2024 மே நாள் அறைகூவல்!

இந்தியாவில் நடைபெற்று வரும் 7 கட்ட நாடாளுமன்ற தேர்தலினூடே இந்திய தொழிலாளி வர்க்கம் 2024 மே நாளை அனுசரிக்கிறது. சர்வதேச அரங்கில் ஏகாதிபத்திய போர்கள் தொடர்கின்றன. இஸ்ரேல் காசாவில் குழந்தைகள், மருத்துவ உதவிக் குழுக்கள் மீது கூட குண்டு வீசி தாக்குதல் தொடுத்து வருகிறது. இப்போது ஈரானும் யுத்த களத்தில் இறங்கியிருக்கிறது. ரஷ்ய உக்ரைன் போரும் முடிவில்லாமல் தொடர்கிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் இந்தியத் தொழிலாளர்கள் ரஷ்ய ராணுவத்தால் ஈடுபடுத்தப்படுகின்றர்.யுத்த களத்தில் இருக்கும் இஸ்ரேலுக்கு இந்திய அரசே கட்டுமானத் தொழிலாளர்களை ஒப்பந்தம் போட்டு அனுப்பி வைக்கிறது.

ஆட்சியாளர்களின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளால் விலைவாசி உயர்வும் வேலையில்லாத்திண்டாட்டமும் இதுவரை இல்லாத அளவு உயர்ந்திருக்கிறது. உள்நாட்டில் தொழிலாளர்களின் கண்ணியமான வாழ்க்கை, வாழ்வாதாரத்துக்கான போராட்டம் தொடர்கிறது. ஒரு பக்கம் அபரிதமான செல்வக்குவிப்பும் மறுபக்கம் கடல் போல் வறுமையும் நிலவுகிறது. சமூக ஏற்றத்தாழ்வு பாரதூரமாகஅதிகரிப்பதென்பதும் அரசியலில், ஆளுகையில் மதம் கலப்பது என்பதும் ஜனநாயகத்திற்கான பெரும் அச்சுறுத்தலாக மாறி இருக்கின்றன.உலக வரலாற்றில் பாசிசத்துக்கு எதிரான போரில் உழைப்பாளி மக்களே முன் படை வரிசையாக நின்று வீழ்த்தியிருக்கிறார்கள்.இந்தியத் தொழிலாளி வர்க்கம் ஜனநாயகத்தைக் காக்க தேர்தல் போராட்டத்திலும் ஆலைகள், வயல்வெளிகள், வீதிகளில் நடக்கும் போராட்டங்களிலும் தன்னை மறு அர்ப்பணிப்பு செய்து கொள்ளும் நாளாக 2024 மே நாள் அமையட்டும்.

மே நாள் தியாகிகளுக்கு வீரவணக்கம்!