சிங்காரச் சென்னையா?

சீர் கெட்டச் சென்னையா?

செந்தில்

இந்த வருடத்தின் முதல் பெருமழை 06.11.2021, சனி அன்று ஆரம்பித்தது. ஞாயிறு காலை பொழுதுகளில், சென்னை நகர வீதிகள் வெனிஸ் நகரம் போல காட்சியளித்தன. கார்களும், பேருந்துகளும், படகுகள் போல நீரில் சென்றன. சென்னை எழும்பூர் மற்றும் மத்திய ரயில் நிலையம் வந்து சேர வேண்டிய ரயில்கள், பல மணி நேரக் கால தாமதமாக வந்தன. வானிலை ஆய்வாளர்கள் கணித்தப்படியே, ஒரு சில நாட்களில் அடுத்த பெருமழை, புதன் மதியம் துவங்கி வியாழன் மதியம் வரை, தீராத வெஞ்சினத்துடன் கொட்டியது. தாழ்வான பகுதிகள், நீர் நிலைகளின் அருகில் இருக்கும் பகுதிகள், தண்ணீர் வடிய இயலாத பகுதிகள் எங்கும் வெள்ளப்பெருக்கு, கடல் போல் காட்சி அளித்தன.

வேலைக்கு செல்பவர்களும் வீட்டிற்குத் திரும்புபவர்களும் வெளியூரிலிருந்து வந்தவர் களும் பெரும் அவதிக்குள்ளானார்கள். காய்கறி களும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ஒரே நாளில் பல மடங்கு உயர்ந்தது. தக்காளி ஒரு கிலோ 150 ரூபாய்க்கு சென்றது. பல பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து, மக்களின் அன்றாட வாழ்வை புரட்டிப் போட்டது. ஏழைகள், நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்கள் என அனைத்துப் பிரிவு மக்களும் பாதிக்கப்பட்டனர். என்றாலும்கூட, குடிசைகளில் வாழ்பவர்களும், மிக நெருக்கடியான பகுதிகளில் உள்ள ஏழைகளும், படுமோசமான பாதிப்புக்கு உள்ளானார்கள். உணவு, உடை, குடிநீர், போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக மக்கள் கையேந்தும் நிலை ஏற்பட்டது.

சராசரியாக, ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஒருமுறை, இப்படியான பெருமழை கடலோர நகரமான சென்னையை அல்லோலகப் படுத்திவிட்டுச் செல்கிறது. 2004 லிலும் இப்படித்தான் நிகழ்ந்தது. 2015 இல் பெய்த பெருமழையும், அதன் தொடர்ச்சியாக, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து, உபரி நீர் திறந்து விடப்பட்டதால் ஏற்பட்ட பெருவெள்ளமும், சென்னை மக்களின் மனதில் கொடுங்கனவாக நிலைத்துவிட்டது. ஒவ்வொரு முறை இந்த வெள்ளம் வரும்போதும், அரசு மற்றும் அரசுசாரா நிறுவனங்களின் இடைக்கால, ஒருங்கிணைக்கப் படாத  செயல்பாடுகள் மட்டுமே எதிர்வினையாக உள்ளன.

கடந்த 5 வருடங்களாக என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என சென்னை மாநகராட் சியைப் பார்த்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. "ஆண்டின் பாதி நாட்களில் நீரின்றி அவதிப்படுகிறோம்; மீதி நாட்களில் வெள்ளத்தில் துன்பப்படுகிறோம். நமது நிலை பரிதாபகர மானது. நாம் பின்தங்கிய மாநிலமல்ல; மிகுவளர்ச்சி பெற்ற, நாட்டிலேயே முன்னணி மாநிலத் தலைநகரத்தின் நிலை இப்படி இருக்கக் கூடாது" என தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி கருத்து தெரிவித்தார்.

மழை என்பது இயற்கையின் நிகழ்வு. அது தவிர்க்க இயலாதது மட்டுமல்ல, தேவையான ஒன்றுமாகும். ஆனால், பெருவெள்ளம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றுஉண்மை யிலேயே, இந்தப் பெரும் வெள்ளத்திற்கான காரணம் என்ன? ஒருவேளை, சென்னை நகரத்தின் பூகோள அமைப்பில் ஏதாவது சிக்கல்கள், தீர்க்க இயலாத பிரச்சனைகள் இருக்கிறதா? "மிகப் பெரிய அளவில் வெள்ளத் தடுப்புக்கான அமைப்புகள் சென்னையில் உள்ளதுவடக்கே கொசஸ்தலை ஆறு, மத்திய சென்னையில் கூவம் ஆறு, தென் சென்னையில் அடையாறு ஆகியவை மழைநீரைக் கடலில் சேர்ப்பதற்கான கட்டமைப்பைக் கொண்டிருக் கின்றன. பக்கிங்ஹாம் கால்வாய் தவிர, 16 கால்வாய்கள் இருக்கின்றன. இவை அனைத் தையும் வைத்துக்கொண்டு மழை பெய்தால் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால், இந்தக் கட்டமைப்புகளைப் பாதுகாக்கத் தவறி விட்டோம். ஆற்றைச் சுற்றிக் கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. ஆற்றுக்கு உண்டான அகலமும் இல்லை... ஆழமும் இல்லை. பிறகு எப்படி தண்ணீரை அவை தாங்கும்?" என நீரியல் நிபுணர் எஸ்.ஜனகராஜன் சொல்கிறார். இதுதவிர,   "செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், செங்குன்றம் என நான்கு நீர்த்தேக்கங்கள் உள்ளன. இவற்றின் மொத்தக் கொள்ளளவு 11 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி தண்ணீர்) இவை தவிர, நகரிலும் நகரைச் சுற்றிலும் 4,100 ஏரிகளும் குளங்களும் இருந்தன. இவற்றின் கொள்ளளவு 150 டி.எம்.சி. சென்னை நகரின் ஒரு மாதக் குடிநீர்த் தேவை 1 டி.எம்.சி. மட்டுமே" என பொறியாளர் மு.இராமனாதன் சொல்கிறார். ஆக, சென்னையின் பூகோள அமைப்பில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிகிறது.

 

அப்படியானால், பிரச்சினையின் அடிவேர், தமிழக ஆட்சியாளர்களின் நீர் மேலாண்மைக் கொள்கைகளிள் உள்ளது எனப் புரிகிறதுசென்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது கடந்த அதிமுக அரசின் முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி "இனி சென்னையில் வெள்ளம் என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் நூறு கோடி ரூபாய் செலவு செய்து, மழைநீர் வடிகால்கள் அமைத்து விட்டோம். எனவே மீண்டும் எங்களுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு தாருங்கள்" என்றார். ஆறு மாதங்களுக்குள்ளாகவே அது பொய்த்துப் போனது. அப்படியானால் செலவான பல கோடிகள் யாருடைய சட்டைப் பைகளை நிரப்பின?

டிசம்பர் 2020 இல் அறிவிக்கப்பட்ட, கொசஸ்தலையாற்று படுகைத் திட்டத்தின் கீழான ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம், ஊழல் மற்றும் நிர்வாக குளறுபடிகள் காரணமாக, முடிவுறாமல் உள்ளது. மறுபுறம், தென் சென்னையின் கிழக்குக் கடற்கரைச் சாலையில், கோவளம் வடிநில பகுதியில் 1,300 கோடி ரூபாய் செலவில் அனுமதி வழங்கப்பட்ட, மழைநீர் வடிகால் திட்டமும், அறிவியல் பூர்வமான, சூழலியல் சார்ந்த திட்டமிடல் இல்லாததால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் முடக்கப் பட்டி ருக்கிறது. கொசஸ்தலையாற்றுப் படுகையில் வடி கால்களின்காணாமல்போன இணைப்புகளைத் தேட, ஆசிய வளர்ச்சி வங்கியின் கடனுதவியுடன் 2,470 கோடி ரூபாய்க்கான திட்டம் மற்றுமொரு சர்ச்சைக்கு உரியதாகும். இப்படியாக, "2005 திலிருந்து மாநில அரசும், சென்னை மாநகராட்சியும், சென்னையின் உள்கட்டு மானத்தை மேம்படுத்த 16 ஆண்டுகளில், 16,000 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்கள் என அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது" என தினத்தந்தி ஆங்கில ஏட்டின் செய்திக்குறிப்பில் உள்ளது.

வறுமையில் வாடும் நகர்ப்புற சமூகத்தின ருக்கான தகவல் மற்றும் வளங்கள் மையம் (மிஸிசிஞிஹிசி) என்ற அரசுசாரா அமைப்பின் தகவல்படி கடந்த 20 வருடங்களில் 61,968 குடும்பங்கள், கூவம் நதிக்கரையிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். ஆனால், மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள், நட்சத்திர விடுதிகள், திருமண மண்டபங்கள், தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்றவை அகற்றப்படவில்லை. பண மற்றும் அதிகார பலம் கொண்ட இவற்றின் உரிமையாளர்கள், நீதிமன்ற வழக்குகள் மூலமாகவும், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கள்ளக் கூட்டு மூலமாகவும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். சென்னை நகரைச் சுற்றியுள்ள அம்பத்தூர், கொளத்தூர், வேளச்சேரி, வில்லிவாக்கம், பள்ளிக்கரணை போன்ற பகுதிகளில் ஆய்வு செய்த, ஆய்வாளர் ராஜ் பகத் பழனிச்சாமி, ஒன்றிய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்பு களுக்குச் சொந்தமான கட்டிடங்கள் பெருமளவு நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ளன என்கிறார்.

இப்போதைய அரசு பதவி ஏற்று சில மாதங்களே ஆகியுள்ளது. எனவே அவர்களை குற்றம் சொல்ல இயலாது என ஒரு பொதுக் கருத்து பரவுகிறது. ஆனால் இப்போதைய முதலமைச்சர் மு..ஸ்டாலின் சென்னை மாநகராட்சியின் மேயராகவும் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் துணை முதலமைச்சராகவும் பல ஆண்டுகள் பதவியில் இருந்திருக்கிறார். அவருடைய செல்லத் திட்டமான 'சிங்காரச் சென்னை'யில் பல பாலங்கள், மேம்பாலங்கள் கட்டப்பட்டன. பூங்காக்கள் அமைக்கப்பட்டன. ஆனாலும் இப்போதைய பெருவெள்ளம் 'சிங்கார சென்னை'யைப் பார்த்து பல்லிளிக்கிறது.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கரைகளிலும் வெள்ளச் சமவெளிகளிலும் உள்ள ஆக்கிரமிப் புகளை அகற்ற வேண்டும். சென்னையில் மூன்று லட்சம் குடும்பங்கள் குடிசைகளில் வாழ்கிறார் கள். இவர்களில் பலரும் இப்படியான கரையோர நிலங்களில் வாழ்பவர்கள்தான். குடிசை மாற்று வாரியம் மூலமாக இவர்களுக்குப் புதிய வீடு வழங்கும் திட்டம் அரசிடம் இருக்கிறது. அதன் மூலம் நகரின் தொழிலாளர்க ளுக்குக் கண்ணியமான வாழ்விடம் வழங்க முடியும்; நகரின் நீர்ப் பரப்பையும் மீட்டெடுக்க முடியும். மேலும் ஏரிகள், குளங்கள், நீர்த்தேக் கங்கள் ஆகியவற்றைத் தூர்வாரி, ஆழப்படுத்தி, அகலப்படுத்தி அவற்றின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும் என துறைசார்ந்த வல்லுனர்கள் கருதுகின்றனர். 'தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் என்பது 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் என முதலமைச்சர் மு..ஸ்டாலின் சட்ட மன்றத்தில் அறிவித்துள்ளார். வெறும் பெயர் மாற்றம் செய்தால் மட்டும் போதாது. அதற்கான போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். சரியான கொள்கைகளும் அதனை அமல்படுத் துவதற்கான திட்டமிடுதலும் வேண்டும். திட்டங்களை அக்கறையுடன் செயல்படுத்த வேண்டும்.

வறட்சியும், வெள்ளமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல உள்ளன. சென்னையைப் பொறுத்தவரை பெரும்பாலான காலங்களில் தண்ணீரின்றி மக்கள் அவதிப்படுவதே அன்றாட நிகழ்வுமழைக்காலங்களில் நீரை சேமித்து கோடைக்காலங்களில் அதனை பயன்படுத்து வதற்கான ஒருங்கிணைந்த திட்டம் வேண்டும். ஹாங்காங் மற்றும் டோக்கியோவில் உள்ளது போன்று நிலத்தடி நீர்த்தேக்கங்கள், சென்னைக்கு தேவையில்லை. ஏரிகளையும், நீர்த்தேக்கங் களையும்  நன்கு பராமரித்தாலே போதும். நீர் நிலைகளை மீண்டும் நிரப்புவதற்கான அமைப்பாக மழைநீர் வடிகால்கள் இருக்க வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் மழைநீர் வடிகால்களின் வலைப்பின்னலை முழுமையாக ஆராய்ந்து, அவற்றில் இடையூறு நிகழும் பகுதிகளை சீரமைக்க வேண்டும். வரம்பற்ற நகர்மயமாக்கத்தை நிறுத்த வேண்டும்.

ஆனால் ஆளும் வர்க்கங்களின் முன்னு ரிமைகள் யாருக்கானவை? சென்னை காட்டுப் பள்ளி துறைமுக விரிவாக்கப் பணிகளுக்கு, பெருமுதலாளி அதானியோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கிறது திமுக அரசாங்கம். எதிர்க்கட்சியாக இருக்கும்போது இத்திட்டத்தை மு..ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார். ஆளுங்கட்சி ஆனவுடன் கொள்கையை மாற்றிக் கொண்டார். இதனால் சென்னையின் வடக்கு பகுதியில் நிலைமை மேலும் மோசமடையும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக, திராவிடக் கட்சிகள் தமிழகத்தை ஆள்கின்றன. கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு சேவகம் செய்வதே அவர்களின் முன்னுரிமையாக உள்ளது. ஒருங்கிணைந்த திட்டமிடலின்மையும் நிர்வாகச் சீர்கேடுகளும் ஊழலும் மலிந்துள்ளன. புதிய முதலமைச்சர் மு..ஸ்டாலின் இதனை மாற்றுவார் என்ற நம்பிக்கையில் தான் தமிழக மக்கள் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கைக்கு களங்கம் ஏற்படுத்தாத வகையில் அவர் செயல்பட வேண்டும். இல்லையென்றால் மக்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டும்.

திமுக அரசு அமைத்துள்ள பல குழுக்களின் வரிசையில் வெள்ள மேலாண்மைக்கென்று ஒரு குழுவையும் அமைத்துள்ளது. ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி திருப்புகழ் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. மோடி தலைமையின் கீழ் பணியாற்றியுள்ள இவர் மோடிக்கு நெருக்கமானவர் என்று கூறப் படுகிறது.

இந்த குழுவிடமிருந்து எப்படிப்பட்ட ஆலோசனைகள் வருகிறது என்பது ஒரு புறம் இருக்கட்டும். திமுக அரசு, சென்னைவாழ் மக்கள், சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மக்கள், சுற்றுச் சூழல், நில, நீரியல், உள்ளிட்ட பல்துறை வல்லுநர்கள், கட்சிகள், உள்ளாட்சி அமைப் புகள், குடியுரிமை அமைப்புகள் உள்ளிட்ட பிரிவினர்களின் கருத்துகளை விரிவாக திரட்ட வேண்டும். இத்தனை ஆண்டுகளாக மேற்கொள் ளப்பட்ட பல்துறை திட்டங்களின் வெற்றி, தோல்வி பற்றி ஆராய வேண்டும். ஒட்டுமொத்த சென்னை நகர இருப்பு, கட்டுமானம் குறித்து மறுஆய்வு செய்திட வேண்டும். இயற்கைச் சூழலோடு பொருந்தி, தாக்குப்பிடித்து  நிற்கும் தன்மை கொண்டதாக மறுவரைவு செய்திட வேண்டும். இதற்கென தேவைப்படும் பல மில்லியன் லட்சம் நிதிக்கு பன்னாட்டு நிறுவனங்களிடம் கடன் கேட்காமல் உள்நாட்டி லிருந்தே நிதி திரட்டிட வேண்டும். மாநிலங் களின் பெரும் வரிவருவாயை வாரிசுருட்டிக் கொள்ளும் ஒன்றிய அரசையும் இதற்கு நிதியளிக்கச் செய்ய வலியுறுத்தி சாதிக்க வேண்டும். பெருநகர திட்டமிடுதலில் நகர் மய மாக்கத்தால் லாபமடையும் பெரும் ஒப்பந்த தாரர்கள், மனைவணிக பெருமுதலைகள், நிலம் விழுங்கி திமிங்கலங்கள், நிலம், நீர்,கடல், சுற்றுப்புற சூழல்களை கபளிகரம் செய்யும் பெருந்தொழில் குழும நிறுவனங்கள் அரசின் கொள்கை உருவாக்கம், அமுலாக்கத்திலிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். பத்தாண்டு காலம் ஆளுவதற்கு வாய்ப்பு கேட்கும் திமுக இந்த சவாலை ஏற்று செய்து காட்ட வேண்டும். சீர் கெட்ட சென்னை சிங்கார சென்னையாக மாறுவது முழக்கத்தால் அல்ல; செய்ய வேண்டிய செயலால்.