தோழர் டாக்டர் லக்ஷ்மி நாராயணா,
செவ்வணக்கம்! ✊🏾
மனித உரிமைகள் மற்றும் சாதி எதிர்ப்புச் செயற்பாட்டாளரும் கர்நாடக சிபிஐஎம்எல் கட்சியின் நீண்டகாலத் தலைவர்களில் ஒருவருமான டாக்டர் வி லக்ஷ்மி நாராயணா அவர்கள் 22 ஏப்ரல் 2024 அன்று இரவு 11.30 மணியளவில் மைசூரில் காலமானார். தோழர் லக்ஷ்மி நாராயணா ஒரு தோல் மருத்துவர்.
நக்சல்பாரி விவசாயிகள் எழுச்சியின் தாக்கம் கர்நாடகாவில் எதிரொலித்த பின்னணியில், தோழர் லக்ஷ்மி நாராயணாவின் அரசியல் பயணம் துவங்கியது. கர்நாடகாவில் மார்க்சிய -லெனினிய இயக்கத்தின் முதுபெரும் தோழரான லக்ஷ்மி நாராயணா, சிவில் உரிமைகள் மற்றும் சமூக நீதியின், சாதி எதிர்ப்பு நீரோட்டத்தின் தீவிர மார்க்சியப் போராளி. அவர் மக்கள் சிவில் உரிமை கழகம், இந்திய மக்கள் முன்னணி, இந்திய மார்க்சிய ஆய்வுக் கழகம், அகில இந்திய மக்கள் மேடை (AIPF) ஆகியவற்றுடன் நெருக்கமாக இணைந்து, தீவிரமாக பணியாற்றி வந்தார்.
நாட்டில் கம்யூனிஸ்ட் மற்றும் ஜனநாயக இயக்கம் எதிர்கொள்ளும் தத்துவார்த்த, சித்தாந்த பிரச்சனைகள் குறித்து பல்வேறு விவாத அமர்வுகளை மைசூரில் அவர் தொடர்ச்சியாக நடத்தி வந்தார். சமூக மாற்றத்திற்கான மார்க்சியக் கருத்துக்களைப் பரப்புவதிலும் இளம் கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர்களுக்கு மார்க்சியக் கல்வியை வழங்குவதிலும் அவர் ஆர்வமாகச் செயல்பட்டார். சிபிஐஎம்எல் விடுதலையின் கர்நாடக மாநிலக் குழுவின் நீண்டகால உறுப்பினரான தோழர் லக்ஷ்மிநாராயணா, கட்சிப் பத்திரிகையான கன்னடா லிபரேசன் ஆசிரியர் குழுவின் உறுப்பினராக முக்கிய பங்காற்றி வந்தார். கட்சியின் மத்திய கல்வித் துறை உறுப்பினராகவும் இருந்தார்.
தோழர் லக்ஷ்மிநாராயணாவின் இணையர், தோழர் ரதிராவ், (பெண்கள் விடுதலை இயக்கத்தின் நன்கு அறியப்பட்ட செயற்பாட்டாளர், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் தேசியத் தலைவர்) அவர்களோடு மைசூரில் வாழ்ந்து வந்தார். அவரது ஒரே மகன் அபூர்வா ஜெர்மனியில் வசிக்கிறார்.
தோழர் லக்ஷ்மி நாராயணா அவர்களுக்கு சிபிஐஎம்எல் கட்சி மத்தியக் குழு தனது மதிப்புக்குரிய அஞ்சலியை செலுத்துவதுடன், தோழர் ரதிராவ் அவர்களுக்கும், தோழர் லக்ஷ்மிநாராயணாவின் அன்புக்குரியவர்கள், தோழர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.