பெரியார் திராவிட கழகத்தின் தோழர் விடுதலை அரசு ஆற்றிய உரையிலிருந்து.

பொதுவாக பாசிசம் என்பதற்கு பதிலாக காவி பாசிசம் என்று அடைமொழி கொடுத்து இந்த மாநாடு நடத்தப்படுவது சிறப்பானதாகும். நான் இங்கு பெரியார் என்ற அடையாளத்தோடு வந்திருக்கிறேன். நம்மிடைய பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால், மோடி நம்மையெல்லாம் ஒன்றிணைத்திருக்கிறார். தமிழகத்தின் சாமானிய மக்களுக்கு பாஜகவை தோற்கடிக்க முடியும் என்ற மறு உறுதியை கொடுக்கக்கூடிய வரலாற்று கடமை நம் போன்ற இயக்கங்களுக்கு இருக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் பெரியசாமி ஆற்றிய உரையிலிருந்து...

எட்டு ஆண்டு கால பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அரசியலமைப்புச் சட்ட நிறுவனங்களை செயல்படாமல் ஆக்கியுள்ளதையும் பல்வேறு அறிவுஜீவிகள், பத்திரிகையாளர்கள், செயல் பாட்டாளர்களை சிறையில் அடைத்து வைத்துள் ளதையும் நாம் அறிவோம். அமித்ஷா தமது கட்சியின் அகில இந்திய கூட்டம் ஒன்றில் அடுத்த 40 ஆண்டுகள் பாஜக ஆட்சி தொடரும் என்று அறிவிக்கிறார்.அது மாத்திரம் அல்ல, தமிழ்நாடு உட்பட பல முக்கிய மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்போம் என்றும் அறைகூவல் விட்டிருக்கிறார். இடதுசாரிகள், ஜனநாயக சக்திகள் எப்பாடு பட்டாவது அதை தடுத்து நிறுத்த வேண்டும்.

பச்சை தமிழகம் தலைவர் தோழர் சுப. உதயகுமார் ஆற்றிய உரையின் சுருக்கம்.

நம்முடைய நாடு மிக நெருக்கடியான தருணத்தில் இருக்கிறது. இந்த நெருக்கடியான தருணத்தில் சிபிஐ(எம்எல்) கட்சி மிக முக்கியமான மாநாட்டை நடத்துகிறது. இந்திய சமூகத்தை பாதுகாப்பதற்காக சரியான தருணத்தில் இக்க(மாலெ) எடுத்துள்ள இந்த முயற்சியை மனதாரப் பாராட்டுகிறேன். சில தினங்களுக்கு முன்பாக சங்கிகள் 'தேசத்தின் தந்தை வீர சவார்க்கர்' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி ஒன்றை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்கள். யார் இந்த தேசத்தின் தந்தை? பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ஐ மாற்றுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன் வைத்திருக்கிறார்.