தோள் சீலைப் போராட்டம், மானுட மாண்பை, பெண்களது தன் மானத்தை மீட்டுக் கொள்வதற்கான உரிமைப் போராட்டம். சமுதாயத்தின் சரிபாதி பெண்களது இந்தப் போராட்டம் மொத்த சமுதாயத்தின் போராட்டமாகும். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த, பற்றிப் படர்ந்த உக்கிர மிகுந்த இந்தப் போராட்டம், ஆகச்சிறந்த பண்பாட்டு, அரசியல், பொருளாதாரப் போராட்டமாகும்.
உயர்சாதிப் பெண்கள் தவிர்த்த 18 கீழ்ச் சாதிப் பெண்கள் (வருணதர்ம பாகுபாட்டின்படி) மேலாடை அணிவது தடை செய்யப்பட்டிருந்தது. மேலாடை அணிவது குற்றமாக்கப்பட்டிருந்த அந்த காலத்தில் மீறி அணிபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். சவுக்கடிகள் தரப்பட்டன. கொடூரமான தண்டனை வரிவசூலிக்கப்பட்டன. அது போலவே மீசை, தாடி வைத்துக் கொள்ளும் ஆண்களும் தண்டிக்கப்பட்டனர். வரி வசூலிக்கப்பட்டது கஜானா நிரப்பிக் கொள்ளப்பட்டன. பார்ப்பனிய சனாதனத்தால் முன்வைக்கப் பட்ட இந்தக் கொடூரமான சமூக ஒடுக்குமுறை சட்டமாக்கப்பட்டிருந்தது. ஆட்சியாளர்களான அரசனும் அரசியும் இந்தச் சட்டத்தை செயல்படுத்தினர்.
பார்ப்பனிய சனாதன இந்து தர்ம ஆணைகளை எதிர்த்து எழுந்த பண்பாட்டுக் கிளர்ச்சியாக விரிந்தது தோள் சீலைப் போராட்டம். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இத்தகைய போராட்டம் ஆட்சியாளர்கள், பார்ப்பனிய நம்பூதிரிகளின் கூட்டை குறிவைத்து நடத்தப்பட்ட போராட்டமாகும். அரசியல் அடக்குமுறைக்கு எதிராகவும் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராகவும் நடந்த புகழ்பெற்ற போராட்டமாகும். போராட்டத்தின் பெரும் திருப்புமுனையாக வீரப்பெண் நங்கேலியின் உச்ச மடைந்த கோபம் இருந்தது. மேலாடை உடுத்திய நங்கேலியிடம் தண்டனையாக வரி கேட்க வந்த அதிகாரிகளிடம் தனது இரண்டு மார்புகளையும் அறுத்து "வரியாக" கொடுத்திருக்கிறார்! ஆட்சியாளர்கள் முகத்தில் ஓங்கி அறைந்த நங்கேலியின் செயல் மொத்த சமூகத்தையும் போராட்டத்தில் இழுத்து வந்தது. வருணாசிரம தர்மம், கொடுங் கோலோச்சிய காலந்தொட்டே அதற்கெதிரான எதிர்ப்பு பல வடிவங்களில் பல கட்டங்களாக நடந்த வண்ணம் உள்ளன. அந்த எதிர்ப்புகள் மதத்திற்குள் சீர்திருத்தங்களுக்கு காரணமாக அமைந்தன. "மதத்தில் புரட்சி செய்த மகான்" என்று நாத்திகவாதிகளால் கூட புகழப்பட்டதைக்கூட காணமுடியும். பல புதிய மதங்கள் தோன்றுவதற்கு காரணமாகவும் இருந்தன. இந்து மதமும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. கொடூரமான சமூக ஒடுக்குமுறை, அதற்கெதிரான வலுவான எதிர்ப்புகள் என்ற பின்னணியில், கேரளாவில் நாராயண குரு, குமரியில் வைகுண்டர் போன்ற சீர்திருத்தவாதிகள் உருவானார்கள். மனிதர்களிடையே சமத்துவம், தன்மானம், சுயமரியாதை ஆகியவற்றை உயர்த்திப்பிடித்த இவர்கள், தங்களுக்கென்று தன்வழியையும் உருவாக்கிக் கொண்டார்கள். அப்படி உருவானதே அய்யாவழி. இதனால் இவர்கள் ஆட்சியாளர்களின் கடுங்கோ பத்துக்கும் தண்டனை களுக்கும் ஆளானார்கள். இந்தக் கதை எல்லா மதங்களிலும் உண்டு.
சாதிப்படிநிலையும் ஆணாதிக்க கொள்கையும் அடித்தளமாக கொண்டிருக்கும் இந்து மதத்தில் இன்னும் கூடுதலான பன்முகத்தன்மையைக் காணமுடியும். தம்மளவில் குறிப்பிட்ட சில அடையாளங்களைக் கொண்டு இந்தப்பிரிவுகள் இயங்குகின்றன. சில காலப்போக்கில் மங்கி விடுகின்றன. சில தோன்றிய இடத்திற்கே சென்றுவிடுகின்றன. தனி அடையாளங்கள், பல, வழிபாட்டு முறைகளைக் கொண்டிருந்தாலும் மதம் என்ற வகையில் 'மதத்தின்' பொதுத்தன்மைகளுக்குள் சுருக்கிக் கொள்கின்றன. அல்லது சுருங்கிப் போகின்றன. இன்னும், சில குறிப்பிட்ட சாதிக்கான அடையாளமாகவும் நலன்களாகவும் மேலும் சுருங்கிப் போகின்றன. இந்தியா முழுவதும் இதற்கான பல எடுத்துக்காட்டுகளைக் கூறமுடியும். தோள்சீலைப் போராட்டம் ஒரே நேரத்தில் பண்பாட்டுக் காவலர்களை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. அரசு அதிகாரிகளை, அதிகாரம் செலுத்தும் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடியாக வேண்டியிருந்தது. அதனால்தான் தோள்சீலைப்போராட்டத்தை பண்பாட்டு, அரசியல், பொருளாதாரப் போராட்டம் என்று கூறுகிறோம். மதமும் அரசியலும் எப்போதும் பின்னிப்பிணைந்து இருக்கிறது.மதமில்லாமல் அரசியல் இல்லை; அரசியல் இல்லாமல் மதமில்லை என்று இருக்கிறது.மேலாடை அணியும் உயர்சாதிப் பெண்களுக்கு இணையாக தாங்களும் அணியவேண்டும் என்ற சமத்துவ உணர்ச்சியும் தன்மான உணர்வும் நாகரிக விழிப்பும் கொண்ட அடித்தட்டு பெண்கள், அவர்தம் குடும்பத்தினர் சமூகமாக சமரில் இறங்கினர். கேரளாவில் தோள்சீலைப்போராட்டத்துக்கு "மார் மறைக்கில் சமரம்" என்று பெயர்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த கன்னியாகுமரியில் உயர்சாதிப் பெண்கள் ஆடை அணிந்திருந்ததும் அப்போது அறிமுகமாகி இருந்த கிறித்துவத்தில் சேர்ந்திருந்தப் பெண்கள் மேலாடை ("குப்பாயம்”) அணிந்திருந்ததும் ஒரு புறத் தூண்டுதலாக இருந்திருக்கமுடியும் என்பதை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. மேலாடை அணிந்திருவர்களின் ஆடைகளை கிழித்தெறிந்தனர் ஆணாதிக்க இந்து மத வெறியர்கள், அந்த ஆடைகளை மரத்தில் தொங்க விட்டு குரூரமாக ரசித்தனர். மேலாடை அணிவோருக்கு ஆதரவாக வரும் கிறித்தவ மிஷனரிகள் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம். 1857, முதல் சுதந்திரப் போர் அடுத்து கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து நேரடியாக ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆங்கிலேய அரசாங்கம், இந்தியர்களின் மதம், கலாச்சாரம் உள்ளிட்டவைகளில் தலையீடு செய்வதில்லை என்று முடிவு செய்திருந்தது. இது வருணாசிர தர்ம சக்திகளை உசுப்பேற்றியது. அவர்கள் இன்னும் தீவிரமான வெறிச்செயல்களில் இறங்கினர்.
இந்து, நாடார் சமுதாயத்தினர்; ஆண், பெண் அனைவரும் ஒன்று திரண்டு தாக்குதலை எதிர்த்து முறியடித்தனர். ஆதிக்க வெறி சக்திகள் தாக்குப்பிடிக்காமல் தோற்று ஓடினர். மூன்று கட்டமாக நடந்த தோள்சீலைப்போராட்டம் 1859 ல் முழு வெற்றி பெற்றது. இறுதியாக 1865ல், மேலாடை அணியக்கூடாது என்ற ஆடைக்கட்டுப்பாடு முழுவதுமாக முடிவுக்கு வந்தது. அப்போது இருந்த சமஸ்தான அரசு இவ்வாறு அரசாணை பிறப்பிக்க வேண்டிய கட்டாயத்தை தோள்சீலைப்போராட்டம் உருவாக்கியது.
ஆடை கூடாது, என்று அநாகரிக கட்டுப்பாடு இருந்ததைப்போலவே பெண்கள், தலித்துகள், விளிம்புநிலை மக்கள் படிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் இருந்தது. இதற்கெதிராக தலித் பெண்களுக்கு தலித்துகளுக்கு கல்வி அளிக்கும் இயக்கம் இந்தியா முழுவதும் எழுந்தது. ஆதிக்க சக்திகளின் மூர்க்கத் தனமான எதிர்ப்பை முறியடித்தே இந்த இயக்கம் முன்னேறியது. சாவித்திரி பாய் பூலே அவரது நண்பர் பாத்திமா ஷேக் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள்தான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்கள் என்று போற்றப்படுகின்றனர். பெண்கள் உடன்கட்டை ஏறுதல், குழந்தைத் திருமணம் போன்ற பல பிற்போக்கு மூடநம்பிக்கை வழக்கங்கள் ஒழிக்கப்பட்டன. ஆண்டவனுக்கு அடியவர்கள் என்ற பேரில் இருந்த இழிவு மிக்க "தேவதாசி" முறை மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் போர்க்குணமிக்க முயற்சியாலும் முற்போக்காளர்களது ஒத்துழைப்பாலும் ஒழித்துக் கட்டப்பட்டது.தாழ்த்தப்பட்டோர்,ஒடுக்கப்பட்ட மக்கள் கோவில் நுழைவுப் போராட்டம் பெரியார் தலைமையில் நடந்த வெற்றிகரமான போராட்டம் நடந்ததன் நூறாவது ஆண்டு வரவிருக்கிறது.
இவ்வாறு, 19 ஆம் நூற்றாண்டு முழுவதும் அநீதியை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனிய- நிலப்பிரபுத்துவ அமைப்பில் இருந்த சமூக ஒடுக்குமுறைகளை, அரசியல் அடக்குமுறைகளை, தீவிரமான பொருளாதாரச் சுரண்டலை எதிர்த்து இந்தியா முழுவதும் அரசியல், பொருளாதார, பண்பாட்டுப் போர்கள் நடந்த வண்ணம் இருந்தன. அந்நிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறுவதற்கான சுதந்திரப் போராட்டத்திற்கும் இணையாகவேசமூக விடுதலைக்கான போராட்டங்கள் நடந்து வந்துள்ளன. பல சமயங்களில் பல இடங்களில் ஒன்றோடு ஒன்று முரண்பட்டும் மறுத்தும்கூட இருந்து வந்துள்ளன. இந்த இடைவெளியில்தான் ஆர்எஸ்எஸ்-பாஜக வின் தோற்றத்துக்கும் காரணமாக இருந்தது.
போராட்டம் தொடர்கிறது
நாம் வாழும் இந்த காலகட்டம், கார்ப்பரேட் இந்துத்வா பாசிச ஒடுக்குமுறை காலமாக இருந்து வருகிறது. 19,20 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற ஆகச்சிறந்த முற்போக்கு, ஜனநாயக ஆக்கபூர்வமான கூறுகளை உள்ளடக்கிய ஒரு முழுமையான முன்னேற்றத்தை நோக்கி முன்னேற வேண்டும்.
தோள் சீலைப் போராட்டம் போன்றவற்றை நினைவுகூர்வது தற்கால போராட்டங்களுக்கு உரமளிப்பதாக இருக்க வேண்டும். முற்போக்கான போராட்டங்களின் கூறுகளை தற்காலப் போராட்டங்களில் பொருத்திட வேண்டும். புதிய பிரச்சனைகளுக்கு புதிய தீர்வையும் கண்டுணர்ந்து செயல்படுத்திட வேண்டும்.
தற்கால பிரச்சினைகளை அப்படியே வைத்துக் கொண்டு கடந்தகால போராட்டங்களை நினைவு கூர்வது என்ற காரியசாத்திய அணுகுமுறை கூடாது.
சில எடுத்துக்காட்டுகளுடன் முன் செல்வது நல்லது.
மார்ச் 12 அன்று பிரதமர் நரேந்திர மோடி, அய்யா வைகுண்டருக்கு 'புகழஞ்சலி' செலுத்தி ட்வீட் செய்து இருந்தார். வைகுண்டரின் பிறந்த நாளான மார்ச் 4 அல்லது 5 அன்று ஏன் அஞ்சலி செலுத்தி இருக்கக் கூடாது? என்ற கேள்விகள் அய்யா வழியைச் சேர்ந்தவர்களிடம் எழும்பி யுள்ளன. பொன்னார் போன்றவர்கள் பிரதமருக்கு நினைவூட்டியிருக்கக் கூடாதா? என்ற கேள்வி களும் எழுந்துள்ளன. அண்ணாமலை 4ம் தேதியே அஞ்சலி செலுத்தியிருக்கும் போது ஏன் அவர் பிரதமருக்கு நினைவூட்டியிருக்கக் கூடாது? என்று கேட்கும் குரல்களையும் கேட்க முடிந்தது.
"விஷ்வ குரு" வான நரேந்திர மோடிக்கு அய்யா வைகுண்டரின் பிறந்தநாளை தெரிந்துகொள்வது ஒன்றும் பெரிய பிரச்சினை யில்லை. ஆனால், நரேந்திர மோடியும் அவரது கூட்டத்தாரும் பின்பற்றும் "வாக்கு வங்கி அரசியல்" தான் காரணம். திமுகவின் கூட்டணிக் கட்சித்தலைவர்களும் தமிழ்நாட்டின் முதலமைச்சரும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் மார்ச் 6ம் தேதி நாகர்கோவிலில் பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஒன்றை நடத்தி முடித்ததன் பின்னணியில்தான் பிரதமருக்கு நினைவூட்டப்பட்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள பெரிய ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை. பிரதமரின் ட்வீட்டைப் பார்த்தால் இதை இன்னும் எளிதாக புரிந்து கொள்ளலாம். "அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்கும் நீதி கிடைக்கும் சமூகத்தை" (தினமலர் மொழிபெயர்ப்பு), உருவாக்க பாடுபட்ட அய்யா வைகுண்டருக்கு பிரதமர் அஞ்சலி செலுத்துகிறார்.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் உதித்த வைகுண்டர், இந்து தர்மத்தில் பெண்கள் மார்பை துணி கொண்டு மறைக்க உரிமை இல்லை; ஆண்கள் மீசை, தாடி வைக்க உரிமை இல்லை என்பதைக் கண்டு கொதித்து எழுந்தவர். மேலாடை அணியுங்கள், மீசை, தாடி வையுங்கள் என்று துணிச்சலூட்டியவர். அதனால்தான் அவர் வைகுண்டர் ஆனார். அப்படிதான் அவர் வைகுண்டர். ஆனால் பிரதமரின் 'புகழஞ்சலி' யில் புகழும் இல்லை, அஞ்சலியும் இல்லை. அய்யா வழி மக்களை ஏமாற்றும் முயற்சி மட்டுமே இருக்கிறது. அனைவருக்கும் நீதி பற்றி பிரதமர் ட்வீட் செய்திருக்கிறார். ஆனால் அய்யாவழி மக்களுக்கு நீதி வழங்க குமரி மாவட்டத்தின் பாஜக வினர் மறுக்கிறார்கள்!? அய்யா வழியினர், ஒலி பெருக்கி வைத்து அய்யா புகழ் பரப்புவதை காவல்துறையை வைத்து தடுத்தனர். ஆனால் அண்ணா மலையும் நரேந்திர மோடியும் வைகுண்டருக்கு புகழஞ்சலி செலுத்துவதாக நாடகமாடுகிறார்கள். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மட்டும் அய்யா வழியினரது வழிபாட்டுச் சுதந்திரத்துக்காக குரல் கொடுத்தது. இந்துக்களின் ஒரு பிரிவினர் தான் அய்யா வழியினர் என்று கூறும் பாஜகவினர், அவர்கள் கூறும் பெரும்பான்மை இந்துகளுக்குள்ள வழிபாட்டு உரிமையை ஏன் அய்யாவழி யிருக்கும் மறுக்க வேண்டும்? ஒரு பக்கம் அய்யா வழியினர் மத்தியில் "நீங்களும் இந்துக்கள்தான் என்று கூறி அய்யா வழியினர் மத்தியில் ஊடுருவ முயலும் ஆர்எஸ்எஸ் பாஜகவினர், மற்றொரு பக்கம் இவர்களுக்கு எதிராக (அசல்) இந்துக்களை உசுப்பி விட்டு ஓட்டு ஆதாயம் அடைய விரும்புகின்றனர். இந்த வாக்கு வங்கி அரசியல்தான், பிரதமர் தாமதமாக 'புகழஞ்சலி' செலுத்தியதற்கு காரணம். ஆனால், தமிழ்நாட்டின் பாஜக வினரோ, பிரதமரோ தோள் சீலைப் போராட்டம் பற்றி எதுவும் பேசவில்லை. அன்றைய இந்து சனாதனவாதிகள், மார்பை துணி கொண்டு மறைக்கக் கூடாது என்றார்கள். 21ம் நூற்றாண்டு சனாதனவாதிகள் முகத்தை துணி கொண்டு மறைக்கக் கூடாது என்று வெறி யாட்டம் நடத்தினார்கள். எனவே அவர்களிட மிருந்து தோள் சீலை அறப் போராட்டத்தின் சமத்துவத்தை, சமூக நீதியை, சுயமரியாதையை நினைவுகூரும் முற்போக்குத் தன்மையை சற்றும் எதிர்பார்க்க முடியாது, எதிர்பார்க்கக் கூடாது.
தோள் சீலைப் போராட்டம் சமூக நீதிக்கான போராட்டம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் மிகச் சரியாகவே அழுத்தந்திருத்தமாக குறிப்பிட்டார். அதை வழி மொழியும் விதமாக மேடையிலிருந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் பேசினார். இந்துத்வகார்ப்பரேட் மோடி ஆட்சிக்கெதிராக சமூக நீதி, சமத்துவ, சுயமரியாதை போராட்ட மரபுகளை நினைவு கூர்ந்து புதிய தலைமுறையினரை அணி திரட்டவேண்டியது மிகவும் அவசியமானது. வைக்கம் போராட்டத்தின் நூறாவது ஆண்டைக் கொண்டாட கேரளம் வருமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தார். அவரும் அழைப்பை ஏற்று ஏப்ரல் 1 அன்று கேரளம் சென்றிருக்கிறார். நல்லது.
200வது ஆண்டைக் கண்டிருக்கும் தோள் சீலைப் போராட்டமும் 100 வது ஆண்டைக் கண்டிருக்கும் வைக்கம் கோவில் நுழைவுப் போராட்டமும் தமிழ்நாடு, கேரளாவை தழுவியவை. ஆனால், இவற்றில் உள்ள அனுபவங்கள், வெற்றிகள் இந்த இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் உரியவையல்ல. இவ்விரு மாநிலங்களுக்குள் மட்டும் நிறுத்திக் கொள்ளப்பட வேண்டியவை அல்ல. அகில இந்திய அளவில் எடுத்துச் செல்லப் வேண்டியவை.
ஆனால் அவை காரியசாத்திய அடிப்படையில் செய்யப்படக் கூடாது.
மார்ச் 6 தோள் சீலைப் போராட்டத்தின் 200வது ஆண்டு கொண்டாட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அன்று காலையில் கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்து விட்டு, மிகப்பெரும் பெருமையுடன் தற்படமும் எடுத்துக் கொண்டு நாகர்கோவில் சென்றிருந்தார்.
கீழடி நகர நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்கள் தமிழர்கள், சிந்து சமவெளி நாகரிகத்துக்கு சற்றும் குறையாதவர்கள், சங்ககாலத் தமிழர்களின் வாரிசு கள் என்று கடந்தகால புகழ்மாலைகளைச் சூட்டிக் கொள்வதே போதுமானதா?
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. இந்தியாவிற்கே முன்னோடியான சட்டமது. இதற்குப் பின்னால் பெரியாரின், தமிழக முற்போக்கு மக்களின் நீண்ட நெடிய போராட்டம் இருக்கிறது. ஆனால் தமிழ் நாட்டிற்கு முன்பே செயல்படுத்திய மாநிலம் என்ற பெருமையை கேரளம் தட்டிச் சென்று விட்டது. ஏன் தமிழ்நாடு 2021 வரை காத்திருக்க வேண்டி வந்தது? அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கிய கேரளம், அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் சென்று வழிபடலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து செயல்படுத்தப் போவதாக கூறிய கேரள இடது முன்னணி அரசாங்கமும் மார்க்சிஸ்ட் கட்சியும் பிறகு பின்வாங்கி விட்டதைக் கண்டு நாடு முழுவதுமுள்ள முற்போக்கு அமைப்புகளும் பெண்ணுரிமை அமைப்புகளும் கடும் ஏமாற்றமடைந்து போயின. தமிழ்நாட்டில், பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்று திமுக ஆட்சியின் போது சட்டம் கொண்டு வரப்பட்டது. இதுவரை, எந்த அளவு பெண்கள் சொத்துரிமை பெற்றுள்ளனர்? என்ற புள்ளி விவரத்தை இந்த அரசால், திட்டக் குழுவால் வெளியிடமுடியுமா? வெளியிடுவது மிகவும் அவசியம்.
வைக்கம் விழாவிற்கு புறப்படும் முன் ஓராண்டு முழுவதும் வைக்கம் வெற்றி விழா கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் சட்டப் பேரவையில் அறிவித்திருக்கிறார். எதிர்பார்த்தது தான். ஆனால் இந்த கொண்டாட்டத்தில் சொல்லப்பட உள்ள செய்திகள் என்ன?
தமிழ்நாட்டில், தலித்துகள் கோவில்களில் சமத்துவமாக வழிபடும் உரிமை மறுக்கப் படுகிறது. உஞ்சனை தொடங்கி மாவட்டம் தோறும் தலித்துகளின் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. மிக அண்மையில், சேலம் மாவட்டத்தில், திமுக பிரமுகர் ஒருவர் கோவிலுக்குள் சென்று கும்பிட்ட தலித் இளைஞர் ஒருவரை அநாகரிகமாக நடத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது. புவனகிரி அருகில் திருவிழா நடத்தி சாமி ஊர்வலம் நடத்திய தலித் இளைஞர்கள் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப் பட்டுள்ளனர். அந்தந்த பகுதியில் உள்ள ஆதிக்க சாதியினர், தலித்துகளின் வழிபாட்டு உரிமையை தடுக்கின்றனர். அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு என்ற பேரில் கோவில்களை பூட்டிவிடுகின்றனர் நம்பூதிரி பார்ப்பனர்களின் சனாதன ஆதிக்கத்தை உடைத்தெறிந்தார் பெரியார். ஆனால், தமிழ்நாட்டில் இடைத்தட்டு சாதியினர் ஆதிக் கத்தை ஏன் இன்னும் உடைக்க முடியவில்லை? உஞ்சனையில் இந்த ஆதிக்கத்தை உடைக்க முயன்ற ஐவர் படுகொலை செய்யப்பட்டனர். தேவகோட்டை அருகிலுள்ள சிறுவாச்சூர் கோவிலில் தலித்துகளை வெற்றிகரமாக வழிபட வைத்தார் என்பதற்காக மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் தலைவர் மாடக்கோட்டை தோழர் சுப்பு படுகொலை செய்யப்பட்டார்.
சுடுகாட்டுக்கு தலித்துகள் பிணத்தைக் கொண்டு செல்ல முடியாத அவலநிலை தமிழ்நாடு முழுவதும் தொடர்கிறது. கல்விச் சிறந்த தமிழ்நாட்டில் பள்ளிகளில் சாதி கோலோச்சுகிறது!?
பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி செல்ல முடிகிறது. ரூ.1000 உரிமைத் தொகை கூட பெற முடிகிறது. ஆனால், பெண்கள் அச்சமின்றி கல்விக் கூடங்களுக்கு சென்று திரும்ப முடிகிறதா? அன்று பொள்ளாச்சி. இன்று கலாஷேத்ரா வரை எண்ணற்ற கொடூர சம்பவங்கள். அதிமுக ஆட்சியின் பொள்ளாச்சி குற்றவாளிகள் திமுக ஆட்சியில் இன்னும் ஏன் தண்டிக்கப்படவில்லை? கனியாமூர் பள்ளி நிர்வாகத்தின் பக்கம் நீதிமன்றம், காவல்துறை நிற்கிறது. சிறீமதி பக்கம் யார் நிற்பது? "குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்" என்று முதலமைச்சர் சிறீமதி பெற்றோருக்கு கொடுத்த வாக்குறுதியை யார் காப்பாற்றுவது?
பெரியார் வைக்கம் வீரர் என்ற ஒற்றைப் பரிமாணம் கொண்ட தலைவரல்ல. பார்ப்பனிய சனாதன எதிர்ப்புத் தலைவர். பெண் விடுதலையை மிகமிக முன்னோக்கி சிந்தித்தவர். சாதி ஒழிப்பு தத்துவத்தை வழங்கிய அண்ணல் அம்பேத்கரோடு கொள்கைபூர்வமான நட்பு கொண்டவர்.
எனவே, தோள் சீலைப் போராட்டத்தை நினைவு கூரும் போது, வைக்கம் கோவில் நுழைவு போராட்டத்தை நினைவு கூரும் போது, இன்றைய ஏற்றத் தாழ்வுகள் களையப்படுவதற்கு, தலித்துகள், பெண்கள் மீதான இழிவுகள் அழித்து ஒழிக்கப்படுவதற்கு பயன்பட வேண்டும்.
மாறாக, மலம் கலந்த வேங்கை வயல் தண்ணீர் தொட்டியை மூடுவதற்கு பயன்பட்டு விடக்கூடாது.
வைக்கம் செல்லும் முதல்வரை, அண்ணா வாக செல்லுங்கள், கலைஞராக பேசுங்கள், பெரியாரக திரும்பி வாருங்கள் என்று அமைச்சர் அன்பில் பொய்யாமொழி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். ஏன் முதலாவதாக சொல்ல வேண்டிய பெரியாரை மூன்றாவதாகச் சொல்லியிருக்கிறார்? அவரே விளக்கட்டும்.
வைக்கம் சென்று திரும்பும் முதல்வர் சமூகநீதி மேடையை அகில இந்திய அளவில் விரிவுபடுத்த ஒரு இணையவழி கூட்டத்தை நடத்துகிறார். நல்லது. ஆனால், சமூகநீதி குறித்து நமக்கு சில கோரிக்கைகள் உள்ளன.
பெண்கள் சொத்துரிமை பெற்றது குறித்து ஒரு ஆய்வறிக்கை வெளியிட வேண்டும். பொள்ளாச்சி தொடங்கி கலாஷேத்ரா வரை பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் குறுகிய காலத்துக்குள் தண்டிக்கப்பட வேண்டும்.
சிறீமதி மர்ம மரணத்துக்கு நீதி வேண்டும். முதலமைச்சர் வாக்குறுதி காப்பாற்றப்பட வேண்டும்.
சாதி ஒழிப்புக்கு முதல்படியாக, பள்ளிகளில் சாதி ஒழிக்கப்பட்டு சகோதரத்துவமும் நட்பும் செழிக்கும் சித்திரச் சோலைகளாக்கிட வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் சமத்துவபுரம் இருக்கும்போது சமத்துவ சுடுகாடு, சமத்துவ மேல்நிலை தண்ணீர் தொட்டி இருக்க முடியாதா? முடியும். கொண்டுவர வேண்டும்.
வேங்கை வயல் என்ற பெயரையே உச்சரிக்காவிட்டாலும் வேங்கைவயல் குற்றவாளிகளை இனியும் தாமதிக்காமல் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.
தோள் சீலைப் போராட்டம், வைக்கம் போராட்டம் சமூக நீதிப் போராட்டம், சமத்துவத்துக்கான போராட்டம் என்றால், சமூக நீதிப் போராட்டம், சமத்துவத்துக்கான போராட்டம் தொடர்கிறது என்பது உண்மைதானே?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)