திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், வடக்கு தாதநாயக்கன் பட்டி கிராமத்தில், பழனி வடக்கு மலைத் தொடர் அடிவாரத்தில், பல்லுயிர் பெருக்கம் நிறைந்த அமராவாதி வனப்பகுதிக்கு அருகில், 250 ஏக்கர் பரப்பளவில், வருடத்திற்கு 2,191 டன் வெடி பொருட்களுக்கான மூலப்பொருட்களைத் தயாரிக்கும் சுவா எக்ஸ்ப்ளோசிவ்ஸ் என்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனம் ஆலையைத் துவக்க பல்வேறு அரசு முகாமைகள் அனுமதி அளித்துள்ளன. தனியார் கார்ப்பரேட் ஆலை அமைக்கத் திட்டமிட்டுள்ள பகுதிக்கு மிக அருகில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஐவர் மலை, சமணர் குகைகள், வரலாற்றுச் சின்னங்கள், அகழ்வாய்வு தளங்களும் உள்ளன. ஆலை அமைவிடத்திலிருந்து ஐவர்மலை புதூர், வடக்குத் தாதநாயக்கன்பட்டி கிராமம் உள்ளிட்ட 14க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் 5 கி.மீ தொலைவுக்குள் அமைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் விவசாயத்தையே, பிரதான தொழிலாக நம்பி வாழ்ந்து வருகின்றனர். எனவே, விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் இருந்து பலத்த எதிர்ப்பு உருவாகியுள்ளது.
இந்த நச்சுத்தன்மை வாய்ந்த வெடி மருந்து ஆலை தொடங்கப் பட்டால், காற்று, நீர், மண் வளம் கடுமையாகப் பாதிக்கப்படும். வெடிமருந்து திடக்கழிவு, சுத்திகரிப்பு நிலைய சகதி, மற்றும் ஆயில் கழிவுகள் நிலத்தடி நீரை ரசாயனத் தன்மைமிக்கதாக மாற்றி, முப்போகம் நெல் விளையும் பூமிகள் உள்ளிட்ட, சுமார் 20,000 ஏக்கர் விவசாய நிலங்களை பாழ்படுத்தி வாழ்வாதாரத்தை அழித்துவிடும். மேலும், வெளிப்படும் சல்ஃபர் டை ஆக்சைடு (so2,), நைட்ரஜன் ஆக்சைடு(NOx,), கார்பன் மோனாக்சைடு(CO) போன்ற நச்சுத்தன்மையுள்ள வாயுக்களின் தாக்கத்தால், அனைத்து வகையான உயிர்ச்சூழலும் அழிக்கப்படும் அருகாமை கிராமங்கள் மட்டுமன்றி தொலை தூர கிராமங்கள் மற்றும் பழனி நகரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆலைக்கு நாள் ஒன்றுக்கு தேவைப்படும் 75 ஆயிரம் லிட்டர் தண்ணீரால் நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்படும். ஆலையின் மாசடைந்த நீர் சுற்றியுள்ள கிணறுகள் அனைத்தையும் நஞ்சாக்கிவிடும். வெடி மருந்து ஆலைக்கு தேவைப்படும் மூலப்பொருட்கள் மற்றும் ஆலையில் தயாரித்து சேமித்து வைக்கப்படும் டன் கணக்கான வெடி மருந்து பொருட்கள் பேராபத்தை விளைவிக்கும் தன்மை மிக்கவையாகும். "நேரடியாக 120 பேரும் மறைமுகமாக 130 பேரும், பணியமர்த்தப்படுவர்" சொல்லப்படும் அற்பமான வேலை வாய்ப்புக்கு, ஒரு இலட்சம் மக்கள் வாழ் வாதாரம்,உயிர் பறிபோகும் அபாயம் உள்ளது.
மேலும், பழனி மலை அடிவாரத்தில் இந்த ஆலை அமைய இருப்பதால், வன விலங்குகள் உள்ளிட்ட பல்லுயிர்ச் சூழல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். வெற்று மோசடி அறிக்கைகளையும், கையூட்டுகளையும் கொடுத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு நிறை வேற்ற வேண்டிய நிபந்தனைகள் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கு என சில லட்ச ரூபாய்கள் செலவழியும் சில கண்துடைப்புத் திட்டங்களைத் காட்டி பல்வேறு அரசாங்க முகாமைகளிடம் இருந்து ஒப்புதல்கள் பெறப்பட்டுள்ளன.
எக்ஸ்ப்ளோசிவ்ஸ் கார்ப்பரேட் நிறுவனம், பலநூறு கோடி லாபம் பார்க்க, மண்ணையும் மக்களையும் நீரையும் காற்றையும் பல்லுயிர் சூழலையும், தொல்லியல் வரலாற்றுச்சின்னங்களையும் ஒழித்துக் கட்ட அனுமதிக்க மாட்டோம்" என கடந்த ஒருமாத காலமாக, 1) அ.கலையமுத்தூர் 2) ஆண்டிபட்டி 3) ஆர் அய்யம்பாளையம் 3) சின்னக்கலையம் புத்தூர் 4) கரடி கூட்டம் 6) காவலப்பட்டி 7) கோதை மங்கலம் 8) மேலக்கோட்டை 9) பாப்பம்பட்டி 10) பெரியம்மாபட்டி 11) பெத்தநாயக்கன்பட்டி 12) சித்திரை குலம் 13) தாதநாயக்கன்பட்டி 14) தாமரைக்குளம் ஆகிய ஊராட்சிகளில் கிராம மட்ட எதிர்ப்புக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இகக(மாலெ) மாநிலக்குழு உறுப்பினரும் அகில இந்திய விவசாயிகள் மகாசபை தேசிய செயற்குழு உறுப்பினருமான தோழர் ஜெகதீஸ்குமார் ஒருங்கிணைப்பில், பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகள் அணிதிரண்டு தொடர் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி 26, குடியரசு நாள் அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில், 14 ஊராட்சிகளில் இருந்து, சுவா வெடிமருந்து தொழிற்சாலை வேண்டாம்! என்ற தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)