இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 1860, குற்றவியில் நடைமுறைச் சட்டம் (Cr.PC)1898, இந்திய சாட்சிய சட்டம் (IEA) 1872 ஆகிய முப்பெரும் சட்டங்களும் ஆங்கிலேயர்கள் காலத்தில் இயற்றப்பட்டவை, அதனால் அவைகள் மாற்றப்பட வேண்டும் என்று காரணம் சொல்லி புதிதாக மூன்று சட்ட மதோதாக்களை கடந்த 11.8.2023 அன்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். ஆங்கிலேயர் காலத்து பழைய சட்டங்களை புதிதாக காலத்திற்கு ஏற்ற சட்டமாக கொண்டு வரவே இந்த புதிய மசோதாக்கள் என்று அமித்ஷாவும் ஆர்எஸ்எஸ் சங்கிகளும் கூறுகிறார்கள். இந்த சட்ட மசோதாக்களை தாக்கல் செய்தபோது, 'இந்த மூன்று சட்டங்களும் ஆங்கிலேயர் ஆட்சியைப் பலப்படுத்தவும் பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டது, அவர்களுடைய நோக்கம் தண்டிப்பதுதானேயொழிய நீதி வழங்குவது அல்ல, இந்த இரண்டு அடிப்படை விசயங் களிலும் நாம் மாற்றங்கள் கொண்டு வரப் போகிறோம்' என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். இது ஆடு நனையிதுன்னு ஓநாய் அழுத கதைதான். விடுதலைப் போராட் டத்தில் பங்கெடுக்காத, மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து ஆங்கிலேயர்களுக்கு சேவகம் செய்த சாவர்க்கர் வாரிசுகள் ஆங்கிலேயர் காலத்து சட்டத்தினை மாற்றப் போவதாகச் சொல் கிறார்கள். இவர்களின் நோக்கம், இருக்கின்ற ஜனநாயக உரிமைகளை முற்றிலும் ஒழித்து விட்டு சர்வாதிகாரத்தை சட்டப்படியாக மாற்றுவதேயாகும். 

தேசத் துரோகச் சட்டம்

இந்திய தண்டனைச் சட்டத்தில் தேசத் துரோகச் சட்டப் பிரிவு 124ஏ நீக்கப்பட்டுவிட்டது என்று அமித்ஷா கூறுகிறார். உண்மையில், சட்டப்பிரிவு 124ஏ-ஐ நீக்கிவிட்டு, அதில் இருந்த கொடூர அம்சங்களை பிரிவு 150ல் கொண்டு வந்துள்ளார்கள். அதில் இருந்த 'தேசத் துரோகம்' என்பதை மாற்றிவிட்டு, அதற்குப் பதிலாக, 'பிரிவினைவாதம், ஆயுத கிளர்ச்சி, நாசகாரச் செயல்கள் மற்றும் இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து விளைவித்தல்' என்று சேர்க்கப் பட்டுள்ளது. எதிர்ப்புக் குரலே சுத்தமாக இருக்கக் கூடாது என்பதுதான் இதன் நோக்கம். அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு, திட்டங்களுக்கு எதிராகப் பேசுபவர்களை, இஸ்லாமியர்களை, கிறிஸ்தவர்களை, பழங்குடி மக்களை, பட்டி யலின மக்களை நேரடியாகவே நாட்டின் இறை யாண்மைக்கு, ஒற்றுமைக்கு, ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைவித்தார்கள் என்று எளிதாகக் கைது செய்து சிறையிலடைக்கவே இந்த மாற்றுச் சொல்லாடல். 

பெண்களுக்கு பாதுகாப்பு

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை புதிய சட்டங்களின் முன் அத்தியாயங்களில் கொண்டு வந்துள்ளோம், புதிய சட்டங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்று பெருமை பேசுகிறார்கள். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று கூறும் புதிய மசோதா, 18 வயது பூர்த்தி யடைந்த சொந்த மனைவியுடன் (கட்டாய) உடலுறவு கொண்டால் அது பாலியல் வன் புணர்வு ஆகாது என்று கூறுகிறது. மதம் கடந்து, சாதி மறுத்து காதலிப்பதை, திருமணம் செய்து கொள்வதைத் தடுக்கவும் மனைவி என்ற ஒரே காரணத்திற்காக கணவனின் வன்முறைச் செயல்களை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்கிற பெண்களை ஒரு பொருளாக, கணவனின் உடமையாகப் பார்க்கும் சங்கிகளின் மனு தர்மத்தை சட்டமாக்கவுமே இந்த மாற்றங்கள். பெண்களுக்கு எதிரான குற்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை கட்டாயமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அது எந்த அளவிற்கு காவல் துறையால், ஆட்சியாளர்களால் நடை முறைப்படுத்தப்படும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. வெறுமனே தண்டனையின் அளவைக் கூட்டுவதன் மூலம் குற்றங்கள் குறைந்து விடுமா?. 

குழப்பும் சட்டப் பிரிவுகள் ஒடுக்கும் நடைமுறைகள்

ஏற்கனவே கூறியதுபோல், தேசத் துரோகச் சட்டப் பிரிவு 124ஏ நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக பிரிவு 150 சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்திய தண்டனைச் சட்டத்தில் மொத்தமுள்ள 511 பிரிவுகள் 356 ஆகக் குறைக்கப்படுகிறது. அதில் 175 பிரிவுகள் மாற்றப்படுகின்றன. 8 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டு, 22 பிரிவுகள் நீக்கப்படுகின்றன. உதாரணமாக இந்திய தண்டனைச் சட்டத்தில் கொலைக் குற்றத்திற் கான பிரிவு 302. அதை 101 மாற்றியிருக்கிறார்கள். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் உள்ள 533 பிரிவுகளில் 160 பிரிவுகள் மாற்றப்படுகின்றன. 9 புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டு 9 பழைய பிரிவுகள் நீக்கப்படுகின்றன. இந்திய சாட்சிய சட்டத்தில் உள்ள 167 பிரிவுகள், 170 ஆகிறது. 23 பிரிவுகள் மாற்றப்படுகின்றன. 1 புதிய பிரிவு சேர்க்கப்பட்டு 5 பிரிவுகள் நீக்கப்படுகின்றன. இதன் மூலம் இதுவரை இருந்த சட்டப்பிரிவுகள், அதன் விளக்கங்கள், அதன் அடிப்படையிலான நீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்தும் பயனற்றுப் போகும்.

பாரதிய நியாய சன்ஹிதாவில் அதாவது இந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிவு 109 அமைப்பாக்கப்பட்ட குற்றங்கள், பயங்கரவாதச் செயல்கள் பற்றிக் கூறுகிறது. மிரட்டியோ, அச்சுறுத்தியோ, சட்டத்திற்குப் புறம்பான வழிகளிலோ வன்முறையைப் பயன்படுத்தி பயனடையும் தனி நபர் அல்லது குழு செய்யும் குற்றங்கள் பற்றிப் பேசுகிறது. அந்த அமைப்பாக் கப்பட்ட குற்றத்திற்கு உதவுவது, சதி செய்வது, அணிதிரட்டுவது, ஆதரவளிப்பது அல்லது தயாரிப்புச் செயல்களில் ஈடுபடுவது எல்லாம் இந்த குற்றத்தில் அடங்கும் என தெளிவில்லாமல் பொத்தாம் பொதுவாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கைது செய்து சிறையிலடைக் கலாம் ஊபா (UAPA) சட்டத்தைப் பயன்படுத்தா மலேயே. இதோடு கூடவே பொதுமக்களுக்கு பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் 'சிறிய அமைப்பாக்கப்பட்ட குற்றங்கள்' (Petty Organised Crime) என்று புதிதாகச் சேர்த்துள்ளார்கள். இனி சங்கிகளை எதிர்ப்பவர்கள் எளிதாக சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளப்படுவார்கள்.

ஒவ்வொரு குற்றமும் தடயவியல் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்கிறது புதிய மசோதா. இந்தியாவில் இருக்கிற தடயவியல் அமைப்பு அதற்கேற்ற தகுதி, வசதி வாய்ப்புகளுடன் உள்ளதா? என்பது ஒரு புறம் இருக்கட்டும். வெளிப்படையாக, தாங்கள் செய்யும் குற்றங்களை வீடியோ எடுத்து வெளியிட்டுக் கொண்டிருப்பவர்கள் மீது இவர்கள் என்ன நடவடிக்கை எடுத்துவிட்டார் கள்? மணிப்பூரில் இரண்டு பழங்குடிப் பெண்களை ஆடையில்லாமல் அணிவகுப்பு நடத்தியவர்கள் மீது தற்போது இருக்கக் கூடிய சட்டப் பிரிவுகள் படியேகூட நடவடிக்கை எடுக்க வில்லை. மாறாக குற்றவாளிகளான சங்கிகளைப் பாதுகாத்தன பாஜக அரசும் காவல்துறையும். மல்யுத்த வீராங்கனைகளின் வெளிப்படையான வாக்குமூலங்களை கண்டு கொள்ளாமல் குற்றவாளியான பிரிஜ்பூஷனை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று இப்போது இருப்பதை, நீதிமன்றத்தின் அனுமதியுடன் இன்னொரு 90 நாட்களுக்கு மேல் 120 நாட்களுக்கும் அதற்கு மேலும் நீட்டித்துக் கொள்ளலாம் என்கிறது புதிய மசோதா. அடுத்து கைது செய்யப்பட்ட ஒருவரை தற்போது 15 நாட்கள் வரை மட்டுமே காவலில் வைக்கும் நடைமுறையை மாற்றி 60 முதல் 90 நாட்கள் வரை காவலில் வைக்க வழி செய்கிறது. இப்போதே விசாரணையே இன்றி பல ஆண்டுகளாக சிறையில் வாடிக் கொண்டி ருக்கிறார்கள் பலர். 

இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு

மேலும் ஆங்கிலேயர் காலத்து சட்டங்களை மாற்றுவதாகச் சொல்லிக் கொண்டு சட்டங்களின் பெயர்களை சமஸ்கிருதத்திலும் இந்தியிலும் மாற்றியிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, 'இந்தியா' என்பதை பாரத் அல்லது பாரதிய என்று மாற்றியுள்ளார்கள். இந்திய தண்டனை சட்டத்தை பாரதிய நியாய சன்ஹிதா என்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை இந்திய நகரிக் சுரக்ஷ சன்ஹிதா என்றும் இந்திய சாட்சிய சட்டத்தை இந்திய சக்ஷயா என்றும் பெயரிட் டுள்ளார்கள். எதிர்க்கட்சிகளின் இந்தியா’ கூட்டணி மோடி-ஷாவுக்கு எரிச்சல் ஊட்டுகிறது போலும்.

உண்மையில், இந்தியாவின் பெயரை பாரத் என்றும், ஒரே நாடு, ஒரே மொழி, இந்தி மொழி என்றும் மாற்றும் நாட்டின் பன்முகத் தன்மையை ஒழித்துக் கட்டும் சங்கிகள் திட்டம்தான் இதன் பின்னால் உள்ளது. இந்தியை எல்லா மாநிலங் களிலும் பயிற்றுவிக்க வேண்டும் என்று அமித்ஷா தொடர்ந்து கூறி வருகிறார். பன் மொழி, பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் திட்டமிட்டு இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே எல்லாத் திட்டங்களுக்கும் சட்டங் களுக்கும் பெயர்கள் மோடி அரசால் மாற்றப் பட்டுவருகிறது.

நிர்மூலமாக்கப்படும் நீதித்துறை

இந்த மசோதாக்கள் சட்டமாக்கப்பட்டால், பாசிச சர்வாதிகாரம் தலைவரித்தாடும். நீதிபதிகள் ஆட்சியாளர்களின் கைப் பொம்மைகளாக (இப்போதே அப்படித்தான் இருக்கிறது என்றாலும்) முற்றிலுமாக சட்டப்படியே மாற்றப் பட்டுவிடுவர். நீதிக்காகவும் ஜனநாயகத்திற் காகவும் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சமுதாயத்தை வலுவிழக்கச் செய்வதே ச் சட்டத்தின் அடிப்படை நோக்கம். இந்த புதிய மசோதாக்கள் காவல்துறைக்கு அதிக அதிகாரங் களை வழங்குகிறது. எந்த காவல் நிலையத்திலும் மக்கள் புகார் அளிக்கலாம் என்று புதிய சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளதாகக் கூறுகி றார்கள். இது ஏற்கனவே உள்ளது தான் என்றாலும் எந்தக் காவல் நிலையத்திலும் இதை கடைபிடிப்பது இல்லை. இனி சங்கிகள் தங்களுக்கு எதிரானவர்கள் மீது பொய்ப் புகார் கொடுப்பதற்கு இதைப் பயன்படுத்துவார்கள்.

ஏற்கனவே நேரடி நீதிமன்ற நடவடிக் கைக்குப் பதிலாக மெய்நிகர் (காணொலி) நீதிமன்றம் என்பதும் வழக்குகளை கணினி மூலம் இ-பைலிங் முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதும் அமலுக்கு வந்து கொண்டிருக்கின்றன. பெரும்பாலான வழக்கறிஞர்களுக்கு அதற்கான வசதி வாய்ப்புகள் கிடையாது. இனி கணினி மையங்களின் கட்டுப்பாட்டிற்குள் வழக்கறிஞர் கள் வந்துவிடும் நிலை உருவாகும். விசாரணை, குறுக்கு விசாரணையும் மெய்நிகர்(காணொலி) வாயிலாக செய்யப்படும் என்கிறபோது நீதிமன்றங்கள் வெறும் கட்டடங்களாக மாறும். நேரடியான குறுக்கு விசாரணை இல்லாதபோது, சாட்சிகளை தங்கள் வசதிக்கேற்ப சொல்ல வைப்பார்கள் செல்வாக்கு உள்ளவர்களும் காவல்துறையும். இனி வழக்கறிஞர்கள் ஒன்று சேர்வதும் அணிதிரள்வதும் தடுக்கப்படும். இதனால் மக்களின் அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படும். இந்திய அரசியல மைப்பில் முக்கியமாக உள்ள நீதித்துறை என்கிற மூன்றாம் தூண் பிடுங்கி எறியப்பட்டு விடும். தலைமைத் தேர்தல் ஆணையரை தங்கள் விருப்பம் போல் நியமனம் செய்திட, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக ஒரு சட்டத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்து தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தேவையில்லை என்கிறார்கள். இவர்கள்தான் காலத்திற்கு ஏற்ப, மக்களுக்காக சட்டங்களை மாற்றுகிறார்களாம்.

தூக்கி வீசப்பட்ட சட்ட நடைமுறைகள்

இந்தச் சட்ட மசோதாக்களைத் தாக்கல் செய்வதற்கு முன்பு நீதிபதிகளையோ, வழக்கறி ஞர்களையோ கலந்தாலோசிக்கவில்லை. பொது மக்களிடம் கருத்துக் கேட்பு நடத்தப்பட வில்லை. வழக்கத்திற்கு மாறாக, சட்ட அமைச்ச ருக்குப் பதிலாக உள்துறை அமைச்சர் சட்ட மசோதாக்களைத் தாக்கல் செய்தார். 18 மாநிலங்கள், 6 ஒன்றியப் பிரதேசங்கள், 16 உயர் நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் இந்த புதிய சட்டங்களுக்கு பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக அமித்ஷா கூறுகிறார். ஆனால், அந்த பரிந்துரை விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இப்போது பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் தலைமையில் உள்ள நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் குழு மூன்று மாதங்களுக்குள் விவாதங்கள் நடத்தி அறிக்கை தாக்கல் செய்வார்களாம். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இவற்றைச் சட்டங்களாக ஆக்கி விட்டால், தேர்தலையே கூட தங்கள் விரும்பம் போல் நடத்தி மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடும் நோக்கத்துடன் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டங்கள் 'அரசியலமைப்புச் சட்ட உரிமைகளைப் பாதுகாக்கும் நீதியை நிலை நாட்டும் என்றும் இச் சட்டங்கள் இந்திய ஆன்மாவுடன் இருக்கும் என்றும் அமித்ஷா கூறுகிறார். அமித்ஷா கூறும் இந்திய ஆன்மா என்பது இந்துத்துவ ஆன்மா என்பதை, அடுத்து இவர்கள் கை வைக்கப்போவது இந்திய அரசிய லமைப்புச் சட்டத்தை என்பதை சொல்லத் தேவையில்லை. ஒரு விசயத்தை யார் கொண்டு வருகிறார்கள் என்பதைக் கொண்டே அதன் அடிப்படை நோக்கம் பார்க்கப்பட வேண்டும்.

மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளும், அவர்களுடன் இணைந்து தொழி லாளர்களும் இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகளும் நடத்திய பெரும் போராட்டத்தின் மூலம் அவற்றைத் திரும்பப் பெற்றது மோடி அரசு. அதே போல இந்த மூன்று சட்டங்களுக்கு எதிராக வழக்கறிஞர்கள், சட்டத் துறையில் பணிபுரிபவர்கள் மட்டுமின்றி எல்லா தரப்பு மக்களும் போராடியாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.