ஆளுநரிடம் மோதாமல் இருக்கலாம்;

ஒன்றிய அரசுடன் மோதியே ஆக வேண்டும்!

என்.கே. நடராஜன்

2022 ஜனவரி 5ம் தேதியிலிருந்து தமிழ் நாடு சட்டமன்றக் கூட்டம் இரண்டு நாட்கள் நடந்தது. ஆளுநர் ஆர்.என்.ரவி முதல் தடவை யாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றினார். ஆளுநர் உரை என்பது பெரும்பாலும் அரசு தயாரித்து கொடுக்கும் உரையை  வாசிப்பதுதான். அதுதான் வழக்கம். ஆளுநர் ரவியும் அதைத்தான் செய்தார். ஒரே ஒரு விஷயம் மட்டும், மாநில அரசு தயாரித்த அறிக்கையில் இல்லாதது, “ஜெய் ஹிந்த்என்று கூறி முடித்து, தான்தேசிய வாதத்தின்பிரதிநிதி என்பதை பதிவுசெய்து கொண்டார்.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய சட்டமன்ற தீர்மானத்தை ஆளுநர், குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பவில்லை என்று சொல்லிதிமுக கூட்டணியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் உரையை புறக்கணித்து, வெளிநடப்பு செய்தனர்ஆனால், ஆளுநர் தனது உரையில், ”நீட் தேர்வை ரத்து செய்வதில் தமிழ் நாடு அரசு உறுதியாக இருக்கிறதுஎன்று படித்தார். இப்படி இருக்கும் போது ஏன் குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் காலம்  தாழ்த்து கிறார்? பாரதிய ஜனதா கட்சியின் கருத்தை நடைமுறைப்படுத்துகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. ஆளுநர் உரைக்கு விளக்கம் தந்த முதல்வர் ஸ்டாலின், நீட் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு சட்டமன்றக் கூட்டம் முடிந்தபின், சட்டமன்றத்திற்கு வெளியில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும் என்கிறார். திமுக கட்சியின் முக்கியமான முன்னுரிமை பெற்ற வாக்குறுதி. அந்த வாக்குறுதி நிறைவேறுமா? திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கி றார்கள்.

அஇஅதிமுக உறுப்பினர்களும் ஆளுநர் உரை துவங்கியதும் வெளிநடப்பு செய்தனர்திமுக அரசு, அம்மா கிளினிக்கை இழுத்து மூடுகிறது, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று சொல்லி வெளிநடப்புச் செய்தனர். ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் ஆளுநர் உரைக்குள் நுழைந்து, மக்கள் கோரிக்கைகளை அவையில் எழுப்பி, அதற்காக வெளிநடப்பு செய்யவில்லை.

சட்டமன்றம் இரண்டு நாட்கள்தான் நடை பெற்றது. பெரும்பாலான நேரங்கள்அம்மா எதிர் கலைஞர்” “கலைஞர் எதிர் அம்மாவிவாதங்களே மேலோங்கிய விவாதங்களாக இருந்தன.

ஆளுநர் உரை, ஸ்டாலின் புகழ் பாடுவதாக இருந்தது. மொத்தத்தில் ஆளுநர் ரவியின் சட்டமன்ற உரை, வாழ்த்து மடல் வாசித்தது போல இருந்தது என்று கூடச் சொல்லலாம். இந்தியாவிலேயே மிகச் சிறந்த முதல்வரான தோற்றம் வழங்கப்பட்டது. ஆட்சிக்கு வந்து ஏழெட்டு மாதங்களில் செய்த சாதனைகள், கொரோனாவை விரட்டியடிக்க எடுத்த முயற்சிகள், வரலாறு காணாத மழை வெள்ளத்தில் ஸ்டாலினது களப்பணி, ஆட்சிக்கு வந்து, தொழில் வளர்ச்சிக்காக, மூலதனத்தை கவர்ந்திழுப்பதற்காக, மூன்று முறை தொழில் அதிபர்கள் மாநாடுகள், பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம் எனத் துவங்கி பொங்கல் பொருள்கள் இலவசம் வரை 'சாதனைகள்என ஆளுநர் பட்டியலிட்டுப் பாராட்டுகிறார்.

ஆளுநர் உரையில், ஏதாவது புதிய திட்டங்கள் இருக்குமா எனப் பார்த்தால், அப்படி ஒன்றுமில்லை. சட்டமன்றம் கூடுவதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டங்களைத் தவிர வேறொன்றும் இல்லை. சட்டமன்ற நிகழ்வை நேரடியாக ஒளிபரப்புவது நல்லதுதான். ஒன்றிய மோடி அரசு நாடாளுமன்றத்தை நம்புவதில்லை. நாடாளுமன்றத்திற்கு வெளியிலேயே பல முக்கிய முடிவுகளை எடுக்கிறது. அது விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறது. அந்த பாணியை ஸ்டாலினும் கடைபிடிக்கிறாரோ என கேள்வி எழுகிறது.

ஸ்டாலின் அரசை, மக்கள் பேராவலோடு எதிர்பார்க்கிறார்கள். இது வரை என்ன செய்தீர்கள் என்பது மக்களுக்கு தெரியும். வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என மக்கள் கேட்கிறார்கள். அதற்கு உங்களுடைய பதில், ‘75% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன்என்கிறீர்கள் ஆனால், “சொல்வதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்’’ என்பதை கைவிட்டு விட்டு. சொல்லாததைச் செய்வதே முதன்மையான இடத்தை பிடிப்பதற்காக இருக்கிறது. இது ஆபத்தானது. சொல்லி செய்வதுதான் வெளிப்படையாக செய்வதுதான் நல்லது.

ஆளுநர் உரை வழியே அரசுக்கு சில கேள்விகள்?

கொரோனாவால் வாழ்விழந்த மக்களுக்கு ரூ. 4000 நிவாரணம் போதுமாபலர் வேலை இழந்து விட்டார்கள். வருமானத்தையும் இழந்து விட்டார்கள். தனியார் கல்வி நிறுவனங்களில் வேலை செய்த ஆசிரியர்கள் பலர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டார்கள். ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடப் பேருந்து ஓட்டுநர்கள், ஊழியர்கள் வீதியில் தூக்கி எறியப்பட்டு விட்டனர். பல சிறு, குறு நிறுவனங்களில் வேலை செய்த தொழிலாளர்கள் வேலை இழந்து விட்டனர். பல நிறுவனங்கள் சம்பளத்தை குறைத்து விட்டன. நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் வேலைவருமானம் இல்லாமல் தவிக்கிறார்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் நூறு நாள் வேலையை 150 நாட்களாகவும் நாள் கூலியை ரூ.300 ஆகவும் மாற்றி அமைப்போம் என்பது திமுக தேர்தல் வாக்குறுதி. அந்த வாக்குறுதி நிறைவேற ஆட்சி முடியும் வரை காத்திருக்க வேண்டுமா? விவசாயத் தொழிலாளர் அமைப்பு சாரா தொழிலாளர் வாழ்வு மலர ஏதாவது குறிப்புகள் உண்டா!

ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஏற்கனவே ஆலையை மூடியதால் பல ஆயிரம் தொழிலாளர் வேலை இழந்தனர். மீண்டும் கம்பெனி திறக்கும் பொழுது வேலை இழந்தவர்களுக்கு முன்னு ரிமை தருவோம் என்ற வாக்குறுதியை அந்த நிறுவனம் இதுவரை நிறைவேற்றவில்லை. இந்த நிலையில் பெண் தொழிலாளர்களை, போதுமான பாதுகாப்பு இல்லாத, தற்காலிக விடுதிகளில் தங்க வைத்து, விஷமான உணவைக்கூட பரிசோதிக் காமல் வழங்கி உள்ளனர். அதனால், ஆயிரக் கணக்கான பெண் தொழிலாளர்கள் ரோட்டில் இறங்கிப் போராடினார்கள். இந்தப் பிரச்சனை பற்றி சட்டசபையில் எழுந்த கேள்விக்கு, ஸ்டாலின் பதில் சொல்லும் போது, “எமது அமைச்சர்களை நேரடியாக, போராட்ட களத்திற்கு அனுப்பி, பெண் தொழிலாளர்களை சந்தித்து, பிரச்சனைகளை தீர்த்து வைத்தோம்என்றார். என்ன தீர்வு கண்டார்? ஃபாக்ஸ்கான் நிர்வாகம் இந்த பிரச்சனையைப் பயன்படுத்தி, விடுதியை காலி செய்து ஏராளமான தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டது. எல்லாரும் வெளியூர் பெண்கள். அவர்களது வேலை வாய்ப்பு கேள்விக் குறியாகியுள்ளது. 100 பேருடன் ஆலை இயங்கத் தொடங்குகிறது என்று ஃபாக்ஸ்கான் நிர்வாகம் கூறுகிறது. பணியாற்றிய 15,000 பேருக்கும் வேலையை உறுதிப்படுத்துவாரா முதல்வர்? இளந்தொழிலாளரை எளிதாகச் சுரண்டிக் கொழுத்த முதலாளிகள் வசதியாக ஆலையை மூடி விட்டு இடம் மாறிச் சென்று விடுகின்றனர். அந்த முதலாளிகளிடமிருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க, முதலமைச்சரே என்ன செய்யப்போகிறீர்கள்

தமிழகத்தில் லட்சக்கணக்கில் சொந்த வீடில்லாதவர்கள் உள்ளனர். மாவட்டங்களிலும் தலைமைச் செயலகத்திலும் இலவச வீடு, வீட்டுமனைப் பட்டா வேண்டுமெனக் கேட்டு பல்லாயிரங்களில் மனுக்கள் குவிகின்றன. பல பத்தாண்டுகளுக்கு மேல் குடியிருந்து வரும் லட்சக்கணக்கான மக்களுக்கு பட்டா வழங்கப்பட வில்லை. இககமாலெ தமிழ்நாடு முழுவதும் நடத்திவரும் ஊராட்சி மட்ட போராட்டங்களில் இந்தக் கோரிக்கை முதன்மைக் கோரிக்கையாக வந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி (பொலிவுறு நகரம்) என்ற பெயரில் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் குடிசை வாழ் மக்களை நகருக்கு வெளியே துரத்தி, வாழ்வு பறிக்கப்படுகிறது. இந்த நகர்ப்புற ஏழைகளை, சாமான்யர்களை மீட்டெடுப்பது எப்போது? பஞ்சமி மற்றும் பூமிதான நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் எனக் கோரி, தேனி, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் மாலெ கட்சியினர் தொடர் இயக்கம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் தலித் மக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். கோவில், மடத்து நிலங்களை குடியிருப்ப வருக்கே சொந்தமாக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை, விவசாய நிலங்களை குத்தகைதாரருக்கே, உழுபவருக்கே உரிமையாக்க வேண்டுமென்பதும் நீண்டகால கோரிக்கை. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, நிலங்களை ஆக்கிரமித்து இருக்கும் பெரும் புள்ளிகளை விரட்டுவதற்குப் பதிலாக, காவிகளே பாராட்டும் அளவுக்கு கோவில் நிலங்களை மீட்டெடுக்க  திமுக அரசு ஆர்வம் காட்டுவது, காவிக்கு பயந்தா? இல்லை கடவுளுக்கு பயந்தா?

நான் ஆட்சிக்கு வந்தால் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்வேன் என்று வாக்குறுதி கொடுத்தார் ஸ்டாலின். அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்ட 700 பேர் விடுதலை பட்டியலில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முஸ்லீம் சிறைவாசிகள் பெயர்கள் இடம் பெறவில்லை. நீதிக்கான மக்கள் இயக்கம், இஸ்லாமிய சிறுபான்மை அமைப்பு கள், ஜனநாயக சக்திகள் தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்த பிறகு, முதலமைச்சர் ஒரு கமிட்டி அமைத்துள்ளார். சட்டசபையில் இஸ்லாம் சிறைவாசிகள் குறித்து திரு.ஜவாஹிருல்லா கேள்வி கேட்ட போதுகமிட்டி அமைத்திருக் கிறோம்; கலைஞர் வழியில் தீர்வு காண்போம்என்று கூறியிருக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, மிகவும் நியாயமான இந்த கோரிக்கைகூட ஆளுநர் உரையில் இடம்பெற வில்லை ஏன்?

திமுக ஆட்சி வந்த பின்னரும் தலித்துகள் மீது ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன. முதலமைச் சர் அண்மையில் சென்று வந்த தஞ்சை மாவட்டம் திருவைக்காவூரில் சுயமரியாதையுடன் தலை நிமிர்ந்து நின்ற தலித்துகள் மீது பல்வேறு வழக்குகள், மாதக் கணக்கில் நிபந்தனை பிணை என ஒடுக்கப்படுகின்றனர். ஆணவக் கொலை களும் தொடர்கின்றன. திருப்பனந்தாள், பந்தநல்லூர் அருகே தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு திமுக நிர்வாகியே தூண்டுதலாக இருந்துள்ளார். அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

பெண்கள் பற்றிய ஒரு கொள்கை அறிக்கையை ஆங்கிலத்தில் அரசு வெளியிட்டி ருக்கிறது. நல்லது, தேவைதான். அந்த அறிக் கையை ஏன் தமிழிலேயே எழுதி வெளியிட்டி ருக்கக் கூடாது? திமுக ஆட்சி வந்த நாள் முதலாய் அடுக்கடுக்காய் பல சம்பவங்கள். பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைக் குற்றங்கள் அதிர்ச்சி அலைகளை எழுப்பின. ‘என்னைப் போல் இனி எந்தப் பெண்ணும் தற்கொலை செய்து கொள்ளும் நிலை வரக்கூடாதுஎனக் கூறிச் சென்ற கரூர் பரணி பார்க் பள்ளி மாணவியின் குரலுக்கு எப்போது நீதி கிடைக்கும்? அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகம், பல ஜனநாயக சக்திகள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் தெருக்களில் திரண்டனர். அரசு அறிவித்துள்ள பெண்கள் கொள்கை அறிக்கை பெரியார் மண்ணிலிருந்து பெண்கள் மீதான வன்முறைகளை முற்றிலும் துடைத்தெறியுமா? துடைத்தெறிய வேண்டும். ஆனால், ஆளுநர் உரை அந்தத் திசையில் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

தேசிய அரசியலில் மம்தாவுக்கு இணையாக ஸ்டாலின் பெயரும் அடிபடுகிறது. இதை எதிரொலிக்கிற வகையில்தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் சமூகநீதி வேர் விட்டு தழைப்பதைக் காண விரும்புகிறேன்என்று அண்மையில் ஸ்டாலின் கூறியிருந்தார். நல்லது, ஒன்றிய அரசின் அதிகார பீடத்திலிருந்து பாசிச மோடியை இறக்குவதற்கு இந்திய மக்களோடு சேர்ந்து ஸ்டாலினும் அரசியல் பங்காற்றினால் நல்லதே! ஆனால், ஆர்எஸ்எஸ், சங்க் பரிவார் சக்திகள் தமிழகத்தில் வேர் பரப்ப பல்வேறு வேலைகளைச் செய்து வருகின்றன. செந்தில் பாலாஜியையும் உதயநிதி ஸ்டாலினை யும் அனுப்பி கோவையை திமுக வசமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் திமுகவுக்கு சவாலாக, ஆர்எஸ்எஸ் வெளிப்படையாக ஷாகா பயிற்சி மய்யங்களை நடத்தி வருகிறது. பெரியார் சிலைகளுக்கு மீண்டும் மீண்டும் அவமதிப்பு இழைக்கப்படுகிறது. அரசு இது போன்ற முயற்சிகளை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். இந்தியாவுக்கும்சமூகநீதிதமிழ்நாட்டுக்கும் எதிரான விஷக் கொடுக்குகளை விரட்டியடிக்க வேண்டுமென்ற உறுதியோடு பெரியாரியவாதி கள், மார்க்சியவாதிகள், அம்பேத்கரியவாதிகள் ஒன்றுதிரண்டனர். இகக(மாலெ) கோவை மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மக்கள் அதிகாரம் தோழர் ஜூலியஸ் இருவரும் ஆர்எஸ்எஸ் குண்டர்களை நேருக்குநேர் எதிர் கொண்டனர். அரசும் முதல்வரும் ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளை, முற்போக்கு இயக்கத் தோழர்களை தாக்கியதை வன்மையாக கண்டித்திருக்கவேண்டும். கருத்தாலும் கரத்தாலும் பாசிச சக்திகளை எதிர்த்து சண்டையிடும் பெரியாரது துணிச்சல் வேண்டும். அப்படி ஒரு தகுதியுடன் அகில இந்திய அரசியலில், தமிழக மக்களின் குரலாக, ஸ்டாலின் களம் காண்பாரேயானால் நல்லதே.

ஒட்டு மொத்தத்தில் சமூகநீதி, பெரியார், அம்பேத்கார், மாநில உரிமை, சமத்துவம், தமிழ் வளர்ச்சி என்றெல்லாம் ஆளுநர் உரையில் வருமாறு பார்த்துக் கொண்டது சாமர்த்தியம் தான். இது சாமர்த்தியம் என்றால் இந்த சாமர்த்தியம், தமிழ்நாட்டிலும் காவி நிழல் படிவதை தடுத்து நிறுத்துவதில் வெற்றி பெறுமா?

Image Thanks ArtStation