இந்திய நாட்டில் உள்ள பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அல்லது சாதாரண குடிமக்கள் கூட நாடு முழுவதும் சென்று அரசியல் இயக்கங்களில் பங்கு பெறுவதற்கும் ஜனநாயக ரீதியாக போராட்டங்களைக் கட்டமைப்பதற்கும் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் உரிமை வழங்கி உள்ளதை, அரசியல் அமைப்புப் பொறுப்பு வகிக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தும் சற்றும் நாகரீகம் இன்றி தோழர் திருமாவளவன் பற்றி கருத்துக்களை வெளியிட்டு இருப்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயலாகும்.

கருத்துரிமை, பேச்சுரிமை, நாடு முழுவதும் சென்று அரசியல், சமூக கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்கும் உரிமைகளை ஏற்றுக் கொள்ளாத, அவற்றை மதிக்காத, அங்கீகரிக்க முடியாத துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அப்பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டதால், உடனடியாக குடியரசுத் தலைவர் அவர்கள் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை தகுதி நீக்கம் செய்து திரும்பப் பெற வேண்டும்.

ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளை இழுத்தடிப்பதும் போதுமான மருந்துகளை கையிருப்பில் வைத்துக் கொள்ளாததும், மருத்துவ சேவைகளுக்கு கட்டணம் வசூலிப்பதும் உலகம் அறிந்த செய்தியாகும்.

குடிமக்கள் அனைவரும் கட்டணம் இன்றி, தடையின்றி மருத்துவ சேவைகள் அரசிடம் இருந்து பெறுவது அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) தொடர்ந்து வலியுறுத்திப் போராடி வருகிறது.

மருத்துவ சேவைகளுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், கட்டணம் நிர்ணயம் செய்யப்படுவதை திரும்பப் பெற வேண்டியும்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் தோழர் தொல்.திருமாவளவன் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் தோழர் ரவிக்குமார் ஆகியோர் போராடி உள்ளனர்.

மருத்துவ சேவையை தனியார் மயமாக்குவதும் அரசு மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிப்பதையும் ஒன்றிய பாஜக மோடி அரசாங்கம் செய்து வருவதை தமிழிசை ஆதரிப்பதால் தான் அதை எதிர்த்து மக்களுக்காக போராடுபவர்கள் மீது கடும் ஆத்திரம் கொள்கிறார்.

சமீபத்தில் தமிழக திமுக அரசாங்கம் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரித்து சட்டத் திருத்தம் கொண்டு வந்த போது, திமுக தொழிற்சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் திமுக கூட்டணி கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் திமுக அரசு அந்த சட்ட முன் வரைவை திரும்பப் பெற்றது.

ஆனால், தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் ஆளுநராக இருந்து கொண்டு முதலாளிகளுக்கு ஆதரவாக தான் கருத்துக்களை வெளியிட்ட போது அது அண்டை மாநிலங்களின் உள் விவகாரத்தில் தலையீடு என்பதை மறந்து விட்டார் போலும்.

ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருவோர் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தமிழ்நாடு, புதுச்சேரி மாநில மக்களே. அவர்கள் பாதிக்கப்படுவதற்கு எதிராகப் போராடுவது குற்றம்போல் பேசுவதை தமிழிசை சௌந்தரராஜன் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏழை மக்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல் எரிய வேண்டாம் என்றும் அது நொறுங்கி அவர் தலையிலே விழும் என்பதையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறது.