இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக, கடந்த 2022 நவம்பர் 25-27 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் ஏகமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் தோழர் என்.கே.நடராஜன். நீலகண்ட நடராஜன் என்பதைச் சுருக்கி என்.கே.நடராஜன் என்று வைத்துக் கொண்டார். எல்லாருக்கும் அவர் என்கே. அவருக்கு அவரின் பெற்றோர் வைத்த பெயர் சண்முகராஜ். 2019ல் இகக(மாலெ) தமிழ்நாடு கட்சி சந்தித்த ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்ற தோழர் என்.கே. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரானார். அவர் தமிழ்நாடு முழுவதும் சளைக்காமல் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். காலையில் திண்டுக்கல், மாலையில் மதுரை, இரவில் தேனி, அங்கிருந்து சென்னை, மறுநாள் குமரி என்று தொடர்ந்து பயணித்தார். அவர் கையில் ஒரு சின்ன பை மட்டுமே இருக்கும். அதுவும் இப்போதுதான். ஆரம்ப காலங்களில் அதுகூட வைத்திருக்கமாட்டார். போட்டிருக்கும் சட்டை பேண்ட்டுடன் பல நாட்கள் பயணிப்பார். கட்சியின் தலைமறைவு காலத்தின் போதான பழக்கம் கடைசி வரை தொடர்ந்தது. எளிமைக்கு இலக்கணம் அல்ல என்.கே., எளிமையின் மறுபெயர் என்.கே. ஆடம்பரம் அவருக்கு அந்நியமானது. உணவு, உடை, தங்குமிடம் எதிலும் அவர் ஆடம்பரத்தை விரும்பியது கிடையாது. அரசியலை பணம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாக மாற்றி விட்டுள்ள இந்தக் காலச் சூழலில், பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, 'எமக்குத் தொழில் நாட்டுக்கு உழைத்தல்' என இந்நாட்டு மக்களுக்காக, குறிப்பாக உழைக்கும் மக்களின் வாழ்க்கை மாற்றத்திற்காக, ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் படைக்கும் உயர்ந்த லட்சியத்துடன் இந்தியப் புரட்சிக்காக தன் வாழ் நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டவர் தோழர் என்.கே. நக்சல்பாரி எழுச்சியினைத் தொடர்ந்து தோழர் சாருமஜும்தார் அழைப்பை ஏற்று இந்திய புரட்சிக்காக எம்எல் கட்சிக்குள் தம்மை இணைத்துக் கொண்ட புரட்சியாளர்களுள் தோழர் என்.கேயும் ஒருவர். தன் வாழ்நாளில் நாற்பது ஆண்டு காலம் இந்த நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காவும் வாழ்ந்தார். அவருடைய இறுதி மூச்சு கூட, கட்சிக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும்போதுதான் திணறி, நின்றுபோனது. காவிப் பாசிச அபாயம், இந்திய நாட்டை, குறிப்பாக தமிழ்நாட்டைச் சூழ்ந்து கொண்டு வரும் வேளையில், என்.கேயின் வார்த்தைகளில் சொல்வதென்றால், மற்றவர்கள் காவியை 'பாசிசம்' என்று சொல்வதற்கே தயங்கிக் கொண்டிருந்த வேளையில், தமிழ்நாட்டில் காவிப் பாசிச எதிர்ப்பு மாநாட்டை, சரியான சமயத்தில் நடத்திக் காட்டினார் தோழர் என்.கே. எம்எல் கட்சியின் அம் மாநாட்டிற்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும் என்று சங்கிகள் கூப்பாடு போட்டார்கள் என்றால், தோழர் என்கே தலைமையில் நடந்த அந்த மாநாட்டின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். எம்எல் கட்சியை தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக வளர்த்திடும் உறுதியோடு செயல்பட்டு வந்த தோழர் என்கே இவ்வளவு சீக்கிரம் தன் லட்சியப் பயணத்தை நிறுத்திக் கொள்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ‘கம்யூனிஸ்ட்' என்றாலே களப்போராளிதான். ஆனபோதும் இன்று சமூகத்தில், கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும்கூட, தியாகம், அர்ப்பணிப்பு, புரட்சிகர உணர்வு எல்லாம் கூர் மழுங்கி, முதலாளித்துவக் கலாச்சாரம், பிற்போக்கு, அதிகாரத்துவ மனோபாவம், அலுவலகத்தைச் சுற்றிய முகவர் வேலை என்று தலையெடுக்கும்போது, தோழர் என்.கே அவற்றிற்கு எதிராக புரட்சிகர உணர்வை உயர்த்திப் பிடித்து, கடைசிவரை உன்னதமான கம்யூனிச களப்போராளியாகவே வாழ்ந்தார். தோழர் என்.கேயின் வழி மரபை, வாழ்க்கை முறையைப்பின்பற்றுவோம். தோழர் என்.கேயின் இலட்சியக் கனவை நனவாக்க உறுதியேற்போம். காவிப் பாசிசத்தை வேரறுப்போம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)