந்த அறிவிக்கப்படாத அவசர நிலை என்பது மாறிச் செல்லும் காலகட்டத்திற்குரியது அல்ல. ஆனால், நிரந்தரத் தன்மை இயல்பை கொண்டதாக உள்ளது. இன்றைய அவசரநிலை நல்ல காலம் (அச்சே தின்) என்ற பெயரில் வருகிறது. அந்த அவசரநிலை காலத்தில் சிலர் சிறை வைக்கப்பட்டார்கள். ஆனால் இன்று புதிய பலவிதமான ஒடுக்குமுறை ஆயுதங்கள் உள்ளன. நாடு இதுபோன்ற ஒடுக்குமுறையை இதுவரை சந்தித்தது இல்லை. அரசமைப்புச் சட்டமே காலில் போட்டு மிதித்து நசுக்கப்படுகிறது. இன்றுள்ள மிகப்பெரிய கேள்வி இந்தியா பிழைத்திருக்குமா? இல்லையா? என்பதாகும். 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது மக்களில் சிலர் அதை வெறும் மதவாதம் என்பதாக அழைத்து, அதை நாங்கள் சகோதரத்துவம், நல்லிணக்கம் கொண்டு சமாளித்து விடுவோம் என்றார்கள். ஆனால், நாங்கள் அந்த நேரத்திலும் கூட சொன்னோம். இது வெறும் மதவாதம் அல்ல, மதவாத பாசிசம் என்றும் அது நாட்டின் அடையாளத்தையும் வரையறையையும் மாற்று வதில் தீர்மானமாக இருக்கிறது என்றும் சொன்னோம். பாபர் மசூதியில் துவங்கி இன்று தாஜ்மஹால், குதுப்மினார் உட்பட மற்ற வரலாற்று சின்னங்களுக்கும் அது அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்தியாவின் பெருமையும் சர்வதேச அடையாளமுமான தாஜ் இன்று கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. இவையெல்லாம் அடிமைத்தனத்தின் சின்னங்கள் என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. நம் நாட்டின் அழகான வரலாறு, நமக்கெல்லாம் பெருமை தரும் விசயங்களெல்லாம் இன்று 'அன்னியமானவை' என அழைக்கப்படுகிறது. "சுதந்திரத்தின் அமுதம்" என்ற பெயரில் நமக்கெல்லாம் விஷத்தைக் கொடுக்கிறார்கள். நம் முன்னுள்ள மிகப்பெரிய பிரச்சனை இதுதான். ஆகவே, இதுவரை இல்லாத அளவு மிகப் பெரிய போராட்டம் என்பது இப்போதைய காலத்தின் தேவையாக உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை டாக்டர் அம்பேத்கர் எழுதும்போது இந்த நாட்டினுடைய மண் என்பது ஜனநாயக மண் அல்ல என்று சரியாக கணித்துக்கூறும் தெளிவுத்திறன் அவருக்கு இருந்தது. நாம் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையான தேவை என்பது ஜனநாயக மண்ணை நாட்டில் உருவாக்குவதில் இருக்கிறது என்றார் டாக்டர் அம்பேத்கர். மேலும், இந்தியாவை ஒரு இந்து ராஷ்டிரமாக உருவாக்குவது போன்ற பேரழிவு வேறு எதுவும் இருக்க முடியாது என்றும் சொன்னார். அவர் சொன்ன அந்த உண்மையான அபாயத்தை நாம் இன்று எதிர் கொண்டிருக்கிறோம். மிகப்பெரிய அபாயத்திற்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் தேவைப்படுகிறது. நாம் இதை இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்றும் அந்த அளவுக்கு தியாகங்கள் தேவைப்படுகிறது என்றும் சொல்லலாம். இன்று நாம் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறோம். நம்மிடம் விவசாயிகள் பிரச்சினை இருக்கிறது. மூன்று கருப்பு வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகரில் நீண்ட போராட்டம் நடைபெற்றது. மக்கள் அதை "டெல்லி சண்டை' (டெல்லி வாடி லடாய்) என அழைத்தார்கள். இன்று நம் முன்னால் சவாலாக இருப்பது "பாட்னா சண்டை" (பாட்னா வாடி லடாய்) என்பதாக இருக்கிறது. அது குறைந்த பட்ச ஆதார விலையை உத்தரவாதம் செய்ய சம்பரனிலிருந்து தெற்கு பீகாரின் கிராமங்கள் வரைக்கான மாபெரும் விவசாயிகள் இயக்கத்தை அமைப்பாக்குவதில் இருக்கிறது. சட்டமன்ற தேர்தலின் போது நம்முடைய தேர்தல் வாக்குறுதியான 10 லட்சம் வேலைவாய்ப்புகள் என்பதற்குப் பதிலாக 19 லட்சம் வேலை வாய்ப்புகள் என்று நிதிஷ்குமார் எதிர் வாக்குறுதி அறிவித்தார். பிரதம மந்திரி தனக்கு 56" மார்பளவு உள்ளதாக கூறுகிறார். ஆனால் இன்று ஊரக காவல் படை தகுதிக்கு 62"மார்பளவு தேவையாம். என்னவொரு கொடூர நகைச்சுவை இது? ரயில்வே தனியார்மயம் மற்றும் துரோகத்திற்கு எதிரான மாணவர் இளைஞர்களின் கோபத்தை நாம் பார்க்கிறோம். உண்மையிலேயே வேலை கொடு என்பது வெறும் முழக்கம் அல்ல. இன்று மிகவும் அழுத்திக் கொண்டிருக்கும் தேவையாக உள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை நாம் தாக்கல் செய்யும் அதேவேளை நாம் நமது சொந்த உறுதி மொழியையும் சேர்த்தே தாக்கல் செய்கிறோம். அதை நடைமுறைப்படுத்த நாம் மக்களின் நம்பிக்கையை வென்றாக வேண்டும். அவர்களுக்கு சக்தியை ஊட்டி ஆக வேண்டும். அதற்கு மகா கூட்டணியின் இந்த வேகம் போதாது. வேகத்தையும் அதிகப்படுத்தியாக வேண்டும். இந்த கூட்டணியின் வேலை என்பது தேர்தல் சமயத்தில் செய்யும் வேலையாக இருந்தால் மட்டும் போதாது மக்களின் அன்றாட போராட்டங்களுக்கான கூட்டணியாக இது மாற வேண்டியது அவசியமானதாகும். இது மாணவர்கள், இளைஞர்கள், சிறுபான்மையினர், திட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் கூட்டணி யாக அமையவேண்டும். உத்தரப்பிரதேசத்தில் வெற்றி பெற்ற பிறகு இப்போது பாஜககாரர்கள் பீகாரை உத்தரபிரதேசமாக மாற்ற விரும்பு கிறார்கள். பீகாரிலும் கூட புல்டோசர் ராஜ்ஜியத்தை கொண்டு வர முயற்சிக்கிறார்கள். முன்னதாக மக்கள் புல்டோசர் கண்டு பயந்தார்கள். மோடி வேண்டுமென்றால் அதை தனது தேர்தல் சின்னமாக வைத்துக் கொள்ளட்டும். இதை எதிர்த்து போராட நமக்கு பரந்த கூட்டணி, துணிச்சல், நம்பிக்கை தேவை. முழு புரட்சியும் நக்சல்பாரி மரபும் அதுபோன்ற கூட்டணிக்கு தான் அழைப்பு விடுத்திருந்தன. இன்று யாராவது எதிர்ப்புக் குரல் எழுப்பினால் அவர் "நகர்ப்புற நக்சல்" என்று சொல்லி துன்புறுத்தப்படுகிறார்கள். எந்த ஒரு எதிர்ப்பும் நக்சல் என முத்திரை குத்தப்படுகிறது. ஆகவே நக்சல்பாரியில் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டியிருக்கிறது. அது வெறுமனே அரசாங்கத்தை தூக்கி எறியும் இயக்கமாக மட்டுமே இருக்கவில்லை, அது வேர்க்கால் மட்டத்தில் முழு மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சியாக இருந்தது. பகத்சிங், அம்பேத்கர், விவசாயிகள் இயக்கம், நக்சல்பாரி, '74 இயக்கம் ஆகிய விலை மதிப்பில்லா இயக்கங்கள் வெறும் தேர்தல் சீட்டுக்கானவை அல்ல. இன்று நாம் சூப்பர் எமர்ஜென்சி காலத்தில் இருக்கிறோம். அதற்கேற்றார் போல் நமது வேதத்தை நாம் கூட்டவேண்டும். பணவீக்கம், வேலையின்மை, ரேஷன் அட்டைகள் பறிப்புக்கு எதிராக வெகு மக்கள் இயக்கம் தேவைப்படுகிறது. ஆகஸ்ட் 7 இலிருந்து அதை துவங்குவோம். புதிய நம்பிக்கையில் இன்று நாம் பயணத்தைத் துவங்கியிருக்கிறோம். இந்த மிகப்பெரும் கருத்தரங்கை அப்படித்தான் பார்க்கிறோம். 2020 தேர்தலின் போதுதான் 'மகா கூட்டணி' உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னர் வேறு வேறு கூட்டணிகள் இருந்தன. கூட்டணிகள் மாறும், மாறிக்கொண்டே இருக்கும். நம்மை எதிர்நோக்கி இருக்கும் மிகப்பெரிய போராட்டத்திற்கான ஆற்றலை நாம் வழங்கியாக வேண்டும். சிலர் நிதிஷ்குமாரிடம் இன்னும் சிறிது ஆற்றல் மிச்சம் இருக்கிறது என்றும் அவர் மீண்டும் வருவார் என்றும் சொல்கிறார்கள். அவரிடம் எவ்வளவு ஆற்றல் மிச்சம் இருக்கிறது என்று நமக்கு தெரியாது. அவர் திரும்ப வருவாரா? மாட்டாரா? என்பது அல்ல பிரச்சனை. பிரச்சினை என்பது இயக்கம் பற்றியது, மக்கள் பற்றியது. நமது சொந்த ஆற்றலின் திறன் கொண்டு இந்த பாசிச அரசாங்கத்தை 2024 தேர்தலில் விரட்டி அடித்தாக வேண்டும். அது வாக்குகளால் மட்டும் செய்யக்கூடிய காரியம் அல்ல. அது கிராமம் கிராமமாக பரந்த
பிரச்சாரத்தையும் பரந்த இயக்கங்களையும் அமைப்பாக்குவதைக் கோருகிறது. முழு நேர்மையோடு நாம் அதற்கு முயற்சிப்போம். அப்போதுதான் மக்கள் இந்துஸ்தான் என்ற இந்தியாவை உண்மை என்னும் லென்ஸ் கண்ணாடி வழியே இன்னும் ஒரு முறை பார்க்கத் துணிவார்கள். நாம் இந்த பெரிய சண்டையில் ஒன்றுபட்டு பயணிப்போம். இந்த கூட்டணியின் புதிய, இளைய கட்சி என்ற வகையில் எங்களது எல்லா ஆற்றலையும் கொண்டு இந்தப் போராட் டத்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)