நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மோடியின் மூன்றாவது ஆட்சிக் காலத்தின் முதல் நிதிநிலை அறிக்கையை முன்வைத்திருக்கிறார். உணவுப்பொருள் பணவீக்கம் அதிகரிப்பு, வளர்ச்சி மந்தம், வேலை இழப்பு அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு சரிவு, நுகர்வு குறைவு, விவசாயிகள் போராட்டம், அமெரிக்காவின் புதிய டிரம்ப் நிர்வாகம் சுய-தற்காப்பு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வளர்ந்துவரும் நாடுகளின் ஏற்றுமதியைப் பாதிப்பது போன்ற உலகளாவிய நிச்சயமற்ற நிலைமைகள்  என்ற சூழலில் இந்த நிதி நிலை அறிக்கை வந்துள்ளது.   ஏழைகள் மூச்சுவிடும் வகையில், பேராசைப் பிடித்த பணக்காரர்களுக்கு வரிவிதிக்கும் நிதிநிலை அறிக்கையாக இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பணக்காரர்களுக்கான அரசு என்று பெயர் பெற்ற  இந்த அரசு தன்  அடையாளத்தைச் மாற்றிக் கொள்ள வில்லை.  

உண்மை என்னவென்றால், பொருளாதாரத்தின் உண்மையான நிலவரம் குறித்த  எல்லா கருத்துகளையும் இந்த நிதிநிலை அறிக்கை ஏற்க மறுக்கிறது.

நடுத்தர வர்க்கத்தினருக்கு நேரடி வரியிலிருந்து ஓரளவு நிவாரணம்  கிடைக்கிறது. ஆனால், தொழிலாளர், விவசாயிகள்,  பெரிய அளவிலான  உழைக்கும் மக்களுக்கும் வலியைக் குறைக்கத் தேவைப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை. அதேபோல, நல்வாழ்வு  திட்டங்கள் மூலமாக  நிவாரணம் அளிக்கும் அறிவிப்புகளும் இல்லை. இப்பிரிவு மக்கள் படும் துன்பம் நீடிக்கும்.  பெருநிறுவனங்கள், பணக்காரர்கள், செல்வந்தர்கள் மீது வரிகளை உயர்த்த அரசாங்கத்திற்கு  அரசியல் விருப்பம் இல்லை என்பதால், நல்வாழ்வு திட்டங்கள், சமூக, விவசாய, கிராமப்புர துறைகளுக்கான செலவினங்களைக் குறைப்பதன் மூலம், கணக்கு வழக்கை சரிக்கட்ட மட்டுமே இந்த நிதிநிலை அறிக்கை முயற்சிக்கிறது.  

கடந்த 2024-25 ஆண்டின்  மத்திய துறைத் திட்டங்கள் மற்றும் மத்திய பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களுக்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ. 20,22,154 கோடியாக இருந்தது. ஆனால், உண்மையான செலவினங்களின் திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ. 19,28,176 கோடியாக, அதாவது ரூ. 93,978 கோடி அளவுக்குக் குறைந்துள்ளது.

2024-25-இல் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டம், தேசிய கிராமப்புர குடிநீர் திட்டம் போன்ற முன்னோடித் திட்டங்களுக்கான திருத்தப்பட்ட செலவினங்கள், கடந்த ஆண்டு ஒதுக்கீட்டை விட, அதிர்ச்சி தரும் வகையில் 50% க்கும் கீழே குறைந்துள்ளது.

மகாத்மா காந்தி கிராமப்புர வேலைஉறுதித் திட்டம், கிராமப்புர சாலைத் திட்டம், அட்டவணை சாதியினருக்கான உதவித்தொகை போன்ற திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் எதிர்பார்த்ததை விட குறைவாக உள்ளன. சுகாதாரம், பெண்கள், குழந்தை வளர்ச்சி போன்ற துறைகளில் தேவையான அளவு செலவினங்கள் அதிகரிக்கப்படவில்லை. அடுத்த ஆண்டுக்கான உணவு, பொது விநியோகத் துறைக்கான ஒதுக்கீடும் குறைவாகவே உள்ளது.

திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகத்திற்கு கடந்த ஆண்டு ரூ. 1,435 கோடி ஒதுக்கீடு வழங்கப்பட்டது, ஆனால் கடந்த ஆண்டில் செய்யப்பட்ட செலவு ரூ. 669 கோடியாக மட்டுமே இருந்தது.

சுகாதாரத் துறையின் உண்மையான செலவினங்கள் கடந்த ஆண்டு முன்மொழிவுகளை விட குறைவாக இருந்தன. ஆஷா, அங்கன்வாடி, மதிய உணவுத் தொழிலாளர் போன்ற திட்டத் தொழிலாளரது ஊதிய உயர்வும், அவர்களை ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிதிநிலை அறிக்கையில் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

  அரசாங்கம் காப்பீட்டுத் துறையில் 100% நேரடி வெளிநாட்டு முதலீட்டை (FDI) அனுமதித்துள்ளது, அதே நேரத்தில்  பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு இந்த ஆண்டு 15,684 கோடியில் இருந்து 1,242 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளையும் பொதுமக்களையும் பெருந்தொழில் காப்பீட்டு நிறுவனங்களின் கரங்களில் ஒப்படைப்பதாகும். இது கவலைக்குரிய போக்காகும்.

பீகார் நீண்ட காலமாக சிறப்பு மாநில தகுதியை கோரி வருகிறது. பீகாருக்கு சிறப்புத் தகுதி வழங்குவோம் என்று மோடியும் பாஜகவும் வாக்குறுதி அளித்திருந்தனர். இந்த நிதிநிலை அறிக்கையில் மீண்டும் அந்த வாக்குறுதி மீறப்பட்டுள்ளது. தாமரை விதைகளுக்கான (மக்கானா) வாரியம் போன்ற திட்டங்கள் மாநில வளர்ச்சிக்கு சற்றுக்கூட போதுமானதில்லை.

கடந்த ஆண்டு, மூலதன செலவினங்கள் அதிகரித்ததற்காக அரசாங்கம் தன்னைத்தானே பாராட்டிக்கொண்டது. ஆனால் இந்த செலவினங்களின் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் 1.84 லட்சம் கோடி ரூபாய்  என்ற மிகப்பெரிய அளவு குறைவாக உள்ளது.

எந்தத் துறைக்கு முன்னுரிமை தர வேண்டுமோ அதனை விடுத்து முன்னுரிமை தேவையில்லாத துறைகளுக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது என்பதை இது காட்டுகிறது.  பட்ஜெட்டில் உள்ள கணக்குகள் காட்டுவது என்னவென்றால், 2025-26 நிதியாண்டில் மொத்த பட்ஜெட் செலவினங்களில் ஏற்படும் மொத்த அதிகரிப்பில் சுமார் 40 சதவீதம் கடந்த காலத்தில் வாங்கிய கடன்களுக்கான கூடுதல் வட்டிச் செலவினங்களுக்குப் போய்விடுகிறது. இதனால் அரசாங்கம் செலவு செய்யக் கூடிய நிதி்யின் அளவு சுருங்கி வருகிறது. நல்வாழ்வுத் திட்டங்களுக்கான செலவினங்களைக் குறைப்பதன் மூலம் ஏழைகள் மேலும் நெருக்கடிக்கு ஆளாவார்கள். அதே நேரத்தில், நடுத்தர வர்க்கத்தினருக்கான வருமான வரியில் தளர்வு அறிவிக்கப்பட்ட போதிலும், 2025-26 நிதியாண்டில் ஜிஎஸ்டி, வருமான வரியிலிருந்து பெறப்படும் வருவாய் வசூல்,  பெரு நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் வரி வசூலை விட அதிகமாகயிருக்கும் என்பதை வரி வருவாய் வசூல் குறித்த தரவுகள் காட்டுகின்றன. 

இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைத்த  நிதிநிலை அறிக்கை, மோடி அரசாங்கம் தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் பெரு நிறுவனத் துறைக்கு ஆதரவாக பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்து வருவதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது. தொழிலாளரது உண்மையான ஊதியங்கள் தொடர்ந்து குறைந்து வருவதும், பெரும்பான்மையானவர்களது வேலைகளுக்கான வாய்ப்பு குறைந்து வருவதும்  இவற்றுடன் சேர்த்துப் பார்க்கப்பட வேண்டிய விலைவாசி உயர்வு பிரச்சினையும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. பெருநிறுவனங்களின் வரிக்குப் பின் லாபம் நான்கு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ள அதே நேரத்தில், முக்கியமாக தனியார் துறை அளிக்கும் உண்மையான ஊதியங்கள் குறைந்துள்ளன. ஆனால், பெருநிறுவனங்கள் மொத்தமாக அளிக்கும் வரி தொகை, இப்போது அறிவிக்கப்பட்டுள்ள  தனிநபர் வருமான வரியை விட குறைவாக இருந்தும் கூட, நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வரும் கார்ப்பரேட் வரியை அதிகரிக்க  பட்ஜெட்  மறுக்கிறது.

தொழிலாளருக்கு கிடைக்கும் வேலைகள் குறைந்து வர, அவர்களது ஊதியமும் குறைந்துவர, அதே நேரம் பெருந்தொழில் நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பதற்கு வழி வகுத்து, பொருளாதார ஏற்றத்தாழ்வு மேலும் இந்தியாவில் அதிகரிக்கும் என்பதை இந்த நிதிநிலை அறிக்கை உறுதி செய்திருக்கிறது. 

மத்திய கமிட்டி, சிபிஐ எம்எல்  (லிபரேஷன் )