நவதாராளவாத கொள்கை அமுலாக்கத்தின் விளைவுகள் என்ன, தொழிலாளர் சட்டங்களை ஒழித்ததன் மூலம் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கிறது மோடி அரசாங்கம். தொழிலாளர் சங்கம் அழைக்கப்படாத தொழிலாளர் அமைச்சர்களின் திருப்பதி மாநாட்டில் நடந்தது அதுதான். தொழிலாளர் சீர்திருத்தங்கள் அமுலாக்கப்பட்ட மாநிலங்களில் தொழில்துறை வளர்ந்து இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்து இருக்கிறது. ஊதியம் அதிகரித்து இருக்கிறது என்றெல்லாம் பொய் மூட்டையை அவிழ்த்து விட்டு, தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்து தொகுப்புச் சட்டம் உருவாக்கியது சரிதான் என நிறுவப் பார்க்கிறது. நாட்டில் எங்கும் அப்படி நடக்கவில்லை. மாறாக, வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து இருக்கிறது. ஆயிரக் கணக்கான மைல்கள் நடந்தே சென்ற புலம் பெயர் தொழிலாளர்கள் திரும்பி வந்து அதே வேலையில் சேர்ந்தாலும் அவர்கள் ஊதியம் பாதியாகக் குறைந்து இருக்கிறது. ஊர் சென்ற பலர் திரும்பவே முடியவில்லை. அவர்கள் ஊரிலும் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. கிடைக்க வேண்டிய நூறு நாள் வேலையும் கூட, மிகக் குறைவான நிதி ஒதுக்கீடு காரணமாக அதுவும் கிடைப்பது இல்லை. தொழிலாளர்களின் நிலைமை மிக மோசமடைந்து இருக்கிறது.
புதிய இந்தியாவுக்கான புதிய சட்டங்கள் என்கிறது மோடி அரசு. ஆனால், அவை உண்மையில், கார்ப்பரேட் இந்தியாவுக்கான புதிய சட்டங்களாகவே இருக்கின்றன.
தொழில் துறையை சீரமைப்பதாக சொல்கிறது மோடி அரசு. ஆனால், தொழிலாளர்களை அமைப்பாக் கப்படாதவர்களாக மாற்றி அமைக்கிறது. நிரந்தர தொழிலாளர்களுக்கு சமமான ஊதியம், வேலை உத்தரவாதம், பணி நிலைமைகள் வேண்டும் என்பது அமைப்பாக்கப் படாத தொழிலாளர் இயக்கத்தின் கோரிக்கையாக இருந்தது. ஆனால், நிரந்தர வேலைகளையே ஒழித்து விட்டால், அந்த கோரிக்கை யையே எழுப்ப முடியாது என்கிற நிலைமையை உருவாக்குகிறது மோடி அரசு.
சமூகப் பாதுகாப்பு சட்டங்களை ஒழித்து விட்டு, அரசு வெறும் இன்சூரன்ஸ் ஏஜென்சியாக செயல் படுகிற விதத்தில் சட்டங்கள் மாற்றி அமைக்கப் படுகின்றன. தொழிலாளி தனது சம்பாத்தியத்திலிருந்து அதிக பணம் செலுத்தி இன்சூரன்ஸ் வாங்கினால், அதிக பயன். காசு குறைவாக கொடுத்தால் குறைந்த பயன். சமூகப் பாதுகாப்பு என்பது இனிமேல் அரசின் பொறுப்போ, முதலாளிகள் பொறுப்போ கிடையாது. தொழிலாளியின் சொந்தப் பொறுப்பே என்பதாக சமூகப் பாதுகாப்பு என்பது தொழிலாளியின் பொறுப்பு என்பதாக மாற்றியமைக்கப் படுவதுதான் சமூகப் பாதுகாப்பு தொகுப்பு சட்டம் என உருவெடுத்து இருக்கிறது.
மொத்த நாட்டையும் கூறு போட்டு விற்று வருகிறது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. ரயில்வேயை வாங்க முதலாளிகள் நிறைய பணம் செலவழிக்க வேண்டும் என்பதால், தண்டவாளங்கள் அதானிக்கு, ரயில்கள் அம்பானிக்கு, ரயில் நிலையங்கள் டாட்டாவுக்கு என கூறு போட்டு விற்று வருகிறது. இதுதான் தனியார்மயமாக்கம். தனியார் மயமாக்கம் என்பது இனி மேலும் தொழிலாளர் பிரச்சனை மட்டுமல்ல, அது சமூகத்தின் பிரச்சனை, அனைத்து மக்கள் பிரச்சனை என்பதாக உருவெடுத்து இருக்கிறது.
மோடியின் 'பார்வை (விசன்) 2047" என்பது ஜொமோட்டோ தொழிலாளர்கள், பசியிலிருந்து பாதுகாப்பவர்கள், ஊபர், ஓலா ஓட்டுநர்கள் போல, முதலாளி-தொழிலாளி உறவு தெளிவற்றதாகிப் போன வேலைகளே எதிர்காலத்திற்கான வேலைகள் என கூறுகிறது. அத்தகைய தொழிலாளர்கள் சட்டப் பாதுகாப்பை வழங்கினாலும், நிரந்தர வேலைவாய்ப்பை வழங்கினாலும் அது வேண்டாம் என சொல் வார்கள் என்கிறது. அத்தகைய தொழிலாளர்களை உருவாக்குவது என்பது ஒரு புறம் அது மோடியின் எஜமானர்களான கார்ப்பரேட் முதலாளிகள் பெரும் லாபம் சம்பாதிக்க உதவுகிறது. மறுபுறம், அத்தகைய ஏழ்மையையும், அமைப்பாக்கப்படாத தன்மையையும் உருவாக் குவது என்பது வெறுப்பு அரசியலை, பாசிச் அரசியலை வளர்ப்பதற்கான வளமான களமாகவும் அமைகிறது. ஆகவே தான் அத்தகைய வேலைகளை, ஏழ்மை நிலைமைகளை உருவாக்கிடத் துடிக்கிறது மோடி அரசு.
இதுதான் மோடி உருவாக்கும் வேலைகளுக்கான எதிர்கால முன்மாதிரி என்றால், தொழிலாளர் போராட்டங்கள் தன்னெழுச்சியானதாக வளர்ந்து வருவதைக் காண்கிறோம். இதற்கு எதிரான போராட்டங்கள் அமைப்பாக்கப்பட்ட தொழிற்சங்க இயக்கத்திற்கு அப்பாலும், வெடிப்புகளாக, கொந்தளிப் புகளாக, கலகங்களாக வெளிப்பட்டு வருகின்றன.
2023 ஜனவரி 30 அன்று மைய தொழிற் சங்கங்கள் டெல்லியில் ஒரு தேசிய தொழிலாளர் மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருக்கின்றன. அதை மாபெரும் வெற்றிபெற செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். 2023அய் தொழிலாளர் போராட்டங்களின் ஆண்டாக மாற்றியமைப்பதன் மூலம் 2024 தேர்தலில் மோடியை ஆட்சியை விட்டுத் தூக்கி எறிவோம்.
விவசாயிகள் மாபெரும் போராட்டத்தின் மூலம் விவசாயிகள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களை மோடி அரசாங்கம் திரும்பப் பெற வைத்தார்கள். பெங்களூரின் இளம் பெண் தொழிலாளர்கள், கார்மெண்ட் தொழிலாளர்களின் தன்னெழுச்சியான போராட்டம் மோடி அரசைப் பின் வாங்க வைத்தது.
அது போல, ஒரு நாள், நாடு முழுக்க இருக்கும் தொழிலாளர்கள் டெல்லியில் அணிதிரள்வார்கள். அந்நாள், பாராளுமன்றத்தை முற்றுகை இடுவது மட்டுமல்ல, தொழிலாளர் வர்க்கம் பாராளுமன்றத் தையே கைப்பற்றும். அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும். தொழிலாளர் வர்க்க ஆட்சியை நிறுவுவதன் மூலம், இந்த நாட்டையே தொழிலாளர் வர்க்கம் மாற்றியமைக்கும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.
ஏஐடியுசியின் 42வது மாநாடு வெல்லட்டும் என்று மீண்டும் ஒருமுறை புரட்சிகர வாழ்த்துக்களை ஏஐசிசிடியுவின் சார்பாக தெரிவித்து விடைபெறுகிறேன், தோழர்களே.
இன்குலாப் ஜிந்தாபாத்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)