'ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு நீதான அனுப்பின உம் பையன'. காலேஜ் படிக்கும் தன் மகன் அப்பார்ட்மெண்ட் செப்டிக் டேங்க் கழுவச் சென்று விஷ வாயு தாக்கி இறந்து விட்டான் என்பதை நம்ப முடியாமல் என் மகனைக் காட்டு, அவனைக் காட்டுங்கள் என்று கதறும் தூய்மைப் பணியாளரான தாயிடம் அரசாங்க ஆஸ்பத்திரியில் அடாவடியாகப் பேசுகிறது போலீஸ். மலக் குழி மரணம். புகார் வாங்கக் கூட மறுக்கும் போலீஸ், கம்ப்ளைண்ட் எதுக்கு? என்ன பண்ணப் போறீங்க? எதுவும் நடக்காது. பேசி முடிச்சா கொஞ்சம் பணமாவது கிடைக்கும் என்கிறது. இன்னொரு பக்கம், மாநகராட்சி அலுவலகம். வாயிலில் தூய்மைப் பணியாளர்கள் மூன்று மாதங்களாக தங்களுக்கு சம்பளம் வழங்கப் படவில்லை என்று செங்கொடி சங்கத் தின் கீழ் போராட்டம் நடத்திக் கொண்டிருக் கிறார்கள். அங்கு வரும் போலீஸ் அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்துவோம் என்கிறார்கள். போன மாசமும் இப்படித்தான் பேசினீங்க ஒன்னும் நடக்கல என்கிற செங்கொடிச் சங்கத் தலைவரிடம், மேயர் ஊரில் இல்லை கமிஷனரிடம் பேச அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கித் தான் பேச முடியும் என்று சாக்கு சொல்கிறார்கள். சம்பளம் கேட்டுப் போராடும் தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்படு கிறார்கள். மறுபடியும் ஆஸ்பத்திரியில், அப்பார்ட் மெண்ட் ஆட்களிடம் பேசி விட்டேன். 20 ஆயிரம் ரூபாய் தருவதாகச் சொன்னாங்க, நான் 30 ஆயிரம் கொடுங்கன்னு கேட்டிருக்கேன், பையனோட அம்மாவிடம் கையெழுத்து வாங்கிக் கொடுங்க என்று பேப்பரை நீட்டும் போலீஸ் எப்ஐஆர் போடாமலேயே, மாணவனின் உடலை அடக்கம் செய்யப் பார்க்கிறது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருக்குத் தகவல் போக, மாணவனின் உடலை ஆம்புலன்சில் இருந்து இறக்கி போராட்டம் நடத்திய பின் எப்ஐஆர் போடப் படுகிறது. தீபக் இயக்கியுள்ள விட்னஸ் திரைப் படத்தின் நம்மை ஆத்திரமூட்டும் ஆரம்பக் காட்சிகள் இவை.
தூய்மைப் பணியாளராக கஷ்டப்படும் தன் தாயைக் காப்பற்ற வேண்டும் என்ற கனவுடன் கல்லூரியில் படிக்கும் 20 வயது நீச்சல் வீரரான பார்த்திபன் (தமிழரசன்), தான் படிப்பிற்கு வாங்கிய கடனின் வட்டிக்காக, அவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காகவே சென்னை அண்ணாநகர் அடுக்ககத்தில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய காண்ட்ராக்டரால் கட்டாயப்படுத்தப்படுகிறார். எந்த உபகரணமும் இல்லாமல் மலக்குழிக்குள் இறக்கிவிடப்படும் பார்த்திபன், விஷ வாயு தாக்கி இறந்து போகிறார். அபார்ட்மெண்ட் ஆட்கள், கார்ப்பரேஷன் தலைமைப் பொறியாளர், காண்ட்ராக்டர், சப் காண்ட்ராக்டர், காவல்துறை என எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒட்டுமொத்தமாக மாணவனின் மலக்குழி மரணத்தை மறைக்கப் பார்க்கின்றனர். அதிகமாகக் குடித்துவிட்டு மலக் குழிக்குள் இறங்கியதால் மேலே ஏறி வர முடியாமல் மரணம் ஏற்பட்டுள்ளது என்று பணிக்கே செல்லாத மருத்துவர், காவல்துறையின் வேண்டுகோளின்படி உடற்கூராய்வு சான்றிதழ் வழங்குகிறார். எப்ஐஆர்-ஐ வாபஸ் வாங்கச் சொல்லி அடியாட்களை வைத்து மிரட்டு கிறார்கள்.
இக்கட்டான நிலையில் தாய் இந்திராணி (ரோகிணி), தன் மகனின் மரணத்திற்குக் காரணமானவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என்று முடிவெடுக்கிறார். அவருக்கு கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் பெத்தராஜ் (செல்வா) உதவுகிறார். தமக்கு ஆதரவான வழக்கறிஞர் சிவப்பிரகாசம் (சண்முகநாதன்) மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் படுகிறது. வழக்கிற்கு தேவையான முக்கிய ஆதாரமான சிசிடிவி பதிவை இந்திராணியிடம் வழங்குகிறார் அதே அப்பார்ட்மெண்டில் குடியிருக்கும், சிறுமை கண்டு பொங்கும் பார்வதி (ஸ்ரத்தா ஸ்ரீநாத்).
சமூகத்தில் நடக்கும் அநியாயத்தைத் தட்டிக் கேட்பவர்கள், நியாயத்திற்காகப் போரா டுபவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை, பாதிப்பு களை இழப்புகளை தெளிவாகக் காட்டுகிறது படம். தோழர் பெத்தராஜ் மீது பொய் வழக்கு போடப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார். பார்வதியின் வீடு தாக்கப்பட்டு அப்பார்ட் மெண்டை விட்டு காலி செய்ய வைக்கப் படுகிறார். இந்திராணிக்கு அவரின் சூப்பர்வைசர் மூலம் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அது மட்டுமின்றி தூய்மைப்பணியாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் கண் முன் கொண்டு வருகிறது விட்னஸ். சென்னை மாநகரை அழகுபடுத் துவதாகச் சொல்லிக் கொண்டு நகருக்கு வெளியே 30 கி.மீக்கு அப்பால் உள்ள செம்மஞ்சேரிக்கு தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்புகள் மாற்றப்படுவது, அவர்கள் அங்கிருந்து அதிகாலை வேளையில் பஸ் பிடித்து வந்து மாநகரத்தைத் தூய்மைப்படுத்துவது, அவர்களைக் கண்கா ணிக்கும் சூப்பர்வைசரின் அடாவடி, பெண் என்பதாலேயே அவர்கள் சந்திக்கும் பிரச்சினை, சூப்பர்வைசரின் அவமரியாதையான அராஜகப் பேச்சைத் தட்டிக் கேட்டதால் வரும் சம்பள இழப்பு, பிஎப் இழப்பு, மாநகராட்சியில் வேலை பார்க்கும் அதிகாரிகள், ஊழியர்களின் அலட்சிய, அராஜகப் போக்கு என ஒவ் வொன்றும் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. அத்தனையும் மிகைப்படுத்தல் இல்லாத சுட்டெரிக்கும் எதார்த்தம்.
தூய்மைப் பணியாளர்கள் செய்யும் வேலையை அப்படியே படம் பிடித்துக் காட்டி யது திவ்ய பாரதியின் 'கக்கூஸ்' திரைப்படம் என்றால், தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கைச் சூழல், பணியில் அவர்கள் சந்திக்கும் பிரச்சி னைகள், போராட்ட வாழ்க்கை, சாதிய ரீதியாக சந்திக்கும் பிரச்சினைகள், மலக் குழி மரணங்கள், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதா லேயே ஒரு மாணவனின் மரணம்கூட இளக்கார மாகப் பார்க்கப்படுவது போன்றவை பற்றிப் பேசுகிறது விட்னஸ். இறந்த மாணவனுக் காக அவர்கள் குடியிருக்கும் தெருவில் நினைவேந்தல் நிகழ்ச்சியைக்கூட நடத்த அனுமதி மறுக்கும் போலீஸ், அவர்களை மோசமான சமூக விரோதிகளாகச் சித்திரிக்கிறது. காணாமல் போன பைக்களுக்காக செம்மஞ்சேரி இளைஞர்களை கைது செய்கிறது. நீதிக்காக உண்மையாகப் போராடும் கம்யூனிஸ்ட் தோழர்களையும் அவர்கள் குடும்பத்தினர் நிலைமையையும் உள்ளபடி காட்டுகிறது விட்னஸ். 'நாலு பேருக்கு நல்லது பண்ணாதேனு சொல்ல, நம்ம வீட்டையும் கொஞ்சம் நினைச்சுப் பாறேன்னு சொல்லுதேன், எந்த போலீஸ் எப்ப உன்ன புடிச்சுட்டுப் போகுமோ, எந்த ஸ்டேசன்ல உக்காந்திருக் கியோன்னு இருக்கு' என்று தோழர் பெத்தராஜின் மனைவி கூறுவது பிழைப்பு நடத்தாத, உண்மை யான கம்யூனிஸ்ட் தோழர்கள் சந்திக்கும் பிரச்சினையை கண் முன் நிறுத்துகிறது.
முந்நூறு நாட்களுக்கும் மேலாக நீதிமன் றத்தில் நடக்கும் சட்டப் போராட்டம். சாட்சி, விசாரணை உண்மையை வெளியே கொண்டு வரும் வக்கீலின் வாதம். நீதிபதி நாராயணமூர்த்தி வழக்கை நடத்திச் செல்லும் விதம். அத்தனையும் குற்றவாளிக்கள் தப்ப முடியாது என்கிற நம்பிக்கையைத் தருகிறது. இறுதியில் தீர்ப்பு மாற்றி எழுதப்படுகிறது. சனாதனத்தின் குரல் தீர்ப்பாக ஒலிக்கிறது. தீர்ப்பு நாளில் நீதிபதி நாராயணமூர்த்தி பார்வையாளர்கள் இருக்கை யில், பார்வதியின் பக்கத்தில் வந்து உட்காரும் போதே தெரிந்துவிடுகிறது தீர்ப்பு இந்திராணிக்கு எதிராகத்தான் இருக்கப் போகிறது என்று. அத்தோடு முடித்திருக்கலாம் படத்தை சுஜாதா வின் 'அரிசி' சிறுகதையின் இறுதிக் காட்சி போல. அதற்குப் பின்னர் அப்பார்ட் மெண்ட் செயலாளரும் கார்ப்பரேஷன் தலை மைப் பொறியாளரும், காண்ட்ராக்டரும் தீர்ப்பு வழங்குவதாகக் காட்டியிருப்பது நீதி விலைக்கு வாங்கப்பட்டுவிட்டது என்கிற எதார்த்தத்தைக் காட்டுகிறது என்றாலும் கூட, ஒருவித அவ நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இருப்பினும் எதார்த்தத்தை எடுத்துச் சொல்வது தான் படைப்பாளியின் கடமை என்பதை கச்சிதமாகச் செய்துள்ளார் புதுமுக இயக்குநர் தீபக்.
தன் மகனின் மரணத்திற்குக் காரணமாக இருந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதைவிட குறைந்த பட்சம் அவர்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என்று நினைக்கும் இந்திராணியின் அந்த உணர்வுதான் மிக முக்கியமானது. மகனே போய்விட்டான் வேறு என்ன செய்ய முடியும் என்று இருக்காமல் தட்டிக்கேட்க வேண்டும் என்கிற எண்ணம் உண்டாவதுதான் முக்கிய மானது. பொதுவாக சமூகத்தில் பாதிக்கப்படு பவர்கள், பின்னால் ஏற்படும் விளைவுகளைக் கண்டு அஞ்சி விலகிப் போவதுதான் நடக்கிறது. அதைவிட முக்கியமானது பார்வதியின் செயல். தனக்கு பாதிப்பு ஏற்படும்போதே, தட்டிக் கேட்க தயக்கம் காட்டுபவர்கள் மத்தியில், தன் பக்கத் தில், தன் கண் முன்னே நடக்கும் அநியாயத்தைத் தட்டிக் கேட்க நினைக்கும் பார்வதியின் எண்ணம் கம்யூனிஸ்ட் தோழர்களின் செயலுக்கு இணை யானது. சமூகத்தின் அவலங்களை, அநியா யத்தைத் தட்டிக் கேட்பவர்கள், நீதிக்குக் குரல் கொடுப்பவர்கள் கம்யூனிஸ்ட்கள் தான் என்பதை படம் சரியாகவேக் காட்டியுள்ளது. ஒரு பிரச்சி னையில் வெற்றியா? தோல்வியா? என்பது முக்கியமல்ல. நம் முன் நடக்கும் அநியாயத்தை, அக்கிரமத்தைத் தட்டிக் கேட்க வேண்டும் என்பதுதான் முக்கியம் என்கிறது விட்னஸ்.
அப்படி தட்டிக் கேட்டதனால்தான், சட்டங்கள் பல உருவாகின. அந்தச் சட்டங்கள் அமல்படுத்தப்படாமல் இருப்பது, அவற்றை அமல்படுத்தப் போராட வேண்டியுள்ளது என்பது எதார்த்தம்தான். அநியாயத்தைத் தட்டிக் கேட்க வேண்டும், அதற்காகப் போராட வேண்டும் என்கிற உணர்வும் எண்ணமும்தான் மனிதத் தன்மையாகும்.
மலக்குழி மரணங்கள் இந்தியாவெங்கும் நாள்தோறும் நடந்து கொண்டுதான் இருக் கின்றன. ஆனால், அவைகள் எதுவும் பதிவாவ தேயில்லை. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ் நாட்டில்தான் மலக்குழி மரணங்கள் அதிகம் பதிவாகியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மலக் குழி மரணங்களைத் தடுக்க வேண்டிய அரசும் ஆட்சியாளர்களும் மலத்தை குடி தண்ணீரில் கலக்கும் அவலத்திற்குக் காரணமானவர்களைக் கைது செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மட்டுமின்றி, பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்க முயற்சிக்கும் காவல்துறையைக் கண்டு கொள்ளாமல் இருந்து கொண்டிருக்கின்றனர். காவல்துறையினரின் சாதி ஆதிக்க மனோபாவம்,
இப்படியான எதார்த்தங்களை வெளிக் கொண்டுவருவது கூட இப்போது மிகவும் தேவையான, முக்கியமான ஒன்று. அதைச் சரியாகவே செய்திருக்கிறார்கள் விட்னஸ் திரைப்படத்தைச் சேர்ந்தவர்கள். சாதிய ரீதியாக தூய்மைப்பணி செய்ய நிர்பந்திக்கப் பட்டவர் களைவிட பிறர்தான் இப்படத்தைப் பார்க்க வேண்டும். வழக்கறிஞர் சிவப்பிரகாசத்திடம் அவருடைய உறவினர் இந்தக் கேஸில் நீ தலையிடாதே என்று சொல்லும்போது, உங்க வீட்டு கக்கூஸை நீங்க என்னைக்காவது கழுவியிருக்கீங்களா? பெத்த புள்ளையை மலக் குழியில் பறிகொடுத்துவிட்டு தவிக்கிறாங்க அதப் பத்தி யோசிச்சிச்சு பாருங்க என்று சொல்லும் அவரின் சமூக அக்கறை வெளிப்படுகிறது. இதுதான் இங்கே இந்தக் காலகட்டத்தில் தேவையாக இருக்கிறது. சமூக அக்கறை ஒவ்வொ ருவருக்கும் வேண்டும். அநியாயத்தை பார்த்துக் கொண்டு அப்படியே கடந்து செல் லாமல் அதைத் தட்டிக்கேட்கும், அம்பலப் படுத்தும் எண்ணம் வேண்டும். அதைச் செய்துள்ள விட்னஸ் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள். அவர்களின் கலகக் குரல் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கட்டும்.
(பி.கு.இப்படத்தில் ஏஐசிசிடியு அகில இந்திய செயலாளரும் வழக்கறிஞருமான தோழர் கிளிப்டன் டி ரோசரியோவின் பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)