முட்டுக்கொடுக்கும் மூன்றாம் தூண்கள்
            
ஜனநாயகத்தின் மூன்று முக்கியத் தூண்கள் சட்டமியற்றும் துறை, நிர்வாகத்துறை, நீதித் துறை. நான்காவது தூண் ஒன்றும் இருக்கிறது. அது பத்திரிகை மற்றும் ஊடகம். இந்த நான்கும் ஒன்றை இன்னொன்று கட்டுப்படுத்தாமல் சுதந்திரமாக தனித்து இயங்க வேண்டும். இல்லையென்றால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது. நான்கு தூண்களில் மூன்றாவது தூணான நீதித்துறையை மட்டும்தான் எளிய மக்களில் இருந்து எல்லாரும் தங்கள் பிரச்சனை களின் தீர்வுக்கான கடைசிப் புகலிடமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். மற்ற துறைகளில் பொதுமக்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளை தடுக்கிற, மாற்றுகிற, மக்களுக்கானதை அமல்படுத்த வைக்கிற அனைத்து அதிகாரங்களையும் கொண்டது நீதித்துறை. அந்த நீதித்துறை ஆட்சியாளர்களின் அதிகாரத்திற்கு அடிபணியாமல் தனித்து இயங்கினால் மட்டுமே சாமானிய மக்களுக்கும் ஜனநாயகத்தில் நீதி கிடைக்கும். தனி மனிதர் களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

ஆனால், இன்றைய இந்தியாவில் காவிப் பாசிசம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டி ருக்கும் நிலையில், அது நாட்டில் உள்ள எல்லாத் துறைகளையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. தனித்து இயங்க வேண்டிய நீதித் துறையே பாசிச சங்கிகளின் பிடியில் சிக்கிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருந்தவர்கள் அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு ஆளுநர்களாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் களாகவும் போகிறார்கள். குடியரசுத் தலைவ ருக்கே பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் தகுதி படைத்தவர்கள் ஓய்வுக்குப் பின்னர் அவர்கள் தகுதிக்கு கொஞ்சமும் மரியாதை யில்லாத பதவிகளுக்காக தங்களுடைய தீர்ப்பை மாற்றி எழுதுகிறார்கள். அல்லது எழுதாமலேயே இழுத்தடித்து விடுகிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளாக இருந்த நீதிபதி சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகாய் போன்றவர்கள் இதற்கு உதாரணம். சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ரமணா அவர்கள் கூட ஆரம்பத்தில் நீதித்துறையைப் பற்றி மிகுந்த
அக்கறை, கவலை கொண்டவராகக் காணப் பட்டாலும் கடைசி காலத்தில் பல்வேறு முக்கிய மான வழக்குகளை, அரசியல் சாசன அமர்வு கூட அமைக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுவிட்ட

தாகக் கூறப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு குஜராத்தில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், கொலைகள், வன்புணர்வுகள் எல்லாம் உலகமே அறிந்தது தான். அதில் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு போன்றவர்களுக்காக கடுமையாக தெருக்களிலும் நீதிமன்றங்களிலும் போராடிய சமூக செயற் பாட்டாளர், மனித உரிமைப் போராளி டீஸ்டா செதல்வத், குஜராத் கலவரத்தில் அப்போதைய ஆட்சியாளர்களுக்குப் பங்கு உண்டு என்பதற்கு பல ஆதார ஆவணங்களை நீதிமன்றங்களின் முன் வைத்தார். ஆனால், உச்சநீதிமன்றமோ அவர் வைத்த ஆவணங்கள் எல்லாம் போலியானவை ஆதாரமற்றவை என்று சொன்ன மறுநாளே குஜராத் பாஜக அரசால், அவர் மீது முதல் தகவல் அறிக்கை போடப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு மாதங்களுக்குப் பின்னர் செப்டம்பர் 2ம் தேதி இடைக்கால பிணையில் செதல்வத் வெளியே வந்துள்ளார். அதுவும் அவர் மீது போடப்பட்ட முதல் தகவல் அறிக்கை உச்ச நீதிமன்றம் அவர் மீது சொன்னதைத்தான் அப்படியே கொண்டுள்ளது என்பதாலும் அவர் மீது உப்பா, பொடா போன்ற சட்டங்கள் போடப்படவில்லை என்பதாலுமே இப்போது இடைக்கால பிணையில் விடப்பட்டுள்ளார். அவ்வாறுதான் இன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் அவர்களும் சுட்டிக்காட்டி யுள்ளார். இன்னொருபுறம் பில்கிஸ் பானு வழக்கில் கடும் போராட்டத்திற்குப் பின்னர் 11 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது. அதில் ஒருவர் உச்சநீதி மன்றத்தில் தன்னை வெளியில் விடுவதற்கு மனு செய்ய அந்த மனு மீதான விசாரணையில், அந்த மாநில அரசே அதில் முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூற, அதையே சாக்காக வைத்து குஜராத் மாநில பாஜக அரசு 11 குற்றவாளி   களையும் இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தன்று மன்னித்து விடுதலை செய்து விட்டது. கொடுங்குற்றவாளிகள் வெளியே வரக் காரணமாக இருந்த உச்சநீதிமன்றம், ஆன்ந்த் டெல்டும்டே போன்ற மனித உரிமைப் போராளிகள் விசாரணையே இல்லாமல், சாய்பாபா போன்றவர்கள் உடல் நலமின்றி சிறையில் வாடிக் கொண்டிருப்பவர்களை பிணையில் விடுவதற்குக் கூட எந்த நீதிமன்றமும் தயாராக இல்லை என்கிற போது, நீதிமன்றங்கள் யாருடைய நலன்களுக்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது கேள்விக்குள்ளாகிறது.

கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளியில் மர்ம மரணம் அடைந்த மாணவியின் தந்தை, தன் மகளின் சடலத்தை தனது தரப்பு மருத்துவர்கள் முன்னிலையில் மீண்டும் ஒரு முறை உடற்கூராய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரி மனு செய்தபோது அந்த மனு மீதான விசாரணையின் போது, அந்த மனுவிற்கு தொடர்பே இல்லாத பல விசயங்களை தன்னுடைய உத்தரவில் சொன்னார்கள் நீதிபதி அவர்கள். அது மட்டு மின்றி, அந்த மாணவியின் தந்தையின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நீங்கள் கூறும் மருத்துவர்கள் உடல் கூராய்வு செய்ய வேண்டிய தில்லை. அரசு அமர்த்தும் மருத்துவர்களே போதுமானது என்று சொன்னதுமில்லாமல், வேண்டுமானால் அந்த மாணவியின் தந்தை உடற் கூராய்வின்போது உடன் இருக்கலாம் என்று கூறினார்கள். இது வேதனையின் உச்சம். அதோடு மட்டும் நிற்கவில்லை. காவல்துறைக்குச் சமமாக இணை விசாரணை நடத்தக் கூடாது, ஊடகங் களில், பத்திரிகைகளில் இந்த வழக்கு பற்றி விவாதங்கள் நடத்தக்கூடாது என்றெல்லாம் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, மாணவிக்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டத்தின் போது அந்தப் பள்ளிக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடச் சொன்னது மட்டுமின்றி, அந்தப் பள்ளிக்கு சுமார் ரூபாய் 3.5 கோடி அளவிற்கு சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது என்று வருத்தப்பட்டுள்ளது நீதிமன்றம். மேலும் 68 காவலர்கள் காயமடைந் துள்ளார்கள் என்று வருத்தப்பட்டுள்ள நீதிமன்றம் அந்த மாணவியின் மரணம் ஒரு சாதாரண விசயம் என்பது போல் கடந்து போகிறது.

அதோடு, உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கவில்லை என்றும் வழக்கறிஞர்களாக இருந்து கொண்டு தனியாக ஊடக விசாரணை  நடத்துவது ஏற்புடையது அல்ல என்றும் அதுபோன்ற வழக்கறிஞர்கள் மீது பார் கவுன்சில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார் நீதிபதி அவர்கள். இது மிகவும் அதிர்ச்சியளிக்கும் விசயமாகும். வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்று வதற்காக மட்டுமே நீதிமன்றங்களில் வாதிடு வதில்லை. அவர்கள் பாதிக்கப்பட்ட வர்கள் தரப்பில் அவர்களுக்கு நியாயம், நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் வாதிடுகிறார்கள். அதற்காக வழக்கறிஞர்கள் தனிப்பட்ட விசாரணை மேற்கொள்வது என்பது அவர்களின் தார்மீக உரிமை மட்டுமல்ல. கடமையும் கூட. அது மட்டுமின்றி வழக்கறிஞர்கள் என்பவர்கள் நீதிபதிகளுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் அல்ல. வழக்கறிஞர்களும் நீதிபதிகள் போன்று நீதிமன்ற அதிகாரிகளே (Advocates are also court officers). அப்படிப்பட்டவர்கள் மீது, அவர்கள் தனித்து விசாரணை மேற்கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் ஒருபோதும் தயங்காது என்று கூறுவது வழக்கறிஞர்கள் சட்டத்திற்குப் புறம்பானதாகும். இது மிகவும் ஆபத்தானது. மனித உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் சிறையில் அடைக்கப்ப டுகிறார்கள். அவர்களுக்காக வாதாடுபவர்கள் வழக்கறிஞர்கள். அவர்கள் உண்மையை நிலைநாட்ட, மனித உரிமையைப் பாதுகாக்கும் செயல்களில் இறங்கினால் அது நீதிபதிகளின் விருப்பத்திற்கு மாறாக, ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு மாறாக இருக்குமானால் அவர்கள் வழக்கறிஞர் தொழில் செய்ய முடியாத நிலையை மேற்கொள்வோம் என்று மிரட்டுவது அரசிய லமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கு முரணானது ஆகும்.
இந்த மாணவியின் வழக்கில் மேலும் மேலும் அதிர்ச்சி அளிக்கின்ற வகையில் நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இருக்கின்றன. மாணவியின் மரணத்திற்குக் காரணமானவர்கள் என்று அந்தப் பள்ளியின் தாளாளர், செயலர் உள்ளிட்ட ஐவர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் பிணை மனு தாக்கல் செய்கிறார்கள். அந்த பிணை மனு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. பிணை மனுவின் விசாரணையின்போது இதுவரை இல்லாதவகையில், அவர்கள் குற்றம் ஏதும் செய்யவில்லை என்றும் அந்த மாணவியின் மரணம் தற்கொலைதான் என்றும் நீதிபதி அவர்கள் கூறுகிறார்கள். இது வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில், இந்த வழக்கு இனி இப்படித்தான் போக வேண்டும் என்று சொல்வதுபோல் இல்லையா? பிணை மனு விசாரணையின் போது வழக்கின் தகுதி பற்றி வழக்கறிஞர்கள் எடுத்துச் சொன்னால், அதை நீங்கள் விசாரணையில் பார்த்துக் கொள்ளுங்கள் மெரிட் பற்றி இங்கு ஏன் பேசுகிறீர்கள்? என்று நீதிபதிகளே சொல்வார்கள். அப்படி இருக்கும் போது, மாணவியின் மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என்றும் அது தற்கொலைதான் என்று சொல்கிறார்கள் என்று ஒரு புறம் சொல்லிவிட்டு, இன்னொரு புறம் இறந்த மாணவியின் மரணம் தொடர்பாக எந்தவொரு தனி புலன் விசார ணையும் யாரும் மேற்கொள்ளக் கூடாது, விவாதிக்கக் கூடாது என்று உத்தரவு போடுவது வழக்கு இந்தத் திசையில்தான் செல்ல வேண்டும் என்றும் அப்படித்தான் காவல் விசாரணை அதிகாரிகளும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதற்கு இடையூறாக யாராவது வந்தால், ஊடகங்கள் வந்தால் அவை முடக்கப்படும், வழக்கறிஞர்கள் வந்தால் அவர்கள் தொழில் பறிக்கப்படும் என்று கூறி தடை ஏற்படுத்திக் கொடுப்பது போல் ஆகாதா? இப்படி பல விதங்களிலும் அந்த மாணவி படித்த பள்ளிக்கூடத்தை நடத்தியவர்களுக்கு ஆதரவான நிலை எடுக்கிற நீதிமன்றம் அந்த பள்ளிக் கூடத்தில் அனுமதியில்லாமல் விடுதி நடத்தியது ஏன் என்று கேட்கவில்லை. அந்தப் பள்ளிக்கூடத்திற்கு ஏற்பட்ட சொத்துச் சேதத்தைப் பற்றி கவலைப்படும் நீதிமன்றம் மாணவின் மரணம் தரும் வேதனையால் அப்பெற்றோர் படும் துன்பத்தைப் பற்றி கவலை கொள்ளவில்லை என்பது மட்டுமின்றி, அந்தப் பள்ளி தொடர்ந்து செயல்பட அனுமதிப்பதன் மூலம் பில்கிஸ் பானு குற்றவாளிகள் சுதந்திரமாக மீண்டும் குற்றங்கள்
செய்ய அனுமதித்து இருப்பதுபோல், அந்தப் பள்ளியும் அதன் நிர்வாகிகளும் சுதந்திரமாக தைரியமாகச் செயல்பட அனுமதிப்பதுபோல் ஆகாதா?

நீதிமன்றங்கள் யாருக்காக இருக்கின்றன. நீதிபதிகள் யாருக்காகச் செயல்படுகிறார்கள் என்கிற கேள்விகள் மக்கள் மனதில் எழ ஆரம்பித்துள்ளன. நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், நீதிபதி சந்துரு, நீதிபதி ஹரிபரந்தாமன் போன்றவர்களும் இந்திய நீதிமன்றங்களை அலங்கரித்துள்ளார்கள். உண்மையிலேயே அவர்கள் மக்கள் நீதிபதிகளாக இருந்துள்ளார்கள். ஆனால், இன்றைக்கு அதிகப்படியான தீர்ப்புகள் காவிப் பாசிச, கார்ப்பரேட் ஆதரவு, பணக்காரர்கள் ஆதரவு தீர்ப்புகளாகத்தான் வந்து கொண்டி ருக்கின்றன. ஒரு நீதிபதி, கோயில்கள் அரசிடமிருந்து விடுபட வேண்டும் என்கிற பொருளில் இந்துக் கோயில்களை கம்யூனிஸ்ட் அரசு வருமானத்திற்காகக் கையகப்படுத்தி விட்டது என்கிறார். இன்னொரு நீதிபதி புராண இதிகாசங்கள் பெண்களை தெய்வமாக மதிக்கின்றது. அதனால் புராண இதிகாசங்களைப் பின்பற்ற வேண்டும் என்கிறார். இவ்வாறாக நீதிமன்றங்கள் பாசிச பாஜகவின் பிடிக்குள்ளும் கார்ப்பரேட்டுகளின் பிடிக்குள்ளும் போய்க் கொண்டிருக்கின்றன. அரசின் திட்டங்கள் பரந்துபட்ட பொதுமக்களுக்கு எதிரானதாக உள்ளது என்று சொல்லி நீதிமன்றங்களை நாடினால், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்று பெரும்பான்மையான தீர்ப்புகள் வருகின்றன.

ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டிய மூன்றாவது தூண்கள் பெரும்பாலும் ஆட்சியாளர்களுக்கு முட்டுக்கொடுப்பதாகவே இருக்கின்றன. பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்.