கட்சி வேலைகள் மறுசீரமைப்பு இயக்கம்

பகுதி-4

இளைஞர் மாணவர் இயக்கத்

திசைவழியும் கடமைகளும்

 

இளைஞர் - மாணவர் இயக்கம் -

ஒரு அரசியல் - கலாசார இயக்கம்

 

தமிழக இளைஞர் - மாணவர்களுக்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது. அது போராட்ட பாரம்பரியம். தியாக பாரம்பரியம். போராட்டம் என்பது ஏதோ ஒரு சில கோரிக்கைகளுக்கான போராட்டம் அல்ல. சொந்த பயன் பெறும் சுயநலத்திற்கான போராட்டம் அல்ல. நாட்டுக்கான போராட்டம். இந்திய நாட்டு ஜனநாயகத்துக்கான போராட்டம். அரசியல் போராட்டம். புரட்சிகர அரசியல் போராட்டம்.  

இந்திய நாட்டு விடுதலைப் போரில், ஆங்கிலேயர் எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில், தமிழ் இளைஞர் - மாணவர்கள் தங்கள் இன்னுயிரை இந்த நாட்டுக்காக, தியாகம் செய்தார்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தமிழ் இன உரிமைப் போராட்டமாக மட்டுமே காண்பது ஒரு பார்வை. இன்னொரு முக்கியமான பார்வை அது ஜனநாயகத்துக்கான போராட்டம் என்பது. அந்தப் போராட்டம் தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக, எந்த ஒரு அகில இந்திய கட்சியும் ஆட்சிக்கு வர முடியாத அளவுக்கு ஆற்றல் கொண்ட ஒரு அரசியல் போராட்டம். அதுதான் மாணவர் - இளைஞர்களின் போராட்ட வரலாறு.

இன்னொரு முக்கியமான கட்டம் என்பது நக்சல்பாரி போராட்டத்தால் உந்தப்பட்ட, அந்தப் புரட்சிகர போராட்ட வழிமுறையால் கவரப்பட்ட மாணவர் இயக்கங்களின் காலகட்டம். கல்கத்தாவில், வேறு பல பெருநகரங்களில் நக்சல்பாரி எழுச்சியால் கவரப்பட்ட மாணவர்கள், தங்கள் படிப்பை, அது முதலாளித்துவ படிப்பு என தூக்கி எறிந்துவிட்டு, கிராமங்களுக்கு சென்றார்கள். கிராமப்புற எழை, எளிய மக்கள் மத்தியில் புரட்சிகர அரசியல் தீயை சுடர்விட்டு எரியச் செய்வது மட்டும்தான் இந்த நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு ஒரு முழுமையான விடுதலையை, உண்மையான விடுதலையை, உழைக்கும் மக்கள், ஏழை, எளிய மக்கள் கைக்கு அதிகாரம் கைமாறும் ஒரு விடுதலைப் புரட்சியை நிதர்சனமாக்கும் என்று முழங் கினார்கள். அதன் எதிரொலியைத் தமிழகத்திலும் காண முடிந்தது.

புரட்சிகர கட்சியும் அந்த இளைஞர்களும் அந்த காலகட்டத்தில், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை வரவேற்றார்கள், ஆதரித்தார்கள், செயலூக்கமாகப் பங்களித்தார்கள் என்பது வரலாறு.

அய்சா -- ஆர்ஒய்ஏ -

தமிழக முற்போக்கு, புரட்சிகர போக்குகளின் வழித்தோன்றல்

தமிழக மாணவர் - இளைஞர் இயக்கத்தின் இன்றைய கட்டம் என்பது தமிழக இளைஞர் களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்ட மரபை, இந்தி எதிர்ப்பு, மொழி உரிமை உள்ளிட்ட திராவிட இயக்க முற்போக்கு மரபை, ஜனநாயகப் போராட்ட மரபை, நக்சல்பாரி எழுச்சி உள்ளிட்ட புரட்சிகர மரபை, பாரம்பரிய இடது மரபை உயர்த்திப் பிடிப்பதாக இருக்க வேண்டும். வீரம் செறிந்த அந்தப் போராட்ட மரபுகளின் வாரிசுதாரர்களாக  இருக்க வேண்டும். அப்படிப்பட்ட, தமிழக இளைஞர் களின் போராட்ட மரபை உட்கொண்ட, ஒரு மாற்று அரசியலை, புரட்சிகர அரசியலை அடிப்படையாகக் கொண்ட ஒரு இளைஞர் இயக்கம் மட்டுமே, தமிழகத்தில் ஒரு மாற்று அரசியல் இயக்கமாக, மாணவர் - இளைஞர் இயக்கமாக எழ முடியும்.

அப்படிப்பட்ட ஒரு இயக்கம் மட்டுமே தமிழகத்தின் முற்போக்கு மாண்புகளை, முற்போக்கு விழுமியங்களைக் கட்டிக் காத்திட முடியும். அத்தகைய ஒரு இயக்கம் மட்டுமே , தமிழகத்தின் முற்போக்கு மரபுகளை சின்னாபின்னமாகச் சிதைப்பதன் மூலம், தமிழகத்தை காவிக் கோட்டையாக மாற்றிடத் துடிக்கும் பிற்போக்கு, மதவெறி, வலதுசாரி ஆர் எஸ் எஸ் - பி ஜே பி போன்ற சக்திகளை வீழ்த்திட, துரத்தி அடித்திடத் தக்க இயக்கமாக இருக்கும். அப்படிப்பட்ட இயக்கமே, தமிழகத்தின் பிற்போக்கு மரபுகளை, நிலப்பிரபுத்துவ மாண்புகளை, வளர்ந்து வரும் வைகுண்ட ராஜன்களை உயர்த்திப் பிடிக்கும் போக்கிற்குத் தக்க பதிலடியாக இருக்கும்.

அதே போல, வரலாற்று மாண்புகளை, விழுமியங்களை மீட்கிறோம் என்கிற பெயரில், சீமான் சொல்வது போல, மாடு மேய்ப்பதை போற்றுவதையோ, மோடி சொல்வது போல், பகோடா விற்பதில் பெருமை பாராட்டுவதையோ நாம் கடுமையாக எதிர்க்க வேண்டியுள்ளது. தமிழ் மொழியின் தொண்மையைதமிழ் மக்களின் வீர வரலாற்றை நாம் உயர்த்திப் பிடித்திட வேண்டும். ஆனால், தமிழ் சமூகத்திலும் முற்போக்கு மற்றும் பிற்போக்கு அம்சங்கள் வரலாறு முழுவதும் விரவிக் கிடக்கின்றன. நாம் தமிழ் சமூக வரலாற்றில் நிரவிக் கிடக்கும் உழைக்கும் தமிழ் மக்களின் போராட்ட மரபை, முற்போக்கு விழுமியங்களை உயர்த்திப் பிடிப்போமே தவிர, தமிழ் சமூகத்தை பின்னோக்கித் திருப்பும் பிற்போக்கு வலதுசாரி கருத்துக்களை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்.

இதைத்தான் தமிழக இளைஞர் - மாணவர் இயக்கம் தனது கொள்கையாக, நோக்கமாக, செயல்பாட்டு வழிமுறையாக கொண்டிருக்கும்.

பெரியார் கருத்துக்கள் -

ஆதிக்க எதிர்ப்பு கருத்துக்கள்

பெரியார் கருத்துக்கள் தமிழகத்தில் நிச்சயமாக ஒரு மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. சாதி வெறி - சாதி ஆதிக்க சக்திகளுக்கு எதிராக, பார்ப்பனீயத்துக்கு எதிராக ஒரு மாபெரும் போர்ப் பிரகடனமாக அவர் கருத்துக்கள் அமைந்தன. இதர வட இந்திய மாநிலங்களை ஒப்பிடும் போது, தமிழகம் நிலப்பிரபுத்துவ கருத்துக்கள், மூடப் பழக்க வழக்கங்களை எதிர்த்துப் போரிடுவதில் ஒரு மிகப்பெரும் பங்காற்றி இருக்கிறது. பெண்ணடிமைத் தனத்தின் ஊற்றுக் கண்ணான நிலப்பிரபுத்துவ கருத்துக்கள் கோலோச்சிய சமூக, அரசியல் பின்னணியில், பெண்கள் விடுதலை கருத்துக்கோப்புகளை சக்தி வாய்ந்த விதத்தில் எடுத்துரைப்பதில் பெரியாருக்கு ஒரு மிகப் பெரும் பங்கு இருக்கிறது. அதே போல, ஒடுக்கப்பட்ட சாதிகள், வர்க்கங்களின் குரல் தமிழகத்தில் ஓங்கி ஒழித்திடவும் அது உதவி இருக்கிறது. அதுவே, ஒரு புதிய பார்ப்பனீயம், ஒரு புதிய ஒடுக்குமுறை சாதிகள், சக்திகள் ஆட்சிக்கு வரக் காரணமாக இருந்திருக்கலாம். சில முற்பட்ட, பிராமனர் அல்லாத சாதிகளும் கூட அதிகாரத்தைச் சுவைப்பதற்கு, பலம் பொருந்தியவையாக மாறுவதற்கு காரணமாகி இருக்கலாம். ஆனாலும், அவர் கருத்துக்கள் ஆற்றிய முற்போக்கு பாத்திரத்தை மறுப்பதற்கில்லை. அந்தப் புதிய ஆளும் சக்திகள், ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவாக இருந்தார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. அதே போல, அனைத்து சாதி உழைக்கும் மக்கள், தலித்துகள், பெண்கள் உள்ளிட்ட பல ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு அது ஒரு முழு விடுதலையை வழங்கிடவில்லை என்பதும் உண்மைதான்.

பெரியார் கருத்துக்களை முற்போக்கு என சொல்வது, சீரழிந்துபோன, பெரியார் கருத்துக்களிலிருந்து பெருமளவு விலகிச் சென்றுவிட்ட, பல சமயங்களில் மென்மையான இந்துத்துவ மதவெறி அரசியலைக் கூட பிரதிபலிக்கிற, இன்றைய திராவிட கட்சிகளை ஆதரிப்பது என்று பொருள்படாது. ஆனால், அதே சமயத்தில், அவர்கள் பிஜேபியின் மதவெறி, பிற்போக்கு, வலதுசாரி அரசியலுக்கு எதிராக, உறுதியாக போராடுவார்களேயானால், பரந்த பாசிச (சர்வாதிகார) எதிர்ப்பு அரசியல் முகாந்திரத்தில் நின்று கொண்டு அதனை ஆதரித்திட, மதிப்பீடு செய்திட நாம் தயாராக இருக்கிறோம்.

சமூக நீதி

இந்தப் பின்னணியில், சமூக நீதி என்பது வெறும் இட ஒதுக்கீடு மட்டுமோ, பிற்படுத்தப் பட்ட சாதிகள் மட்டுமோ சம்பந்தப்பட்டது அல்ல. மாறாக, அனைத்து உழைக்கும் மக்களுக்கு நியாயம் கிடைப்பதையே, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைப் பதையே, அவர்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு வழிகோலுவதையே சமூக நீதி என குறிப்பிட முடியும். அந்த விதத்தில், சமூக நீதி என இன்று பொதுப்புத்தியால் அறியப்பட் டிருக்கும் ஒன்றை மறுவரையறை செய்திட வேண்டிய அவசியம் இருக்கிறது.

திசைவழி

இன்று நிலவுகிற புதிய சூழலில், மாணவர் - இளைஞர்களின் உரிமைப் போர் தொடுக்கும் இயக்கமாக, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக, இளைஞர் -மாணவர் இயக்கம் எழுந்திட வேண்டிய ஒரு தேவை இருக்கிறது. அந்த இளைஞர்&மாணவர் இயக்கம் ஒரு அரசியல் இயக்கமாகவும், அதே சமயத்தில், தமிழக மக்களின் மொழி, கலாச்சார மரபுகளை, உரிமைகளை முற்போக்கு விழுமியங்களை உயர்த்திப் பிடிக்கிற ஒரு கலாச்சார இயக்கமாகவும் அமைந்திடும்.

uஅது மட்டுமல்ல, இந்திய மற்றும் தமிழக ஆளும் வர்க்கங்கள் நடைமுறைப்படுத்தி வரும் நவ தாராளவாதக் கொள்கைகளின் காரணமாக தலைவிரித்தாடும் வேலையில்லாத் திண்டாட்டம், உழைப்புச் சந்தையை மலிவாக்கிட உருவான புதிய கல்விக் கொள்கையின் காரணமாக எழுந்து வரும் கல்விப் பிரச்சனைகள் போன்றவற்றையும் எதிர்த்து தீவிரப் போராட்டங்களை மேற்கொள்ளும்.

அதன் மூலம், இளைஞர் - மாணவர்கள் சந்திக்கும் யதார்த்த வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான சீர்திருத்தப் பணிகளுக்காகவும் போராடும்.

கூடுதலாக, அதிகரித்து வரும் இந்தி&-சமஸ்கிருத திணிப்பு முயற்சிகளையும், குலக் கல்வித் திட்டத்தைத் திணிக்கும் முயற்சிகளை யும், ஆதிக்க சக்திகளின் அடிமைகளாக தமிழினத்தை மாற்றிட எத்தனிக்கும் முயற்சி களையும் எதிர்த்துப் போராடும். இதுதான் இயக்கத்தின் பொதுவான திசைவழியாக இருக்கும்.

வேலையில்லாத் திண்டாட்டம்

வேலையில்லாத் திண்டாட்டம் என்பது இளைஞர் - மாணவர்களின் மிகப்பெரும் பிரச்சனையாக விசுவரூபம் எடுத்திருக்கிறது. கொரோணா காலத்திற்குப் பிறகு அது இன்னும் தீவிரம் அடைந்திருக்கிறது. 2014ல் மோடி ஆட்சிக்கு வந்தபோது, ஆண்டுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்றார். மாறாக, அது ஆண்டு தோறும் லட்சக்கணக் கானோர் வேலையிழப்பாக மாறி இருக்கிறது. இருக்கிற வேலைகளிலிருந்து பல லட்சக் கணக் கானோர் வீதிகளில் தூக்கி எறியப்பட்டுள்ளனர். 70,000 பேருக்கு வேலை கொடுக்கிற தொழில் ஒப்பந்தங்களில் மு..ஸ்டாலின் அவர்கள் கையொப்பமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதுவும் கூட யானைப் பசிக்கு சோளப்பொறி கொடுப்பது போலத்தான்.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவங்கள் தனியார்க்குத் தாரை வார்க்கப் படுகின்றன. மலிவான விலைக்கு விற்கப் படுகின்றன. அரசுப் பணிகளில் வேலைவாய்ப்பு என்பது கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம்.

கிடைக்கிற வேலைவாய்ப்பும் கூட மிகப் பெரும் கேலிக் கூத்தாக இருக்கிறது. பொறியியல் மாணவர்கள், தொழிற்கல்வி மாணவர்கள் வேலையின்றி விரக்தியுடன் வீதிகளில் திரிந்து கொண்டிருக்கிறார்கள். வேறு வழியின்றி, பொறியாளர்கள் பலர் துப்புரவுப் பணிக்குக் கூட விண்ணப்பித்து இருக்கும் கொடுமையைக் காண்கிறோம். காண்ட்ராக்ட் மயமாக்கம், தனியார் மயமாக்கம் என்ற பெயரில், எந்த ஒரு சட்ட உரிமையும் இல்லாத மிகப்பெரும் இளம் உழைப்போர் பட்டாளம் உருவாகி இருக்கிறது.  5,000,- 10,000 மாதச் சம்பளம் கூட கிடைக்காமல் பல மாணவர்கள் - இளைஞர்கள் தமது எதிர்கால கனவு சூனியமாகிப் போனதாக உணர்கிறார்கள். இப்படிப்பட்ட, அவல நிலையைப் போக்கி டாமல், முதலாளிகளுக்கு மலிவான, திறன் வாய்ந்த உழைப்புச் சக்தி கிடைக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப கல்விக் கொள்கைகள், வேலைவாய்ப்பு கொள்கைகள் மாற்றியமைக்கப் படுகின்றன.

தமிழகத்தில் தமிழர்களுக்கு மறுக்கப்படும் வேலைவாய்ப்பு

பிஜேபி தனது திட்டத்தை உள்நோக்கமாக கொண்டு, ஒன்றிய அரசு நிறுவன வேலை வாய்ப்பு கொள்கைகளை மாற்றி இருப்பதால், தமிழ் நாட்டில் செயல்படும் பல ஒன்றிய அரசு நிறுவங்களில், தமிழ் இளைஞர்களுக்கு வேலை மறுக்கப் படும் அவல நிலையைக் காண்கிறோம். தமிழ் நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு நிறுவனங்களில் 90 சதவீத வேலைகள் தமிழர் களுக்கே கிடைக்கும் விதத்தில் வேலைவாய்ப்புக் கொள்கைகள் மாற்றியமைக்கப் பட வேண்டும்.

அது தவிர, தரமான வேலை, நியாயமான கூலி, தனியார்மய எதிர்ப்பு, இளைஞர்களுக்கு விளையாட்டு வசதிகள், நூலக வசதிகள், உள்ளிட்ட பல இளைஞர் சார் கோரிக்கைகளுக் காகவும் இளைஞர் கழகம் போராடும்.

கடைச் சரக்காகிப் போன, அடிமைக் கல்வி முறை

கல்வி என்பது ஏழை எளிய மாணவர்களுக்கு எட்டாக்கனியாகிப் போய்விட்டது. கல்வி கடைச் சரக்காகிப் போய்விட்டது. சாதி வேறுபாடு பார்க்காத இளம் தலைமுறையினர் மத்தியில், கல்வி நிறுவங்களில் புதிய வகை ஏற்றத் தாழ்வுகளும் வேறுபாடுகளும் உருவாக்கப் படுகின்றன. மாணவர்களின் அனைத்தும் தழுவிய, அறிவார்ந்த வளர்ச்சிக்காகத் தான் கல்வி என்பது போய், எந்திரத்தில் எழுதி இருக்கும் ஆங்கில எழுத்துக்களைப் படிப்பதற்கு மட்டும் கற்றால் போதும் என கூறப்படுகிறது. இதன் மூலம், ஒரு புதிய வகை அடிமை வர்க்கம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. அரசாளும் திறமைகள் கொண்ட ஒரு சிறிய, வசதி வாய்ந்த ஒரு பிரிவினர், தனியாக, அய் அய் டி களிலும், அய் அய் எம் களிலும் கற்ற ஒரு சிறிய பிரிவினர் மட்டும் சிந்தித்தால் போதும் என சொல்லப்படுகிறது. இப்படி ஒரு புதிய வகை ஏற்றத்தாழ்வு, புதிய வகை தரவரிசைப் படுத்தல், புதிய வகை வர்ணாசிரம முறை, கல்வி முறையில் ஏற்படுத்தப்படுகிறது. அதற்கேற்ப கல்வி முறைகள் மாற்றியமைக்கப் படுகின்றன. அதுதான் புதிய கல்விக் கொள்கை.

இல்லம் தேடி கல்வி -

தனது கடமையை உதறித் தள்ளும் அரசு

இல்லம் தேடி கல்வி என்பது கல்வியைக் காவி மயமாக்குவது மட்டுமல்ல, முறைசார் கல்வி முறையை புறம் தள்ளி விட்டு முறைசாரா கல்வியைத் திணிப்பதற்கான முயற்சியும் ஆகும். அரசு தனது கடமையை உதறித் தள்ளும் போக்கின் ஒரு பகுதி ஆகும்.

உழைப்புச் சந்தையும் - மலிவான உழைப்பும்

நவதாராளவாத கொள்கைகள் நடைமுறைப் படுத்தப்படும் இயக்கப்போக்கில், லாப நோக்கம் என்பது முதன்மையானது. லாபத்தின் ஆதாரம் மலிவான உழைப்புச் சக்தி. எனவே, மலிவான உழைப்பு சக்தியை, உள்நாட்டு - வெளிநாட்டு பெரு முதலாளிகளுக்காக உருவாக்கிக் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டதுதான் புதிய கல்விக் கொள்கை. மோடி, தனது உரை ஒன்றில், நாட்டின் செல்வத்தை உருவாக்குகிறவர்கள் உழைப்போர் அல்ல, மூலதனம் போடுபவர் களே, அதனால், அவர்கள் எளிதாக தொழில் நடத்த தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கே அரசாங்கம் என மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார். அதன் மூலம், தனது ஆட்சி, மக்களுக்கானது அல்ல, உழைப்போருக் கானது அல்ல, பெரும் பண முதலைகள், கார்ப்பரேட் முதலாளிகளுக்கானதே என பகிரங்கமாக அறிவித்து இருக்கிறார். தமிழகத்தில் ஆட்சி பீடம் ஏறியிருக்கும் திமுக அரசு எந்தப் பாதையில் செல்லும் என்பது கேள்விக் குறி. திமுகவின் கார்ப்பரேட் சார்பு நிலைப்பாடே இன்று வரை தூக்கலாகத் தெரிகிறது. கடந்த காலத்திலும் கூட கல்வியை வியாபாரம் ஆக்குவதில், தமிழகத்தை கல்வி வியாபாரத்தில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக ஆக்குவதில், மாறி மாறி அரசாண்ட தமிழக ஆட்சியாளர்கள் ஒரு மிகப்பெரும் பங்காற்றி இருக்கிறார்கள். நாம் எப்போதும் ஆட்சியா ளர்களின்  கார்ப்பரேட் சார்பை எதிர்ப்போம். மக்கள் சார்பை வலியுறுத்துவோம்.

தாய் மொழிக் கல்வி

அதற்கு எதிராக

மும்மொழிக் கொள்கை

தாய்மொழிக் கல்வி மட்டும் தான் மாணவர்களுக்கு சரியான கல்வியாக இருக்க முடியும். இன்றைக்கும் உலகத்தில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆங்கிலம் தெரியாத, தமது தாய்மொழி மட்டுமே கற்றவர்கள் இருக்கி றார்கள். ஆனாலும், அந்த நாடுகள் முன்னேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தியா போன்ற நாடுகளில், பல்வேறு காரணங்களால், ஆங்கிலம் ஒரு தொடர்பு மொழியாக இருப்பது தவிர்க்க முடியாதது. அதுவும் குறிப்பாக, இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை இதர தேசிய இனங்கள், கலாச்சாரங்களின் மீது திணிப்பதற் கான முயற்சி காணப்படும் போது அது எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றாக முன்வருகிறது. மொழி என்பது ஒரு கலாச்சாரம், ஒரு நாகரீகம், ஒரு தேசிய இனம் தொடர்புடையது மட்டுமல்ல, இந்தியா போன்ற நாடுகளில் அது ஒரு ஆதிக்கத்தின் சின்னமாக, கருவியாகத் திகழ்கிறது. எனவே, இந்தி - சமஸ்கிருத திணிப்பு என்பது வெறும் மொழித் திணிப்பு மட்டுமல்ல, அது ஒரு ஆதிக்கத் திணிப்பு ஆகும். மொழியின் பெயரால், கார்ப்பரேட் பெரு முதலாளிகளின் ஆதிக்கத்தை சாமான்ய மக்கள் மீது, தமிழ் மக்கள் மீது, உழைக்கும் மக்கள் மீது திணிப்பதற்கான முயற்சி ஆகும். எனவே, தமிழர் கலாச்சாரத்தை, தமிழ் மொழியை, தாய் மொழியைக் கட்டிக் காக்கும் கடமை மாணவர்கள் - இளைஞர்கள் தோள்களில் சுமத்தப்பட்டு இருக்கிறது. அப்படி நாம் சொல்லும் போது, இதர மொழிகளை நாம் புறக்கணிக்கவில்லை. அதை யாரொருவரும் கற்றுக் கொள்வதற்கு நாம் எதிரானவர்களும் அல்ல. மாறாக, தாய்மொழி கல்விக்கு எதிராக பிறமொழி கல்வியைத் திணிக்கக் கூடாது என்றுதான் சொல்கிறோம்.

எதிர்காலத்தை இருண்டதாக்கும் நீட்

நீட் தேர்வு என்பது கல்வியை உலகத் தரப் படுத்துதலுக்கான முயற்சி என சொல்லப் பட்டாலும் அது நாட்டின் பன்முகப்பட்ட தன்மைக்கு எதிரானதாக, தாய்மொழிக் கல்வியை மறுப்பதாக இருக்கிறது. நீட் தேர்வு நடத்தியே தீருவோம் என்கிற ஒன்றிய அரசின் ஆதிக்க மனோபான்மையால் நாம் தமிழகத்தில் எதிர் காலம் குறித்த கனவுகளோடு வலம் வந்த பல இளம் மாணவர்களை இழந்திருக்கிறோம். நீட் தேர்வை எதிர்ப்பது என்பது இளம் மாணவர்களின் எதிர்காலத்தோடு தொடர்பு டையது.

புதிய கல்விக் கொள்கை -

மனு ()நீதி கொள்கை

புதிய கல்விக் கொள்கையின் மற்றொரு முக்கிய பிரச்சனை என்பது அது குலக்கல்வித் திட்டத்தை புதிய வடிவில் கொண்டுவர எத்தனிக்கிறது என்பது. செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் செருப்பையே தைக்க வேண்டும், முடி திருத்துபவரின் மக்கள் முடியையே திருத்த வேண்டும் என்பது சமூக நீதிக்கு எதிரானது ஆகும். குரு&சிஷ்யர் முறையை கல்வியில் புகுத்தும் முயற்சியும் மிக கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. எனவே, புதிய கல்விக் கொள்கை என்பது மனு ()நீதியை நிறுவனமயமாக்கும் ஒரு முயற்சி ஆகும்.

மனப்பாட தேர்வு முறைக்கு எதிராக

அறிவார்ந்த வளர்ச்சிக்கான கல்வி முறைக்காக

நமது கல்வி முறை என்பது அனைத்தும் தழுவிய அறிவார்ந்த வளர்ச்சிக்கான கல்வி என்பதிலிருந்து மனப்பாட கல்விமுறை, தேர்வு முறை என்பதாக மாறிப் போயிருக்கிறது. இதனை அறிவார்ந்த கல்வியாக, முற்போக்கு கல்வியாக மாற்றியமைத்திட வேண்டிய தேவை இருக்கிறது. கல்வித் திட்டத்தில் சாதி ஒழிப்பு, பால் சமத்துவ, பால் கூருணர்வு கல்வி தேவைப் படுகிறது. பெண்களின் அச்சமற்ற சுதந்தரத்தை உறுதி செய்வதாக கல்விக் கூடங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். அதே போல, கல்வித் திட்டத்தை, பாடப் புத்தகங்களை காவி மயமாக்கும் முயற்சிகளையும் காண்கிறோம். காந்தி நாட்டு விரோதியாகவும் கோட்சேவை நாட்டுப் பற்றாளனகவும் சித்தரிக்கும் முயற்சிகள் தெட்டத்தெளிவாகவே முன்வந்துள்ளன. இவற்றை எதிர்த்துப் போராடி, உண்மையை, முற்போக்கு விழுமியங்களை மீட்டெடுப்பது மாணவர்களின் தலையாய கடமையாக முன் வந்திருக்கிறது.

கோரிக்கைகள் முழக்கங்கள்

எனவே, பின் வருமாறு நமது கோரிக்கை - முழக்கங்கள் இருக்கும்.

  • இளைஞர்&மாணவர் இயக்கம்

        அது ஒரு அரசியல் - கலாச்சார இயக்கம்!

  • பண்டைப் பழக்க வழக்கங்களை விரட்டி அடிப்போம்!

        முற்போக்கு கலாச்சார மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம்!

  • வேலை - கல்வி எமது உரிமை

         வேலை தருவது அரசின் கடமை!

  • அறிவார்ந்த கல்வி தருவதும் அரசின் கடமை!
  • புரட்சிகர மாணவர் &இளைஞர் இயக்கம் கட்டுவோம்!
  • புதியதோர் தமிழகம் படைப்போம்!
  • கல்வியைக் கடைச் சரக்காக்குவதை எதிர்த்திடுவோம்!
  • ஒரு ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ கல்விக்காகப் போராடுவோம்!
  • தாய் மொழிக் கல்வி, தரமான வேலை எமது கோரிக்கை!
  • நீட் தேர்வை, மும்மொழிக் கொள்கையை எதிர்த்திடுவோம்!
  • குலக்கல்வி, அடிமைக் கல்வி முறையை புறக்கணிப்போம்!
  • புதிய கல்விக் கொள்கை - அது புதிய அடிமைக் கொள்கை - அது ஒரு மனு ()நீதிக் கொள்கை
  • கல்வி முறையில் வலதுசாரி வர்ணசிரம கொள்கையைப் புகுத்தாதே!
  • வளாகப் போராட்டங்களைக் கட்டமைப்போம்!
  • கல்வியைக் கடைச் சரக்கு ஆக்காதே!
  • கல்வியைக் காவிமயமாக்காதே!
  • அனைவருக்கும் இலவச கல்வி!
  • அனைவருக்கும் வேலை!
  • மனப்பாட தேர்வு முறைக்கு எதிராக
  • அறிவார்ந்த வளர்ச்சிக்கான கல்வி முறைக்காக

உடனடி கோரிக்கைகள் சில...

  • புதிய அடிமைக் கல்விக் கொள்கையை திரும்பப் பெறு!
  • ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலை வழங்கு!
  • தரமான வேலை, நியாயமான சம்பளம் வழங்கு!
  • வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ 10,000 நிவாரணம் வழங்கு!
  • கிராமத்துக்கு, நகர் வார்டுக்கு ஒரு நூலகம், விளையாட்டு மைதானம், உடற்பயிற்சிக் கூடம் அமைத்திடு!
  • வீர விளையாட்டுக்களை ஊக்குவித்திடு!
  • நீட் தேர்வை ரத்து செய்!
  • இட ஒதுக்கீட்டை முழுமையாக, அனைத்து மட்டங்களிலும் நடைமுறைப் படுத்து!
  • இல்லம் தேடி கல்வித் திட்டத்தை ரத்து செய்!
  • அரசுக் கல்லூரிகள், பள்ளிகளைத் திறந்திடு!
  • அனைவருக்கும் சமமான கல்வி வழங்கு!
  • கல்வித் திட்டத்தில் சாதி ஒழிப்பு, பால் சமத்துவ, பால் கூருணர்வு கல்வி அறிமுகப் படுத்து!
  • பெண்களின் அச்சமற்ற சுதந்தரத்தை உறுதி செய்வதாக கல்வி கூடங்களை மாற்றியமைத்திடு!
  • கல்வி தனியார்மயமாக்கத்தை நிறுத்து!
  • அந்நிய கல்வி நிறுவனங்களுக்கு தமிழகத்தில் கடைவிரிக்க அனுமதி வழங்காதே!
  • பிஜேபியின் புதிய கல்விக் கொள்கையை திரும்ப் பெற சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்று!
  • கல்விக் கட்டணத்தை உயர்த்தாதே!
  • தனியார் கல்வி நிருவன கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்து!
  • கல்வியைக் காவி மயமாக்காதே!
  • வரலாற்றுப் பாடங்களைத் உண்மைக்குப் புறம்பாக திரிக்காதே!

Cartoon Courtesy: Sabrang India