மோடி அரசாங்கத்தின் - ஷ்ரம்:

அமைப்புசாரா தொழிலாளர் நலனையும் நல வாரியங்களையும் ஒழித்துக்கட்டும் முயற்சி!

ஒன்றிய மோடி அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அவை இந்தி பெயரில்தான் அழைக்கப்படுகின்றன. அவர்கள் சிலாகித்துப் பேசி வரும் ஒற்றைத் தன்மை என்பது திட்டங்களின் பெயரிலும் கூட வெளிப்படுகிறது. அப்படி இந்தியில் பெயரிடப்பட்ட திட்டம் தான் அமைப்பு சாரா தொழிலாளர்களை பதிவு செய்யும் -ஷ்ரம் என்ற திட்டமும். நாடு முழுவதும் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள், இத்திட்டம் அறிவித்த சில நாட்களிலேயே கோடிக்கணக்கில் இதில் பதிவு செய்து கொண்டனர். நாடு முழுவதும், குறிப்பாக தமிழகத்தில் பாஜககாரர்கள் வலிந்து சென்று அமைப்புசாரா தொழிலாளர்களை இத்திட்டத்தில் பதிவு செய்வதோடு அதில் ஒரு நல்ல தொகையையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு உத்தரவுப்படி பதிவு கட்டணம் இல்லை. மாநில நலவாரிய பதிவு போலல்லாமல் பதிவு செய்வதும் மிகவும் எளிது.

இத்திட்டத்தில் பதிவு செய்ய ஒருவர் 16-59 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஆதார் எண், வங்கிக் கணக்கு, செல்பேசி வைத்திருக்கவேண்டும். அவர் தொழிலாளர் ஈட்டுறுதித் திட்டத்தில் உறுப்பினராகவோ வருங்கால வைப்பு நிதி கட்டுபவராகவோ இருக்கக்கூடாது. அரசாங்க பணத்தால் நிர்வகிக்கப்படும் பென்சன் திட்டத்தில் ஓய்வூதியம் பெறுபவராகவும் இருக்கக் கூடாது. வீட்டிலிருந்து வேலை செய்வோர், கூலி வேலை செய்வோர், சுயதொழில் புரிவோர், அமைப்பாக் கப்பட்ட துறையில் பணிபுரியும் இஎஸ்ஐ, பிஎப் வரம்புக்குள் வராத அமைப்புசாராத் தொழிலா ளர்கள் இதில் பதிவு செய்யலாம். யார் யார் பதிவு செய்யலாம் என்று சொல்லப்பட்டுள்ள விவரங்களை வைத்துப் பார்த்தால் அரசாங்கம் அல்லது வேலையளிப்பவர், அவரிடம் வேலை செய்யும் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப் புக்கு பொறுப்பு இல்லை என்பதை தெளிவாக்கி விடுகிறது. கூடவே இத்திட்டம், ஒப்பந்தத் தொழிலாளர் முறைப்படுத்துதல் மற்றும் ஒழிப்பு சட்டம் 1970 (CLARA) மற்றும் புதிய சட்டத் தொகுப்புகளின் கீழ் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால், ஒப்பந்த தொழிலாளர் களின் சமூகப் பாதுகாப்பு பற்றி முதன்மை வேலை அளிப்பவரோ ஒப்பந்தக் காரரோ எதுவும் செய்ய வேண்டியதில்லை என்பதும் தெளிவா கிறது. எப்போது வேண்டு மானாலும் சட்ட திட்டங்களை மாற்றிக் கொள்ளும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான  தொழிலாளர்களின் வங்கி கணக்கும் ஆதார் எண்ணும் இணைக்கப் படாததால் பதிவுக்கு அதுவும் ஒரு தடையாக இருந்தது. பிற்பாடு ரேகை பதிவு கொண்டு பதிவு செய்து கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது.

முதலில் இது, அமைப்புசாரா தொழிலாளர் கள் பற்றிய விவரங்களை சேகரிப்பதற்கான திட்டமாக சொல்லப்பட்டது. பிறகுதான் இது நலத்திட்டங்களை ஒழித்துக்கட்டும் நோக்க முடையது என்பது புலனாகியது. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கென்றே ஒன்றிய மோடி அரசு &ஷ்ரமை கொண்டுவந்துள்ளதாக தெரிகிறது.

இந்தத் திட்டம் சொல்லும் நலப்பயன்கள் என்னென்ன?

பதிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு தொழிலாளிக்கும் மரணத்திற்கு ரூ 2 லட்சம், நிரந்தர ஊனத்திற்கு ரூ 2 லட்சம் காப்பீடு, பகுதியளவு ஊனம் என்றால் ரூபாய் ஒரு லட்சம் காப்பீடு என்று மட்டும்தான் இப்போதைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மோடி அரசாங்கம் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இத்திட்டத்தில் சேர்ந்து விட்டால் வானத்துக்கு கீழுள்ள எல்லாம் கிடைக்கும் என்பது போல விளம்பரம் செய்து வருகிறது. ரேஷன் அட்டை கிடைக்கும். ஆயுள் காப்பீடு உண்டு. ஊரக வேலை உறுதித் திட்டம் முதல் தொழில் முனைவோர் திட்டம் வரை இதன் மூலம் பெறலாம் என்றெல்லாம் இணையதளம் தவறாகச் சித்தரிக்கிறது.

அரசாங்கம் வெளியிட்டுள்ள -ஷ்ரம் பற்றிய கையேடு, யார் யார் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறுகிறது. கட்டுமான தொழிலாளி, இடம்பெயர்ந்த தொழிலாளி, ஜிக் மற்றும் பிளாட்பார்ம் தொழிலாளி, நடைபாதை வியாபாரிகள், வீட்டுவேலை செய்பவர்கள், விவசாயத் தொழிலாளர், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர், ஆஷா, அங்கன் வாடி, மதிய உணவு திட்டத் தொழிலாளர் இன்னபிற 126 வகையான தொழில்களை அட்டவணைப்படுத்தி உள்ளது. இணைய தளத்தில், மேற்கூறிய பட்டியலுக்குள் வராத 127 வதாக ஒருவகை இனத்தை சொல்கிறது. அது இந்த வகைக்குள் வராதஅமைப்புசாரா தொழி லாளி எனும் வகை இனம். இது வரை பதிவு செய்துள்ள நலவாரியங்களின் சட்ட விவரங்களும் கூட சேகரிக்கப்பட்டு வருகின்றன. அப்படி என்றால் ஏற்கனவே நல வாரியங்களால் சேகரிக் கப்பட்ட விவரங்களும், நல வாரியங்களும் கூட அதன் பொருத்தப் பாட்டை இழந்து விட்டன என்பதை குறிப்பதாகவே இது உள்ளது.

தொழிலாளர் துறை உட்பட பல்வேறு அமைச்சகங்களிலிருந்து அளிக்கப்பட்டு வரும் நலப்பயன்கள் அனைத்தும் இந்த ஒரு இணைய தளத்தில் ஒருங்கிணைக்கப்படுமாம். பல வகை தொழிலாளருக்கென தனித்தனியே நலவாரியங்கள் இருந்தாலும் பணப்பலன்கள் இந்த இணையதளம் மூலம் மட்டுமே விநியோகிக்கப்படும் என்கிறது. இதிலிருந்து மற்ற நல வாரியங்கள் அனைத்திற் கும் மூடுவிழா நடத்தப்படும் என்பது தெளிவா கிறது. தொற்று பாதிப்பு, பேரிடர் காலங்களில் வழங்கப்படும் உதவித் தொகைகள் கூட இதன் மூலம்தான் வழங்கப்படுமாம். தேர்தல் காலங்களில் ஆட்சியில் இருப்போர் இதன்மூலம் பணம் வழங்க முடியும் என்பதை மட்டும் சொல்லவில்லை! உத்தரபிரதேச அரசு ரூபாய் 500 வழங்கிவருவதாக சொல்லப்படுகின்றது. உத்தரபிரதேச மாநிலம்தான் மிக அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களை பதிவு செய்துள்ளது.

மூன்றாவதாக ஏற்கனவே செயல்பட்டு வரும் நலவாரியங்களில் கையிருப்பில் உள்ள பல கோடிக்கணக்கான தொகையின் தலைவிதி பற்றி இந்த திட்டமும் சரி சமூக பாதுகாப்பு சட்டத் தொகுப்பும் சரி மவுனம் காக்கிறது. அப்படி என்றால் இணையதளம் அந்த பயன்களை எல்லாம் கொள்ளை அடிக்கப்போகிறது என்ற வலுவான சந்தேகம் எழுகிறது. அதுபோலவே, இஎஸ்ஐ (ஊழியர் காப்புறுதித் திட்டம்), பிஎஃப்( ஊழியர் வருங்கால வைப்புநிதி) இருப்பில் உள்ள பெருந்தொகையையும் கூட இது விட்டு வைக்காது. ஒட்டுமொத்தத்தில் பார்க்கும்போது எங்கெல்லாம் தொழிலாளர் பணம் இருக்கிறதோ அவை எல்லாம் அந்த 'தொகையை சிறப்பாக கையாளுதல்' என்ற பெயரில் உள்நாட்டு, பன்னாட்டு பெருந்தொழில்குழும கம்பெனி களுக்கு தாரை வார்க்கப்படும்.

இந்த -ஷ்ரம் திட்டத்தின் இன்னொரு பெரிய பிரச்சினை நடப்பிலுள்ள நலத் திட்டங்களை வெட்டிச் சுருக்குவதாகும். ஏற்கனவே பீடித்தொழிலாளர் நலச்சட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த ஒப்பீட்டளவில் மேலான வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் மோடி ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய தொகையும் ஆட்சியாளர்களின் அரசியல் தேவைகளுக்காக மடைமாற்றம் செய்யப்படுகிறது. கர்நாடகாவில் நல நிதியில் இருந்து பணத்தை எடுத்து தொழிலாளர் துறை அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு இன்னோவா கார் (தோராயமாக கார் ஒன்றின் விலை ரூ.17 லட்சம்) வாங்கி கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. இதன் மூலம் கட்டுமான நல வாரிய நிதியிலிருந்து பெரும் தொகை கொள்ளையடிக்கப் பட்டுள்ளது.

செஸ்வரியும் (மேல்வரியும்) பெருமளவு குறைக்கப்பட உள்ளது. புதிய சமூகப் பாதுகாப்பு சட்ட தொகுப்புகள், 50 லட்சம் பெறுமான கட்டிடங்களுக்கு செஸ் வரியிலிருந்து விலக்கு அளிக்க உள்ளது. கட்டுமான நல வாரிய சட்டம் 3% வரை செஸ் வரி வசூலிக்கலாம் என்று சொல்லும்போது தமிழ் நாட்டில் 0.3% மட்டுமே வசூலாகி வந்தது. ஏஐசிசிடியு உட்பட அனைத்து சங்கங்களும் இணைந்து போராடிய பின்பு இப்போது ஒரு சதம் வசூலிக்கப்படுகிறது. அதனால் கையிருப்பு தொகையிலிருந்து சிறிதளவேனும் தமிழக அரசு நலத்திட்டப் பயன்களைஉயர்த்தியிருக்கிறது.

சமூகப் பாதுகாப்பு சட்டத் தொகுப்பு பரிந்துரை செய்யும் கருதுகோள் படி இஎஸ்ஐ, பிஎஃப், பணிக்கொடை, வீட்டுவசதி, குழந்தை களின் கல்வி போன்ற எதுவானாலும் இனி அது வேலையளிப்பவர் அல்லது அரசாங் கத்தின் பொறுப்பாக  இருக்காது. வருங்காலங்களில் தங்களின் சமூகப் பாதுகாப்புக்கு தொழிலாளர்கள் தாங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். நல வாரியங்கள், அமைப்புசாரா தொழிலாளருக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் இடையிலான  இடைத்தரகராக மட்டுமே செயல்படும். அமைப்புசாரா தொழிலாளர், தான் தேர்ந்தெடுத்த காப்பீட்டு நிறுவனங்களுக்கு எந்த அளவு மாதாந்திர பிரீமியம்(தவணைத்) தொகை செலுத்துகிறார்களோ அந்த அளவு நலப்பயன் களை பெறுபவர்களாக இருப்பர். ஆகவே, சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கான பொறுப்பு அரசாங்கம் அல்லது வேலை அளிப்பவரிடமிருந்து தொழிலாளியின் தோள் களுக்கு மாற்றப்பட் டுள்ளது. -ஷ்ரம் அந்த வகையில் முதல் படி ஆகும்.

நாம் -ஷ்ரம் பற்றிய நமது விமர்சனங்களை தெரிவிக்கிற, அதேவேளை அரசாங்கத்திடமிருந்து கொஞ்சநஞ்ச பயன்களையாவது அளிக்கக்கூடிய -&ஷ்ரம் அல்லது வேறு நலவாரிய திட்டங்களில் சேர வேண்டாம் என்று தொழிலாளரை தடுக்க வேண்டியதில்லை. ஏஐசிசிடியு வேலை செய்யும் பல அமைப்புசாரா தொழிலாளருக்கு எவ்வித நல வாரியப் பயனும் இல்லாத நிலையும் இருக்கிறது. அது போன்ற நிலையில் அந்த தொழிலாளரை -&ஷ்ரம் இணைய தளத்தில் இணைத்து விட நாம் உதவ வேண்டி உள்ளது. இந்த நிலைப்பாட்டின் காரணமாக அரசாங்கமும் வேலை அளிப்பவரும் தங்களுடைய பொறுப் பைத்  தட்டிக் கழிப்பது பற்றிய நமது விமர் சனத்தில் தொய்வு இருக்காது. ஏற்கனவே இருக்கக்கூடிய நல வாரியம், நலப் பயன்கள் தாண்டி கூடுதல் சலுகைகளை வழங்கக் கூடிய இன்னொரு புதிய இணையதளமாக &-ஷ்ரம் இருக்குமானால் அதில் எவ்வித சச்சரவுகளுக்கும் இடமில்லை.

சமூகப் பாதுகாப்பு என்பது வேலை யளிப்பவரின், அரசாங்கத்தின் பொறுப்பு என்பதாக இருக்கவேண்டும் என்பதுதான் நீண்டகாலமாக தொழிற்சங்க இயக்கம் முன்னெடுத்து வருகிற கோரிக்கை. சமூகப் பாதுகாப்பு என்பது பிரச்சினை அல்ல மாறாக வாழ்நாள் முழுவதும் தன்னுடைய உழைப் பையும் வியர்வையையும் நிறுவனத்துக்கு அளித்த தொழிலாளியை நிறுவனமும் அரசும் சமூகமும் அங்கீகரிப்பதன் வெளிப்பாடாகும்.

இன்னொரு முக்கிய கோரிக்கை; இருக்கிற நலத்திட்டங்களை தக்கவைத்துக் கொள்வதும் அனைவருக்கும் அதை விரிவு படுத்துவதுமாகும். அப்படிச் செய்யும்போதுதான் மருத்துவம், கல்வி, பிஎஃப், பணிக்கொடை, ஓய்வுதியம், ஓய்வூதிய பயன்கள், குடியிருப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய சமூகப் பாதுகாப்பு திட்டங்களும் பயன்களும் திட்டத்தின் பகுதியாக கொள்ளப்படும்.

 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

1, ஜனவரி 18,2022 வரை  22.83 கோடி தொழிலாளருக்கும் மேற்பட்டோர் -ஷ்ரம் இணையத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். அமைப்புசாரா தொழிலாளர் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 60% பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு நாளும் 15 முதல் 20 லட்சம் பேர் வரை பதிவு செய்து வருகின்றனர்.

பதிவு செய்வதில் முதல் 5 முன்னணி மாநிலங்களாக உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, மத்தியப்பிரதேசம் மாநிலங்கள் உள்ளன. மத்தியபிரதேசத்தோடு போட்டிபோட்டுக்கொண்டு அடுத்ததாக ஜார்க்கண்ட் மாநிலம் வருகிறது. பெருவாரியாக இடம் பெயர்ந்த தொழிலாளர் இருக்கும் மாநிலங்கள் அதிக அளவில் பதிவுகளை செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தில் தாமாக முன்வந்து 3.5 கோடி பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச கணக்கெடுப்புகள்படி மொத்த அமைப்புசாரா தொழிலாளர் எண்ணிக்கையை விட கூடுதலாக, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு, கிட்டத்தட்ட 10 கோடிப் பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

விவசாயத் தொழிலாளர்கள், வீட்டிலிருந்து வேலை செய்வோர், வீட்டு வேலை செய்வோர், கட்டுமானம், கார்மெண்ட் தொழிலாளர்கள் முதல் வரிசையில் வருகின்றனர்.

பதிவு செய்தவர்களில் 52.7% பேர் பெண்கள். அதைவிட 5% குறைவாக ஆண்கள் பதிவு செய்து இருக்கின்றனர்.

வயதுப்படி பார்த்தால் 18-  40 வயதிற்குட்பட்டவர்கள்  61.87% பேரும்,40-50 வயதினர் 21.93% பேரும்,50  வயதிற்கு மேற்பட்டோர் 13.22% பேரும் பதிவு செய்திருக்கின்றனர்.

சாதிய அடிப்படையில் பார்த்தால் இதர பிற்பட்ட பிரிவினர் 45.64% ஆகவும் அதைத்தொடர்ந்து எஸ்சி/ எஸ்டி பிரிவினர் 28.7% ஆகவும், பொதுப்பிரிவினர் 25.79% ஆகவும் உள்ளனர்.

8 கோடிப்பேர் தாமாகவே பதிவு செய்து கொண்டவர்கள் ஆவர். இது எஸ் எஸ் கே அமைப்பு மூலம் பதிவு செய்யப்பட்ட 23 லட்சத்தை ஒப்பிடும்போது ஆகக் கூடுதலாகும். சி எஸ் சி(-பொது சேவை மய்யங்கள்) நிறுவனம் 14.4 கோடி பேரை பதிவு செய்து முன்னணியில் உள்ளது.

விவசாயத்தில் 11.5 கோடிப் பேரும் வீட்டு வேலை, வீட்டில் இருந்தபடி வேலை செய்யும் நபர்களில் 2.46 கோடிப் பேரும் கட்டுமான துறையில் 2.26 கோடி பேரும் கார்மெண்ட் மற்றும் ஆடை வடிவமைப்பு தொழிலில் 1.5 கோடிப் பேரும் பதிவுசெய்து கொண்டுள்ளனர்.

எந்தெந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இந்த திட்டத்தில் பதிவு செய்யலாம் என்பதை அறிந்துகொள்ள கீழ்க்கண்ட இணைய தள முகவரியை சொடுக்கவும்

List of professions/ occupations covered | Ministry of Labour & Employment

என்னென்ன சமூக பாதுகாப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ள கீழ்க்கண்ட இணையதள முகவரியை சொடுக்கவும்.

https://eshram.gov.in/social-security-welfare-schemes

வேலைவாய்ப்புத் திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ள கீழ்க்கண்ட இணையதள முகவரியை சொடுக்கவும்.

<https://eshram.gov.in/employment-schemes

------------------------------------------------------------------------------------------------------------------------------------------

2.  தமிழகத்திலும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான &-ஷ்ரம் இணைய பதிவை மத்திய அரசு கொண்டு வந்திருப்பது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் என்ற கருத்து தமிழகத்தில் செயல்படக்கூடிய மத்திய தொழிற்சங்கங்கள் மத்தியில் உள்ளது. இது சம்பந்தமாக மத்திய தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் ஒன்றும் நடத்தப்பட்டு தமிழ்நாடு அரசு இது பற்றி முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஏஐசிசிடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் தமிழ்நாடு தொழிலாளர் துறை அமைச்சர் திரு. சிவி. கணேசன் அவர்களை சந்தித்தனர்தமிழக மத்திய தொழிற்சங்கங்கள் -ஷ்ரம் பதிவு செய்து கொடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை.

தமிழகத்தில் எவ்வித நல்வாழ்வுத் திட்டங்களும் தமிழக அரசால் செயல்படுத்தப்பட வில்லை என்றும் மத்திய அரசின் திட்டங்களால் மட்டுமே மக்கள் பயன்பெற்று வருகிறார்கள் என்றும் சொல்லிக் கொண்டிருக்கும் பாஜக பிரமுகர்கள், தமிழகம் முழுவதும் தொழிலாளரிடம் பணம் வாங்கிக் கொண்டு &-ஷ்ரம் இணையதளத்தில் தொழிலாளரை பதிவு செய்து கொடுப்பதில் மும்முரம் காட்டி வருகிறார்கள். பதிவு செய்யும் முறையும் எளிமையாக இருப்பதால் பலரும் செல்போனில் தாமாகவே பதிவு செய்தும் வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் இதுவரை 61,34,498 பேர் பதிவு செய்துள்ளனர். இதில், கடலூர் மாவட்டம் முதலிடத்திலும் தஞ்சாவூர் மாவட்டம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இதுவரை 33 வகை தொழிலாளர் பதிவு செய்து கொண்டுள்ளனர். இவர்களுள், மற்ற மாநிலங்களைப்போலவே இங்கும் விவசாயப் பின்னணி கொண்டவர்களும் (36,56,888) கட்டுமானத் தொழிலாளரும் (8,41,066) முதல் இரண்டு இடத்தில் உள்ளனர். பொதுப்பிரிவைச்சேர்ந்தவர்கள் 29.22%, இதர பிற்பட்ட பிரிவினர் 46.23%, பட்டியல் வகுப்பினர் 23.31%, பழங்குடி வகுப்பினர் 7.38%. 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------ - தேசிகன்