தலையங்கம்

ஒமைக்ரானும் ஓரவஞ்சனையும்

உலகம் முழுவதும் ஒமைக்ரான் உலா வந்து கொண்டி ருக்கிறது. இந்தியாவில் அதனால் தாக்கப்படுவோரின் எண்ணிக் கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒமைக்ரானை எதிர் கொள்வதற்காக பல மாநிலங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இரவு நேர ஊரடங்கு, பகுதி ஊரடங்கு, பாதி ஊரடங்கு என பல வழிகள். தடுப்பூசி எல்லாரும் கட்டாயம் போட்டு விட வேண்டும் என்று வலியுறுத்துகிறது ஒன்றிய அரசு. மோடி 143 கோடி டோஸ் தடுப்பூசி போட்டு சாதனை படைத்துவிட்டதாக பெருமை பேசுகிறார். 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் அதுவும் பெருவாரியாகக் கிராமப்புறங்களைக் கொண்ட இந்திய நாட்டில், 143 கோடி டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. 120  கோடி மக்களுக்கு இரண்டு டோஸ் போட்டுவிட்டால் 240 கோடி டோஸ்கள் இதற்குள் போட்டிருக்க வேண்டும். ஆனால், இரண்டு டோஸ்கள் போட்டவர்கள் எண்ணிக்கையையும் ஒரு டோஸ் போட்டவர்கள் எண்ணிக்கையையும் சேர்த்து 143 கோடி டோஸ்கள்  போட்டுவிட்டதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார். இன்னொருபுறம் காசி முதல் விருதுநகர் வரை சுற்றி வந்து கூட்டங்களைக் கூட்டிக் கொண்டிருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் சாமியார் முதல்வர் யோகி லட்சக்கணக்கான மாணவர்களை இந்த ஒமைக்ரான் பரவல் நேரத்தில் கூட்டி வைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் தற்போது ஜனவரி 1 முதல் 10 வரை சில கட்டுப்பாடுகள் கொரோனாவின் பேரில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சமுதாயக் கூட்டங்களுக்கும் அரசியல் கூட்டங்களுக்கும் ஏற்கனவே இருக்கும் தடை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே தடை இருந்து வந்தநிலையில் உதயநிதி ஸ்டாலின் கோயமுத்தூரில் ஆயிரக்கணக்கில் மக்களைத் திரட்டி கூட்டம் போடுகிறார். சங்கிகள் எங்கெல்லாம் வாய்ப்பிருக்கிறதோ அங்கெல்லாம் மத நம்பிக்கை என்று சொல்லிக் கொண்டு கும்மாளம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கூடங்குளத்தில் அபாயகரமான அணுக் கழிவை சேமிக்கக் கூடாது, அணுஉலைப் பூங்காவை அமைக்கக் கூடாது என்று சொல்லி ஒரு தர்ணா போராட்டத்திற்கு அனுமதி கேட்டால் ஒமைக்ரானைக் காரணம் காட்டி ஜனவரி 10 வரை தடை என்று தமிழக காவல்துறை சொல்கிறது. இதே தமிழக அரசின் சபாநாயகர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்களில் ஆயிரக்கணக்கில் மக்களைக் கூட்டுகிறார்கள். அங்கெல்லாம் வராத ஒமைக்ரான் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் என்று சொன்னால் மட்டும் வந்துவிடுகிறது. ஆபத்தான அணுஉலையை முழுவதுமாக இழுத்து மூட வேண்டும் என்று மக்கள் போராடிக் கொண்டிருக்க, தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகரோ கூடங்குள அணுஉலையில் வேலை வேண்டும் என்று இளைஞர்களைக் கூட்டிக் கொண்டிருக்கிறார். ஜனவரி 10ம் தேதி வரை தடை. பின்னர் 12ம் தேதி மோடி விருதுநகர் பொங்கல் விழாவிற்கு வரும்போது தடை நீக்கம். பின்னர் தடை. இது என்ன மாதிரியான ஒமைக்ரான் ஒழிப்பு நடவடிக்கை என்று தெரியவில்லை. சங்கிகள், ஆளும் கட்சியினர் போடும் வெற்றுக் கூச்சல் கூட்டங்களில் யாரையும் தொடாத ஒமைக்ரான் மக்கள் பிரச்சினைகளுக்குப் போராடினால் மட்டும் ஒட்டிக் கொள்ளுமாம். கோவையில் தனியார் பள்ளியில் சாகா நடத்தும் சங்கிகளிடம் வராத ஒமைக்ரான் அதைத் தடுக்க குரல் கொடுக்க வரும் இடதுசாரி, முற்போக்காளர்கள் மீது மட்டும் ஒட்டிவிடுகிறது. அவர்கள் கைது. வழக்கு. இந்த கொரோனாவை வைத்துக் கொண்டு மக்கள் குரல்களை ஒடுக்க நினைக்கிறார்கள் ஆட்சியாளர்கள். அதிமுக போய் திமுக வந்தாலும் மக்கள் அவஸ்தை மட்டும் அப்படியே தொடருது.

Image: Thanks Mint