பீகார் தொழிலாளர் மற்றும் பிற வட மாநிலத் தொழிலாளர்கள் மீதான தாக்குதல் குறித்த போலி செய்திகள் கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களில் வெள்ளமெனப் பெருகி ஓடியது. ஹோலி பண்டிகையைக் கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த புலம் பெயர்ந்த தொழிலாளரை, அவர்கள் மீதான தாக்குதல் காரணமாக அவர்கள் வெளியேறுகிறார்கள் என்று கெடுநோக்குடன் தவறாகச் சித்தரிக்கப்பட்டது. இந்த போலிச் செய்தியை சரிபார்க்காமலே பல்வேறு ஊடகங்க ளும் பத்திரிகைகளும் எடுத்துக் கொண்டு செய்தி வெளியிட்டன. உதாரணத்திற்கு டைனிக் பாஸ்கர் என்ற பத்திரிகை, தமிழ்நாட்டில் 15 பீகார் தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் புலம்பெயர்ந்த பீகார் தொழிலாளர் தலிபான் வகைப்பட்ட தாக்குதலை சந்திப்பதாகவும் செய்தி வெளியிட்டது.
புலம் பெயர்ந்த தொழிலாளர் தாக்கப்படுவதாக வேண்டுமென்றே போலி காணொளிக் காட்சிகளை வெளியிட்டு, அவர்களிடையே அச்சத்தையும், பீதியையும் பரப்புபவர்கள் மீதும், மக்களிடையே மொழி சார்ந்த மோதலையும், பிளவையும் தூண்டிவிடுபவர்கள் மீதும், கடும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாங்கள் கோருகிறோம்.
தமிழ் நாட்டு மக்கள் மீது வெறுப்பை விதைப்பதன் மூலம் அரசியல் ஆதாய அறுவடை தேடும் சங் பரிவாரின் கேடுகெட்ட நிலையை நாங்கள் கண்டிக்கிறோம். பொதுமுடக்க காலத்தின்போது, புலம்பெயர்ந்த தொழிலாளர் கொடூரமான கதவடைப்பால் பாதிக்கப்பட்டனர். பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்தே தங்கள் வீடுகளுக்கு சென்று சேர வேண்டியிருந்தது. சங் படை மீண்டும் ஒரு முறை, தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக,புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பயன்படுத்த பார்க்கிறது.
தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்க்கையை சூனியமாக்கும் நவ தாராளவாத பொருளாதாரக் கொள்கையை பின்பற்றும் மோடி அரசாங்கத்தின் இடையறாத தாக்குதலுக்கு நாட்டின் உழைக்கும் மக்கள் ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள். மாறி மாறி நிகழும் வறட்சி, வெள்ளம் காரணமாகவும், விவசாய நெருக்கடியாலும், வேலைக்கான வாய்ப்புகள் சுருங்கி வருவதாலும், கிராமப்புர இந்தியா கடும் வேலை வாய்ப்பு நெருக்கடியை சந்தித்து வருகிறது. பெருமளவில் சொந்த ஊரிலிருந்து வெளியேறுவது நடைபெற்று வருகிறது. முதியோரும் பெண்களும் வேலை இழந்து தவிக்கின்றனர். இது போன்ற சூழலில் கிராமப்புர வேலை உறுதித் திட்டம் தான் கிராமப்புர வேலைவாய்ப்புக்கான ஒரே ஆதாரமாகும். ஆனால், மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்தத் திட்டத்தை அழிந்து போகும் படி கிடப்பில் போட்டு விட்டது. பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்கான நிதியை மோடி அரசாங்கம் 33% குறைத்து விட்ட காரணத்தினால், வேலை கோரும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள், வேலை மறுக்கப்பட்டு திரும்ப அனுப்பப்படுகின்றனர். ஏற்கனவே செய்து முடித்த பணிக்கான ஊதியம் குறித்த காலத்தில் தொழிலாளருக்கு வழங்கப்படுவதில்லை என்பதால் கிராமப்புர வேலை உத்தரவாதத் திட்டத்தின் நோக்கமே தோல்விக்கு உள்ளாக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பட்டினி ஊதியத்திற்கு மேல் சிறிதளவு கூட கூடுதல் தொகை வழங்கப்படுவதில்லை என்பதால் திட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு முறையான வாழ்வாதாரத்தை அது மறுத்து வருகிறது.
அதே நேரத்தில், நகர்ப்புறங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளரது மோசமான வாழ்நிலையை மாற்ற நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அவர்களின் முறைசாரா உழைப்பு,12 மணி நேரமாக நீளும் வேலை நாள், சம்பளத்துடன் கூடிய விடுமுறையின்மை, வருங்கால வைப்பு நிதியும், தொழிலாளர் ஈட்டுறுதியும் இன்மை, மோசமான வாழ்நிலைமை, கட்டற்று பெருகுகிற ஊதிய திருட்டு, தொழிலாளர் சட்டப் பாதுகாப்பு இல்லாமை ஆகியவற்றை மோடி அரசாங்கம் தன்னுடைய அரசியல் விளையாட்டுக்குத் தீனியாகப் பயன்படுத்திக்கொள்கிறது.
இந்த அப்பட்டமான அயலார் வெறுப்பு மற்றும் பிரிவினைச் சதியை நாட்டின் உழைக்கும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என அனைத்திந்திய விவசாய கிராமப்புரத் தொழிலாளர் சங்கமும் (அயர்லா) ஏஐசிசிடியுவும் அறைகூவல் விடுக்கிறது.
கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறது.
1. புலம்பெயர்ந்த தொழிலாளர் பாதுகாப்பு, கவுரவம், வாழ்க்கைக்கான கூலி ஆகியவற்றை உத்தரவாதம் செய்யும் வகையில் மத்திய சட்டம் இயற்று! இது போலவே, மாநிலங்களும் கூட, தங்கள் மாநிலங்களில் உள்ள, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு, திட்டங்களை உருவாக்க வேண்டும்.
2. தேசிய ஊரக வேலை உத்திரவாத சட்டத்தை வலுப்படுத்திடு! 200 நாட்கள் வேலை, நாட்கூலியை ரூ 600 ஆக உயர்த்திடு. நிலுவை ஊதியத் தொகையை உடனடியாக வழங்கிடு !உள்ளூரிலேயே, செயலூக்கமிக்க வகையில், வேலை அளிப்பதை உத்தரவாதம் செய்!
3. நகர்புற வேலை உறுதிச் சட்டத்தை இயற்று.
- ஏஅய்சிசிடியு -அவிகிதொச தமிழ்நாடு