[தோழர் எஸ்.வி.ஆருடன் நடந்த மிகநீண்ட உரையாடலின் ஒரு பகுதி மட்டும்]

மார்க்சியம் கற்பது எவ்வளவு அவசியமோ அதேபோல் மார்க்சியத்தை விமர்சிப்பவர்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களை நாம் வெல்ல முடியும். அவர்களின் கேள்விகள் மூலமாக நமது மார்க்சியக் கண்ணோட்டத்தை செழுமைப்படுத்த முடியும். 

பாட்டாளி வர்க்கம் எனும் சொல்லாடல்

50 ஆண்டுகளுக்கு மேலாக எழுதுகிறேன். படிக்கிறேன். மார்க்சிய மூலவர்களின் மேற்கோள்களை மொழி பெயர்க்கிறேன். ஏங்கெல்ஸ், லெனின் கட்டுரைகளைத் தமிழாக்கம் செய்திருக்கிறேன். நிறைய பேருக்கு மார்க்சின் இளமைக்கால எழுத்துகள் எவ்வளவு புரட்சிகமானவை எனத் தெரியாது. மார்க்ஸ், புரட்சிகர சக்தி என்ற வகையில் ’பாட்டாளி வர்க்கம்’ எனும் வார்த்தையை முதன்முதலில் எப்போது பயன்படுத்தினார் என்பதும் தெரியாது. யூதப் பிரச்சனை குறித்து பேசும் போது கூட, அவர் ஹெகல் வழிவந்தவர் என்பதால், ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு ஆளும் வர்க்கத்தையும் தூக்கி எறியும் ஒரு சக்தி வரும்; அது என்ன வர்க்கமாக இருக்கும் என்றால் உலகத்தின் துயரை தனது துயரமாக கருதக்கூடிய ஒரு வர்க்கமாக இருக்கும் என்று மட்டுமே சொல்கிறார். யூதப் பிரச்சனை சம்பந்தமாக 1843ல் எழுதிய கட்டுரையில் கூட பாட்டாளி வர்க்கம் பற்றி எழுதவில்லை. ஆனால் 1843 கடைசியில் மார்க்ஸ் பாரிஸ் செல்கிறார். அப்போதுதான் அவருக்குப் பாட்டாளி வர்க்கத்தாரோடும், பல விதமான சோசலிச நண்பர்களோடும் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. ஜெர்மனியில் இருக்கும்போது எழுதத் தொடங்கிய கட்டுரையை 1844 தொடக்கத்தில் நிறைவு செய்கிறார். ‘ஹெகலின் உரிமை பற்றிய தத்துவம் குறித்த விமர்சனப் பகுபாய்வு’. ஒரு முன்னுரை (A critique of Hegel's Philosophy of Right. An Introduction) என்ற அந்த நீண்ட கட்டுரையில்தான் முதலாளிய சமூக அமைப்பை வேரோடும் வேரடி மண்ணோடும் தூக்கியெறிந்து, புதிய சமுதாயத்தைப் படைக்கும் சக்தி பாட்டாளி வர்க்கம்தான் என்று முதன்முதலில் எழுதுகிறார். அவரின் சிந்தனையில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பின்னால் அவரின் பக்குவப்பட்ட படைப்புகளில் என்ன சொல்லப்படுகிறதோ அதன் கருக்கள் அதில் உள்ளன., உரிமை பற்றிய ஹெகலின் தத்துவம் குறித்தோ மார்க்ஸ் எழுதியவை பற்றிய சரியான அறிமுகமே தமிழ்நாட்டில் இல்லை.

உழைப்புச் சக்தி

’புனிதக் குடும்பம்’ ‘தத்துவத்தின் வறுமை’ ஆகிய நூல்களைப் பற்றி எல்லாரும் பேசுவோம். இரண்டாவது நூலின் முக்கியமான இரண்டு அத்தியாயங்கள் ஹெகல், புரூதோன் ஆகியோரின் தத்துவம் பற்றிய விமர்சனம். அப்போது, உழைப்புச் சக்தி பற்றிய கருத்து வளர்த்தெடுக்கப்பட வில்லை. மாறாக உழைப்பை விற்பதாகச் சொல்கிறார்; பின்னாளில்தான் உழைப்புச் சக்தி என்ற கருத்தாக்கத்தை உருவாக்குகிறார். 1844களிலேயே ஆடம் ஸ்மித், சிஸ்மோந்தி, டேவிட் ரெக்கார்டோ போன்ற எல்லா முதலாளியப் பொருளாதாரவாதிகளைப் பற்றியும் படிக்கிறார். தத்துவத்தில் இருந்து பொருளாதாரம் பற்றி கவனம் செலுத்த வேண்டுமென எங்கெல்ஸ் தூண்டுகிறார். அதன் பிறகுதான் முதலாளியப் பொருளாதாரம் பற்றிய முக்கிய நூல்களை எழுதத் தொடங்குகிறார். 1872இல் சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தில் அவர் ஆற்றிய உரையான ‘கூலி, விலை, இலாபம் என்பதில்தான் அவரது முதிச்சியடைந்த பொருளாதாரக் கருத்துகள் தெளிவாகச் சொல்லப்படத் தொடங்குகின்றன. அதன் பிறகுஅவர் ‘ ’உழைப்பை விற்பது’ என்பதற்குப் பதிலாக ‘ உழைப்புச் சக்தியை விற்பது’ என்ற சரியான கருத்துக்கு வந்து சேர்கிறார் ’அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்துக்கு ஒரு பங்களின்ன்ப்பு’ (A contribution to the critique of political economy) என்ற நூல் வரலாற்றுப் பொருள்முதல்வாதம் பற்றிய மார்க்ஸியச் சிந்தனைக்கான அடிப்படையாக அமைகிறது. அது ‘ மூலதனம்’ நூலின் மூன்று பாகங்கள், ‘ உபரி மதிப்பு பற்றிய கோட்பாடுகள்’ இரண்டு பாகங்கள் ஆகியவற்றுக்கான வரைவுக் குறிப்புகளான ‘ க்ரிண்ட்ரிஸ்ஸெ’ என்னும் நூலின் ஒரு பகுதிதான்.

கருத்து நிலை

சர்வதேச தொழிலாளர் சங்கத்தில் மார்க்ஸ் பணியாற்றிய போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல முக்கியத் தீர்மானங்கள் இயற்றப்பட்டன. ‘பாட்டாளி வர்க்கத்தின் விடுதலை பாட்டாளி வர்க்கத்தின் சொந்தச் செயலாக இருக்க வேண்டும்’ என்ற அவரது (மற்றும் எங்கெல்ஸது) கருத்து அங்கு வலுப்பெற்றது. நமது ( சர்வதேசப் பாட்டாளிவர்க்க இய்கத்தின்) வரலாறு நமக்கு தெரியவேண்டும். முக்கியமான மார்க்ஸியக் கருத்தாக்கங்களுக்கு இணையான பல சொல்லாக்கங்களை உருவாக்கியுள்ளேன். எடுத்துக்காட்டாக ஐடியாலஜி (Ideology) என்கிற ஆங்கில வார்த்தைக்கு கருத்தியல் என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துகிறோம். அது தவறானது. நெப்போலியன் ஆட்சி காலத்தில் கருத்துக்களின் வரலாறு எழுதப்படுகிறது. ஆனால் மார்க்ஸ் எங்கெல்ஸைப் பொருத்தவரை Ideology என்பது கருத்துகளைப் பற்றிய ‘இயல்’, வரலாறு அல்ல. மாறாக, ஒரு வர்க்கம் உலகத்தை, அரசியலை, பொருளாதாரத்தை, சமுதாய அமைப்பைப் பார்க்கும் விதம் என்று கூறலாம். எனவேதான்’ கருத்துநிலை’ என்ற சொல்லாக்கத்தை இலங்கை மார்க்ஸிய அறிஞர்கள் கா.சிவத்தம்பி, கைலாசபதி, எம்.ஏ.ரஃமான், சிவசேகரம்,சண்முகரத்தினம் முதலியோர் பயன்படுத்தினர். பூர்சுவா வர்க்கமும் பாட்டாளி வர்க்கமும் இந்த உலகத்தைப் பார்க்கும் விதம் வெவ்வேறானது.. ‘கருத்துநிலை’ பற்றிய விரிவான விளக்கத்தை ‘மாக்ஸியக் கலைச் சொற்கள்’ என்னும் நூலில் தந்திருக்கிறேன். 

மேலே நான் குறிப்பிட்ட ’அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு’ (A contribution to the critique of political economy) என்ற நூல்தான் மார்க்ஸிய வரலாற்றுப் பொருள்முதவாதக் கோட்பாட்டுக்கான அடிப்படை. இதில்தான் மார்க்ஸ் முதன் முதலாக ‘பொருளாதார அடித்தளம்’ ‘ மேலடுக்கு என்ற சொற்களைப் பயன்படுத்துகிறார். சட்டம், அரசியல் கருத்துகள், கருத்து நிலை போன்றவை ‘மேலடுக்கைச் சேர்ந்தவை. உற்பத்திச் சக்திகள் வளர்ச்சியடைந்து அவை ஏற்கனவே இருக்கிற உற்பத்தி உறவுகளுக்குப் பொருந்தாதவை ஆகும்போது, சமூகப் புரட்சி ஏற்பட்டு, புதிய பொருளாதார சமூகக் கட்டைமைப்பும், அதற்கேற்ற மேலடுக்கும் உருவாகிறது என்ற பொதுவான வரையறையை அதில் வழங்குகிறார். ஆனால் இதன் பொருள், மேலடுக்கு முழுவதையும் பொருளாதார அடித்தளம் அப்படியே ஒன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் நிர்ணயித்துவிடுகிறது’ என்பதல்ல. அன்று மார்க்ஸும் எங்கெல்ஸும் கருத்துமுதல்வாதத்திற்கு எதிராகப் போராடி பொருள்முதல்வாதத்தின் முதன்மையை நிறுவ வேண்டியிருந்ததால் அவர்களால் அடித்தளத்துக்கும் மேலடுக்குக்குமுள்ள இயங்கியல் உறவை விளக்குவதற்கான போதுமான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது, மேலடுக்கும், அடித்தளமும் ஒன்றையொன்று சார்ந்தது பற்றித் தங்களை மார்க்ஸியர்கள் என்று அன்று சொல்லிக் கொண்டவர்களுக்கும்கூட தெரியாது, இன்றும்கூட நம் நாட்டு மார்க்ஸியவாதிகள் பலரிடையே வறட்டுவாத பொருளாதார நிர்ணயவாதக் கோட்பாடு இருப்பதைக் காண்கிறோம். அதனால் தான் வறட்டு வாதமாக இருக்கும். இவர் ஒரு குட்டி பூர்சுவா. இவர் கருத்து குட்டி பூர்சுவா கருத்தாக இருக்கும் என்ற கருத்து அன்றும் இன்றும் இருந்து வருகிறது. கருத்து முதல்வாதத்திற்கு முதன்மை கவனம் கொடுத்த காலத்தில் பொருளாதார அடித்தளத்திற்கு முதன்மை கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், இது பற்றி மார்க்ஸ் தன் பிற்கால எழுத்துகளிலோ அவரது மறைவுக்குப் பிறகு தன் நண்பர்கள் சிலருக்கு எங்கெல்ஸ் எழுதிய கடிதங்களிலோ இப்படி மார்க்ஸியத்தை வறட்டுத்தனமான பொருளாதார நிர்ணயவாதக் கோட்பாடாக மாற்றுவதை விமர்சித்துள்ளனர். சில கருத்துக்கள் பொருளாதார அடித்தளத்தையே மாற்றக்கூடியதாகவும் கூட இருக்கும் என்கிறார் மார்க்ஸ். மார்க்ஸின் பொதுவான வரையறையை வைத்துக் கொண்டுதான் பலரும் அவரை விமர்சிக்கிறார்கள். இதைப் பற்றிய விரிவான விளக்கத்தை வரலாற்றுப் பொருள்முதல்வாதம்’ பற்றிய பகுதியை; ‘ மார்க்ஸியக் கலைச் சொற்கள்’ நூலில் காணலாம்.

அருவமான உழைப்பு – உபரி மதிப்பு

பல கருத்துக்களை அருவமான கருத்துக்கள் (abstract ideas) என சொல்லலாம். அருவமான (abstract) உழைப்பை அருவ உழைப்பு என்றும் சொல்லலாம். பரிவர்த்தனை செய்யும் போது ஒரு பொருளுக்கான மதிப்பு நிர்ணியிக்கப் படுகிறது. சமூக ரீதியான அவசியமான உழைப்பு என்றால், உதாரணமாக, இருக்கையைச் செய்யும் தச்சரின் உழைப்பை அதில் பார்க்க முடியும். பரிவர்த்தனை மதிப்பில் ஸ்தூலமான உழைப்பு இருக்காது. அருவமான உழைப்பு இருக்கும். அருவ உழைப்பு என்றால் என்ன? அதுதான் மார்க்சியத்தின் மிகவும் முக்கியமான கருத்தாக்கம். உபரி மதிப்பு, பணம் பற்றி மார்க்ஸ் விரிவுபடுத்திய முக்கிய கருத்தாக்கமாக அருவ உழைப்பு உள்ளது. அதைப்பற்றி எழுதி உள்ளேன். 

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையைத் தமிழாக்கம் செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் 1976இல் ரா.கிருஷ்ணையாவின் தமிழாக்கம் வெளிவந்த நாளிலிருந்தே இருந்து வந்தது. மார்க்ஸிய நூல்களைத் தமிழாக்கம் செய்வதில் மிகச் சிறந்த முன்னோடிகளான அவரைப் போன்றவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் மூன்றாவது பகுதியில், உண்மை சோசலிசம் பற்றிய விமர்சனத்தில், காண்ட் பற்றியோ, ஃபாயர்பாக் பற்றியோ தெரியவில்லை என்றால் அதைப் புரிந்து கொள்ள முடியாது. 61 மற்றும் 68 களில் நான் வாங்கிய சில புத்தகங்களை நினைவிற்காக இன்னும் வைத்து உள்ளேன். பொருளாதார, தத்துவக் கையெழுத்துப் பிரதிகள் 1844இல்( (Economic and Philosophic Manuscripts) 5 பிரதிகள் வைத்து உள்ளேன். இன்றைக்கும் எனக்கு முழுமையாக விளங்காத சில பகுதிகள் அதில் உள்ளன. அதற்குக் காரணம் ஹெகலின் தத்துவம் பற்றிய போதிய அறிவு எனக்கில்லை என்பதுதான். எனினும் அந்த நூல்களில் அடிக்கோடு போட்டு குறிப்புகள் எழுதி வைத்து உள்ளேன். அவை ரசித்துப் படித்த புத்தகங்கள். பழைய கால பதிப்புகள் வைத்துள்ளேன். அதெல்லாம் எனக்கு பயன்பட்டது. 

அண்மையில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யின் என்னுடைய மேம்படுத்தப்பட்ட தமிழாக்கத்தை நம் தோழர்கள் ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டும். அது மார்க்ஸியம், வரலாறு, தத்துவம் முதலியவற்றைக் கற்பதற்கான பயனுள்ள நூல் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

அந்நியமாதல்

மார்க்ஸின் ‘ பொருளாதார, தத்துவக் கையெழுத்துப் பிரதிகள் 1844’ என்ற கட்டுரைத் தொகுப்புதான் உலகெங்கும் மார்க்ஸின் ‘அந்நியமாதல்’ கோட்பாட்டை அறிமுகப்படுத்தியது. ஆனால் மார்க்ஸின் முதிர்ச்சியடைந்த படைப்புகளில் இன்னும் பல பரிமாணங்களையும் தூலமான விளக்கங்களையும் பெற்று அக்கருத்தாக்கம் தொடர்ந்து நிலவி வந்துள்ளது. அது மார்க்ஸின் இளமைக்கால பக்குவப்படுத்தப்படாத கருத்து என்று நிராகரிப்பவர்கள், அக்கருத்தாக்கம் அவரது கடைசிகால எழுத்துகள் வரை பல வடிவங்களில் முதிர்ச்சி அடைந்துள்ளதைப் பார்க்கத் தவறுகிறார்கள். வளர்ச்சி அடைந்த மேற்கத்திய, அமெரிக்க நாடுகளில் ஒவ்வொரு வேலையும் எவ்வளவு சலிப்புத் தட்டுவதாக உள்ளது. மார்க்ஸ் கூட சொல்வார், நவீன சாதனங்களும், இயந்திரங்களும் வருவதற்கு முன்பாக வேலைகளில் உழைப்பாளிக்கு உழைப்பதில் ஒரு சுவாரசியம் இருந்தது. அது நவீன தொழிற்சாலையாக மாறுகிறது. தற்போது உள்ள நவீன தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் விரக்தியுடன் உள்ளனர். நிறைவான மனநிலை இல்லை. ஆக ‘அந்நியமாதல் ‘ என்பது இன்றைய முக்கியமான கருத்தாக்கமாக உள்ளது. அதை விளக்க வேண்டியுள்ளது. முக்கியமான மார்க்ஸியக் கருத்தாக்கங்களைப் பற்றி அவ்வப்போது குறிப்புகள் எடுத்து வைத்திருந்தேன். பெரியார் சொல்வார், யாருமே செய்யாத வேலை, அதனால் அதை தோளில் போட்டு சுமக்கிறேன் என்று. அதுபோலத்தான் ‘,மார்க்ஸியக் கலைச் சொற்கள்’ நூலை எழுதினேன். பலருடைய ஒத்துழைப்பையும் கேட்டேன். யாருமே அக்கறை காட்டாததால் நானே அத்தகைய முயற்சியை மேற்கொண்டேன்.

ஆசிய உற்பத்தி முறை பற்றி

ஆசிய உற்பத்தி முறை பற்றிய முறைப்படியான, விரிவான, அறிவார்ந்த விவாதங்களை இந்தியாவிலுள்ள ஒரு சில கல்விபுலம்சார் மார்க்ஸிய அறிஞர்கள் மட்டுமே மேற்கொண்டுள்ளனர். ’ஜெர்மன் கருத்துநிலை’ (German Idoelogy) என்ற நூலில்தான் மார்க்ஸ் (மற்றும் எங்கெல்ஸ்) வரலாற்றில் சமுதாயம் அடைந்துள்ள பல்வேறு கட்டங்களைப் பற்றி முதன் முதலாக எழுதுகின்றனர். ’அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு’ என்ற நூலில்தான் ஆசிய உற்பத்தி முறை பற்றி மார்க்ஸ் முதன் முதலில் எழுதுகிறார். அந்த உற்பத்தி முறை, தென் அமெரிக்க, ஐரோப்பிய சமுதாயங்கள் சிலவற்றிலும் இருந்தது என்று வேறு சில நூல்களில் கூறுகிறார். ஆசிய உற்பத்தி முறையின் முக்கிய அம்சங்கள் என்று அவர் தொடக்கத்தில் எழுதியவை பினவருமாறு; மற்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் பிரதிநிதியாக அரசர்கள் இருந்தார்கள். ஆசிய உற்பத்தி முறையில் அப்படி இல்லை. அரசு தான் நிலம், நீர், வணிகம் முதலிய அனைத்துக்கும் ஒரே ஒரு உடைமையாளர். நீர்ப்பாசனம், சாலைப் போக்குவரத்து செய்வதில் அரசுதான் பொறுப்பாக இருந்தது. ஆசிய உற்பத்தி முறை என்ற கருத்தாக்கத்தை வளமான விவாதத்திற்கு உட்படுத்தியிருந்தால் சாதியைப் பற்றி கூடுதல் புரிதலை இந்தியக் கம்யூனிஸ்டுகள் பெற்றிருக்க முடியும் என்பது என் தாழ்மையான கருத்து. மூன்றாவது அகிலத்தில் லெனினுக்குப் பிறகு தலைமை வகித்த ஸ்டாலின், ‘ஆசிய உற்பத்தி முறை’ பற்றிய விவாதத்தை தடை செய்தார். புராதன அடிமை முறை சமுதாயம், நிலபப்பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ சமுதாயம், சோசலிச சமுதாயம் என்ற கட்டங்களினூடாகவே சமூதாய வளர்ச்சி ஏற்படும் என்ற நேர்கோட்டுப் பார்வையை வலுப்படுத்தினார். இது மார்க்ஸ் கொண்டிருந்த கருத்துக்கு நேர் எதிரானது. சங்ககால தமிழகத்தில் ஆசிய பாணி உற்பத்தி முறை பற்றி சிலர் தற்போது விவாதிக்கத் துவங்கியுள்ளனர். 

மேற்கு அய்ரோப்பிய சமுதாய வளர்ச்சி மாடலை அப்படியே பிற நாடுகளுக்குப் பிரயோகிக்க முடியாது என்பதை ரஷிய நரோத்னிக்குகளிடம் நடத்திய விவாதங்களின் போது மார்க்ஸ் தீர்மானகரமாக வலியுறுத்துகிறார். மூலதன உருவாக்கத்தில் கணிசமான பகுதி இங்கிலாந்தில் நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட விவசாயிகளின் பங்கு ஆகும். அது இங்கிலாந்து மற்றும் சில மேற்கத்திய நாடுகளுக்கும் பொருந்தும். ஆனால், இதனை எல்லா நாடுகளுக்கும் பொதுச் சூத்திரமாக கொள்ளக்கூடாது என மார்க்ஸ் எழுதினார். அதையே பொதுவான சூத்திரமாக எடுத்து கொண்டு நரோத்னிக்குகள் சிலர் மார்க்சை விமர்சித்தனர். ரஷ்யாவில் முதலாளியம் வரவேண்டும்; பாட்டாளி வர்க்கம் அவதிக்குள்ளாக வேண்டும். அதன் பிறகு சோசலிசம் வரும் என மார்க்ஸ் கூறுவதாக அவர்கள் வாதிட்டனர். அதற்கு கடுமையான பதில் எழுதுகிறார் மார்க்ஸ், “என்னை வரலாற்றுக்கு மேற்பட்டவனாய் நிறுத்துகிறார்கள், அப்படிச் செய்ததன் மூலம் எனக்கு இல்லாத பெருமையை வழங்குகிறார்கள்” என்று அவர்களைக் கிண்டல் செய்தார் மார்க்ஸ்.. ரோமாபுரியில் அடிமைச் சமுதாயம் ஒழிந்து பாட்டாளி வர்க்கம் பிறக்கிறது. புரோலட்டேரியன் (பாட்டாளி) என்ற சொல் வருகிறது. இழப்பதற்கு உழைப்பைத் தவிர வேறேதும் இல்லாத ஒரு வர்க்கம் உதிக்கிறது. பாட்டாளி வர்க்கம் பிறந்தவுடன் அங்கு ஏன் முதலாளியம் வளர்ச்சியடைவில்லை , ஏன் அது ஆரம்ப நிலையில் கூட இல்லை என்ற கேள்வியை எழுப்பினார் மார்க்ஸ். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொருவிதமான வளர்ச்சி இருக்கும். மேற்கு நாடுகளுக்குப் பொருந்தக்கூடிய ஒன்றை பொதுச் சூத்திரமாக மாற்றக் கூடாது என்கிறார். எதிர்கால சோசலிசம் பற்றி ‘மூலதனம்’ முதல் பாகத்தின் ஜெர்மன் பதிப்பின் முன்னுரையில் மார்க்ஸ் சொல்கிறார்’ : “எல்லாக் காலத்துக்கும் பொருந்தக்கூடிய சமையல் குறிப்பை நான் எழுதவில்லை” ஸ்தூலமான நிலைமைகளைப் படித்து ஸ்தூலமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என லெனின் சொல்கிறார். 

புதிதாக வரும் விசயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். மார்க்சியத்திற்கு சவால் விடுக்கும் புத்தகங்களுக்கு மார்க்சியப் பார்வையிலிருந்து பதில் சொல்ல வேண்டும் என்று என்னாலான அனைத்தையும் செய்திருக்கிறேன். ஆனால், எதையுமே ஒழுங்காகவும் நேர்மையாகவும் புறநிலைத் தன்மையுடனும் படிக்காத தமிழக மார்க்ஸிய இயக்கங்களிலுள்ள சிலர் எனக்கு ‘ திரிபுவாதி’ . , ’குழப்பவாதி’’ ஏகாதிபத்திய ஏஜண்ட்’ என்ற பட்டங்களைச் சுமத்தியுள்ளனர். அவர்களில் பலர் காணாமல் போய்விட்டனர். இன்னும் சிலர் தொடர்ந்து ஐம்பதாண்டுகளுக்கு மேலாக குறுங்குழுவாதக் குட்டையில் குளிப்பதில் ஆனந்தம் பெற்று வருகிறார்கள். இவற்றையெல்லாம் நான் பொருள்படுத்தியிருந்தால், வேறு எந்த ஆதாயத்துக்காகவுமின்றி, அரசியல் கடமையாக பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியிருக்க முடியாது. 

இன்று நிலைமை மாறிவிட்டது. முதன்மையான இடதுசாரிக் கட்சிகள் அனைத்தும் என்னுடன் தோழமை பாராட்டி வருகின்றனர். தீர்க்க முடியாத கடும் நோயால் நான்காண்டுகளாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் எனக்கு இது பெரும் ஆறுதல். களப்பணியாளர்களுக்குப் படிப்பதற்கு நேரம் குறைவு. இருப்பினும் அதைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் மார்க்ஸிய அறிவை இடைவிடாது வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், மார்க்ஸியம்தான் நமக்கான ஒரே ஒளிவிளக்கு. அது இல்லாவிட்டால்’ குருட்டுப் பூனை விட்டத்தில் தாவுவது போல அர்த்தமற்ற, நமது சக்தியை விரயமாக்குகிற வேலைகளில் மூழ்கிப்போவோம்.