பாஜகவும் அதன் தலைவர்களும் பல மாநிலங்களில் வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தல்களில் தங்களுக்கு ஏற்படப்போகும் தோல்வியை உணரத் தொடங்கிவிட்டார்கள். விவசாயிகள் போராட்டத்தின் வெற்றி ஏற்படுத்திய தாக்கம்; முன்னெப்போதும் இல்லாத வேலை யின்மை, விலைவாசி உயர்வு; உத்திரபிரதேசத்தில் ஒரு முக்கிய தலைவர் பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாடியை நோக்கி போவது; இவையெல்லாம் மோடி ஆட்சிக்கும் பாஜகவுக்குமான அடுத்து நடக்கப் போவதற்கான அடையாளங்கள்.
தோல்வி பயம் பாஜகவை விரக்தியில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உந்தித் தள்ளுகிறது. பிரதமரின் ‘பாதுகாப்பு குறைபாடு’ கூத்து அந்த விரக்தியைக் காட்டிக் கொடுக்கிறது. பஞ்சாப்பின் ஒரு மேம்பாலத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டம், பிரதமரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பஞ்சாப் காங்கிரஸ் அரசின் ஒரு சதித்திட்டம் என பிரதமர் அலுவலகம் சொல்கிறது. ஆனால், உண்மைகள் அதைக் காட்டவில்லை. பிரதமரின் பயணப் பாதையை முடிவு செய்தது பஞ்சாப் போலீஸ் அல்ல. அவருடைய மத்திய அரசின் சிறப்புப் பாதுகாப்புப் படை. மேலும் பிரதமரின் ஆதரவாளர்கள்தான் போராட்டக்காரக்களைக் காட்டிலும் அவரின் வாகனங்களுக்கு மிக அருகில் இருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதுமட்டுமின்றி, பிரதமர் சாலை வழியாகப் பயணம் செய்யப் போகிறார் என்கிற பிரதமர் மற்றும் சிறப்புப் பாதுகாப்புப் படையின் முடிவுவை மாநில அரசாங்கம் அறிவதற்கு முன்பே அங்கே விவசாயிகளின் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. பிரதமரின் சாலை வழிப் பயணம் பற்றியோ அவருடைய பயணப் பாதை பற்றியோ விவசாயிகள் போராட்ட இடத்தில் கூடும்போது அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கடந்த காலத்தில் பல சந்தர்ப்பங்களில் பிரதமர் தன்னுடைய நேரடி பேரணிகளை ரத்து செய்து இருக்கிறார். மோசமான வானிலை ஹெலிகாப்டர் பயணம் பாதுகாப்பற்றது என்கிறபோது எதற்காக இப்போது மட்டும் ஒரு நீண்ட சாலைப் பயணத்தினை வலியுறுத்தினார்? மொத்த நாடகமும் வரவிருக்கும் தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட திசை திருப்பும் வேலையா? அல்லது பாஜகவின் ஹரியானா முதல்வர் வேண்டுகோள்படி பஞ்சாப்பில் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் தேர்தல்களை நடத்துவதற்காக ஒரு சாக்கை உருவாக்கும் வேலையா? பஞ்சாப்பில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டைத் தொடர்ந்து “1984” (சீக்கியப் படுகொலைகள்) மீண்டும் நடக்கும் என்று உத்தரப்பிரதேசம் பித்தூர் பாஜக எம்எல்ஏவின் ட்டிவிட்டர் உள்பட பல வலதுசாரி டிவிட்டர்கள் பயமுறுத்தினார்கள். சீக்கிய எதிர்ப்பு, பஞ்சாப் எதிர்ப்பு, விவசாயிகள் எதிர்ப்பு உணர்வுகளுக்குத் தீ மூட்டியும் ஆறியிருக்கும் ஆழமான ரணங்களை மீண்டும் கிளறிவிட்டும் தேர்தல் ஆதாயம் தேடப் பார்க்கிறது பாஜக.
இதற்கிடையே இப்போது தேர்தல்கள் “80%க்கும் 20%க்கும் இடையே நடக்கும் ஒரு போர்” ஆகும் என்று சட்டமன்றத் தேர்தல்களை பெரும்பான்மை இந்து சமுதாயத்திற்கும் சிறுபான்மை முஸ்லீம் சமுதாயத்திற்கு மிடையேயான ஒரு போர் என வெளிப்படையாகவே அறிவிக்கிறார் உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத். உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியாவிடம் பிபிசி நிருபர், தரம் சன்சாத்களில் (மத மாநாடுகளில்) முஸ்லீம்களை இனப்படுகொலை செய்ய அழைப்புகள் விடுக்கப் பட்டதைப் பற்றி கேட்கும்போது, இனப் படுகொலை பேச்சுகளுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்கியவர், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, நிருபரின் முகக் கவசத்தை பிடித்து இழுத்துவிட்டு, தன்னுடைய பாதுகாவலர்களிடம், ஒளிப்பதிவாளரிடமுள்ள கேமராவை பிடிங்கி அதில் உள்ள பதிவுகளை நீக்கிவிடச் சொல்கிறார். இவையெல்லாம் பாஜகவின் விரத்திக்கான கூடுதல் அடையாளங்கள்.
சட்டமன்றத் தேர்தல்களில் மக்களே மிகவும் இணக்கமான நம்பிக்கையான எதிர்கட்சி. இந்த மக்களின் எதிர்கட்சிதான் முஸ்லிம் மற்றும் சீக்கிய சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அச்சுறுத்தல்கள் சவாலை உறுதியாக எதிர் கொள்ள வேண்டும்; நம்பிக்கை மற்றும் மத எல்லைகளைக் கடந்து பாறை போன்ற உறுதியான ஒற்றுமையை விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே கட்டமைக்க வேண்டும்; இந்த தேசத்தை பாஜக மத வழிகளில் பிரிக்க அனுமதிக்கக் கூடாது; விவசாயம், வேலை, கல்வி, சுகாதாரம், விலை ஏற்றம் ஆகியவையே தேர்தல்களில் கவனம் குவிக்கப்பட வேண்டிய பிரச்சனைகள் ஆகும்.
எம்எல் அப்டேட்& தலையங்கம்
11-17 ஜன 2022
தமிழாக்கம் – சங்கரந்தம்பி
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)