தலையங்கம்

தமிழ்நாட்டின் காவல்துறையும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா?

ஜனவரி 30, இந்துமத வெறியன் கோட்சே காந்தியைச் சுட்டு கொன்ற நாள். நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் காந்தியின் பெயரால் உறுதிமொழி எடுப்பது ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு நிகழ்வு. இந்த ஆண்டு ஜனவரி 30 அன்று கோவையில் இடதுசாரி கட்சிகள் மற்றும் திராவிட இயக்கங்கள், முற்போக்கு இயக்கங்கள் (மக்கள் ஒற்றுமை மேடை) சார்பாக பொது இடத்தில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பே  காந்தி படம் கொண்ட  அந்த பேனரில் இந்து மதவெறி என்று இருந்ததால் அதை அப்புறப்படுத்தச் சொன்னது காவல்துறை. இந்து மதவெறி என்று சொல்லக் கூடாது என்கிறது பெரியார், அண்ணா வழியில் ஆட்சி நடத்துவதாகச் சொல்லும் திமுக அரசின் காவல்துறை. வாக்குவாதம் நடந்து, தோழர்கள் காந்தி படம் போட்ட பேனரை அப்புறப்படுத்த முடியாது என்று சொல்லிவிட்டுஇந்துஎன்ற வார்த்தையை மட்டும் பேனரில் மறைத்து ஒட்டி விட்டு உறுதிமொழி நிகழ்ச்சியை நடத்தத் தொடங்கினர். உறுதிமொழி வாசித்துக் கொண்டிருந்த போதே மீண்டும் காவல்துறை அதிகாரிகள் குறுக்கிட்டு நிறுத்தச் சொல்கிறார்கள். இப்போதுகாந்தியைக் கொன்ற கோட்சேஎன்று சொல்லக் கூடாது என்கிறார்கள். காந்தியை கோட்சே சுட்டுக் கொல்லாமல் வேறு யார் கொன்றார்கள் என்று கேட்டால், அதெல்லாம் எங்களுக்குத் தேவையில்லை, கோட்சே கொன்றதாகச் சொல்லக் கூடாது, கோட்சே பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள் திமுக அரசின் காவல்துறை அதிகாரிகள். கோவை தமிழ்நாட்டில் உள்ளது. தமிழ்நாட்டின் காவல்துறை முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ளது. டில்லியைப்போல் பாஜக அரசின் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கீழ் இல்லைபாஜகவின் இந்து மதவெறி அரசியலுக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்கக் கூடாது என்று முதல்வர் சொன்ன மறுநாளே முதல்வர் கட்டுப்பாட்டிலுள்ள காக்கி உடையணிந்த காவல்துறை அதிகாரிகள் காவிப் பாசிஸ்டுகளாவே பேசுகிறார்கள். கடந்த அதிமுக ஆட்சியின்போது, பெரியார் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார்கள் என்ற காரணத்திற்காக நான்கு காவலர்களை இடமாற்றம் செய்தார்கள்.   காவல் நிலையங்களில், அலுவலகங்களில் தங்கள் தலைக்கு மேலே காந்தி படத்தை  தொங்கவிட்டுக் கொண்டு, காந்தியைக் கொன்றவன் கோட்சே என்று சொல்லக்கூடாது என வெளிப்படையாகவே தமிழ்நாட்டின் காவல்துறையினர் மிரட்டுகிறார்கள் என்றால், தமிழ்நாட்டின் காவல்துறையும் டில்லி மாநிலத்தைப்போல் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா? பெரியார் சிலைக்கு மாலை போட்ட காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டது காவிகள் இட்ட கட்டளையால். கோட்சே, காந்தியைக் கொன்ற கொலைகாரன் என்று சொல்லக்கூடாது என்பதும் காவிகளின் கொள்கை. காவிகளின் கொள்கையை தமிழ்நாட்டின் காவல்துறை நிறைவேற்றுகிறது என்றால்...?!, மோடி&ஆர்எஸ்எஸ் வகையறாக்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தின் உண்மையான நாயகர்களை மறைத்து, பிரிட்டிஷாரிடம் மண்டியிட்ட சாவர்க்கர் வகையறாக்களை, சாமியார்களை போராளிகளாகக் காட்ட முயற்சிக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான் காந்தியைக் கொன்ற கோட்சேவை தியாகியாகக் காட்டும் முயற்சி. குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழ்நாட்டு ஊர்தியை அனுமதிக்காததைத் தொடர்ந்து அந்த ஊர்தியை தமிழ்நாடெங்கும் சுற்றிவரச் செய்தால் மட்டும் போதுமா?. கோவை பள்ளியில் நடந்த காவிகளின் ஷாகா பயிற்சிக்கு எதிராக இடதுசாரி, முற்போக்கு அமைப்புகள் திரண்டபோதும் கோவை காவல்துறையினர் காவிகளுக்கு ஆதரவாக இடதுசாரி அமைப்பினர் மீதுதான் வழக்குப் போட்டுள்ளனர். சமூகநீதிக்கான அனைத்திந்திய கூட்டமைப்பை ஸ்டாலின் அவர்கள் வரவேற்பதின் உண்மையான பொருள் நிறைவேற வேண்டுமானால் தமிழ்நாட்டில் காவல்துறையிலுள்ள காவிகளைப் பிடுங்கி எறிய வேண்டும்.

Image Thanks Bala Cartoons