நீட் மோசடி 2024
கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை மோடி அரசு நிறுத்த வேண்டும்
ஜூன் 4, 2024 அன்று, 18 வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஒளிபரப்பப்பட்டது. அப்போதே, நீட் தேர்வு எழுதிய 24 லட்சம் பேர்களின் எதிர்காலம் மற்றொரு ஊழலில் சிக்கியது என்ற செய்தியும் வெளிவந்தது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுஷ் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) முடிவுகள், மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான அதே நாளில் அறிவிக்கப்பட்டன. இதனால், நீட் தேர்வில் நடைபெற்ற ஊழல் மக்களின் கவனத்தைக் கவரவில்லை. மோசடியை அம்பலப்படுத்திய மாணவர்களிடமிருந்து வெடித்துக் கிளம்பிய கோபம் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கிய பின்பு தான் நீட் 2024 தேர்வில் நடைபெற்ற ஊழல் கவனத்தைக் கவர ஆரம்பித்தது. இந்த மாபெரும் மோசடியின் தன்மை வெளிச்சத்துக்கும் வந்தது. இந்த மோசடிக்கு எதிராக மாணவர்கள் வீதிகளில் இறங்கத் தொடங்கினர்.
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான முந்தைய மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகளுக்கு பதிலாக, நீட் தேர்வு 2016 ஆம் ஆண்டில் மோடி அரசாங்கத்தால் தேசிய அளவிலான ஒற்றை நுழைவுத் தேர்வாக அறிமுகப்படுத்தப்பட்டது. தேர்வு முறை மையப்படுத்தப்பட்டதால், தொடக்கத்தில் இருந்தே நீட் தேர்வு முறை குஜராத், தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநில அரசுகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.
இந்த ஆண்டு மே மாதம் நீட் தேர்வு நடத்தப்பட்ட உடனேயே, பீகார் துவங்கி குஜராத் வரை வினாத்தாள் கசிந்த செய்திகள் வெளிவரத் தொடங்கின. கசிந்த வினாத்தாள்களுக்காக தேர்வெழுத இருந்தவர்களிடமிருந்து ₹30 லட்சம் முதல் ₹50 லட்சம் வரை பேரம் பேசிய 13 பேரை பாட்னா போலீசார் கைது செய்தனர். ஒரு பள்ளி ஆசிரியரும் பாஜக தலைவருடன் தொடர்புள்ள கல்வி ஆலோசனை நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவரும் நடத்திய முழு நீள மோசடியையும் குஜராத் போலீசார் கண்டுபிடித்தனர். தேர்வுகளில் வெற்றி பெற வைப்பதற்கு ₹10 லட்சம் வரை அவர்கள் வசூலித்திருக்கின்றனர். நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) இந்த மோசடி குறித்து அறிந்திருந்ததால், திட்டமிடப்பட்ட தேதிக்கு பத்து நாட்களுக்கு முன்னதாகவும், 2024 மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையுடன் ஒத்துப்போகும் வகையிலும் ஜூன் 4 ஆம் தேதி முடிவுகளை வெளியிட்டது. தேர்வு முகமையின் நோக்கம் வெளிப்படையாகத் தென்படும் ஒன்றுதான் - நீட் ஊழலில் இருந்து தேசத்தின் கவனத்தை திசை திருப்புவதற்காக தேர்தல் முடிவு பரபரப்புக்கு இடையில் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
நீட் 2024 இன் முழு நிகழ்வுப்போக்கும், ஆரம்பத்திலிருந்தே சர்ச்சையில் சிக்கிய ஒன்றாக உள்ளது. முதலாவதாக, நீட் 2024 க்கான ஆன்லைன் பதிவு பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கி மார்ச் 16 வரை நீட்டிக்கப்பட்டது. திடீரென்று, ஏப்ரல் 9 அன்று, தேர்வை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கான அனைத்து விதிமுறைகளையும் மீறி, 'சம்பந்தப்பட்டவர்களின்' (stakeholders) வேண்டுகோளின்' பேரில் பதிவு இரண்டு நாட்களுக்கு மீண்டும் திறக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது. 67 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தது குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்த 67 மாணவர்களில் ஆறு பேர், ஹரியானாவின் ஜஜ்ஜாரில் உள்ள ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் இரண்டு மாணவர்கள், பெறுவதற்கு வாய்ப்பு இல்லாத 719, 718 என்ற மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்கள். மாணவர்கள் தங்களின் ஓஎம்ஆர் தாள் மதிப்பெண்கள் தேர்வின் இறுதி முடிவுடன் எவ்வாறு பொருந்தவில்லை என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளனர். தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் சுமார் 1500 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை அளித்த விளக்கம் சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
மாணவர்களால் எழுப்பப்படும் மற்றொரு முக்கிய கவலை ஊதிப்பெருக்க வைக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலாகும். 2022 இல், 715 மதிப்பெண் பெற்றவர் முதல் ரேங்க் என்று அறிவிக்கப்பட்டார். 2023 இல் கூட அது 4 வது ரேங்க் ஆக இருந்தது. இந்த ஆண்டு அதே மதிப்பெண் 225 வது ரேங்க் ஆக வைக்கப்பட்டுள்ளது! 2022ல் 700 மதிப்பெண் பெற்றவரின் ரேங்க் 49! 2023 இல் அது 294. இந்த ஆண்டு அதன் ரேங்க் 1,770! கால ஓட்டத்தின் போக்கில் தேர்வு இலகுவாக மாறிவிடவில்லை, அல்லது எழுத வரும் மாணவர்களின் திறன் மலை அளவுக்கு உயர்ந்துவிடவில்லை. தேர்வுகளை நடத்தும் நிறுவனம் உள்ளிருந்தே சரிக்கட்டப்பட்டுவிட்டது. அதன் காரணமாக, மிகச் சிறப்பாக கட்டமைக்கப்பட்ட ஊழலுக்கு மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் விலை கொடுத்துக்கொண்டுள்ளனர்.
நீட் தேர்வு சட்டவிரோதமானது, அரசியலமைப்பிற்கு எதிரானது என 2013 இல் உச்சநீதிமன்றம் அறிவித்தது. இருப்பினும், 2016 இல் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு நீட் தேர்வுக்கு வாழ்வளித்தது. அதனை அடுத்து, நீட் தேர்வை நடத்துவதற்காக, 2017 நவம்பரில் கல்வி அமைச்சகத்தின் கீழ் தேசிய தேர்வு முகமையை மோடி அரசாங்கம் உருவாக்கியது.
இந்த அதி மையப்படுத்தப்பட்ட 'ஒரே நாடு, ஒரே தேர்வு' வகையில் உருவாக்கப்பட்ட தேர்வு முறை, உள்ளார்ந்த வகையில் பணக்காரர்களுக்கும், செல்வாக்கு செலுத்த முடிந்தவர்களுக்கும் ஆதரவான சார்பைக் கொண்டுள்ளது. மேலும், பயிற்சி மைய நிறுவன தொழில்துறை கொள்ளையர்களின் எழுச்சியும், கேள்வித்தாளை கடத்தி விற்கும் கொள்ளையர்களின் எழுச்சியும் கூட்டு சேர்ந்துகொள்ள இந்த அமைப்பு இப்போது மிகவும் நியாயமற்றதாகவும், வெளிப்படைத் தன்மையற்றதாகவும் மாறியுள்ளது. இத்தகைய அதி மையப்படுத்தப்பட்ட, வெளிப்படைத் தன்மையற்ற ஊழல் நிறுவனங்களின் தாக்கம் நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பின் தரத்தை எந்த அளவுக்கு பாதிக்கும் என்ற கேள்வி மிக ஆழமான கவலையில் நம்மை ஆழ்த்துகிறது. 'தகுதிக்குத்தான் முக்கியத்துவம்' என்று கூச்சல் போடும் "இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள்" இப்போது மௌனமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் அதிகரித்த அளவில் வணிகமயமாக்கப்படும் ஊழல் மிகுந்த கல்வி முறையில் விதிகளை மீறி பணம் படைத்தவர்கள் நடத்துகிற படுபயங்கரமான விளையாட்டுகளை இந்தத் 'தகுதியின் காவலர்கள்' கண்டுகொள்ளாதிருக்கிறார்கள்.
பல்வேறு சமூக பின்னணிகளையும் கல்வி பின்னணிகளையும் சேர்ந்த மாணவர்கள் மீது நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய 2021 ஆம் ஆண்டில் (நீட் அறிமுகப்படுத்தப்பட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு) நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது. நீட் அறிமுகத்திற்குப் பிறகு மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில் ஆங்கிலவழி மாணவர்களின் பங்கு கணிசமாக அதிகரித்துள்ளதை இந்தக் கமிட்டி கண்டறிந்தது. நீட் தேர்வுக்கு முந்தைய 2010-11 முதல் 2016-17 வரையிலான காலகட்டத்தில், கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சராசரியாக 61.5% இடங்களைப் பெற்றனர், 2020-21 வாக்கில், இந்த எண்ணிக்கை 49.91% ஆக குறைந்தது என்பதையும் கமிட்டி கண்டறிந்து வெளிப்படுத்தியது. குறைந்த வருமானம் கொண்டவர்கள் மற்றும் தமிழ்வழியில் கற்றவர்களின் பங்கு குறைந்து, அதிக வருமான பின்னணி கொண்ட சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த மாணவர்களின் பங்கு மருத்துவப் படிப்பில் அதிகரித்து வருவதையும் ஆய்வு சுட்டிக்காட்டியது. மையப்படுத்தப்பட்ட தேர்வு முறை குறித்து பல மாநில அரசுகள் எழுப்பிய கவலையை ராஜன் குழுவின் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.
அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான மையப்படுத்தப்பட்ட தேர்வு முறையாக மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு (கியூட்), மோடி அரசாங்கத்தால் 2020-21 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. பல்வேறு மொழி, பிராந்திய, சமூக பின்னணியைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட தேர்வு முறைக்கு இதுவும் மற்றுமொரு எடுத்துக்காட்டு ஆகும். நீட் வழியில் கியூட்-டும் நாட்டின் மத்திய பல்கலைக்கழகங்களில் இருந்து பல்வேறு மாநில கல்வி முறையில் படித்த மாணவர்களை திட்டமிட்டு வெளியேற்றி வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் நீட் தொடர்பான அனைத்து மனுக்களின் மீதான விசாரணைகள் முடியும்வரை நாம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இச்சமயத்தில், நீட் 2024 தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும், அனைத்து குளறுபடிகளையும் முடிவுக்குக் கொண்டுவர தேர்வை புதிதாக நடத்த வேண்டும் என்றும் எழுந்துள்ள மாணவர்களின் கோரிக்கையை நாம் ஆதரிக்க வேண்டும். திறமையற்ற தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும், நியாயமற்ற நீட் முறையையே ரத்து செய்ய வேண்டும் என்ற மிகவும் அடிப்படையான கோரிக்கைள் அதிகரித்தபடி இருக்கின்றன. நமது உயர்கல்வி அமைப்பில் மிகவும் அதிகரித்து வரும் அதி மையப்படுத்துதல், வணிகமயம், ஊழல் ஆகியவற்றால் நிகழும் பேரபாயங்களை இனியும் இந்த நாடு கண்டுகொள்ளாதிருக்க முடியாது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)