பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் அரசே ராமர் கோயிலைக் கட்டி குடமுழுக்கும் நடத்தியது. அதுதான் இந்தியாவின் உண்மையான சுதந்திரத்தை வரையறுக்கும் தருணமாக விளங்குகிறது என மோகன் பகவத்தின் அறிக்கை விவரிக்கிறது. இதன் மூலம் தேசியவாதம், சுதந்திரம் பற்றிய ஆர்எஸ்எஸ்-சின் பார்வை நினைவூட்டப்படுகிறது. இந்திய விடுதலை இயக்கத்தின் உண்மையான வரலாற்றுக்கும் விருப்பங்களுக்கும் முற்றிலும் நேரெதிரானதாக தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது என்பதையும் மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது. ஆர்எஸ்எஸ்-சின் வரலாறு, கருத்தியல் ஆகியவற்றின்படி பார்க்கும்போது, அந்த அமைப்பின் தலைவரிடமிருந்து இத்தகைய அறிக்கையை மட்டுமே எதிர்பார்க்க முடியும்.
மோடி அரசாங்கத்தின் மூலமாக முன்னெப்போதும் கண்டிராத அரசியல் அதிகாரத்தின் பிடியை ஆர்எஸ்எஸ் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறது. ஆதலால் இந்தியக் குடியரசு அமைக்கப்பட்ட, அரசமைப்புச் சட்ட பிரகடனத்தின் 75 வது ஆண்டில், ஆர்எஸ்எஸ்-சின் வழக்கமான கருத்தியல் நிலைப்பாடு, விடுதலை இயக்கத்தின் மரபு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற, ஜனநாயக குணாம்சம் ஆகியவை மீதான உண்மையானதோர் போர் பிரகடனத்திற்கு ஒப்பானதாகும்.
காலனிய அடிமைத்தளையிலிருந்து முழுமையான விடுதலைக்கான ஆற்றல்மிகு தேசிய விழிப்புணர்வையும் அறுதியிடலையும் இந்தியா கண்டு கொண்டிருந்த நேரத்தில், 1925 இல் ஆர்எஸ்எஸ் அமைக்கப்பட்டது. போராட்டத்தின், அணி திரட்டலின் வடிவங்கள் மீதும், பின்-காலனிய சமூக, அரசியல் ஒழுங்கமைவின் குணாம்சம் மீதும், விடுதலை இயக்கத்தின் பலதரப்பட்ட நீரோட்டங்களுக்கிடையே விவாதங்களும் வேறுபாடுகளும் நிச்சயமாக இருந்தன. இந்திய கம்யூனிஸ்டுகளை உருவாக்கிய தலைமுறையான பகத்சிங்கும் அவரது தோழர்களும் சோசலிச இந்தியா என்ற பார்வையைக் கொண்டிருந்தனர்; கம்யூனிஸ்டு தலைமையிலான விவசாய இயக்கம், நிலப்பிரபுத்துவத்தை முழுமையாக ஒழித்துக் கட்டுவதன் பதாகையை பறக்க விட்டது; சாதி அழித்தொழிப்புக்கான உரத்த அழைப்பை அம்பேத்கர் விடுத்த, அதேவேளையில் சுபாஷ் போஸும் நேருவும் திட்டமிட்ட பொருளாதாரத்தை முன்வைத்தனர். ஆனால் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களுடன் கூடிக் குலாவிய, மதவெறி அரசியலை போதித்தும் நடைமுறைப்படுத்தியது இந்துமகாசபை ஆர்எஸ்எஸ் கூட்டணி. பிரிட்டிஷ் ஆட்சியின் பிரித்தாளும் திட்டத்திற்கு துணைசெய்த ஒரே ஒரு கருத்தியல் போக்கும் இந்து மகாசபை, ஆர்எஸ்எஸ் கூட்டணி தான். இதை முஸ்லிம் லீக்-கும் பின் தொடர்ந்தது. உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த காலனிய எதிர்ப்புக் கலகங்கள், புரட்சிகளிலிருந்து தேசப்பற்றுமிக்க ஜனநாயக இந்தியர்கள் உத்வேகம் பெற்றனர். ஆனால் ஆர்எஸ்எஸ்-சின் கருத்தியல் தூண்டுதலும் அமைப்பு மாதிரியும் இத்தாலியின் முசோலினி, ஜெர்மனியின் ஹிட்லரிடம் இருந்து வந்தது.
காலனிய இந்தியாவில் உண்மையான தேசிய விழிப்புணர்வு நாட்டு விடுதலைக்கான உறுதியான காலனிய எதிர்ப்பு வேட்கையை மட்டும் கோரவில்லை. மதங்களின் எல்லைகளைக் கடந்து சமூக ஒருமைப்பாட்டின் வலுவான மானுட பிணைப்பையும் அது கோரியது. நாட்டிற்கு எதிரான தடைகளாக விளங்கும் பார்ப்பனியத்தின் மூலம் ஊட்டி வளர்க்கப்பட்ட, பெரும்பான்மை (பகுஜன்) மக்களை விலக்கி வைத்த, அவர்களை விளிம்பு நிலையில் தள்ளிய, சமத்துவமின்மையை தகுதியாகக் கொண்ட சாதி அடிப்படையிலான படிநிலையை அது நிராகரித்தது. கல்வியிலிருந்து, பொது வாழ்விலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டியவர்களாக, குழந்தை பெறும் எந்திரங்களாக, வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக, தாழ்ந்தவர்களாக பெண்களை நடத்திய ஆணாதிக்க கால் விலங்கையும் அந்த தேசிய விழிப்புணர்வு நிராகரித்தது. காலனிய எதிர்ப்பு தேசியவாத சோதனையில் ஆர்எஸ்எஸ் தோல்வியுற்றது. அது மட்டுமல்ல பார்ப்பனிய சட்டதிட்டத்தோடும் அது ஆழமாகப் பின்னிப் பிணைந்திருந்தது. நவீன இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை நோக்கிய அம்பேத்கரின் பயணம், சமூக அடிமைத் தனத்திற்கான பார்ப்பனிய, ஆணாதிக்க சட்டமான மனு ஸ்மிருதியை தீரமுடனும் உறுதியுடனும் கண்டனம் செய்து தொடங்கியது. ஆனால், ஆர்எஸ்எஸ்ஸோ மனுஸ்மிருதியை ஆரத் தழுவிக் கொண்டது. 'அதில் பாரதிய என' எதுவுமில்லை, அந்நிய கருத்தால் ஊக்கம் பெற்ற ஆவணமென அம்பேத்கரின் தலைமையில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டத்தை அது நிராகரித்ததில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.
பிரிவினையின் பெருந்துயரமும், அதனால் உண்டான மாபெரும் உயிரிழப்புகள், பேரழிவு, இடப்பெயர்வு இருந்தபோதிலும் விடுதலை இயக்கத்தின் மதச்சார்பற்ற, ஜனநாயக சமத்துவ நெறிமுறைகளை ஆர்எஸ்எஸ்-மகாசபையின் கூட்டினால் வலுவிழக்க செய்ய முடியவில்லை. ஆர்எஸ்எஸ் தனிமைப்படுத்தப்பட்டது. மகாத்மா காந்தியின் படுகொலைக்குப் பிறகு பெரிய அவப்பெயரை சம்பாதித்துக் கொண்டது. மேலும் காந்தியின் படுகொலை நேரத்தில் சர்தார் பட்டேலால் அதன் மீது சுமத்தப்பட்ட தடையிலிருந்து வெளியேவர, அரசமைப்புச் சட்டத்திற்கும் தேசிய மூவர்ணக் கொடிக்கும் தனது ஆதரவை அறிவிக்க வேண்டி வந்தது. முதல் பொதுத் தேர்தல் 1952 ஆம் ஆண்டு நடைபெற்றது. சுதந்திர இந்தியாவின் அரசியல்-பொருளாதார திசைவழி மீதான உண்மையானதொரு பொது வாக்கெடுப்பாக அது இருந்தது. அதில் ஆர்எஸ்எஸ் ஆதரவு பெற்ற ஜன சங்கம், பிற இரு இந்து அமைப்புகளான இந்து மகா சபா, அகில பாரதிய ராம்ராஜ்ய பரிசத் ஆகியவை நாடாளுமன்றத்தின் 489 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட அவைக்கு, வெறும் 10 இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
70 ஆண்டுகளுக்குப் பிறகு, அரசமைப்புச் சட்டத்திற்கு அதிகரித்து வரும் ஆபத்தை இந்திய மக்கள் உணர தொடங்கிவிட்டனர் என்பதை 2024 மக்களவைத் தேர்தல்கள் மீண்டும் ஒருமுறை காட்டின. மதச்சார்பற்ற, ஜனநாயக இந்தியாவை மதவெறி பாசிச இந்தியாவாக உருமாற்ற துடிக்கும் சங்கி-பாஜக திட்டத்திற்கு பரவலான எதிர்ப்பின் அடையாளங்களால் நிலை குலைந்து போன சங்கி-பாஜக அமைப்பு விடுதலை இயக்கத்தையே மதிப்பிழக்க செய்யவும் அவமதிக்கவும் முயற்சித்து வருகிறது. இந்து மேலாதிக்கவாத அடிப்படையில் இந்திய தேசியவாதத்தை மறு வரையறை செய்யும் எதிர்க் கதையாடலை உருவாக்கவும் முயற்சித்து வருகிறது. அம்பேத்கரை இழிவுபடுத்தும் அமித் ஷா-வின் கருத்துரையும் இந்தியாவின் உண்மையான சுதந்திரம் எனப்படுகிற மோகன் பகவத் கண்டுபிடிப்பும், விடுதலை இயக்க வரலாறு, அதிலிருந்து எழுந்து வந்த அரசமைப்பு பற்றிய பார்வை, அடித்தளம் மீதான ஒரே நேரத்திலான இருமுனைத் தாக்குதலாக அது பார்க்கப்பட வேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அயோத்தி சர்ச்சையை தீர்ப்பதற்கான சமரச பொறியமைவாகவும், அதேவேளையில், அதுபோன்ற எவ்வித கோரிக்கைகளையும் பிற மசூதிகளுக்கு எதிராக எழுப்புவதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்னும் நோக்கமுடையதாகும். ஆனால், மத வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991 ஐ மாற்றியமைத்து, இந்திய சுதந்திரத்தின் வரலாற்றையும் அதன் பொருளையுமே கூட மறுவரையறை செய்ய சங்கி-பாஜக படையணி உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட சலுகையை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது.
சாமானிய மக்களின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கிற அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி பற்றி பகவத்துக்கு தெரியும். ஆதலால் அவர் ராமர் கோயிலை இந்தியாவின் 'உண்மையான சுதந்திர'த்தின் குறியீடாக மட்டுமின்றி, வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பாதை கோயிலின் வழியாகச் செல்கிறது எனக் கூறி, இந்தியாவின் பொருளாதார சிக்கல்களுக்கான தீர்வாகவும் அதை முன்வைக்கிறார். ஆன்மீக புத்தெழுச்சி, கலாச்சார தேசியவாதத்தின் அடிப்படையிலான பொருளாதார மேம்பாட்டுக்கான அவரது ஆய்வறிக்கைக்கு வலுச் சேர்க்க அவர் இஸ்ரேலை முன்மாதிரியாக பயன்படுத்த முயற்சிக்கிறார்! ஒரு கோடிக்கும் குறைவான அளவு மக்கள்தொகையைக் கொண்ட இஸ்ரேல் போன்ற ஒரு நாட்டுடன், 140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ள உலகின் மிகவும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவை ஒப்பிடவே முடியாது. ஆனால் அதன் உண்மையான அபத்தம் வரலாறில் இருக்கிறது. இஸ்ரேலின் வளம் எனப்படுவது பாலஸ்தீனத்தின் மீதான குடியேற்ற காலனிய கட்டுப்பாட்டாலும் அமெரிக்காவின் தங்குதடையற்ற ஆதரவாலும் இயக்கப்படுகிறது. ஒரு காலனியாக, தேச விடுதலைக்கான நீண்ட நெடிய காலனிய எதிர்ப்பு போராட்டம் நடத்திய, ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் தொடரும் இன்றைய எதார்த்தமாகக் கொண்டுள்ள, இந்தியாவினுடைய சொந்த வரலாற்று ரீதியான அவலநிலையை, காலனிய கொள்ளை, இனப்படுகொலை வன்முறையின் இன்றைய மிகப்பெரிய குற்றவாளியுடன், அதிர்ச்சிகரமாக ஒப்பிடுவதை விட பெரிய கேலிக்கூத்து இருக்க முடியுமா?
பல பத்தாண்டுகால வீரம் செறிந்த போராட்டங்கள், எண்ணற்ற விடுதலைப் போராளிகளின் மாபெரும் தியாகங்கள், பழங்குடியினரின் புகழ்மிக்க கலகங்கள், விவசாயிகளின் போர்க்குணம்மிக்க போராட்டங்கள், தொழிலாளர் வர்க்க போராட்டங்கள், பரந்த மக்கள் எழுச்சிகள் வழியாக பெற்ற சுதந்திரத்தின் 77 ஆண்டுகளுக்குப் பிறகு, அயோத்தியில் மற்றொரு ராமர் கோயிலை கட்டிய பிறகு தான் உண்மையான சுதந்திரம் நிறுவப்பட்டுள்ளது என ஆர்எஸ்எஸ் தற்போது கூறுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75வது ஆண்டுவிழாவில், அந்த அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்த முதன்மை சிற்பியின் பெயரையும் கருத்துக்களையும் உச்சரிப்பது 'நாகரீக பாணி' ஆகிவிட்டது என உள்துறை அமைச்சர் கூறுகிறார். அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் பொறிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை, சோசலிச என்ற வார்த்தைகளை நீக்குவதற்கான விண்ணப்பத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்ட போதிலும், நல அரசின் குறிக்கோள்களை மறுஉறுதி செய்தபோதிலும், விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் கைகளில் தாரைவார்க்கவும், வாரத்திற்கு 90 மணி நேரங்கள் வேலை செய்ய வேண்டும் என அதிகரித்து வரும் கார்ப்பரேட்டுகளின் கூச்சல்களுக்கு மத்தியில், தொழிலாளரை தண்டிக்கும் சட்டத் தொகுப்புகள் மூலமாக தொழிலாளர் வர்க்கத்தை அடிபணிய வைக்கவும் இந்த அரசாங்கம் தீர்மானகரமாக உள்ளது. நமது முன்னோர்கள் விடுதலையை வென்றார்கள். ஆர்எஸ்எஸ்-சின் பாசிசக் கருத்தியலை நிராகரித்து, நம்முடைய அரசமைப்புச் சட்டத்தை நமக்குத் தந்தார்கள். இன்று விடுதலை இயக்க வரலாற்றின் மீது போர் தொடுக்க, புகழ்மிக்க தேசிய விழிப்புணர்வின் போக்கில் நாம் பெற்ற பலன்கள் அனைத்தையும் மாற்றிவிட, ஆர்எஸ்எஸ் அரசு அதிகாரத்தில் ஆழமாக வேரூன்றி விட்ட நிலையில், இந்திய மக்களாகிய நாம் இந்த சதியினை முறியடிக்க நமது அனைத்து வலிமையையும் நிச்சயமாக வரவழைத்துக் கொள்ள வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)