இப்போது பிரயாக்ராஜ் என்ற பெயரிலுள்ள அலகாபாத்தின் கங்கை, யமுனை நதிகள் கூடுமிடத்திலும் அதே போன்ற மற்ற இடங்களான ஹரித்துவார் உஜ்ஜைனியிலும் குறிப்பிட்ட சில காலத்திற்கு ஒருமுறை சாமியார்களும், இந்து மதத்தின் மீது நம்பிக்கையுள்ள சாதாரண மக்களும், இந்து மதத்தின் பல்வேறு பிரிவுகளிலுள்ள ஆன்மீக அன்பர்களும் ஒன்றுகூடுவது, புனிதப் பயணம் சென்று வருவது என்பது பழங்காலந்தொட்டே இருந்து வரும்  பழக்கமாகும். ஆரம்பகால குறிப்புகள்படி கும்பமேளா ஒரு தத்துவார்த்த நிகழ்வாகும். ஆன்மீகச் சொற்பொழிவாலும் விவாதங்களாலும் ஆதிக்கம் செலுத்தப்பட்டிருந்தது. காலப்போக்கில் அது ஒரு ஆற்றங்கரைத் திருவிழாவாக உருமாற்றம் அடைந்தது. இப்போது மோடி-ஷா-யோகி ஆட்சியில், ஒரு மத அரசியல் தோற்றமாக, சாதாரண இந்துக்களின் மத நம்பிக்கையைப் பயன்படுத்தி கார்ப்பரேட் இந்துத்துவாவின் அதிகாரத்தை முன்னிறுத்தவும், இந்து ராஜ்ஜியம் எனும் மத வெறி பாசிசத்தின் நிகழ்ச்சிநிரலை ஊக்குவிப்பதற்குமான ஒரு மேடையாகவும் அது மாறியுள்ளது. அந்தப் போக்கை தற்போதைய மகா கும்பமேளா அபாயகரமான நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

பிப்ரவரி 5ம் தேதி டெல்லியில் தேர்தல் நடக்கவிருந்த நிலையில், சங்பரிவார் கூட்டம் ஒட்டு மொத்த பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவையும் ஒரு மிகப்பெரிய விளம்பர மேடையாகப் பயன்படுத்திக் கொண்டது. மேலும் பிப்ரவரி நிதிநிலை அறிக்கைக்கான மாதமாகும். கும்பமேளாவை மிகப் பெரிய வெற்றியாகக் காட்டி இருண்ட பொருளாதார நிலைமைகளில் இருந்து மக்களின் கவனத்தை திருப்பிட இதை விட நல்ல வாய்ப்பு மோடி அரசுக்கு கிடைக்குமா என்ன? கும்பமேளாவை அற்புதமான மிகப் பெரிய நிர்வாகச் செயல்பாடு என்று பரப்புவதற்காக மோடி-யோகி இரட்டை எஞ்சின் நிர்வாகம், பல ஆயிரம் கோடி ரூபாய்களை அரசு கருவூலத்திலிருந்து அள்ளி வீசியிருக்கிறது. இந்துக்கள் அல்லாதவர்களை, குறிப்பாக இஸ்லாமியர்களை ஒட்டுமொத்த கும்பமேளா நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்க சங்கிகள் மிகக் கடுமையாக கோரிவரும் போதும், கும்பமேளா “சமூக சமத்துவத்திற்கான” ஒரு பெரிய விழாவாக விளம்பரப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், ஜனவரி 29 அன்று கூட்ட நெரிசலில் நசுங்கி ஏற்பட்ட துயரத்தைத் தொடர்ந்து (மூன்று இடங்களில் இதுபோன்ற கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன) அவர்கள் செய்த பரப்புரை பலூனில் ஓட்டை விழுந்து, உண்மை நிலை உலகுக்கு தெரிந்துவிட்டது.

கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் எண்ணிக்கை குறைந்தபட்சம் 50 இருக்கும் என்று சொல்லப்படுகிறது. காயமடைந்தவர்கள் எண்ணிக்கையை கணக்கிட முடியாது. பல கூடாரங்கள், கடைகள் தீப்பிடித்து எரிவது திரும்பத் திரும்ப நடக்கின்றன. இவையெல்லாம், இந்தப் பெரிய விழாவை நிர்வாகம் செய்தது பற்றி தனக்குத்தானே பாராட்டிக் கொண்ட  அரசாங்கத்தை அம்பலப்படுத்தி விட்டது. இந்தக் கூட்ட நெரிசல் சம்பவங்கள் முழுமையான  நிர்வாகத் திறனின்மைக்கு  ஒரு அதிர்ச்சிதரும் சாட்சியாக இருக்கிறது. சாதாரண பக்தர்களைப் பற்றி கொஞ்சம்கூட கண்டுகொள்ளாமல், முக்கியமான நபர்களுக்கு வசதி செய்து கொடுக்கவும் முன்னுரிமைகள் வழங்குவதற்குமே அதிக கவனம் செலுத்தப்பட்டது. கூட்ட நெரிசல் கொடுமையைக் காட்டிலும் அதிர்ச்சியளிக்கக் கூடியது என்னவென்றால், உண்மையை மூடி மறைக்கவும் ஒன்றுமே நடக்காததுபோல் காட்டவும் தனது அடிமை ஊடகங்களை வைத்துக் கொண்டு அரசாங்கம் எடுத்த முயற்சிகள்தான். ஒரு சில நேர்மையான ஊடகங்கள் தவிர அடிமை ஊடகங்கள், கூட்ட நெரிசல் கொடுமையை இதுபோன்ற விழாக்களில் ஏற்படும் ஒரு சிறிய, தவிர்க்க முடியாத விபத்துகள் என்றன. அதைவிட அதிர்ச்சியானது என்னவென்றால், கும்பமேளா கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் முக்தி அடையும் பாக்கியம் பெற்றவர்கள் என்று கொஞ்சம்கூட கூருணர்வேயில்லாமல் இந்து ராஜ்ஜிய சங்கி ஒருவர் கூறியதுதான்.

மோடி அரசை வழிநடத்தும் வணிக-மத-அரசியலின் முக்கூட்டை முன்னிறுத்துவதற்கான ஒரு மேடையாக இந்த பிரயாக்ராஜ் கும்பமேளா மாறியுள்ளது. யோகி ஆதித்யநாத்தும் ராம்தேவ்வும் யோகக் குளியல் செய்த படத்தையும் ஒரு டஜன் சாமியார் சூழ்ந்து கொண்டு அமித்ஷாவை அபிசேகம் செய்ய, அவர் ஆற்றில் மூழ்கிக் குளித்த படத்தையும் யோகி ஆதித்யநாத் அலுவலகமே வெளியிட்டது. கும்பமேளா விழாவை இந்தியாவின் ‘ஆன்மீக அடிக்கட்டுமானம்’ என பெரிதாக விளம்பரப்படுத்தி, ‘இஸ்கான்’ அமைப்புடன் இணைந்து கொண்டு கவுதம் அதானி, புனித நீராட வந்தவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கினார். அதேவேளை, மூட நம்பிக்கைக்கு எதிராக ஆன்மீகப் பரப்புரை செய்த ஆச்சார்யா பிரசாந்த் என்கிற ஆன்மீக சொற்பொழிவாளரை சன்னியாசிகள் சிலர் சேர்ந்து அடித்து நொறுக்கினர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, 25 பேர் கொண்ட ‘ஆன்மீக அறிஞர்கள்’ குழு ஒன்றினால் தயாரிக்கப்பட்ட ஒரு ‘அகண்ட இந்து ராஜ்ஜிய’ த்திற்கான 501 பக்கங்கள் கொண்ட ஒரு வரைவு அரசியலமைப்பு அறிக்கை கும்பமேளாவில் வெளியிடப்பட்டது. வரைவு அறிக்கை, இந்துத்துவ வேதங்களான இராமாயணம், கிருஷ்ண உபதேபசங்கள் முதல் மனு தர்மம் மற்றும் சாணக்கியாவின் அர்த்த சாஸ்திரம் வரை அடிப்படையாகக் கொண்ட, இஸ்லாமியர்களுக்கு ஓட்டுரிமையை மறுக்கும் மய்யமான ஒரு அதிபர் ஆட்சி முறையை முன்வைக்கிறது.

இந்து மதத்தில் நம்பிக்கை கொண்ட பல கோடி பேர்களுக்கு கும்பமேளா நம்பிக்கையின் அடிப்படையிலான ஒரு விழா. ஆனால், சங்கிகளுக்கும் இந்து ராஜ்ஜியத்தை முன் வைக்கும் ஒட்டுமொத்த கும்பல்களுக்கும் கும்பமேளா ஒரு தெளிவான அரசியல் திட்டம். மதத்தை அரசியலுடன் இணைக்கும்போது, ஆதிக்க சக்திகளின் அரசியல் நலன்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.  சாதாரண மக்களின் நம்பிக்கைகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. மதத்தை அரசியலாக்கி சுரண்டுவதால் ஏற்படும் பேரழிவுமிக்க விளைவுகளை கும்பமேளா துயரம்  எப்போதும் நினைவூட்ட வேண்டும்.

கும்பமேளா துயரத்திற்கு மோடி-யோகி 'இரட்டை என்ஜின்' ஆட்சி வெளிப்படையாக பொறுப்பேற்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் போதுமான இழப்பீடு வழங்க வேண்டும். அரசமைப்பின் பாதுகாவலராக இந்திய உச்ச நீதிமன்றம், இந்து ராஷ்ட்ர சம்விதான் நிர்மல் சமிதி என்ற அமைப்பால் துவக்கி வைக்கப்பட்டுள்ள இந்திய அரசமைப்பு எதிர்ப்பு பிரச்சாரத்தை கணக்கில் கொண்டு, சமீபத்தில் அது வெளிப்படுத்திய அரசமைப்பு எதிர்ப்பு சதித்திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். நாடாளுமன்றத்தில் அமித் ஷா தெரிவித்த இழிவான கருத்துகள் ஏதோ வாய்தடுமாறி திடீரென சொல்லப்பட்டவை அல்ல என்பது இப்போது அனைவருக்கும் மிகத் தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். அரசமைப்பு மற்றும் குடியரசுக்கு எதிரான சதி ஒன்று திரண்டு வருகிறது, இறையாளுமை கொண்ட இந்தியாவின் சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு எனும்  அரசமைப்பு பிரகடனத்தில் பற்றுறுதி கொண்ட இந்திய மக்கள் இத் தாக்குதலை முறியடிக்க ஒன்று திரள வேண்டும்.