அஜ்பர் மாலிக் தொழிலகப் படுகொலை!

புதுச்சேரி ஆலையில் கொந்தளிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்!!

என்ஆர் பாஜக கூட்டணி ஆட்சி கள்ள மௌனம்!!!

புதுச்சேரி சேதராப்பட்டு தொழிற்பேட்டை வளாகத்தில் கேஞ்சஸ் இன்டர்நேஷனல் எனும் தொழிற்சாலை உள்ளது. ஆயிரம் கோடி மூலதனம் உள்ள இந்த தனியார் ஆலையில், தொலைத்தொடர்புக்கானஇரும்புக் கோபுரங்கள்  உற்பத்தி செய்யப்படுகின்றன. 1996 ல் உற்பத்தியை தொடங்கிய இந்த ஆலையில் நிர்வாகத்தரப்பு ஊழியர்கள் 400 பேர் பணிபுரி கின்றனர். இந்த ஆலையின் ஒட்டு மொத்த உற்பத்தியும் 3000க்கும் மேற்பட்ட வட மாநில புலம்பெயர் தொழிலாளர் மூலம் செய்யப்படு கிறது. நூற்றுக்கணக்கான சிறார்களும் பயன்படுத் தப்பட்டு வருகின்றனர்.

12 மணி நேரத்திற்கும் மேலாக கட்டாய உற்பத்தியில் ஈடுபடுத்தப் படுகின்றனர். வார விடுமுறை கூட கிடையாது. ஆலை வளாக உற்பத்தித் தளங்களில் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் எதுவுமின்றி தொழிலாளர் பணிபுரிய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அடிமை வியாபார காலத்தில், கூண்டுகளில் அடைக்கப்பட்ட அடிமைகள் போல் தொழிலாளர்கள் இரும்புக் கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டு பிழிந் தெடுக்கப்படுகின்றனர்.

இத்தகைய நிலைமையின் காரணமாக கடந்த 22.10.2021 அன்று ஆலையில் அஜ்பர் மாலிக் எனும் மேற்கு வங்கத்தின், பயிற்சியற்ற தொழிலாளியை பாதுகாப்பில்லாத, பழுதடைந்த கிரேன் இயந்திரத்தை குறுகலான பாதையில் இயக்க அதிகாரிகளால் கட்டாயப்படுத்த பட்டபோது, கிரேன் கயிறு அறுந்து அவர் தலையில் கனமான இரும்பு பட்டைகள் விழுந்து அந்த இடத்திலேயே இறந்துவிட்டார்.

செய்தியறிந்த ஏஐசிசிடியு புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர் சோ.மோதிலால் ஆலை வளாகத்திற்குள் தொழிலாளர்களை சந்திக்கச் சென்றார். கொலையுண்ட தொழிலாளியின் உடலை காவல்துறையினர் அவசர அவசரமாக அப்புறப்படுத்த முயற்சித்த போது, ஒடுங்கிக் கிடந்த தொழிலாளர்கள் ஒன்று திரண்டனர்ஆத்திரமடைந்த காவல்துறை, 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்துள்ளது. அதில் எழுவர் வட மாநில சிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

கேஞ்சஸ் ஆலை மற்றும் அதன் துணை நிறுவனமான சர்பதி ஸ்டீல்ஸ் ஆலையில், பாதுகாப்பு குறைபாடுகளைக் சுட்டிக்காட்டி உற்பத்தி நிறுத்தம் செய்யச்சொல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் ஆட்சியாளர்களின் அலட்சியத்தைக் கண்டித்தும் ஒரு கூட்டறிக்கை வெளியிட்டது.

தற்போது ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தின் முயற்சியால் சிறார்கள் பிணையில் எடுக்கப்பட்டு சங்கத்தின் பாதுகாப்பில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். பொதுமக்கள் பலரும் சிறார்களுக்கு பல வழியிலும் உதவி வருகின்றனர். மேற்குவங்க ஏஅய்சிசிடியு உதவியுடன் சிறார்களின் குடும்பத்தினரை சந்திக்க முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.

இடதுசாரி மையத் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டாக இயங்கி வருகின்றன.

படுகொலையான அஜ்பர் மாலிக் குடும்பத் திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டும் ஒப்பந்தத் தொழிலாளர் முறையை தடை செய்ய வலியுறுத் தியும் ஆலை அதிபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 304(மிமி) பிரிவின்படி வழக்கு தொடர வலியுறுத்தியும், ஆட்சியாளர்களின் அலட்சி யத்தைக் கண்டித்தும் தொழிற்சங்கங்கள் போராட்ட களத்தில் உள்ளன. இதே கோரிக்கைகளுக்காக நவம்பர் 2ம் தேதி ஏஅய்சிசிடியு தொழிற்சங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது

- சோ.பா