தமிழ் சினிமாவில் எழுந்து வரும் புதிய போக்குகள்
கதாநாயக பிம்பத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்கள் நீண்ட காலமாக தமிழ் திரையுலகில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. சினிமா வணிகத்தில் வெற்றி பெறுவதே இதன் அடிப்படை நோக்கமாகும். இத்தகைய மசாலா திரைப்படங்கள் பார்வையாளர்களின் சிந்தனையை மழுங்கடிக்கின்றன. அநீதியான சமூகக் கட்டமைப்பை அப்படியே ஏற்றுக் கொள்ளும் கருத்தியலை பார்வையாளர்களிடம் திணிக்கின்றன. ஒரு நல்ல சினிமா மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்க வேண்டும். தனது பார்வையாளர்களிடம் ஒரு ஊடாடலை நிகழ்த்த வேண்டும். அவர்களின் சிந்தனையை தூண்ட வேண்டும். சமூகத்தில் நிகழும் அநீதியை கேள்விக்கு உட்படுத்த வேண்டும். இதனை மையமாகக் கொண்டு அண்மையில் வெளியான சில படங்களை அணுகலாம்.
வாழை
திருநெல்வேலி கருங்குளம் பக்கத்தில் 1998 ஆம் ஆண்டு நடக்கும் கதை. நன்றாக படிக்கும் பள்ளி மாணவன் விடுமுறை நாட்களில் வாழைத்தார்களை சுமந்து சென்று லாரியில் ஏற்றும் கூலி வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அவனது குடும்பத்தின் வறுமை, கடன்சுமை தான் இதற்கு காரணம். துயரம் மிகுந்த இந்த வாழ்வில் அவனது பள்ளி ஆசிரியை மீது அவன் கொண்டிருக்கும் அன்பு அவனது வாழ்வை நகர்த்திச் செல்கிறது. இதன் போக்கில் கொடுங்கனவான ஒரு நிகழ்வு அவனது வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கதை முடிவுறுகிறது.
முதலாளித்துவ சமூக அமைப்பு ஒரு சிறுவனின் வாழ்வில் நிகழ்த்தும் அவலம் தான் வாழை. அவனது குடும்பம், சுற்றம், ஊர் மக்கள் கடும் வறிய நிலையில் உள்ளனர். இந்த ஏழை எளிய மக்கள் கூலிக்கு வேலை செய்யும் அடிமைகளாக, கடனாளிகளாக, ஓட்டாண்டிகளாக, பஞ்சப் பராரிகளாக இருக்கின்றனர். எங்கும் தப்பிச் செல்ல வழியற்று துன்பச் சேற்றுக்குள் அவர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். இறுதியில் மண் சேற்றுக்குள் புதைந்து தங்கள் இன்னுயிரை இழக்கின்றனர். ஆனாலும் கூட இதுவொரு முடிவின்றி அவதியுறும் விசச்சுழலாக, வாழ்நிலையாக தொடரவே செய்கிறது. இந்தச் செய்திகளை இப்படம் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. இத்தகைய எளிய மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ள கம்யூனிச அரசியலையும் அம்பேத்கரின் தாக்கத்தையும் தொட்டுச் செல்கிறது இப்படம். தொழிலாளர்களின் வாழ்வை, துயரத்தை, மகிழ்வை, காதலை மிக நேர்த்தியான அழகியலோடு காட்சிப் படுத்தியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். திருநெல்வேலி வட்டாரப் பேச்சு மொழி இப்படத்துக்கு கூடுதல் அழகூட்டுகிறது.
கொட்டுக்காளி
மதுரைக்கு அருகேயுள்ள ஒரு கிராமம். தன் முறைப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு வருகிறான் பாண்டி. ஆனால், அவனின் முறைப்பெண்ணோ வேறு ஒருவனை நேசிக்கிறாள். எனவே, மாமனை திருமணம் செய்து கொள்ள அவள் மறுக்கிறாள். ஊராரிடம் இதனை மறைத்து அவளுக்கு பேய் பிடித்துவிட்டது என்றும் பக்கத்து ஊரில் இருக்கும் ஒரு சாமியாரிடம் கூட்டிச் சென்றால் சரிசெய்து விடலாம் என்றும் அவளை உறவினர்கள் எல்லோரும் சேர்ந்து சாமியாரிடம் அழைத்து செல்கிறார்கள். அவர்களுடன் பாண்டியும் செல்கிறார். அந்தப் பயணமே திரைப்படம். மதுரைத் தமிழ் இப்படத்தின் சிறப்பை அதிகரிக்கிறது. தனியாக பின்னணி இசை அமைக்காமல் காட்சியாக்கப்படும் போது உள்ள இயல்பான இசையையே பயன்படுத்தி இருப்பது இன்னும் சிறப்பு.
நிலப்பிரபுத்துவ விழுமியங்கள், இறுக்கமான சாதியக் கட்டமைப்பு, ஆணாதிக்க, பெண்ணடிமை சிந்தனைப் போக்குகள், அறிவுக்குப் புறம்பான மூட நம்பிக்கைகள், பிற்போக்கு கருத்துகள் நிலவுகிற, கோலோச்சுகிற தமிழ்ச் சமூகத்தை, கிராமப்புரத்தை, குடும்ப அமைப்பை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது இப்படம். சுதந்திரமாக நடமாட முடியாமல் கல்லில் கட்டப்பட்ட சேவல் மூலம், குடும்ப அமைப்புக்குள் சிறை வைக்கப்பட்டுள்ள பெண்ணை உருவகமாக படத்தின் தொடக்க காட்சியிலேயே காட்டியுள்ளார் இயக்குனர் வினோத் ராஜ். குடும்பப் பெண்கள் மீது ஆண்கள் நிகழ்த்தும் வரைமுறையற்ற வன்முறை பாண்டி வழியாக வெளிப்படுகிறது. முடிவேயற்ற ஒரு முடிவை திரைப்படத்திற்கு வழங்கி பார்வையாளர்கள் தங்களுக்கு ஏற்ற முடிவு பற்றி சிந்திக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் பகுத்தறிவை தூண்டி விடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய படத்தில் சூரி, அன்னாபென் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளதும் சிவகார்த்திகேயன் தயாரித்து இருப்பதும் பாராட்டத்தக்கது.
குரங்குப் பெடல்
1980 களின் கதை. ஈரோடு மாவட்டம் கத்தேரி கிராமத்தைச் சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவன் மாரியப்பன். பள்ளி கோடை விடுமுறையில் சைக்கிள் கற்றுக் கொள்ள விரும்புகிறான். அவனது நண்பர்கள், குடும்பத்தினர், ஊரார் மூலம் அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்கள். அதனை அச்சிறுவன் எவ்வாறு எதிர்கொள்கிறான்? அதில் வெற்றி பெறுகிறானா? எழுத்தாளர் ராசி அழகப்பன் எழுதிய சைக்கிள் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை. அழகான, அருமையான, எளிமையான திரைப்படம்.
சிறுவர்களின் மன உலகு இயங்கும் விதம். எண்ண ஓட்டங்கள். அவனது நண்பர்களின், குடும்பத்தினரின், ஆசிரியரின், ஊராரின் செயல்கள் அவனுள் நிகழ்த்துகின்ற தாக்கங்கள். வெளிப்பார்வைக்கு முரடர்கள் போலத் தோன்றும் மனிதர்கள் மென்மையான மனம் படைத்தவர்கள் என்ற உண்மை. உலகின் மீது, சமூகத்தின் மீது, வாழ்வின் மீது மனிதர்கள் கொள்ளும் நம்பிக்கைக்கு காரணங்கள். ஆகியவற்றை காட்சிகளின் மூலம் பார்வையாளனுக்கு நேர்த்தியாக கூறி செல்கிறார் இயக்குனர் கமலக்கண்ணன். பார்வையாளர்களுக்கு நேர்மறையான எண்ணங்களை விதைக்கிறார். இத்தகைய படத்தைத் தயாரித்திருப்பதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
ஜமா
திருவண்ணாமலையின் கூத்துக் கலைஞன் கல்யாணம். தனது தந்தையிடம் இருந்து ஏமாற்றிப் பறிக்கப்பட்ட ஜமாவை (கூத்துக்குழு) மீட்க தனது கூத்து வாத்தியாரையே எதிர்த்து நிற்கிறார். அதற்காக தனது காதலையும் கூட புறக்கணிக்கிறார். வீடு, நிலம், தாய் என அனைத்தையும் இழந்து விடுகிறார். அவரது அடவு கட்டும் திறமையின் மீது நம்பிக்கை கொள்கிறார். இறுதியில் அவருக்கு அவரது ஜமா கிடைத்ததா?
தனிப்பட்ட கூத்து கலைஞர்கள் இடையேயான நட்பு, துரோகம், குழு மனப்பான்மை போன்ற உறவு சிக்கல்களின் போக்கில் கூத்து கலைக்கும் கலைஞர்களுக்கும் இடையேயான பிணைப்பு குறித்து இப்படம் பேசுகிறது. கலைஞர்களின் வாழ்வுக்கும் கலைக்கும் உள்ள உயிரோட்டமான தொடர்பு குறித்தும் பேசுகிறது. அதிகம் பேசப்படாத ஒரு கதைக்களத்தை திரைக்கதையின் மையக்கருவாக கொண்டுள்ளதால் இப்படம் பேசத் தகுந்த ஒன்றே. சொல்ல வரும் கதையை நேர்மையாகவும் அழகுணர்ச்சியோடும் யதார்த்தமாகவும் காட்சிப்படுத்திருக்கும் இயக்குனர் பாரி இளவழகன் பாராட்டத்தக்கவர்.
பொழுதுபோக்குத் திரைப்படங்கள் பெருவாரியான பார்வையாளர்களை சென்று சேர்கின்றன. இதற்கு விளம்பரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. திரைப்படத் தயாரிப்பில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகை இதனை புதிய உயரத்திற்கு கொண்டு சேர்த்துள்ளது. அச்சு ஊடகங்கள், தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள், சமூக ஊடகக் காணொளிகள் மூலம் பல்வகை விளம்பரங்களும் மெகா பட்ஜெட் திரைப்படங்களை பார்த்தாக வேண்டிய நெருக்கடியை மக்கள் மீது சுமத்துகின்றன.
இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாகவே புதிய வகை சினிமா பரவலாக கவனம் பெறுகிறது. வெற்றி மாறன், பா.ரஞ்சித், டி.ஜே.ஞானவேல், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள் மாற்றம் நோக்கி நகரும் தமிழ் சினிமாவின் இயக்குனர்களாக உள்ளனர். வினோத் ராஜ், கமலக்கண்ணன், பாரி இளவழகன் போன்ற புதிய தலைமுறை இயக்குனர்கள் பலரும் இவர்களுடன் இணைவது மகிழ்ச்சிக்கு உரியது. இப்போது அடுத்தடுத்து தொடர்ச்சியாக வெளியாகியுள்ள இவர்களின் மேற்கூறிய திரைப்படங்களும் இதனை வெளிப்படுத்துகின்றன. இப்படங்கள் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளன. இந்தப் புதிய சினிமாக்கள் சமூக ஊடகங்கள் வழியாக பரவலாக அறியப்படும் பேசுபொருளாக மாறியுள்ளன. இது வரவேற்கத்தக்க நிகழ்வுப் போக்காகும். நல்ல படங்களை வரவேற்கவும் கொண்டாடவும் தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் தயாராக உள்ளதையும் இந்த புதிய சூழல் எடுத்துக்காட்டுகிறது. இந்த ஆரோக்கியமான புதிய போக்கு தமிழ் சினிமாவில் நிலைபெறும் நல்வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)