பாஜகவின் பாசிச ஆட்சியில் மாநில ஆளுநர்கள் தொடர்ச்சியாக மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசுகளை செயல்பட விடாமல் தொடர் சர்ச்சைகள் ஏற்படுத்துவது அதிகரித்து வரும் சூழலில், பல போராட்டங்களுக்குப் பின்னால், தற்போது தமிழ்நாட்டிலும் தெலுங்கானாவிலும் ஆளுநர்களால் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு தடை உள்ளிட்ட கோப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுவை முதல்வர் ரங்கசாமி "புதுச்சேரிக்கு உண்மையான விடுதலை கிடைக்கவில்லை” என்றும் எல்லாவற்றுக்கும் மத்திய அரசை கேட்கும் நிலை மாற வேண்டும்" என்று நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரில் அதிருப்தியை வெளியிட்டார். கடந்த ஓராண்டாக பல சமயங்களில் இதுபோன்று பேசியிருக்கிறார். தமிழகம் போன்ற பெரிய மாநில அரசின் விவகாரங்களிலேயே மூக்கை நுழைத்து வரும் மத்திய பாரதிய ஜனதா அரசின் ஆக்டோபஸ் பிடிக்கு புதுச்சேரி எம்மாத்திரம். தெலுங்கானா வில் தொடர் புறக்கணிப்புக்கு ஆளாகி புதுவையே கதி என்று இருக்கும் பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜனோ, தன் ஆளுநர் அதிகாரத்தை வரம்பு மீறி பயன்படுத்தி சூப்பர் முதல்வராக தன்னை காட்டிக் கொள்வதை தொடர்ந்து செய்து வருகிறார். மாநில அமைச்சரவை ஒப்புதல் இன்றி ஊடகங்களில் இவரே திட்டங்களை அறிவிப்பது, சாராய ஆலைகளுக்கு பணம் பெற்றுக் கொண்டு அனுமதி அளித்தது என இவர் மீது குற்றச் சாட்டுகள் நீள்கின்றன.
ஆனால் புதுச்சேரி ஏதோ சொர்க்கபுரி போலவும் மக்கள் எல்லாம் கொண்டாட்டத்தில் எப்போதும் திளைப்பது போலவும் சிலாகிக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திருமதி தமிழிசை தெலுங்கானாவிலும் புதுச்சேரியிலும் தேசியக்கொடி ஏற்றியதை பெருமையாகப் பேசுகிறார். அவருக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் புதுச்சேரி உழைக்கும் மக்களுக்கு எந்த விதத்திலும் பயன் இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுச்சேரி மாநிலத்திற்கு என்று ஒரு முழுநேர துணைநிலை ஆளுநரை நியமிப்பதற்குக் கூட மோடி அரசாங்கத்திற்கு எண்ணமில்லை. மாறாக, தொடர்ந்து ஒன்றிய அரசின் திட்டங்களின் சோதனைக் களமாய் புதுச்சேரி மாற்றப்பட்டிருக்கிறது.
ரேஷன் பொருட்கள் விநியோகம் நிறுத்தம் தொடங்கி மின்துறையை தனியார் மயமாக்கம் வரை புதுச்சேரி சோதனைக்குள்ளாக்கப் படுகின்றது. மின் கட்டண உயர்வு மக்களை விழிப்பிதுங்க செய்துள்ளது. 100 நாள் வேலை இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்சி பாடத்திட்ட அறிமுகம் என்று சொல்லி இந்தி, சமஸ்கிருதம் நுழைக்கப் படுகிறது. பூண்டு, வெங்காயம், முட்டை இல்லாத சத்துணவு(?) வழங்கப்படுகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் வேலைவாய்ப்புகள் முழுவதுமாக இல்லாமல் ஆகிவிட்டது. மக்களுக்கு பெரு மளவில் வேலை அளித்து வந்த பஞ்சாலைகள் முழுவதுமாக மூடப்பட்டு விட்டன . புதுச்சேரி சேதராப்பட்டு உள்ளிட்டு, மாநிலம் முழுவதும் பல நூறு ஆலைகள் மூடப்பட்டு, சொற்ப எண்ணிக்கையிலேயே ஆலைகள் இயங்கி வருகின்றன. கரசூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க கிட்டத்தட்ட 800 ஏக்கர் நிலம் கையகப்ப டுத்தப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித நடவடிக்கையும் இன்றி கிடக்கிறது.
புதுச்சேரி மாநிலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் தடையின்றி இருக்கிறது. இதனால் கொலை, பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அன்றாட நிகழ்வாகிவிட்டன. இதை கண்டு கொள்ளாத ரங்கசாமி அரசு, மதுபார்களின் எண்ணிக்கையை 500லிருந்து தற்போது 900ஆக அதிகரித்துள்ளது. இன்னும் பல பார்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. மேலும் சுற்றுலாப் பயணிகள் குடித்துக்கொண்டே செல்ல பீர் பஸ் வந்துள்ளது. தற்போது புதுச்சேரி "மதுச்சேரி” ஆகியிருக்கிறது. சீரழிந்த சுற்றுலாக் கொள்கையால் மாநில மக்களை தினம் வதைத்து வருகிறது ரங்கசாமி தலைமையிலான அரசு. இவற்றுக்கு எதிராக இகக(மாலெ) சார்பிலும், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பிலும் தொடர் இயக்கங்கள் நடைபெறு கின்றன. இன்னொருபுறம் ரேஷன் கடைகள் முழுவதுமாக மூடப்பட்டு அதன் பணியாளர்கள் வீதியில் போராடி வருகின்றனர். பல அரசு சார்பு நிறுவனங்களில் ஊழியர்களுக்கு பல ஆண்டு களாக சம்பளம் வழங்கபடாததால் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
புதுவையில் இயங்கிவரும் எல் அண்டு டி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களோ தொழிலாளர் சட்டங்களைக் காற்றில் பறக்க விடுகின்றன. ஒப்பந்தத் தொழிலாளர் முறைக்கு எதிராகவும் ஓராண்டு காலமாக சட்டக் கூலி, இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட உரிமைகள் கேட்டு போராடிய நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை எல் அண்டு டி நிறுவனம் பழிவாங்கும் வகையில் பணி நீக்கம் செய்துள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள 289 தொழிலாளர்கள் மீண்டும் வேலை கோரி வீதிகளில் குடும்பத்து டன் ஏஐசிசிடியு தலைமையில் போராடி வருகின்றனர். புதுவையில் தமிழகத்திற்கு கடத்தப்பட்ட இலவச அரிசி பிடிப்பட்ட போது அது உண்பதற்கு இலாயக்கற்ற நிலையில் இருந்தது கண்டு மாலெ கட்சி சார்பில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தியது. ஆனால் முதல்வர் ரங்கசாமியோ மக்களால் கேள்விக்கு உள்ளாக்கப்படும் போதெல்லாம் மாநில அந்தஸ்து எனும் அஸ்திரத்தை வைத்து தப்பித்துக் கொள்ள முயல்கிறார். மாநிலத்திலும் மத்தியிலும் ஒரே கூட்டணி கட்சிகள் இருந்தால் தான் புதுச்சேரி மக்களுக்கு நன்மை உண்டாகும் என ஆருடம் சொல்லி பாஜக கூட்டணியில் இணைந்த ரங்கசாமி தான் இன்று மன உளைச்சலில் உள்ளதாக மக்களைத் திசைதிருப்பி நம்ப வைக்கிறார்.
ஆனால் மாநில உரிமைகள் பற்றி பேசும் முதல்வர் ரங்கசாமி, பலபத்தாண்டு காலமாக உள்ள, வேர்காலமட்ட ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் உள்ளாட்சித் தேர்தலை வேண்டுமென்றே காலதாமதப்படுத்துகிறார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி கடந்த ஆட்சிக்கு எதிராக கிரண்பேடி செயல்பட்டபோது அதை ரசித்த ரங்கசாமி தான் இப்போது புலம்புவதாக கூறியதோடு ரங்கசாமி வீதியில் இறங்கி போராடத் தயாரா என கேள்வி எழுப்பி உள்ளார்.
ஆனால் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் ரங்கசாமி, தான் ஆட்சியில் இல்லாத காலங்களில் ஒரு முறை கூட மக்கள் கோரிக்கைகளுக்காக வீதியில் இறங்கிப் போராடியது இல்லை என்பது வரலாறு. மாநில உரிமைகளுக்காக ரங்கசாமி குரலெழுப்புவது உண்மையானால் அவர் முதலில் பாஜக பிடியிலிருந்து வெளியேற வேண்டும். மாளிகையில் பதவி, அதிகார போதையில் திளைக்கும், மக்களை பற்றி சிறு கவலையும் இல்லாத இவர்கள் மாநில அந்தஸ்து கோருவது அவர்களின் சுயலாப அரசியல்.
எந்த புதிய வேலை வாய்ப்பு திட்டமும் உருவாக்கப்படாமல், புதிய வேலை வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் போதை கலாச்சாரத்தை நோக்கி துரத்தப்படும் இளைஞர்களின் வாழ்க்கை பெரும் இருளாகி வருகிறது, முதல்வரோ இல்லை முன்னாள் முதல்வரோ வீதியில் இறங்கி நமக்காக போராடப் போவதில்லை.
பிரஞ்ச் ஏகாதிபத்தியத்தை இடதுசாரி தொழிலாளர் வர்க்க தலைமையில் விரட்டிய புதுவை மக்கள், பாஜக-ஆர்எஸ்எஸ் ஆதிக்கத்தி லிருந்து விடுபட, நாளும் துன்பத்தில் உழலும் மக்களின் நலனுக்காக, மக்களை ஒன்று திரட்டி, மக்கள் புதுச்சேரிக்காக போராடுவது ஒன்றே தீர்வு. மதுச் சேரியாக மாறியிருக்கும் புதுச் சேரியை மக்கள் புதுச்சேரியாக்கப் போராடுவோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)