இந்திய நாட்டின் வளர்ச்சியை விரும்பாத வர்கள், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை போட நினைப்பவர்கள் அதானி குழுமத்தின் மீது அவதூறு பரப்புகிறார்கள் என்றும் இது இந்தியாவின் மீதான திட்டமிட்ட தாக்குதல் என்றும் நாங்கள் இந்த நாட்டின் நலனிற்காகவே பாடுபடுகிறோம் என்றும் அதானி குழுமத்தால் பல பத்திரிகைகளில் முதல் பக்கத்தில் விளம்பரம் போடப்பட்டுள்ளது.
ஜனவரி 24ம் தேதி அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், அதானி குழுமத்தின் திடீர் அசுர வளர்ச்சி பற்றிய தகவல்களை வெளியிட்டது. கவுதம் அதானி அவரின் நண்பர் மோடியின் ஆதரவோடு இந்தி யாவின் முதல் பணக்காரராகவும் உலகளவில் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கும் வந்தது மோசடியான வழியில் என்று அம்பலப் படுத்தியது. பங்கு வர்த்தக ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அதானி குழுமம் எப்படியெல்லாம் மோசடி செய்துள்ளது என்பதை ஆதாரங்களுடன் வெளியே கொண்டுவந்துள்ளது.
அதானி நிறுவனங்களின் பங்கு விலை யானது செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டே பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் அளித்த தீர்ப்பின் படி அதானியின் விளம்பரதாரர்கள் அதானியின் நிலைப்பாட்டைக் கையாள்வதில் கேதன் பரேக் நிறுவனங்களுக்கு உதவினார்கள் என்று அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளன. அதானி குழுமத்தின் நிதி தொடர்பான அறிக்கைகள் நம்பத்தகுந்தல்ல. அவர்கள் தங்கள் கணக்கு களில் பல்வேறு முறைகேடுகளைச் செய்துள்ளார்கள்.
மோடியின் நண்பர் கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானியுடன் தொடர்பில் உள்ள வெளிநாட்டு 'செல்' நிறுவனங் களின் (shell companies) செயல்பாடு கேள்விக் குறியதாகும். குறிப்பாக மொரிசியஸில் உள்ள 38 நிறுவனங்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சைப்ரஸ், சிங்கப்பூர் மற்றும் பல்வேறு கரீபியன் தீவுகளில் வெறும் லெட்டர் பேடு நிறுவனங் களை அதானி குடும்பத்தினர் நிறுவி அவற்றின் மூலம் தங்களின் அதிகாரபூர்வ நிதியை சுழற்சி செய்துள்ளார்கள்.
ஐக்கிய அமீரகத்தில் இயங்கும் ஒரு லெட்டர் பேடு நிறுவனம் ஒன்று அதானி குழுமத்திற்கு ஒரு பில்லியன் டாலர் கடன் வழங்கியுள்ளது. லெட்டர் பேடு கம்பெனியை உண்மையான கம்பெனி போல் காட்டி, பங்கு மார்க்கெட்டில் வெளியிட்டு, 90% பங்குகளை தாங்களே வைத்துக் கொண்டு 10% பங்குகளை ஒன்றிய ஆளுங்கட்சியின் மூலம் எல்ஐசியை போட்டி போடச் செய்து பங்குகளை வாங்க வைத்து அந்த லெட்டர் பேடு கம்பெனியின் பங்குகளின் விலையை உயரச் செய்து, அந்தப் பங்குகளை, மோடியின் உதவியால், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் அடமானம் வைத்து லட்சம் கோடிக் கணக்கில் கடன் வாங்கி, கட்டாமல் விட்டுவிட்டு, இப்படி பல தில்லுமுல்லுகளை அதானி குழுமம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்து வந்துள்ளது.
கேதன் பரேக்குகளை வைத்து பங்குகள் விலையை எகிறச் செய்துள்ளார்கள். 'வாஷ் டிரேட்டிங்' என்ற பங்கு வர்த்தக முறை கேட்டைப் பயன்படுத்தி பங்கு விலையை அதிகப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள்.
அதானி குழுமம் தங்களது பப்ளிக் லிட் கம்பெனியின் நஷ்டங்களை தங்களது பிரைவேட் லிட் கம்பெனிகளுக்கு கை மாற்றிவிட்டு, பின்னர் பிரைவேட் லிட் கம்பெனிகளை கழட்டி விட்டு விட்டு கடனில் இருந்து தப்பிவிடுகிறார்கள்.
'ஹிண்டன்பர்க் ரிசர்ச்' நிறுவனம், அதானி குழுமத்தின் மோசடியை அம்பலப்படுத்தி வெளியிட்டுள்ள பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஹிண்டன்பர்க் ரிசர்ச் அதானி குழுமத்திற்கு 88 கேள்விகளைக் கேட்டுள்ளது.
அதானி குழுமத்தில், பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி மட்டும் ரூ.18,645 கோடி முதலீடு செய்துள்ளது. அதானியின் சொத்து மதிப்பானது கொரோனாவிற்கு பின் இரண்டே ஆண்டுகளில் 819% அதிகரித்தது என்றால், அது பெரும் மோசடி மூலம்தான் சாத்தியமாகும். அதானியின் சொத்து மதிப்பைவிட கடன் தொகை பல மடங்கு அதிகம். இப்போது ஹிண்டன்பர்க் ரிசர்ச்சின் அறிக்கையைத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு இரண்டே நாளில் 4 லட்சத்து 17 ஆயிரம் கோடி காணாமல் போய்விட்டது. உலக பணக்காரர்கள் வரிசையில் 3ம் இடத்தில் இருந்த அதானி 7ம் இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டார். அதானியின் சொத்து மதிப்பும் 96.5 பில்லியன் டாலர்களாகச் சரிந்து விட்டது. அதானி குழுமத்தில் எல்ஐசி நிறுவனம் பங்குகளை வாங்கி பல்லாயிரம் கோடி முதலீடு செய்துள்ளது என்றால், மோடியின்பாரத ஸ்டேட் வங்கி பல லட்சம் கோடி கடன் வழங்கியுள்ளது. இரண்டு நிறுவனங்களிலும் உள்ள பணம் எல்லாம் இந்திய நாட்டின் ஏழை, நடுத்தர மக்களின் பணம்.
அதானி குழுமம், ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்டுள்ள 100 பக்க அறிக்கைக்கு பதில் அளிப்பதாகச் சொல்லி ஒரு 413 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் ஹிண்டன் பர்க் நிறுவனத்தின் செயலானது இந்தியாவின் மீதும் சுதந்திரத்தின் மீதும் இந்திய நிறுவனங்களின் நேர்மை மற்றும் தரத்தின் மீதும் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் இலட்சியத்தின் மீதும் தொடுக்கப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என்கிறது அதானி குழுமம். பதில் அறிக்கையைப் பார்த்த ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்தியாவின் பெரும் பணக்காரரான கவுதம் அதானி தேசியக் கொடியைப் போர்த்திக் கொண்டு இந்திய நாட்டைக் கொள்ளையடித்துக் கொண்டிருப்ப தாகவும் தன் மீதான மோசடிக் குற்றச்சாட்டு களைத் திசை திருப்ப 'தேசியவாதம்' பேசுகிறார் என்றும் கூறியுள்ளது. மேலும், அந்த பதில் அறிக்கையில், எல்லாமே பொத்தாம் பொதுவாக உள்ளது என்றும் நாங்கள் கேட்ட 88 கேள்விகளுக்கு 62 கேள்விகளுக்கு பதிலே இல்லை என்றும் சில கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதிலில் எங்கள் குற்றச்சாட்டை அவரே மறைமுகமாக உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் மிக முக்கியமாக கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானியின் நிறுவனங்கள் பற்றிய கேள்விக்கு, அவரின் நிறுவனங்களுக்கும் எங்கள் குழுமத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்று ஒரே வரியில் பதிலை முடித்துள்ளார்கள் என்றும் ஹிண்டன்பர்க் கூறியிருக்கிறது.
பிபிசியின் ஆவணப் படத்திற்கு மோடி அரசாங்கம் எப்படி பதில்வினையாற்றியதோ அதுபோலத்தான் ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு அதானி குழுமத்தின் பதில்வினையும் இருக்கிறது. ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் பலர் தங்கள் பங்குளை விற்கத் தொடங்கிவிட்டார்கள். அதுபற்றி, ஜாலியன் வாலா பாக்கில் ஆங்கிலேயன் போட்ட உத்தரவுக்கு அடிபணிந்து இந்திய போலீஸார் இந்தியர் களை சுட்டுக் கொன்றது போல் உள்ளது என்று கூறியுள்ளார் அதானி குழுமத்தின் முதன்மை நிதி அலுவலர். என்ன ஒரு தேச பக்தி! இந்திய மக்களின் பணத்தை மோசடி செய்து கொள்ளை யடித்து உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னேறி, இப்போது சரிவைச் சந்திக்கும் அதானியும் ஜாலியன் வாலாபாக்கில் இந்திய விடுதலைக்காக உயிர்த் தியாகம் செய்த விடுதலைப் போராட்ட தியாகிகளும் ஒன்று என்கிறார்.
ஹிண்டன்பர்க் நிறுவனம் 2017ல் இருந்து பல நிறுவனங்களைப் பற்றி ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், அது ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ள முதல் இந்திய நிறுவனம் அதானி குழுமம்தான். அதனா லேயே அதானி தேசபக்தி பற்றி பேசுகிறார். அவருடைய வளர்ச்சி இந்த தேசத்தின் வளர்ச்சி யாம். அவருடைய வீழ்ச்சி இந்த தேசத்தின் வீழ்ச்சியாம். அதானியின் மகன் கிரிக்கெட் விளையாட்டு ஒன்றின்போது, அவரிடம் கொடுக்கப்பட்ட தேசியக் கொடியைக் கூட தன் கையில் வாங்க மறுத்துவிட்டார். அவர்கள்தான் தேசபக்தி பற்றி பேசுகிறார்கள். அதானி செய்துள்ள மோசடியை இந்தியாவில் உள்ள ரிசர்ச் நிறுவனமோ தொலைக் காட்சி நிறுவனமோ விமர்சனம் செய்தாலே, ஒன்று அவர்கள் மிரட்டப் படுவார்கள் அல்லது அந்த நிறுவனத்தை அதானியே வாங்கிக் கொண்டுவிடுவார். இப்போது இது அமெரிக்க கம்பெனி என்பதால் அந்நியச் சதி, எதிர்க்கட்சி சதி, இந்தியாவின் வளர்ச்சி பிடிக்காதவர்கள் செயல் என்று ஒன்றும் செய்யமுடியாமல் கூப்பாடு போடுகிறார் அதானி.
யார் என்றே தெரியாமல் இருந்த அதானி, மோடியின் தயவால் குஜராத்தில் பல இடங்களை வளைத்துப் போட்டார். 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடி, அதானியின் விமானத் தில்தான் இந்தியாவைச் சுற்றி வந்து பரப்புரை செய்தார் மோடி. அந்த நன்றிக்காக தன் நண்பர் அதானிக்கு நாட்டையும் நாட்டு மக்களின் சொத்தையும் அள்ளிக் கொடுத்தார். ஹிண்டன் பர்க் அறிக்கை வந்தவுடன் அதிர்ந்து போய் இருந்த சங்கிகள் சப்பைகட்டு ஆரம்பித்துள் ளார்கள். ஆர்எஸ்எஸ்ஸின் சுதேசி ஜாக்ரான் மஞ்ச் அதானிக்கு ஆதரவாகப் பேசுகிறது. ஆர்எஸ்எஸ்- மோடி-அதானியின் திருட்டுக் கூட்டு இப்போது அம்பலமாகிவிட்டது.இந்த ஏமாற்றுப் பேர்வழி களை இனியும் தொடர்ந்து கொள்ளை யடிக்க அனுமதிக்கக் கூடாது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)