தமிழ்சினிமாவில் கருத்தியல்: தங்கலான், ரகுதாத்தா ஒரு ஒப்புநோக்கு
ஒரு நல்ல திரைப்படம், திரைப்படக் கலையின் வடிவத்துக்கும் (அழகியல்) அதில் சொல்லப்படும் கருத்துகளுக்கும் (கருத்தியல்) சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பிரம்மாண்டமாக எடுக்கப்படும் பொழுதுபோக்குத் திரைப்படங்கள் மட்டுமே தமிழ் திரையுலகை ஆதிக்கம் செய்து வந்தன. தற்போது இந்தப் போக்கில் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. வெறுமனே பொழுதுபோக்கிற்கான ஊடகம் என்பதைத் தாண்டி, சமூகத்தின் ஆன்மாவைக் கேள்விக்குள்ளாக்கும் கதையாடல்களைக் கருவாக, கதைக்களமாகக் கொண்ட திரைப்படங்களாக இன்றைக்கு அது பரிணமித்துள்ளது; அதன் பிரம்மாண்டமான கடத்தும் ஆற்றலைக் கொண்டு சமூகத்தின் எண்ணங்கள் மீது செல்வாக்கு செலுத்துகிற ஆற்றல் வாய்ந்த கருவியாக அது மாறியுள்ளது. இப்பின்னணியில் திரைப்படத்தில் இழையோடும் கருத்தியலை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை திரைப்படங்கள் மூலமாக பொதுச் சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதில் மிகவும் கடப்பாடுடன் செயல்படுபவர் இயக்குனர் பா.ரஞ்சித். அண்மையில் வெளிவந்துள்ள அவரது திரைப்படம் தங்கலான். 1850 காலகட்ட சிறு கிராமம் வேப்பூர். கதையின் நாயகன் ஏழை விவசாயி. நயவஞ்சகமாக கிராமத்தினரின் நிலங்களைப் பிடுங்கிக் கொள்ளும் பண்ணையார். தங்கம் தேடி வரும் வெள்ளையர். அதற்கு உதவுவதன் மூலம் இழந்த தங்களது வாழ்வாதாரத்தை மீட்க எண்ணும் கிராமத்தவர்கள். வெள்ளையரின் சூழ்ச்சிக்குப் பலியாகும் ஒடுக்கப்பட்ட மக்கள். அம்மக்கள் தங்களது வாழ்க்கைப் போராட்டத்தில், வர்க்கப் போராட்டத்தில் என்னாவார்கள்? என்பதே திரைக்கதை.
அனைத்தின் அடிப்படையும் உழைப்பே; உழைப்பின்றி இந்த சமூகத்தில் எதுவுமில்லை, என்ற கடும் எதார்த்தத்தை காட்சிகள் மூலம் சிறப்பாக இயக்குனர் வெளிப்படுத்தி இருக்கிறார். அதிகாரமற்ற ஏழை விவசாயிகளின் நிலங்களை பிடுங்கி, அவர்களை பண்ணை அடிமைகளாக்கி சுரண்டிக் கொழுக்கும் நிலப்பிரபு ஒருபுறம். நிலப்பிரபுகளின் சுரண்டல், ஒடுக்குமுறையிலிருந்து தப்பிக்க எண்ணும் பண்ணை அடிமைகளை, தங்களது பொன்னாசைக்கு நயவஞ்சகமாக சூழ்ச்சியில் சிக்க வைத்து சின்னாபின்னமாக்கும் வெள்ளையர்கள் மறுபுறம். இவர்களது கொடுமைகளை எதிர்த்து தங்களது எதிர்கால நல்வாழ்வுக்காகப் போராடும் பண்ணை அடிமைகள்; கூலித் தொழிலாளர்கள். ஒடுக்கப்பட்டவர்களின் அறியாமையை, உழைப்பை நிலப்பிரபுகளும் காலனிய சக்திகளும் எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள் என்பதை நன்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது இத்திரைப்படம். ஒடுக்குபவர்களுக்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டத்தை சக்தி வாய்ந்த கதையாடலாக மாற்றியுள்ளது. இத்திரைப்படக் கதையாடலின் அடிநாதமாக வர்க்கப் போராட்டம் உள்ளது. மார்க்சிய அரசியல் என்ற பரந்த பின்புலத்தில் இவையனைத்தும் காட்சியாக்கப்பட்டுள்ளன.
தனக்கு ஆதரவாகவும் எதிராகவும் தங்கலான் திரைப்படம் பல்வேறு வகையான விமர்சனங்களை எதிர்கொள்கிறது. இப்படத்தில் மேற்குறிப்பிட்ட கதைக்களத்தில் கூடுதலாக வேறு பல பிரச்சினைகளும் பேசப்படுகிறது. இருப்பினும் வர்க்கப் போராட்டமே அடிப்படைக் கதைக்கரு. அது நேரடியான வார்த்தைகளில் சொல்லப்படாவிட்டாலும் கூட பார்வையாளர்களுக்கு அப்படித்தான் போய்ச் சேரும். உழைக்கும் மக்கள் ஒடுக்குமுறையை, சுரண்டலை எதிர்த்துப் போராடுவதில் உள்ள நியாயத்தைப் பொதுச் சமூகம் புரிந்து கொள்ளவேண்டும் என்கிறது திரைப்படம்.
“ஃபேமிலி மேன்” என்ற தொடரின் மூலம் புகழ்பெற்ற சுமன் குமார் இயக்கியுள்ள “ரகு தாத்தா” என்ற திரைப்படம் இதற்கு முற்றிலும் மாறான கருத்தியலைக் கொண்டுள்ளது. 1960 காலகட்ட வள்ளுவன் பேட்டை ஒரு சிற்றூர். கதையின் நாயகி இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராளி. திருமணத்தில் விருப்பமற்ற இளம்பெண். அவரது தாத்தா புற்று நோயாளி. அதனால் திருமணம் செய்து கொள்ளவேண்டிய கட்டாயம். முற்போக்கு வேசம் போடும் நண்பனுடன் திருமணம் நிச்சயமாகிறது. நண்பனின் வேசம் கலைகிறது. திருமணத்தை நிறுத்த பதவி உயர்வுக்கு முயற்சிக்கிறார். அதற்கு இந்திப் படிப்பு அவசியமாகிறது. இந்தி படித்தாரா? திருமணம் நின்றதா? என்பதே திரைக்கதை.
இத்திரைப்படம் பொதுவாக, பல வழிகளில் திராவிடக் கருத்துகளை சவாலுக்கு இழுத்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டின் அரசியல், கலாச்சார வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ள இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் மரபை இது கொச்சைப்படுத்தியுள்ளது. இந்தி படிக்காததால் பணியில் பதவி உயர்வு பெறுவதில் சிக்கல்; பொது வெளியில் பெரியார் கருத்துகளை, முற்போக்கு சிந்தனைகளை வாய் கிழிய பேசுவோர் அனைவரும் வீட்டில், குடும்பத்துக்குள் பெரும் பிற்போக்கு சிந்தனை உள்ளவர்களாக இருப்பது போன்று காட்சிப்படுத்தியுள்ளனர். பொழுதுபோக்கிற்காக, நகைச்சுவைக்காக எடுக்கப்பட்டது போல தோற்றமளிக்கும் இத்திரைப்படம் பார்வையாளர்களுக்கு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் தவறானது என்ற எதிர்மறைத் தகவலையே தருகிறது. திராவிட இயக்கத்தின் போதாமைகளை நிச்சயமாக சரியான விதத்தில் விமர்சிப்பதில் தவறில்லை. மாறாக அதன் அடிப்படையை கொச்சையாக விமர்சிப்பதில் உள்நோக்கம் இருப்பது போல தெரிகிறது.
முக்கியமான செய்தி இருந்தபோதிலும் “தங்கலான்” கடுமையான ஆய்வுக்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, “ரகு தாத்தா” தீவிரமாக விமர்சிக்கப்படுவதில் இருந்து தப்பிவிட்டது. இது திரைப்பட விமர்சகர்களிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அணுகுமுறை இருப்பதையே காட்டுகிறது. நடப்பில் செல்வாக்கு செலுத்துகிற கலாச்சார அல்லது அரசியல் மன உணர்வுகளுக்கு விமர்சகர்கள் வழங்கும் ஆதரவுக்கேற்ப ஒரு சில கருத்தியல் கதையாடல்கள் புறக்கணிக்கப்படுகின்றன அல்லது போதுமான முக்கியத்துவம் அளிக்கப்படாமல் விடப்படுகின்றன. திரைப்படங்களை விமர்சிப்பதில் உள்ள இந்த சார்பு நிலை திரைப்படம், கருத்தியல், சமூகம் ஆகியவற்றுக்கிடையிலான சிக்கலான, பெரும்பாலும் சச்சரவு ஏற்படுத்துகிற உறவைக் கோடிட்டு காட்டுகிறது. பொதுவெளியில் விவாதங்களை கட்டமைப்பதில் இந்த ஒவ்வொரு அம்சங்களும் எப்படி ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளன என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.
ஒருபுறம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் ரகு தாத்தா போன்ற படங்கள் மறைமுகமாக தவறான கருத்துகளை பரப்பும் வேலையைச் செய்கிறது. மறுபுறம் அண்மைய காலங்களில் வெளிவந்த கவுண்டம் பாளையம் போன்ற திரைப்படங்கள் நேரடியாகவே சாதிய, பிற்போக்கு, நிலப்பிரபுத்துவ விழுமியங்களை உயர்த்திப் பிடிக்கின்றன. இத்தகைய திரைப்படங்களின் பின்னுள்ள பிற்போக்கு கருத்தியல் பொது வெளியிலும் சமூக ஊடகங்களிலும் அம்பலப்படுத்தப்பட வேண்டும். தங்கலான் போன்ற திரைப்படங்களுக்கு ஆதரவு பெருக வேண்டும்.
- ஜோசுவா, செந்தில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)