'ஈடில்லா ஆட்சி, இரண்டு ஆண்டே சாட்சி" என்று ஆளும் திமுக சாதனைக் கூட்டங் களை நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்திலும் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரிலும் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் மரணமுற் றுள்ளார்கள். பலர் சிகிச்சையில் உள்ளார்கள். திமுக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதி களில் முக்கியமான ஒன்று பூரண மது விலக்கு. பத்திரிகை நிருபர்கள் திரு. ஸ்டாலின் அவர்களிடம், சாராய ஆலைகள் பல தங்கள் கட்சிக்காரர்களால் நடத்தப்படுகின்றதே! நீங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த ஆலைகள் மூடப்படுமா என்று கேட்டார்கள். அதற்கு திரு.ஸ்டாலின் பூரண மது விலக்கு என்று வந்து விட்டால் ஆலைகளுக்கு என்ன வேலை, ஆலைகளும் மூடப்படும் என்று சொன்னார். உதயநிதி ஸ்டாலின், திமுக ஆட்சியில் அமர்ந்தவுடன் முதல் கையொப்பம் மது விலக்குதான் என்று சொன்னார். ஆனால், டாஸ்மாக் கடைகளை மூடுவதற்குப் பதிலாக டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கான டார்கெட்தான் அதிகமாகிக் கொண்டே போனது. பூரண மது விலக்கு என்பதற்குப் பதிலாக படிப்படியாக மது விலக்கு கொண்டுவரப்படும் என்று சொன்னார்கள். சமீபத்தில் கூட சட்ட மன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றார். இன்னொருபுறம் பேருந்து நிலையங்களில் தானியங்கி மதுப் புட்டிகள் சேவையைத் துவக்கினார்கள். அது மட்டுமின்றி திருமண மண்டபங்களில் மது விருந்துக்கு அனுமதி என்றார்கள். எதிர்ப்பு கிளம்பிய பின்னர் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. இந்த சூழலில்தான் தற்போது 22 பேர் கள்ளச் சாராயம் குடித்து இறந்து போயுள்ளார்கள்.
பூரண மது விலக்கு கோரிக்கை எழும் போதெல்லாம் ஆட்சியாளர்கள் எப்போதுமே ஒரு வாதத்தை முன் வைப்பார்கள். மது விலக்கு வந்து விட்டால், மக்கள் பக்கத்து மாநிலங்களுக்குச் செல்வார்கள், கள்ளச் சாராயத்தை நாடுவார்கள் என்பார்கள். டாஸ்மாக் கடைகள் இருக்கும்போது எதற்காக மக்கள் கள்ளச் சாராயத்தை நாடுகிறார்கள். டாஸ்மாக்கிலும் மது பானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதுதான் காரணம் என்கிறார்கள். டாஸ்மாக்கில் போன நிதியாண்டு வருமானம் ரூ.36,000 கோடி. இந்த நிதியாண்டு அதாவது 2022-23ல் வருமானம் ரூ.44,000 கோடி.
ஒருபுறம் டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்து எளிய மக்களை எல்லாம் குடிக்கு அடிமையாக்கிவிட்டு, சாராயம் இல்லாமல் இருக்க முடியாது என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அது மட்டுமின்றி, டாஸ்மாக் கடைகளில் கிடைப்பதைவிட மலிவு விலையில் சாராயம் கிடைத்தால் அதை நோக்கிப் போகிறார்கள். கள்ளச்சாராயத்தால் இரண்டு நாட்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 22 என்று சொல்லும் அதேவேளை டாஸ்மாக் மதுவைக் குடித்து செத்தவர்கள் எண்ணிக்கை லட்சக் கணக்கில் உள்ளது. அவ்வாறு இறந்தவர்கள் குடும்பத்திற்கு இந்த அரசு என்ன நிவாரணம் வழங்கியிருக்கிறது. கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கியிருக்கிறார் தமிழக முதல்வர். இதுவரை இல்லாத வகையில் இப்படியொரு நிவாரணம் ஏன்? இறந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு கொடுக்கப்பட வேண்டியது அரசின் கடமை. இதே அளவு எல்லா விபத்துகளிலும் இறந்தவர்கள் குடும்பங்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் அல்லவா? உதாரணத்திற்கு பட்டாசு ஆலை விபத்துகளில் இறந்தவர்கள் குடும்பத் திற்கு ரூ.3 லட்சம்தான் இந்த அரசு வழங்கியது. மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம்தான் வழங்கினார்கள். மஞ்சு விரட்டில் மாடு முட்டி இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம்தான்.
ஆனால், இப்போது கள்ளச் சாராயத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் அறிவித்துள்ளது மட்டுமின்றி பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களை மருத்துவமனைக்குச் சென்று முதல்வரே பார்க்கிறார். அமைச்சர்கள் எல்லாம் இறந்தவர்கள் வீடுகளுக்குச் சென்று இழப்பீடு நிவாரணத்தை நேரில் வழங்குகிறார்கள். இது எல்லாம் கூடாது என்று சொல்லவில்லை. இதில் மட்டும் ஏன் இவ்வளவு அக்கறை என்றுதான் கேட்கிறோம்?
இந்த சாராயத்தில் ஆலைகளில் பயன்படுத் தப்படும் மெத்தனால் கலந்து இருந்ததுதான் காரணம் என்கிறார்கள். மெத்தனாலை விற்ற தனியார் நிறுவன பொறியாளரைக் கைது செய்துள்ளார்கள். மெத்தனால் விற்பனை மிகுந்த கட்டுபாடுடன் நடக்கக் கூடியது. மெத்தனாலை அவ்வளவு எளிதாக வாங்கிவிட முடியாது. மெத்தனால் விற்பனையைக் கட்டுப்படுத்தும் முழு அதிகாரமும் அரசிடம்தான் உள்ளது. அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் எவருக் கும் தெரியாமல் இந்த மெத்தனால் விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியிருக்க அரசின் மெத்தனப் போக்கே மெத்தனால் விற்பனைக்கும் அதை கள்ளச் சாராயத்திற்குப் பயன்படுத்தியதற்கும் காரணமாகும்.
காவல்துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் சிலர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் மட்டும்தானா இதற்குப் பொறுப்பு. கள்ளச் சாராயமும் போதைப் பொருள்களும் தமிழ்நாட்டில் தங்கு தடையின்றி நடமாடுகின்றன என்றால் அதற்கு ஆட்சியாளர்களின் அவர்களுக்கு நெருக்கமான வர்களின் ஆசி இல்லாமலா இவையெல்லாம் சாத்தியம். மணற் கொள்ளையைத் தடுத்த முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் மணல் மாஃபியாவால் வெட்டிக் கொல்லப்பட்டார். சட்டப்படி, நியாயமாக நடக்கக் கூடிய அதிகாரிகளை அடங்கிப் போகச் சொல்வதும் அச்சுறுத்துவதும் யார்? மோசமான அதிகாரிக ளால்தான் இவை நடக்கின்றன என்றாலும் அவர்களைப் பாதுகாக்கின்ற வேலையை யார் செய்கிறார்கள்?
இரண்டு நாட்களில் சுமார் 1600 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கிட்டத்தட்ட 1800 வழக்குகள் போடப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் இந்த கள்ளச்சாராய விற்பனை நடந்து கொண்டுதான் இருந்திருக்கிறது. 2002ல் இருந்து கள்ளசாராய இறப்புக்குக் காரணம் மெத்தனால் தான் என்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஏன் மெத்தனால் விற்பனையை கட்டுக்குள் வைத்திருக்கவில்லை? காவல்துறைத் தலைவர் திரு.சைலேந்திரபாபு அவர்கள், கனியாமூர் பிரச்சினையில் பள்ளி நிர்வாகத்திற்கும் ஸ்ரீமதியின் மரணத்திற்கும் தொடர்பு இல்லை என்று எடுத்த எடுப்பிலேயே சொன்னதன் விளைவு இப்போது ஸ்ரீமதி வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 1200 பக்க குற்றப் பத்திரிகையில் அது கொலை அல்ல தற்கொலை என்கிற ரீதியில்தான் சொல்லப்பட்டுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. அதேபோல, இந்த கள்ளச் சாராய விசயத்திலும் பொறியாளர் எழியன் நம்பி மெத்தனால் விற்றதுதான் இதற்குக் காரணம் என்று மடைமாற்றம் செய்யப்படுகிறது. அதாவது இது (கள்ளச்) சாராயச் சாவு இல்லை என்று சொல்லப் பார்க்கிறார்கள். ஆட்சியாளர் களுக்குத் தெரியாமல் எதுவும் நடக்க வாய்ப் பில்லை. எடப்பாடி பழனிசாமி, கள்ளச் சாராயத்தைக் கட்டுப்படுத்துவதில் திமுக அரசின் தோல்வியையே இது காட்டுகிறது என்கிறார். அவர் ஆட்சியிலும் கள்ளச் சாராய இறப்புகள் நடந்துள்ளன. அப்போது அவர், டாஸ்மாக் இல்லையென்றால், மக்கள் கள்ளச் சாராயத்தை நோக்கிப் போவார்கள் என்றார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டு மக்களிடம் கள்ளச் சாராயம் எனும் கொடும் அரக்கன் பக்கம் யாரும் போகாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்படி யென்றால் நல்லச் சாராயம் குடிக்கலாமா? எது நல்ல சாராயம்? டாஸ்மாக் சரக்கா? மது விற்பனையின் காரணமாக பல குடும்பங்கள் தெருவுக்கு வந்துவிட்டன. பல குற்றங்கள் மதுவினால்தான் ஏற்படுகின்றன. குடித்துவிட்டு சொந்த மகளைக் கூட பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குகிறார்கள். குடியின் காரணமாகவே நண்பர்களுக்குள் சண்டை வந்து அது கொலையில் முடிகிறது. ஒரு குடிகாரனால், பேருந்து நடத்துநர் எரித்துக் கொல்லப்பட்டார். மது குடிக்க காசு இல்லாததால் திருடுகிறார்கள். வழிப்பறிகள் இதன் காரணமாகவே நடக்கின்றன. வழிபறிச் சம்பவங்களில் பெண்கள் உயிரிழக்கிறார்கள். இப்படி குடியின் காரணமாகவே நாளும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. டாஸ்மாக் குடியால், குடிகாரர்களால் பாதிக்கப்பட்டோருக்கும் இந்த அரசாங்கம் இதுபோன்று ரூ.10 லட்சம் இழப்பீடு தர வேண்டும். இல்லையேல் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும். டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தும் இழுத்து மூடப்பட வேண்டும். டாஸ்மாக்கில் வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் அரசு மாற்று வேலை வழங்க வேண்டும். கள்ளச் சாராயச் சாவுகள் அல்ல, நல்ல! சாராயச் சாவுகளும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சாராயத்தில் ஏது கள்ளச் சாராயம் நல்ல சாராயம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)