கடந்த 2024 அக். 31 முதல் நவ. 7 வரை பெங்களூர் முதல்  திருப்பதி ஹைதராபாத் வரை  இரயில்வேயில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட நிலைக்குழு ஆய்வுப் பயணம் மேற்கொண்டது. அக் குழுவில் இருந்த  சிபிஐ(எம்எல்) எம்.பி. சுதாமா பிரசாத் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விருந்தினர்களுக்கும்  ரயில்வே நிர்வாகம் 1 கிராம் தங்கம், 100 கிராம் வெள்ளிக் கட்டி உள்ளிட்ட பரிசுப் பொருட்களை  அளித்தது; சிபிஐ(எம்எல்) விடுதலை கட்சியின் ஆரா  தொகுதி எம்.பி. சுதாமா பிரசாத், ஆய்வு பயணத்தின் போது RITES மற்றும் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனங்கள் அவருக்கு அளித்த பரிசுகளை திருப்பி அனுப்பினார்.

இது குறித்து 20 நவம்பர் 2024 அன்று ரயில்வே நிலைக்குழு தலைவர் சி.எம். ரமேஷுக்கு சுதாமா பிரசாத்   அனுப்பியுள்ள கடிதத்தில், “இந்திய ரயில்வே, பாரம்பரியமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், விருந்தினர்களை வரவேற்கும் வகையில் சால்வைகள், ஓவியங்கள், மலர்கள் அல்லது பிற நினைவுப் பரிசுகள் கொடுப்பது வழங்கமானது.  ஆனால், தங்க நாணயம், வெள்ளிக் கட்டி போன்ற நெறிமுறைகளுக்கு எதிரான பரிசுகளை வழங்கியது எனக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது” எனக் கூறி இந்திய ரயில்வேயின் செயலை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இப்போக்கு குறித்து கவலை தெரிவித்த சுதாமா  பிரசாத், “ரயில் பயணத்தில்  பாதுகாப்பற்ற நிலை, ரயில் கட்டண உயர்வு, வசதிக் குறைபாடுகள், அவமானப்படுத்தப்படுவது என பயணிகள் சந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது, நிலைக்குழு உறுப்பினர்களுக்கு இத்தகைய விலையுயர்ந்த பொருட்களை வழங்குவது நெறிமுறைகளுக்கு எதிரானது என்பது மட்டுமல்ல, இது பொதுமக்களின் பிரச்சினைகளை எழுப்பும் எம்.பிக்களை மவுனமாக்கிட ஊழல்படுத்தும் முயற்சியுமாகும்” என்று கூறினார்.

மேலும், ரயில்வேயில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்காமல், ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டு, ஒப்பந்ததாரர்களால் துன்புறுத்தப்படுகிறார்கள்.  அதேபோல், பொது வகுப்பு, உறங்கும் வசதி வகுப்புப் பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு கவுரவமான பயணம் கிடைப்பதில்லை. ஏழை, நடுத்தர வர்க்கத்திற்கான புதிய ரயில்களை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, வந்தே பாரத் போன்ற அதிஉயர் கட்டண ரயில்களை இயக்குவதில்தான் அரசு அதிக கவனம் செலுத்துகிறது.

அதேபோல், இந்திய ரயில்வே நிர்வாகம் நிலைக்குழு கூட்டங்கள் அல்லது அதிகாரிகள் கூட்டத்திற்கு ஆடம்பரமான அய்ந்து நட்சத்திர ஓட்டல்களை ஏற்பாடு செய்யாமல் சாதாரணமான ஓட்டல்களில் நடத்துவதற்கு ரயில்வே நிலைக்குழுத் தலைவர் அறிவுறுத்த வேண்டும்.  நாமெல்லாம் பொதுமக்களின் பிரதிநிதிகள், பொது அறநெறிகள், நெறிமுறைகளைக் கறாராகக் கடைபிடிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ள தோழர் சுதாமா பிரசாத் தனக்கு அளிக்கப்பட்ட தங்கம், வெள்ளி பரிசுகளை நிலைக்குழு உறுப்பினர்கள் முன்பு  திருப்பி அளித்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான தன்னை இது போன்று நடத்தியதற்காக தனது அதிருப்தியையும், கடும் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.  சாதாரண குடிமக்களுக்கு ரயில்வே சேவையை மறுக்கும் மோடி ஆட்சியின் செயல்பாட்டை இது குறிக்கிறது என்றும் விமர்சித்தார்.