குடிநீரைக் கொடுக்காமல் குடிநீர் குழாய் இணைப்பை மட்டுமே கொடுக்கும்

மோடியின் மோசடி திட்டம்

சி.மதிவாணன்

இந்தியாவின் குடிநீர் பிரச்சனை

இந்தியா ராக்கெட் விடுகிறது. உலக வல்ல ரசாக ஆகப் போகிறது. டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர்ந்து சீனாவுக்கு சாவல் விடப் போகிறது என்றெல்லாம் மோடி அரசு  வாய் கிழியப் பேசி வருகிறது. ஆனால், இன்னமும் குடிக்கும் நீருக்கே பிரச்சனையாக இருக்கிறது.

இந்தியாவில் குடிப்பதற்காக வழங்கப்படும் நீரில் 70 சதம் சாக்கடை கழிவுகளால் மாசுபட் டுள்ளதாக உலக ஆய்வு அறிக்கை ஒன்று சொல் கிறது. மக்களுக்குக் கிடைக்கும் குடிநீர் தரம் என்று பார்க்கும்போது உலகின் 122 நாடு களில் 120வது இடத்தில் இந்தியா இருக்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை குறிப்பிடு கிறது.

நாட்டிலுள்ள மாவட்டங்களில் மூன்றில் ஒரு பங்கு மாவட்டங்களின் நிலத்தடி நீர் குடிப்ப தற்குத் தகுதியற்றது. ஆர்சனிக் விஷம், இரும்பு, புளூரைடு நஞ்சு போன்றவற்றின் அளவு மிக அதிகமாக இருக்கிறது. 650 லட்சம் பேர் இந்திய நாட்டில் புளூரைடால் ஏற்படும் புளூராசிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட் டுள்ளனர். குடிக்கும் நீரில் உள்ள தொற்றுக் கிருமிகள் அல்லது கொசுக்கள்  காரணமாகக் காலரா, வயிற்றுப்போக்கு, மலேரியா, டைபாய்ட், யானைக்கால் நோய் போன்றவை இன்னமும் இந்தியாவில் பரவுகின்றன. பருவநிலை மாற்றங் களின் காரணமாக இப்பிரச்சனைகள் அதிகப்படும் என்று அறிவியலாளர்கள் எச்சரித்துள் ளனர்

குடிநீர் இணைப்பு அளிப்பதில் இந்தியாவின் முயற்சிகள்

31.3.2019 அன்று வரையிலான நிலவரப்படி, இந்திய கிராமப்புர வீடுகளில் வெறும் 18.33 சதம் வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று ஜல் ஜீவன் திட்ட அறிக்கை குறிப்பிடுகிறது. நாட்டில் உள்ள 17.87 கோடி குடித்தனங்களில், வெறும் 3.27 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இது கிராமப்புர குடித்தனங் களில் 18.33 சதம் மட்டுமே.

குடிநீர் திட்டங்களை மக்களுக்கு அளிப்பதற் காக 1972ல் ஒரு திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. மாநிலங்களுக்கு நிதி உதவி அளிப்பது அதன் நோக்கமாகும். 2009ல் இத்திட்டத்திற்குத் தேசிய கிராமப்புர குடிநீர் திட்டம் (National Rural Drinking Water Programme-NRDWP) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2030க்குள் அனைத்து வீடுக ளுக்கும் பாதுகாப்பான, உத்தரவாதமான குடிநீர் அளிப்பது அதன் நோக்கம் ஆகும். அத்திட்டத்தின் பெயரை சமஸ்கிருத மயமாக்கிய மோடி அரசு ஜல் ஜீவன் இயக்கம் என்று பெயர் மாற்றம் செய்தது. அத்துடன், தனது சாதனைகளை காட்டி வாக்கு கேட்கும் நோக்கத்திற்காக 2030 என்ற இலக்கை 2024 என்று மாற்றியது. இதன் காரணமாகத் திட்டத்திற்கான ஒதுக்கீடு அதிகரிக்கப் படுகிறது.

ஜல் ஜீவன் மிஷனின் சிறப்பு அறிவிப்புகள் என்ன?

நீரை வழங்கும் குடிநீர் குழாயை ஒவ்வொரு வீட்டிற்கும் அளிப்பது (Functional Household Tap Connection -FHTC) என்பதுதான் திட்டத்தின் சாரமான அம்சம். மோடியின் கவர்ச்சிகரமான வெற்று வார்த்தைகளின் தொகுப்பாக அமைந் துள்ள இந்த மைய நோக்கத்திற்கு இணையாக பல்வேறு முக்கியமான அம்சங்கள் உள்ளன.

-‘பங்கேற்பு முறையின் மூலம் கிராமத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும், கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலகம், அரசு அலுவலகம், பள்ளி, மருத்துவமனை போன்ற பொது பயன்பாட்டு இடங்களுக்கும் நேரடி இணைப்பு கொடுப்பது

- உள்ளூர் பஞ்சாயத்து / கிராம சமூகம் தனக்கான குடிநீர் திட்டத்தைச் சொந்தமாக உருவாக்கி, இயக்குவதற்கு உதவி செய்வது

இந்தத் திட்டத்தில் தெளிவாக சொல்லப் படும் அறிவிப்புகளுக்கு வெளியே, ஓசையில்லாமல் சொல்லப்படும் அறிவிப்புகள் பல மறைந்து கிடக்கின்றன. உதாரணமாக, வீடுக ளுக்குக் குழாய் இணைப்பு என்று சொல்லப் படுவதோடு, நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 55 லிட்டர் நீர் வழங்கப்படும் என்றும் சொல்லப் படுகிறது. இந்த அளவுக்கு மேல் நீர் தேவைப் பட்டால் என்ன நடக்கும்? குழாய்களுக்கு மீட்டர் பொருத்தி கட்டணம் வசூல் செய்வார்களா?

2012ஆம் ஆண்டின் நீர் கொள்கையின்படி, குடிநீர் கட்டமைப்பைப் பராமரிப்பது மற்றும் நீருக்கான முழு செலவினத்தையும் மக்களிடம் மாநில அரசு வசூல் செய்ய வேண்டும். அப்படியானால், ஜல் ஜீவன் வீட்டுக்கே கொண்டுவந்து அளிக்கும்(?!) நீருக்குக் கட்டணம் வசூல் செய்யப்படுமா?

ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்ட பின்னர், ஏற்கனவே இருக்கும் பொதுக் குழாய்கள் / தெருக் குழாய்கள் என்ன ஆகும்? அவற்றுக்கு இணைப்பு கொடுக்கப்படுமா? பொது குழாய் அகற்றப்படுமா? கிராமங் களில் நிலவும் கடுமையான நீர்ப் பற்றாக் குறையின் காரணமாக, குளிப்பது, துவைப்பது, கால் நடைகளின் தேவைகளுக்கு நீர் அளிப்பதாக பொதுக் குழாய்கள்தான் இருக்கின்றன. கண் மாய்கள், குளங்கள், ஆறுகள் தொலைந்து கொண்டிருக்கும் நிலையில் பொது குழாய்களும் தொலைந்துபோனால் கிராம மக்கள் என்ன செய்வார்கள்?

இக்கேள்விகளுக்கான பதில்கள் என்ன வென்பதை அடுத்த பத்திகள் உங்களுக்கு உணர்த்தும்

குடிநீர்த் தேவைகளை மக்களே சமாளித்துக் கொள்ள வேண்டும் என்று மிரட்டும் ஜல் ஜீவன்.

ஜல் ஜீவன் திட்டத்தில் முக்கியமான அம்சங்கள் வேறு சில இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று மக்களின் பங்கேற்பு ஆகும். இதனை, சமூகத்தின் பங்கெடுப்பு என்று ஜல் ஜீவன் சொல்கிறதுCommunity led partnership with States/ UTs will be the strategy for achieving the objectives of JJM என்று அதனைக் குறிப்பிடுகிறார்கள். அதாவது மாநில அரசுகளையும், யூனியன் பிரதேச அரசுக ளையும் வழிநடத்தும் மக்கள் பங்கேற்புடன் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதுதான் ஜல் ஜீவனின் நோக்கம் என்று சொல்கிறார்கள்.

அதன்படி, திட்டத்தின் செலவினத்தில் 10 சதத்தைப் பயனாளி அளிக்க வேண்டும் என்று ஜல் ஜீவன் சொல்கிறது. சில கிராமப் பஞ்சாயத்துகளில் வீட்டுக்கு ரூபாய் 2 ஆயிரம் என்று வசூல் செய்கின்றனர். இதற்குக் கடுமையான எதிர்ப்பு மக்களிடமிருந்து வருகிறது. வாடிப்பட்டியின் அருகே உள்ள விராலிப்பட்டியில் பணம் கட்ட மறுத்து கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்தை மக்கள் முற்றுகை யிட்டனர். இராமையன் பட்டி கிராமத்தில் நமது எதிர்ப்பின் காரணமாக 2 ஆயிரம் ரூபாயை வசூல் செய்ய முடியாமல் பஞ்சாயத்துத் தடுமாறுகிறது.

கொரோனா லாக்டவுன் ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பிலிருந்து மக்கள் வெளியே வருவதற்கு இன்னமும் காலம் பிடிக்கும் என்ற உண்மையைக் கூட புரிந்துகொள்ளாமல், திட்டத்தின் பங்காக 10 சதத்தை வசூல் செய்வது கடும் எதிர்ப்பைச் சம்பாதித்து வருகிறது.

ஆனால், நீர் நிர்வாகத்தைக் கிராமப் பஞ்சாயத்து, அது உருவாக்கிய நீர் மற்றும் சுகாதாரக் கமிட்டி/நீர்க்கமிட்டி/நீர் பயன்பாட் டாளர்கள் குழு நிர்வாகம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் ஜல் ஜீவன் திட்டத்தின் மற்றொரு முக்கியமான அம்சம்.

கிராமப்புரங்களின் நீராதாரங்களை நிர்வகிப்பது, மேம்படுத்துவது, அழுக்கு நீரை நிர்வாகம் செய்வது போன்றவற்றை மேற்சொன்ன கமிட்டிகள் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் திட்டத்தை நிலையான ஒன்றாக, தொடர்ச்சியாகச் செயல்படும் ஒன்றாக மாற்ற வேண்டும் என்கிறார்கள்.

இப்படி சொல்வது ஏமாற்று வேலை அன்றி வேறு அல்ல. ஏனென்றால், அதீத பயன்பாட்டின் காரணமாக நீர் வளம் குறைந்து வருகிறது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக வெள்ளம் வறட்சி தொடர்பான பிரச்சனைகள் பல பகுதிகளில் நீடிக்கிறது. இந்நிலையில், வீட்டுக்கு ஒரு குழாய் என்று நிதியை செலவு செய்துவிட்டு, திட்டம் தொடர்வதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்பது தப்பிக்கும் முயற்சியன்றி வேறு அல்ல.

குழாய்களை போடுகிறார்கள் கமிட்டிகளை மறந்துவிட்டார்கள்!

தமிழ்நாட்டில் கட்டம் கட்டமாக ஜல் ஜீவன் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. 2021 ஜூன் 15 அன்று மத்திய அரசு 3691 கோடி ரூபாயைத் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கியது. இது சென்ற நிதியாண்டு ஒதுக்கீட்டை விடவும் 4 மடங்கு கூடுதல் தொகையாகும்.

தற்போது தமிழ்நாட்டில் 86.53 லட்சம் கிராமப்புர குடித்தனங்கள் குடிநீர் குழாய் இணைப்பு இல்லாமல் இருக்கிறார்கள். 20-21 ஆண்டுக் காலத்தில் 16.13 லட்சம் இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. 2014 மோடியின் அறிவிப்பின்படி 2024க்குள் தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு கொடுக்கப்பட வேண்டும் என்றால் இணைப்பு கொடுக்கப்படும் வேகம் 179 சதமாக ஆக வேண்டும். இது சாத்தியமான ஒன்றல்ல.

திட்டத்தின் கீழ் நீராதாரங்கள் மேம்பாடு எதுவும் செய்யப்படவில்லை. அதற்கான நிதி ஒதுக்கீடு ஏதும் செய்யப்படவில்லை. நீரை அளிக்கும் குழாயை வீட்டிற்கு கொண்டு செல்வதற்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கிராமப் பஞ்சாயத்துகளால் நிறை வேற்றப்படுகிறது.

அதேசமயம், நீரை அளிப்பதற்கும், அதன் தரத்தை மேம்படுத்துவதற்கும் அமைக்கப்பட வேண்டிய கமிட்டிகள் எதுவும் அமைக்கப் படவில்லை. இந்த கமிட்டிகள் பற்றி கிராம உள்ளாட்சி தலைவர்களிடம், பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பினால், “அதிகாரிகள் எதுவும் சொல் லவே இல்லையே, நீங்கள் என்ன பேசுகிறீர்கள்?”, என்று நம்மிடமே கேள்வி எழுப்புகின்றனர்.

ஆக, இருக்கும் குடி நீராதாரங்களை மேம்படுத்தாமல், மேம்படுத்துவதற்கு என்று சொல்லப்படும் கமிட்டிகளைக் கூட அமைக் காமல் வீட்டிற்கு ஒரு குழாய் இணைப்பு என்று மோடி படம் காட்டுகிறார். திமுக தலைமை யிலான மாநில அரசு அந்த படத்தை விரைவாக ஓட்டிக் கொண்டுள்ளது.

அப்படியானால், எதிர்காலத்தில் கிராமங்களுக்கான குடிநீர் திட்டம் என்ன ஆகும்? நீர் அளிப்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தவும், சமூக பங்கேற்பை அதிகப்படுத்தவும் தொண்டு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், பெண்கள் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட வர்களை இணைக்கப் போகிறார்களாம். மேலும், நிதியைப் பெற நல்ல உள்ளங்களை அணுகி நிதி உதவி பெறப்போகிறார்களாம்.

ஓர் அரசு இப்படியொரு பொறுப்பற்ற திட்டத்தை அறிவித்திருப்பது நகைப்பிற்கிட மானது. கிராமப்புரங்களுக்கு நீர் அளிப்பதற்கான பயன் தரும் திட்டம் என்பதற்கு மாறாக, வீட்டுக்கு ஒரு குழாய் அளிக்கும் முட்டாள் தனமான திட்டமே ஜல் ஜீவன் திட்டம்.

இருந்தாலும் பயன்படுத்துபவர் அதற்குரிய கட்டணத்தைக் கட்ட வேண்டும் என்ற சர்வதேச முதலாளியத்தின் தற்போதைய கோட்பாட் டின்படி, நீர் வழங்குவதை தனியார் கம்பெனி களுக்கு அளிப்பதற்கான முன்னோட்டமே ஜல் ஜீவன் என்பதை வரலாறு காட்டவிருக்கிறது.

கிராமப்புரத்தில் வலுவான மக்கள் அமைப்புகள் எழுவதும், கட்டமைக்கப் படுவதுமே, கிராமப்புரங்களுக்கான குடிநீரை உறுதி செய்யும்.