அண்மைய ஆண்டுகளில் மிகவும் அப்பட்டமான மோசடிகளில் ஒன்று, மோடி அரசாங்கத்தின் தேர்தல் பத்திரத் திட்டமாகும். இத் திட்டம் அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது எனக்கூறி உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இறுதியில் அதனைச் செல்லாது என அறிவித்துள்ளது. இத் தீர்ப்பு, ஜனநாயகத்தில் மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட்ட நம்பிக்கையூட்டும் நியாயமான தீர்ப்பு என வருங்காலத்தில் பேசப்படும். மிகவும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், இன்றைய இந்தியாவில் கார்ப்பரேட் அதிகாரத்திற்கு எதிரான சமமற்ற போராட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் இத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தேர்தல் பத்திரத் திட்டம் செல்லாது என அறிவித்த இத் தீர்ப்பில், இதுவரையிலும் இந்தப் பத்திரங்கள் பணமாக மாற்றப்பட்டதன் விவரங்களை, அதாவது, நன்கொடை கொடுத்தவர்கள், பெற்றவர்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் மார்ச் 6 க்குள் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என இந்திய ஸ்டேட் வங்கியை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அதனைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் அவற்றை மார்ச் 13 க்குள் பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

இதுவொரு மோசடித் திட்டம்

தேர்தல் பத்திரங்கள் சம்பந்தப்பட்ட ஒவ்வொன்றும், அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் வெட்கக்கேடான விதத்தில் கேலிக்கூத்தாக ஆக்கியிருக்கின்றன. 2017 பண மசோதாவின் ஒரு அங்கமாக இத் திட்டத்தை முன்வைத்ததன் மூலம், இது நாடாளுமன்றத்தில் மோசடியாக நிறைவேற்றப்பட்டது. பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாத மாநிலங்களவையில் இத்திட்டம் பற்றிய விமர்சனப் பகுப்பாய்விலிருந்து தப்பிக்கவே அவ்வாறான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுவாக, அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை விஷயங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதில்லை; எனவே இத் திட்டத்திலும் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது என அரசாங்கம் தனக்கு ஆதரவாக வாதம் செய்தது. தேர்தல்களில் பணத்தின் அல்லது கருப்புப் பணத்தின் பயன்பாட்டை குறைப்பது என்பதற்கு நேர்மாறாக, இத் திட்டம் தேர்தல்களில் பண வலிமையின் செல்வாக்கை பல மடங்கு அதிகரித்தது. கார்ப்பரேட்டுகளின் எல்லையற்ற நிதியளிப்பிற்கு வெளிப்படைத் தன்மையை வழங்காததன் மூலம் வாக்காளர்களின் தகவல் பெறும் உரிமையையும், அதன் விளைவாக, தகவல்களின் அடிப்படையில் அரசியலில் தேர்வுகளை மேற்கொள்வதையும் இத் திட்டம் முழுவதுமாக முடக்கியது.

நிறுவனங்கள் சட்டம் 2013, வருமான வரி சட்டம் 1961, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 உள்ளிட்ட பல சட்டங்களிலும் மாபெரும் திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகே, தேர்தல் பத்திரத் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிந்தது. இதற்கு முன்னதாக, குறைந்த பட்சம் மூன்றாண்டுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் அவை சம்பாதித்த சராசரி லாபத்தில் 7.5 சதவீதத்தை விட அதிகமாக அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க முடியாது. மேலும் அந்தத் தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பங்குதாரர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் வேண்டும். அரசியல் கட்சிகளும் For L சட்டப்படி, ₹20,000க்கு அதிகமான ஒவ்வொரு நன்கொடை குறித்த தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் பத்திரத் திட்டம் இந்த அனைத்து தடைகளையும் நீக்கியதன் மூலம், அந்நிய நாட்டு நிறுவனங்களின் இந்தியத் துணை நிறுவனங்கள் உள்ளிட்ட எந்தவொரு நிறுவனமும் அரசியல் கட்சிகளுக்கு கணக்கற்ற நன்கொடைகளை அளிக்க வழியேற்படுத்திக்கொடுத்தது. மேலும் அரசியல் கட்சிகள், தேர்தல் பத்திரங்கள் வழியாகப் பெற்ற நன்கொடைகள் குறித்த அனைத்துத் தகவல்களையும் பகிர்ந்து கொள்வதற்கு மாறாக, ஒட்டுமொத்தத் தொகையை குறிப்பிட்டால் போதும் என்ற விலக்கும் அளித்தது.

ஆளும் கட்சிக்கு கார்ப்பரேட்டுகளின் லஞ்சம்

இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து சின்னச்சின்னதாக 30 எண்ணங்களில் ₹16,518 கோடி மதிப்பிற்கு தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, பிப்ரவரி 5 இல் மோடி அரசாங்கம் அரசியல் மக்களவையில் தெரிவித்தது. கட்சிகள் ஆண்டுக்கொருமுறை சமர்ப்பிக்க வேண்டிய கணக்குகள் நிலுவையில் உள்ளதால், நிதியாண்டு 2022-23 வரை உள்ள இறுதி எண்ணிக்கைகள் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன. இதன்படி, மொத்தம் ₹12,979 கோடியில் ₹6,555.12 கோடியை பாஜக பெற்றுள்ளது. இது காங்கிரஸ் பெற்ற (₹1123.29 கோடி) தொகையை விட கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகமாகும். அண்மைய எண்ணிக்கைகளும் சேர்க்கப்பட்டால் இந்த வேறுபாடு இன்னும் அதிகரிக்கவே செய்யும். பாஜக, காங்கிரசுக்கு பிறகு, மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கானாவின் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி, ஒரிசாவின் பிஜு ஜனதா தளம், தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்ற கழகம், ஆந்திரப் பிரதேசத்தின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி போன்ற பல்வேறு மாநிலங்களில் ஆளும் கட்சிகள் ₹350 கோடிக்கும் அதிகமான தொகையை இதன் வழியாகப் பெற்றுள்ளன.

இத்திட்டத்தின் மாபெரும் பயனாளி பாஜக

ஆக, அதிகாரத்தில் உள்ள கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் மறைமுகமாக நிதி வழங்குவதற்கான கருவிகளே இந்தத் தேர்தல் பத்திரங்கள். பல மாநிலங்களில் பாஜக இரட்டை எஞ்சின் அரசாங்கங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய பயனாளியாக அதுவே இருக்கிறது. ரூபாய் ஆயிரம் முதல் ஒரு கோடி வரையிலான அய்ந்து வெவ்வேறு தொகைகளில் இந்தப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. ஜூலை 2023 வரையில் விற்கப்பட்ட பத்திரங்களின் கணக்குப்படி, மொத்த மதிப்புகளில் சதவீதத்திற்கும் அதிகமானவை ₹1 94 கோடி மதிப்புடையவையாகும்; 5 சதவீதத்திற்கும் அதிகமானவை 10 லட்சம் மதிப்புடையவையாகும். தேர்தல் பத்திரங்களின் வழியாக நிதியளிப்பவர்கள் மிகப்பெரிய கார்ப்பரேட் நன்கொடையாளர்கள் தான்; சாதாரண தனிநபர்கள் இல்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது. கார்ப்பரேட் நிதியளிப்பின் பிற வழிகளை அல்லது கருப்புப் பண பரிவர்த்தனைகளை இந்தத் தேர்தல் பத்திரங்கள் மாற்றியமைத்திடவில்லை. தேர்தல்களில் பணத்தின் பயன்பாடும்,அரசாங்கங்களை கவிழ்க்க, பெரும்பான்மையை திடீரென மாற்றியமைக்க வேண்டி, தேர்தலுக்குப் பிந்தைய குதிரை பேரங்களுக்குத் தேவையான கருப்புப் பணப் புழக்கமும் அண்மைய ஆண்டுகளில் . மிகப்பெரிய அளவுக்கு அதிகரித்துள்ளது

தேர்தல் பத்திரங்கள் மூலமாக வழங்கப்படும் இந்த மாபெரும் கார்ப்பரேட் நிதியளிப்புகளானது நிச்சயமாக நற்செயல்களோ அல்லது 'கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு' நடவடிக்கைகளோ அல்ல. மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் கட்டுப்பாடற்ற, எல்லையற்ற லஞ்சத்தின் மறைமுகமான வடிவம் தான் இது. இந்தக் கார்ப்பரேட் நிதி அளிப்புகளுக்கு கைமாறாக, இந்த நிதியளிப்புகளால் பயன்பெற்று அரசாங்கத்தில் இருக்கிற கட்சிகள், அதிலும் குறிப்பாக, மோடி அரசாங்கமும் பாஜக தலைமையிலான மாநில அரசாங்கங்களும் கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி இறைக்கின்றனர்.

இது ஏற்கனவே இந்தியாவின் தேர்தல் முறையை பெருமளவிற்கு சிதைத்து விட்டது. பெருமளவு செல்வம் சிலரது கைகளில் குவிவதற்கும், இந்தியாவின் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மிகவும் பிடித்தமான கட்சி தேர்தல்களில் வெற்றியைப் பெறுவதற்கும் பெரும் வாய்ப்பை வழங்குகிறது. மிகச் சரியாகக் கூற வேண்டுமானால், இந்தக் கைமாறுகளை மூடி மறைத்துப் பாதுகாக்கவும், கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கும் அவர்களது அரசியல் பங்காளிகளுக்கும் இடையே வளர்ந்து வரும் நல்லிணக்கத்தை மறைத்து ரகசியமாக வைக்கவுமே இந்தத் திட்டம் ஏற்படுத்தப்பட்டது.

எஸ்பிஐயின் அபத்தமான சாக்குப்போக்கு

இந்தப் பின்னணியில் தான், உச்ச நீதிமன்ற உத்தரவை எஸ்பிஐ நிறைவேற்றுவதற்கு முழு மூன்று வாரங்கள் இருந்த போதும், காலக்கெடுவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, பத்திரங்கள் குறித்த விவரங்களை வழங்க ஜூன் 30 வரை அது அவகாசம் கோரியுள்ளது. இந்தக் குறுகிய காலத்தில் பத்திரங்களை பரிசீலிக்க முடியாது; அந்த அளவுக்கு அதன் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்ற சாக்குப்போக்கை எஸ்பிஐ கூறுகிறது. எஸ்பிஐயின் கூற்றுப்படி, ஏப்ரல் 2019 மற்றும் பிப்ரவரி 2024 க்கு இடையில் 22,217 பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இவ்வளவு பத்திரங்கள் யார் யாருக்கு வழங்கப்பட்டன, அதன் பணமதிப்பு விவரங்கள் என்னென்ன என்ற தகவல்களை வழங்க வங்கிக்கு சாத்தியமில்லை எனவும் எஸ்பிஐ கூறுகிறது.

வங்கிகள் கணினிமயமாக்கப்பட்ட இன்றைய காலகட்டத்தில், இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியானது, வழங்கப்பட்ட, பணமாக்கப்பட்ட பத்திரங்கள் தொடர்பான அடிப்படைத் தகவல்களை வழங்குவதற்கு இன்னும் நான்கு மாதங்கள் அவகாசம் கோரியுள்ளது! எஸ்பிஐ தவிர வேறு எந்த நிறுவனமும் இதில் ஈடுபடாத போதும், இதுபோன்ற அபத்தமான முறையீட்டை எஸ்பிஐ மேற்கொள்வது பற்றி தரவுகளைக் கையாளும் செயல்முறையை நன்கு அறிந்த வங்கி மற்றும் கணினித்துறை நிபுணர்கள் ஆச்சரியப்படுகிறார்கள். எஸ்பிஐ மேல்முறையீட்டின் உள்நோக்கம் வெளிப்படையானது. ஜூன் 30-ம் தேதிக்குள் தேர்தல் முடிந்துவிடும், எனவே பாஜகவுக்கு அதிக நன்கொடை அளித்தவர்கள் யார் என்பது வாக்காளர்களுக்கு தெரியாமல் போகும்.

மக்கள் முன்னுள்ள கடமை

உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதை ஒத்திவைக்க எஸ்பிஐ ஒரு தொழில்நுட்ப சாக்குபோக்கைக் கூறுகிறதென்றால், நரேந்திர மோடி புராணத்திலிருந்து கிருஷ்ணா-சுதாமா கதையின் மூலம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வெளிப்படையாக கேலி செய்கிறார். முழு நாட்டையும் தனது குடும்பம் என்று கூறிக்கொண்டே அனைத்து சட்டங்களையும் மீறி, அனைத்து நிறுவனங்களையும் கீழ்மைப்படுத்துவதன் மூலம் தனது உண்மையான குடும்பமான கார்ப்பரேட் நண்பர்களை பாதுகாக்க அவர் தீவிரமாகச் செயல்படுகிறார். மோடி ஆட்சிக்கும் இந்தியாவின் பெரிய கார்ப்பரேட் குழுக்களுக்கும் இடையிலான தொடர்பு முன் எப்போதும் இல்லாத வகையில், ஒரு சிலரின் கரங்களில் அரசியல் மற்றும் பொருளாதார சக்தியை குவித்துள்ளது. மோடி அரசாங்கம் அரசியல் அதிகாரத்தை ஏகபோகமாக்கியதன் மூலம் இந்தியாவின் கூட்டாட்சி சமநிலையும் தேர்தல் ஜனநாயகமும் பெரும் பாதிப்பை கண்டுள்ளன. முழு பொருளாதாரத்தையும் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகள் கட்டுப்படுத்துவதால், தொழிலாளர்கள், விவசாயிகள், வேலை தேடும் இளைஞர்கள், சிறு வர்த்தகர்கள் நிரந்தர துயரத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தின், அதன் எடுபிடி நிறுவனங்களின் எதிர்வினை எப்படி இருப்பினும், இந்திய மக்களாகிய நாம், தடுமாறிக் கொண்டிருக்கும் ஜனநாயகத்திற்கு தாமதமாகவேனும் கிடைத்த நீதிமன்ற தீர்ப்பின் ஊக்கத்திலிருந்து வலிமை பெற்று, நம் குடியரசை மீட்டெடுப்பதற்கான போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும். இது ஒரு முக்கியமான உடனடியான பணியாகும். அதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு பணியும் நம்முன் உள்ளது. அரசியல் சாசனத்திற்கு எதிரான இந்தத் திட்டத்தை மக்கள் மீது சுமத்திய, அதன்மூலம் தீய வழிகளில் கிடைத்த பலன்களை அதிகாரத்தை வென்றெடுப்பதற்கு பயன்படுத்திக்கொண்ட, அரசியலில் தனது ஆதிக்கத்தின் பிடியை இறுக்கிக் கொண்ட இந்த மோடி அரசாங்கத்தை தேர்தலில் தோற்கடிக்கும் சவாலை நிறைவேற்றுவது தான் அது.