தலையங்கம்

இந்திய மகள்களின் மீது ரொம்பவே அக்கறை!

பெண்கள் படிப்பதற்கு காலம் வேண்டும் என்பதற்காகவே நாங்கள் பெண்களின் திருமண வயதை உயர்த்துகிறோம். நாடு அதனுடைய மகள்களுக்காகவே இந்த முடிவை எடுத்துள்ளது என்று இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் கூறியுள்ளார்கள். இதனால் பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார். சிலருக்கு அது வலியை ஏற்படுத்தியுள்ளது என்று மோடி எதிர்க் கட்சிகளைப் பார்த்துக் கூறியுள்ளார். பெண்கள் படிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காகவே பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21ஆக மாற்றியிருப்பதாகச் சொல்லும் மோடி, அவர்கள் படிப்பதற்கு என்ன வசதிகளைச் செய்து கொடுத்து இருக்கிறார். இந்தியாவில் அதிகமான குழந்தைத் திருமணங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. குழந்தைத் திருமணச் சட்டம் 2006 கிடப்பில் கிடக்கிறது. எந்த பயனும் இல்லை. ஆண்டிற்கு 1.5 மில்லியன் குழந்தைத் திருமணங்கள் இந்தியாவில் நடக்கிறது என்று யுனிசெப் கூறுகிறது.  2016 புள்ளி விவரப்படி குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட 326 குழந்தைத் திருமண வழக்குகளில் வெறும் 35 பேருக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது. ஏற்கனவே செயல்படாமல் இருக்கும் குழந்தைத் தடுப்பு திருமணச் சட்டத்திலும் பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக திருத்துவதற்கு முயற்சிக்கிறது மோடி அரசு. 18 வயது வரையே காத்திருக்காமல் தங்கள் பெண்களைத் திருமணம் செய்து கொடுத்த பெற்றோர்கள் 21 வயது வரை காத்திருப்பார்களா-? குழந்தைத் திருமணங்களுக்கான சமூகக் காரணங்களை ஒழிக்காமல் வயதை உயர்த்தினால் மாற்றம் வந்து விடுமா-? சமத்துவம் வந்து விடுமா? குழந்தைத் திருமணங்கள்தான்லவ் ஜிகாத்தையும்  விருப்பப்பட்டு காதல் திருமணம் செய்வதையும் ஒழிக்கும்என்று மத்தியப்பிரதேச பாஜக எம்எல்ஏ கோபால் பார்மர் பிரச்சாரம் செய்தார். அதுபோல் இன்னும் பல சங்கிகளும் பேசுகிறார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் மோடி எடுக்கவில்லையே ஏன்? இன்னொருபுறம் படிப்பு என்பது எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக ஆக்கி விட்டுக் கொண்டிருக்கிறது மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை. காவி மயமாக்கப்பட்டக் கல்விக் கொள்கை பெண்கள் படிப்பையே மறுக்கக் கூடியதாக உள்ளது. அது மட்டுமின்றி, நீட் தேர்வு போன்றவைகள் மூலம் அனிதாக்களை அவர்களுடைய கனவுகளை எட்டவிடாமல் அழித்துக் கொண்டிருக்கின்ற மோடிதான் மகள்களின் படிப்பைப் பற்றி அக்கறை காட்டுகிறார். காசியில் விஸ்வநாதர் ஆலயத்திற்கும் கங்கைக்கும் இடையே பாலம் போட்டு பாதை அமைக்கக் காட்டும் அக்கறையை, அதற்குக் செலவு செய்யும் பணத்தை பெண்களின் கல்விக்காகச் செலவு செய்யத் தயாராக இல்லாத மோடி மகளின் நலன் பற்றிப் பேசுகிறார். மகளை வேவு பார்ப்பதற்காகவே ஆட்சியைப் பயன்படுத்தியவர்தான் மகளின் படிப்பு பற்றிப் பேசுகிறார். ஊட்டச் சத்து இல்லாத காரணத்தினால் இறக்கும் குழந்தைகள், ஊட்டச் சத்து இல்லாத காரணத்தினால் இறக்கும் கர்ப்பிணித் தாய்மார்கள் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு வக்கற்ற அரசுதான் வருங்காலப் பெண்களின் படிப்பைப் பற்றி பேசுகிறது. இவர்களுடைய நோக்கம் பெண்களுக்குச் சமத்துவம், கல்வி கொடுப்பதல்ல. பெண்களை மேலும் அடிமைப்படுத்துவதும். அவர்களின் உரிமையைப் பறிப்பதுமேயாகும்