கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் நீண்டகரை பி. கிராமத்திற்குட்பட்ட சர்வே எண்:919யில் 25 சென்ட் நிலத்தை ராஜமோகன் என்பவரும் 10 சென்ட்நிலத்தை போலிச்சாமியார் அய்யப்பனும் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க கோட்டாட்சியர், தாசில்தார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு 04.04.2023ம் தேதியன்று மனு கொடுக்கப்பட்டது. மனு மீது நடவடிக்கை எடுக்காமல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தனர். எனவே, ஆக்கிரமிப்பாளர்ளை அகற்றிட 11.05.2023ம் தேதியன்று மேற்படி ராஜமோகன் ஆக்கிரமித்து வைத்திருந்த நிலத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. அரசு நிர்வாகம் இகக(மாலெ) குமரி மாவட்டச் செயலாளர் அந்தோணிமுத்து, மாநிலக்குழு உறுப்பினர் சுசீலா, கார்மல் உள்ளிட்ட 10 பேர் மீது பொய் வழக்கு போட்டது. அதுமட்டுமின்றி தோழர்கள் அனிற்றா பிறின்ஸி, கார்மல் லூர்துபாய், ரமேஷ், ஜெயக்குமார், ததேயூஸ், சாந்தி, சகாயமேரி உள்ளிட்ட 7 பேர்களை கைது செய்தது. நாட்டில் நிலமில்லாமல், வீடில்லாமல் உழைக்கும் தொழிலாளர்கள் பலர் துன்பப்பட்டுக் கொண்டி ருக்கிறார்கள். வீட்டு மனை அரசிடம் கேட்டால் நிலம் இல்லை என்கிறார்கள். ஆனால், இது போன்று அரசாங்க புறம்போக்கு நிலங்களை ஆட்சியாளர்களின் ஆசியுடன் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளார்கள். ஆகவே வீடில்லா ஏழைகளுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கோரிதான், சட்டவிரோதமாக தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ள நிலங்களை மீட்கும் போராட் டத்தை சிபிஐஎம்எல் கட்சி நடத்தியது. நிலங் களில் இருந்து ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப் படுத்துவதற்குப் பதிலாக சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்றப் போராடிய எம்எல் கட்சித் தலைவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு, பெண் தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. அரசு எந்திரத்தின் இந்தச் செயலானது சட்டவிரோதச் செயல்களை ஊக்குவிப்பதாகவேத் தெரிகிறது.
இகக(மாலெ) குமரி மாவட்டச் செயலாளர் அந்தோணிமுத்து, மாநிலக்குழு உறுப்பினர்கள் சுசீலா, கார்மல் உள்ளிட்ட எம்எல் கட்சித் தோழர் கள் மீது ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் போடப்பட்டுள்ள பொய் வழக்கை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என இகக(மாலெ) கோருகிறது. சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த நிலங்களை வீடற்ற ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்றும் இகக(மாலெ) கோருகிறது. இக் கோரிக்கைகள் தொடர்பாக இகக(மாலெ) கன்னி யாகுமரி மாவட்டக் கமிட்டி தோழர்கள் மாவட்ட ஆட்சியரைப் பார்த்து மனு அளித்துள்ளனர். அந்த மனு மீது மாவட்ட நிர்வாகமும் அரசும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இகக(மாலெ) மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.