ரோஹித் வெமுலா நிறுவனப் படுகொலை!
மறுவிசாரணை வேண்டும்!!
2014 ல் மோடி ஆட்சிப் பொறுப்பு ஏற்ற உடனேயே தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், சென்னை ஐஐடியில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்திற்குத் தடை விதித்தது உட்பட, நாட்டின் பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்களில் துடிப்பாக செயல்பட்ட இடதுசாரி மற்றும் அம்பேத்கரிய மாணவர் சங்கங்களை நசுக்கத் துவங்கியது.
இதில் ஒரு பகுதியாக, ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் மாணவர் இயக்கத்தை ஒழித்திட தாக்குதல் தொடுக்கப்பட்டது. 2016 - 17ல், ஹைதராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலாவுக்கும் ஏபிவிபி மாணவர் சங்க உறுப்பினர் ஒருவருக்கும் நிகழ்ந்த மோதலை காரணம் காட்டி, பல்கலைக் கழகத்திலிருந்து அவரை வெளியேற்ற நிர்வாகம் முடிவு செய்தது. ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்களுக்கு ரோஹித் வெமுலா தலித் என்பதும் அம்பேத்கரிய மாணவர் சங்க செயற்பாட்டாளர் என்பதும் நன்கு தெரியும். மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா நிர்ப்பந்தத்தினால்தான் வெமுலா பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார். நிர்வாகத்தின் சதிக்குப் பலியான ரோஹித் வெமுலா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அது ஒரு ரோஹித் வெமுலா நிறுவனப் படுகொலை என கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் எழுச்சி உருவானது. எனினும், அவர் உயிரிழப்புக்கு காரணமான ஒன்றிய அமைச்சர், துணைவேந்தர், ஏபிவிபியினர் உள்ளிட்ட குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. அதற்கு மாறாக, ஏபிவிபி, 'ரோஹித் தலித் அல்ல' என பொய் சொல்லி, குற்றத்தை மறைத்திட, விவாதத்தை திசை திருப்பியது. அன்றைய மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அதை வழிமொழிந்தார். மக்கள் பணத்தை விரயம் செய்து, ரோஹித்தின் சாதியைப் பற்றி புலனாய்வு செய்து. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் 'ரோஹித் தலித் இல்லை' என்று ஒரு அறிக்கையை புலனாய்வுத் துறை அளித்தது.
வெறுப்பு அரசியல் நடத்திய வேட்டை!
ரோஹித்தின் தாய் ராதிகாவின் தலித் பின்புலத்தை மறைத்து திருமணம் செய்து வைக்கப்பட்டது என்றும் திருமணமாகி 5 வருடங்கள் கடந்த பின்னர் ரோஹித்தின் தந்தைக்கு அது தெரியவந்தது என்றும் ஏமாந்து தீண்டத் தகாத பெண்ணொருத்தியை திருமணம் செய்து விட்டதாகக் கொடுமைப்படுத்தி ரோஹித்தின் தாய், ராதிகா விலக்கி வைக்கப்பட்டார். இதனால், ஒதுக்கப்பட்ட, அவமானப்பட்ட அவர், ஒற்றை ஆளாக தையல் தொழில் செய்து, ரோஹித்தையும் இதர பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கினார். ரோஹித் வெமுலாவும் அவரின் சகோதரரும் கட்டுமான வேலைகள், வீட்டு வேலைகள் செய்து சம்பாதித்துக் கொண்டே படித்தனர்.
ரோஹித் தனது முகநூலில் தாயின் தையல் எந்திர படத்தை போட்டு ''எனக்கு பெலோஷிப் (உதவித் தொகை) கிடைப்பதற்கு முன்பு, இதுதான் எங்கள் வீட்டிற்குச் சம்பாதித்துப் போட்டது' என எழுதினார். அவர் தலித் என்பதால் பல இன்னல்களைச் சந்தித்தார். காவிப் பாசிஸ்டுகளின் வெறுப்பு அரசியலால் மரணமடைந்தார். மகனை இழந்தது மட்டுமின்றி தன் மகன் தலித் தான் என நிரூபிக்க ஒரு நீண்ட போராட்டத்தை ராதிகா நடத்த வேண்டியிருந்தது.
உச்சநீதிமன்றம் சொல்வது என்ன?
ரமேஷ்பாய் தபாய் நாய்க்கா -எதிர்- குசராத் அரசு வழக்கில், 2012 ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தாயார் எஸ்சி/ எஸ்டி வகுப்பைச் சேர்ந்தவராக இருக்கும்போது, தந்தையின் சாதியைத்தான் பிள்ளையின் சாதியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற 'நெகிழ்வற்ற பொது விதி' எதுவும் இல்லை என்று சொன்னது. தாயாரின் சாதியை தேர்வு செய்து கொள்ளலாம் என்றதோடு, இத்தகைய திருமணங்களில் தலித் இணையர் சந்திக்கும் பல்வேறு சிக்கல்கள் குறித்தும் விவாதித்தது.
'எஸ்சி அல்லது எஸ்டி வகுப்பைச் சேர்ந்த தாயினால் வளர்க்கப்பட்ட, அதுபோன்ற திருமணங்களால் பிறந்த ஆண்/ பெண், தமது தரப்பு ஆதாரங்களை முன்வைப்பது அவர்களின் உரிமையாகும். முன்னேறிய சாதியைச் சேர்ந்த தந்தை என்பதால் அவர்களுக்கு சாதகமான துவக்கம் நிகழ்வதில்லை. மாறாக, தாய் சார்ந்த சாதிக்கு நேரும் ‘ஒதுக்கப்படுதல், அவமரியாதை, அவமானம், ஊனமுற்ற நிலை’ அந்தப் பிள்ளைகளுக்கும் நேர்கிறது. மேலும், அந்த சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், அதற்கு வெளியே உள்ளவர்கள் கூட, தாயின் சாதியைச் சேர்ந்தவராகவே பிள்ளையையும் நடத்துகிறார்கள் என்றது உச்ச நீதிமன்றம்.
இதன்மூலம் ரோஹித் வெமுலா, சட்டரீதியாக தலித் தான் என்பது தெளிவாகிறது.
ஆனால், ரோஹித்தை ஒரு தலித்தாகவே நடத்தி விட்டு, அவரின் இறப்புக்குக் காரணமான பாஜக, தான் தப்பிக்க 'ரோஹித் வெமுலா தாயின் சாதியைச் சேர்ந்தவரில்லை, தந்தையின் சாதியைச் சேர்ந்தவர்' என்று சொன்னது.
மறுவிசாரணை வேண்டும்!
பல்கலைக்கழகங்களில், உயர் கல்வி நிறுவனங்களில், பள்ளிகளில் கடைபிடிக்கப்படும் சாதீய பாகுபாட்டிற்கு முடிவு கட்ட 'ரோஹித் சட்டம்’ ஒன்றிய அரசால் இயற்றப்பட வேண்டும், ஆர்எஸ்எஸ் ஆதரவு துணை வேந்தர் நியமனம் மூலம் பல்கலைக் கழகங்கள் பாஜக அரசின் "பொம்மை" நிர்வாகங்களாக மாற்றப்பட கூடாது, சுயாட்சித் தன்மை பறிக்கப்பட கூடாது என்று கோரி கடந்த 8 ஆண்டுகளாக பல போராட்டங்கள் நடந்துள்ளன.எதுவும் மோடி அரசால் கண்டு கொள்ளப்படவில்லை. தற்போது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மறுவிசாரணை ஏதுமின்றி, அதே பழைய பிஆர்எஸ் அரசாங்க அறிக்கையை, தற்போதைய தெலுங்கானா காங்கிரஸ் அரசின் காவல்துறை அப்படியே தாக்கல் செய்திருப்பது மிகப்பெரும் அநீதியாகும்.
விசாரணை அறிக்கை, பல்கலைக்கழக நிர்வாகத்தின் தொடர்ச்சியான துன்புறுத்தல் மற்றும் தண்டனை, ஏபிவிபி மற்றும் பாஜக தலைவர்களின் தலையீடுகளை ஒப்புக்கொண்ட போதும், அவர்களை பழியிலிருந்து விடுவிக்கிறது. மேலும் இது ஒரு நிறுவனப் படுகொலையை மறைக்கிறது. ரோஹித் வெமுலாவின் அவரது தாயார் ராதிகாவின் பண்பு நலன்களை அழித்தொழிக்கும் செயல், காவல்துறையிலிருக்கும் சாதிவெறிக்கு இது உதாரணம் ஆகும். காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தெலங்கானா காங்கிரஸ் அரசாங்கம் இந்த வழக்கில் மறுவிசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)