ஆர்யான் கான் பலிகடாவா?

தேசிய போதைப்பொருள் தடுப்புத் துறை (NCB) யால் எந்த ஒரு போதை மருந்துகளும் ஆர்யான் கானிடமிருந்துகைப்பற் றப்படவில்லை, என்றாலும்கூட அவர் சிறையில் உள்ளார். ஏன்? இந்தக் கேள்வியைத் தான் ஒவ்வொரு நல்ல இந்திய குடிமகனும் எழுப்ப வேண்டும் - ஏனென்றால், ஒரு குடிமகனை அநியாயமாக குற்றவாளியாக்கி, சட்டம் மற்றும் அரசியலமைப்பை கேலிக்குள்ளாக்கும் அரசின் செயலை இன்று நாம் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தால், நாளை அதுவே சட்டமாகும். அதன் காரணமாக இந்தியா அதன் பலிகடா ஆகும்.

தனக்கு எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை என தேசிய குற்றப் பதிவேடுகள் துறை (NCRB) விளக்கம் சொல்கிறது. ஆனால், பிஜேபியில் பதவி வகிக்கும் மனிஷ் பனுஷாலி மற்றும் சந்தேகத்திற்கிடமான மலேசியத் தொழிலதிபர் கே கே கோசாவி ஆகியோர் ஆர்யானின் கைதில் தீவிர பங்காற்றியது, இந்த விளக்கத்தை பொய்யாக்குகிறது. இருவருமே ழிசிஙிக்கு சம்பந்தமில்லாத தனிநபர்கள். உண்மையில், கோசாவி ஒரு மோசடி வழக்கில் பூனா காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்டவர். அப்படியிருக்கும்போது, திடீர் சோதனை மற்றும் கைது நடவடிக்கையின் போது அனைத்தையும் தீர்மானிப்பவர்களாக, இவர்களை ஏன் ழிசிஙி அனுமதித்தது?

இந்தியாவினுடைய நீதி வழங்கும் அமைப்பின் முக்கிய கொள்கைகளில் ஒன்று, "சிறையல்ல; பிணை விடுப்பே விதி" என்பதாகும். வருத்தமான விஷயம் என்ன வென்றால், இந்த விதி ஏழைகள் மற்றும் அரசியல் கைதிகளின் விஷயத்தில் அடிக்கடி மீறப்படுகிறது. போதை மருந்துகளை அவர் வைத்திருந்தார், உட்கொண்டார், அல்லது விற்றார் என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லாத போது, ஏன் ஆர்யனுக்கு பிணை விடுப்பு மறுக்கப்பட்டது? நீதிபதி கொடுத்த தர்க்க முறை ஆபத்தானது. ஆர்யானிடம் போதை மருந்துகள் கைப்பற்றப்படவில்லை என நீதிபதி ஒப்புக் கொண்டார்; ஆனால் அவருடைய நண்பர் அர்பாஸ் வசம் சில போதை மருந்துகள் இருந்ததால், ஆர்யான் நினைத்திருந்தால் அந்த போதை மருந்துகளை அவர் பெற்றிருக்கலாம், உட்கொண்டிருக்கலாம் என்றும், ஆகவே போதை மருந்துகளை அவர் "தெரிந்தே வைத்திருந்தார்" என்று கருதலாம் என்று நீதிபதி சொன்னார். இந்தியாவின் நீதிமன்ற வளாகங்களில் இப்படிப்பட்ட வாதங்களை முன்வைப்பதற்கு அனுமதிப்பது கவலைப்பட வேண்டிய விஷயமாகும். இதற்கு அர்த்தம் என்னவென்றால், ஒருவர் எதிர்காலத்தில் அரசுக்கு எதிராக 'ஏதோ ஒன்று செய்வார்'; அல்லது 'அப்படிப்பட்ட வர்களோடு தொடர்பில் இருந்தார்' என்ற அடிப்படையில் குற்றவாளியாக ஆக்கப்படுவார் என்ற சர்வாதிகாரத்தின் முத்திரை பதித்த நீதி வழங்கும் முறைமையின் நிலைக்குத் தாழ்ந்து விட்டோம் என்பதாகும்.

இந்தியாவில் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பது போல, உண்மையிலேயே நீதி தேவதை கண்ணை கட்டிக் கொண்டிருக்கிறாரா? அல்லது மற்றவர்களை விட்டுவிட்டு, சிலருக்கு மட்டும் சாதகமாகக் கண்கட்டை  விலக்கி எட்டிப்பார்க்கிறாரா? ஜாமியா மாணவர்கள் மீது  துப்பாக்கியால் சுட்ட வெறுப்பு மனங்கொண்ட நபர், பிணை விடுப்பு பெற்ற அதே வேளையில், ஆர்யானுக்கு அது ஏன் கிடைக்கவில்லை என்று தெரிந்து கொள்ள  நாம் கேட்கவேண்டும். "சிறையல்ல; பிணை விடுப்பே விதி" என்ற கொள்கையின் படி, ஒரே நாளில் அர்னாப் கோஸ்வாமி பிணை விடுப்பைப் பெற்றார், ஆனால் அதே கொள்கையின்படி, பிணைவிடுப்பு ஆர்யான்கானுக்கு அல்லது சித்திக் கப்பனுக்கு ஏன் மறுக்கப்பட்டது?

அர்பாஸ்-ஸின் வசம் 6 கிராம் கஞ்சா இருந்ததென்று பெரும் கூச்சலிடும், மோடியின்  பிரச்சார ஊடகக் குழுமங்கள், குஜராத்திலுள்ள அதானி துறைமுகத்தில் 3 ஆயிரம் கிலோ (ரூ.21000 கோடி), வீரியமிக்க போதை மருந்தான ஹெராயின் கைப்பற்றப்பட்டதைப் பற்றி ஏன் மௌனம் சாதிக்கின்றன? பிரதம மந்திரியின் கள்ளக் கூட்டாளி மற்றும் நிதியளிப்பவர் அதானி என்பதால் தானோ?

ஹிந்தி திரைப்படத் துறையின் மிகப்பெரிய நபரான ஷாருக்கானின் மகன், ஆர்யான் என்ற காரணத்தால் அவருக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை, அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அதைப்போல, ஆர்யான் ஷாருக்கானின் மகன் என்பதாலேயே பாதிப்பை எதிர் கொள்ளவும் கூடாது. இந்தியா முழுவது முள்ள ஜனநாயகத்தை நேசிக்கும் மக்கள் இன்று பின்வரும் கேள்வியை எழுப்ப வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்: அவரு டைய தந்தையை இலக்காக்க, இந்த ஆட்சியாளர்களால் ஆர்யான் பலிகடா ஆக்கப்படுகிறாரா? "அவருடைய பெயர் கான்" என்பதாலேயே, ஷாருக்கான் இலக்காக்க படுகிறாரா? (அதாவது அவர் மோடியின் ஆட்சியால் வெறுக்கப்படும், முஸ்லிம் சமூகத்தை சார்ந்தவர்) மேலும், இந்தியர்களின் இதயத்தில் அவருக்கு உயர்ந்த இடம் உள்ளது என்பதாலா? மற்ற பல்வேறு இந்திய திரைப்பட நட்சத்திரங்கள் போலல்லாது, அதிகாரத்திற்கு மண்டியிட அவர் மறுத்தார்; ஆட்சியாளர்களுக்கு சேவை செய்ய, அவர்களைத் திருப்திப்படுத்த, பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் ஆகியோருடன் சுயமி(செல்ஃபி)க்களுக்காக நிற்பதற்கு மறுத்தார் என்பதாலா? 2015ல் உள்ளதை உள்ளபடி, உண்மையை உரக்கச் சொன்னார்; மேலும் உண்மையிலேயே இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என தெளிவாக குறிப்பிட்டார் என்பதாலா?

ஷாருக்கானின் மகனாக இல்லாமல், ஆர்யானை ஒரு சாதாரண குடிமகனாக நாம் கருதினாலும்கூட, நாம் கவலை கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஒருவரை கைது செய்வதன் மூலம், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு பயன் கிடைக்கும் என்பதாலேயே, ஒரு சாதாரண இளைஞன், அவர் செய்யாத குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு காலவரையின்றி சிறையில் அடைக்கப்படலாம் என்றால், அதைப்பற்றி நாம் அனைவரும் கவலை கொள்ள வேண்டும். ஏனென்றால், நாளை அந்த சாதாரண குடிமகன் நாமாகக் கூட இருக்கலாம். இன்று ஆர்யன் எதிர்கொள்ளும் அநீதி என்பது அவருடைய சொந்தப் பிரச்சினை மட்டுமல்ல, அல்லது அவருடைய குடும்பத்தின் தனிப்பட்ட பிரச்சனை அல்ல. மாறாக அது ஒரு குடிமகனின் உரிமை மீறல் சம்பந்தப்பட்டதாகும். எனவே, இந்தியா வின் ஒவ்வொரு உணர்வுபூர்வமான குடிமகனின் பிரச்சனையாகும். இன்று நாம் அமைதியாக இருந்தோமானால் நாளை எதுவும் செய்ய இயலாதபடி, மிகவும் தாமதமாகிவிடும்.

-அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் (AIPWA)

-அகில இந்திய மாணவர் கழகம் (AISA)

-புரட்சிகர இளைஞர் கழகம் (RYA)