நேர்காணல்

விடுதலை போராட்டத்தை சிறுமைப்படுத்த பக்தி இயக்கத்தை துணைக்கு அழைத்தல்!

[இந்திய அரசாங்கத்தின், பத்திரிக்கை தகவல் கழகம் அதனுடைய அதிகாரப்பூர்வ ஏடான புதிய இந்தியா செய்தியில், "விடுதலைப் போராட்டம் என்பதை ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரானது என்று மட்டும் பார்க்க முடியாது. அதற்கும் முன்னரே இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்த காலம் ஒன்று இருந்தது. பக்தி இயக்கம் விடுதலைப் போராட்டத்திற்கான அடிப்படையாக செயல்பட்டது. விடுதலை இயக்கத்திற்கு பக்தி இயக்கம் வலிமையை கொடுத்தது போன்று, அதே வழியில், சுயசார்பு இந்தியாவிற்கான வேட்கை, அதனோடு (பக்திஇயக்கத்தோடு) இணைந்திருந்த மாபெரும் ஆளுமைகளிடம் இருந்து பெறப்பட்டது. மீண்டும் ஒருமுறை, இந்த சுதந்திரத்தின் 75 ஆண்டு காலத்தில், நாட்டில் ஆன்மீக உணர்வு புத்தெழுச்சி அடைந்து வருகிறது. இந்த ஆன்மீக உணர்வு, தேசத்தின் மறுகட்டுமானத்திற்கு அடிப்படையாகும்" எனச் சொல்கிறது. இந்தப் பின்னணியில், பக்தி இயக்கம் குறித்து மேலான வகையில் அறிந்து கொள்வதற்காக, இந்தி இலக்கிய அறிஞர்களில் ஒருவரான அவ்தேஷ் திரிபாதியிடம் லிபரேஷன் ஏடு உரையாடியதிலிருந்து...].

 

லிபரேஷன்:

"அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை" பெறுவதற்கானது "பக்தி இயக்கம்" என பிஜேபி சொல்வதன் அர்த்தம் என்ன? இங்கே "அடிமைத்தனம்" என அவர்கள் எதனை அர்த்தப்படுத்துகிறார்கள்? "விடுதலைப் போராட்டக்" காலகட்டத்தை 12,-13 வது நூற்றாண்டுக்கு பின்தள்ளுவதால், பிரிட்டிஷ் எதிர்ப்பு விடுதலைப் போராட்டத்தின் முக்கியத் துவத்தையும் தனித்தன்மையையும் பாஜக சிறுமைப்படுத்தவில்லையா?

அவ்தேஷ் திரிபாதி:

 "அடிமைத்தனத்திலிருந்து விடுதலை" என்ற   அவர்கள் வகைப்பட்ட கருத்தினை, பக்தி இயக்கத்துடன் இணைப்பது பிஜேபி செய்யும் விஷமத்தனமான முயற்சியாகும். இப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் நமது கடந்த காலத்தையும், இலக்கிய பாரம்பரியத்தையும் இழிவுபடுத்துகிறார்கள். முகலாயர் அல்லது முஸ்லிம் ஆட்சி இல்லாத இந்தியாவின் தென்பகுதியில்தான், பக்தி இயக்கம் முதலில் உருவானது. பின்னர், அது மிகவும் செல்வாக்கு மிக்க இலக்கிய, சமூக இயக்கமாக நாடு முழுவதும் பரவியது. ஒருவேளை, அதற்கு முஸ்லிம் ஆட்சியுடன் ஏதாவது தொடர்பு இருந்தது என்றால், எங்கே முகலாயர் ஆட்சியின் செல்வாக்கு மிக்கதாக இருந்ததோ அங்குதான் அது உருவாகி இருக்க வேண்டும். பாஜகவும்/ஆர்எஸ்எஸ்சும் இப்படி செய்ய முயற்சிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகக் கூட, "ஆயிரம் ஆண்டுகளாக அடிமைத்தனம்" என்ற கருத்தினை பரப்ப முயற்சித்தார்கள். இப்படிச் செய்வதன் மூலம், முஸ்லிம் ஆட்சியாளர்களால் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியா என்ற கதையாடலை, உருவாக்க விரும்புகிறார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பினை பரப்பவும், விடுதலைப் போராட்டத்தின் போது ஆங்கிலேய ஆட்சியாளர் களுடன் அவர்கள் கூடிக்குலாவி இருந்ததை நியாயப்படுத்தவும் இந்த கதையாடல் அவர்களுக்கு உதவுகிறது. ஆர்எஸ்எஸ், இந்து மகாசபையின் தலைவர்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் பக்கம் நின்றதற்கு பல உதாரணங்கள் உள்ளன. மேலும், இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியே, முஸ்லிம் ஆட்சியாளர் களிடமிருந்து, இந்துக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுத்தது என்ற கருத்தை உருவாக்கினர். இந்தியா முழுவதும் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த போது, அவர்கள் ஆங்கிலேயர் களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, அவர்கள்தான் முஸ்லிம்களிடமிருந்து நமக்கு  'விடுதலை பெற்றுத் தருபவர்கள்' எனக் கண்டார்கள்! அவர்களுடைய ஆட்சியின் கடந்த சில ஆண்டு களில், பாஜகவும்,ஆர்எஸ்எஸ்சும், விடுதலைப் போராட்டத்தில் தாங்கள் இல்லாதது, அவர்க ளுக்கு எதிராக எப்போதும் எழுப்பப்படும் என்ற விசயத்தை உணர்ந்து கொண்டார்கள். அவர்கள் தான் உண்மையான தேசபக்தர்கள் என்று பீற்றிக்கொள்வதையும் மீறி, எப்போதும் சந்தேகத்துக்குரியவர்களாகவே இருக்கிறார்கள். விடுதலைப் போராட்டத்தில் துரோகிகளாக இருந்த, தங்களது வரலாற்றை தூக்கியெறியும் நோக்குடன், சில விடுதலைப்போராட்ட வீரர்களைத் தங்களுடையவர்களாக்கிக் கொள்ள பெருமுயற்சி செய்தனர். ஆனால் அதிலும், அவர்கள் நினைத்த வெற்றியை அடையமுடிய வில்லை. ஏனென்றால், ஆர்எஸ்எஸ், இந்து மகா சபையின் அரசியலுக்கு எதிரான, இந்த விடுதலைப் போராட்ட வீரர்களின், இந்த அல்லது அந்த அறிக்கையை யார் வேண்டு மானாலும் பொதுவெளியில் அம்பலப் படுத்தலாம். ஆக, விடுதலைப் போராட்டத்தை 12-&13வது நூற்றாண்டுக்கு பின்தள்ளுவதன் மூலம் இந்தியாவின் காலனிய எதிர்ப்புப் போராட்டத்தை முக்கியமற்றதாக்க விரும்புகிறார்கள். அது, இந்திய மக்களின் போராட்டமாகும். அதில் வேறுபட்ட மதநம்பிக்கைகளுடைய, வேறுபட்ட சாதிய, பாலின மக்கள் தங்கள் தாய்நாட்டின் விடுதலைக்காக, ஒன்றிணைந்து போராடி, தங்கள் இன்னுயிரை ஈந்தனர். இந்த ஒற்றுமை தான் பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் பரப்பும் விஷத்திற் கான முறிவுமருந்தாகும்.

லிபரேஷன்:

"அடிமைத்தனத்"திற்கு - அதாவது, இந்துக்களின் மீதான முகலாயர், முஸ்லிம் ஆதிக்கத்திற்கு எதிர்வினையாக பக்தி இயக்கம் எழுந்ததா? அவ்வாறு இல்லையெனில், பக்தி இயக்கத்தின் பின்னாலிருந்த உண்மையான உந்துதல்தான் என்ன?

அவ்தேஷ் திரிபாதி:

இல்லை; இந்துக்களின் மீதான முஸ்லிம் களின் ஆதிக்கத்திற்கு அல்லது முகலாயர் ஆட்சிக்கு  எதிர்வினையாக பக்தி இயக்கம் உருவாகவில்லை. இது நிலைநாட்டப்பட்ட உண்மை. ஆமாம், பக்தி இயக்கம் சாதிய, ஆணாதிக்க அடிமைத்தனத்தின் எதிர்வினையாக எழுந்தது; நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பிற்கு எதிர்வினையாக எழுந்தது. பக்தி இலக்கியம் உலகிலுள்ள அனைத்து விதமான சமத்துவ மின்மையையும் கேள்விக்குட்படுத்தியது; விடுதலைக்கான வழியாக அன்பையும், பக்தி யையும் நிறுவியது. முன்பே சொன்னது போல, தென்னிந்தியாவில், அடியார்கள் எனப்படும் ஆழ்வார்கள், நாயன்மார்களால் பக்தி இயக்கம் துவங்கப்பட்டது. பிறகு, வடபகுதிக்கும், இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் அது பரவியது. ஒருவேளை, அது முகலாயர் ஆட்சிக்கு எதிர்வினையாக எழுந்தது என்றால், பக்தி இலக்கியத்தில் முகலாயர்களுக்கு எதிரான விமர்சனங்களை ஒருவர் காணலாம்; ஆனால் அப்படி எதுவும் இல்லை.

14 வது நூற்றாண்டு வங்காளக் கவிஞர் சண்டிதாசர் எழுதுகிறார்;

எனது மானுட சகாவே கேள்! கேள் எனது மானுட சகோதரனே! சகலத்தையும்விட மிகப் பெரியவன் மனிதனே; எதுவொன்றும் அவனைவிட மிகப் பெரியதல்ல”.

அவர் மனித சாரத்தை, கடவுளுக்குச் சமமாக வைக்கிறார். பக்தி இலக்கியம் மனிதனை, கடவுளின் ஒரு நண்பனாக/ காதலிப்பவராக/ கடவுளைத் தேடுபவராக இருக்க வாய்ப்பளித்தது. முன்னதாக, கடவுள் கோவில்களுக்குள்ளேயே அடைக்கப்பட்டிருந்தார். பிராமண பூசாரிகள் இடைத்தரகர்களாக இருந்தனர்; பிராமண பூசாரிகளை தவிர்த்து விட்டு, பக்தி, கடவுளை ஏழைகளின் ஓட்டைக் குடிசைகளுக்கு கொண்டு வந்தது. அந்தக் காலகட்டத்தில், பக்தி இயக்கம் ஒரு புரட்சிகரப் பாத்திரத்தை ஆற்றியது. ஆக, முதன்முறையாக கீழ் சாதியினர் என அழைக்கப்பட்டவர்கள், பெண்கள், விளிம்புநிலை சமூகங்களைச் சார்ந்தவர்கள், தங்களது துக்கம், காதல், பக்தி ஆகியவற்றை பண்களாக இசைத்தனர். இஸ்லாம் இந்தியாவிற்கு வருகிறது; கலகக்கார சூஃபிகளும் வந்தார்கள்; அவர்கள், பக்திக்கு புதிய பரிமாணத்தை கொடுத்தனர். அவர்களுடைய சுஃபி பாடல்கள் (கன்காஸ்) இந்து, முஸ்லிம் இரு தரப்பினரிடையேயும் புகழ் பெற்றிருந்தது. அக்கமகாதேவியிலிருந்து, லால் டெட், மீரா, ரவிதாசர், கபீர், மாலிக் முகம்மது ஜெய்சி, சைதன்யா, சங்கர் தேவ், சோயாரா பாய், முக்தா பாய், ஏக்னாத், சூர்தாசர், துளசிதாசர் வரை முகலாயர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ எதிரான சிறு தடயத்தையும் காண இயலாது. ஆம், அவர்களது பார்வையில் வேறுபாடுகள் இருந்தன; அவர்கள் பக்தியின் பல பள்ளிகளை பிரதிநிதித்துவப்படுத்தி இருக்கலாம்; ஆனால் அவர்கள் அனைவருமே ஒரு சமத்துவ சமூகத்தை கனவு கண்டார்கள்; குரு ரவிதாஸ் அதனை பெஹும்புரம் (சாதியற்ற, வர்க்கமற்ற, வரிவசூல் இல்லாத சமூகம்) என்றழைத்தார். துளசி தாசர் அதனை ராமராஜ்யம் என்றார். வருணாஷ்ரம அமைப்பு முறையின் தீவிர ஆதரவாளராக துளசிதாசர் இருந்ததால், அவரை தனதாக்கிக் கொள்ள இந்துத்துவா கருத்தியல் முயற்சிக்கிறது. ஆனாலும், அவர்களின் முஸ்லிம் விரோத அரசியலுக்கு அவர் பயன்படமாட்டார். துளசி தாசர், ராமகதையை மக்களின் மொழியான அவாதியில் எழுதி வழங்கினார் என்பதற்காகவே, மதப் பழைமைவாதிகளால் பாதிப்புக்குள்ளானார் என்பது நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பின்வரும் இந்த கவிதையில் அவர்களுக்கு (பழமைவாதிகளுக்கு) பதில் கொடுத்தார்:

எப்படி வேண்டுமானாலும் என்னை அழைத்துக் கொள்ளுங்கள்; நானொரு மோசடி யாளன், அல்லது நானொரு பிச்சைக்காரன்; அல்லது நானொரு ராஜபுத்திரன் அல்லது நானொரு முஸ்லிம் நெசவாளி; (எப்படி வேண்டுமானாலும் என்னை அழைத்துக் கொள்ளுங்கள்).

அவர்களுடைய சாதி தீட்டாகிவிட யாருடைய மகளுக்கும் மணம் செய்விக்க என்னிடம் மகனில்லை; எல்லோருக்கும் இது நன்றாகத் தெரியும், ராமனின் அடிமை இந்தத் துளசி என்று;

எந்த பெயர் சொல்லியும் அவனை அழைக்க அனைவருக்கும் சுதந்திரமுள்ளது; விரும்பி தருமத்திற்காக பிச்சையெடுத்து வாழ்பவன் அவன்; அவன் மசூதியில் உறங்கு கிறான்; கொடுப்பதற்கோ, வாங்குவதற்கோ அவனிடம் ஏதுமில்லை.

பக்தி இயக்கத்தின் பின்னாலிருக்கும் உந்துதல் என்பது முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பில் அல்ல, அன்பின் அடிப்படையிலான சமத்துவ சமூகத்திற்கான கனவுதான் என அழுத்தம் திருத்தமாகச் சொல்ல விரும்புகிறேன்.

லிபரேஷன்:

பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும், "இந்து-தன்மை" என்பது முஸ்லிம்களை வெறுப்பது என விவரிக்கிறார்கள். பக்தி இயக்க கவிஞர்கள் ஆன்மீகத்தை இப்படித்தான் விவரித்தார்களா?

அவ்தேஷ் திரிபாதி:

பாஜகவும்/ஆர்எஸ்எஸ்சும், "இந்து-தன்மை" என்பது முஸ்லிம்களை வெறுப்பது என விவரிப்பதை தங்கள் செயல்திட்டமாக வைத்தி ருக்கிறார்கள். ஏனென்றால், அவர்களின் வகைப்பட்ட வெறுப்பு அரசியலுக்கு இது அவசியமான உயிர்மூச்சைக் கொடுக்கிறது. ஆனால், நீங்கள் இந்த வகைப்பட்ட வெறுப்பு அரசியலோடு பக்தி இயக்கத்தை இணைக்க முடியாது. பக்தியின் "இந்து-தன்மை" என்பது முரண்பட்ட பல வகைப்பட்ட கருத்துகள் சேர்ந்து கூடி வாழ்ந்ததையே பொருள்படுத்தும். சந்நியாசிகள்சம்சாரிகள், ஆண்கள், பெண்கள், கீழ் சாதியினர், மேல் சாதியினர், எதிர் பாலின உடையணிபவரிலிருந்து நிர்வாணர்கள் வரை யிலான பல வகைப்பட்டவர்களையும் பக்தி மரபில் காணலாம். கிருஷ்ணன் மீதான தங்களின் அன்பை வெளிப்படுத்தும் விதமாக முஸ்லிம்கள் பாடல் இசைத்திருப்பதை நீங்கள் காண முடியும். அவர்கள் இந்து கதாபாத்திரங்களைக் கொண்டு காதல் கதைகளை புனைந்தனர். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பக்தி மரபில் வெறுப்பிற்கான இடமில்லை. மத, சாதி, மொழி, பாலினம் என எந்த எல்லைகளும் கிடையாது. இந்த, முழு இந்தியாவையும், வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவையும் அதன் நீதியான சமூக அமைப்பிற்கான வேட்கையையும் பக்தி பிரதிநிதித்துவப்படுத்தியது. உள்ளூர் மொழிகளின் அறுதியிடலை பக்தி (இயக்கம்) பிரதிநிதித்துவப்படுத்தியது. அது சாத்திரங்களின் (புனித நூல்கள்) அதிகாரத்தை கேள்விக்குட் படுத்தியது. ஒருவேளை பிஜேபியும் ஆர்எஸ்எஸ்சும், பக்தி இயக்க மரபினை தவறாக விவரித்து முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்த முயற்சித்தால் அதனை எதிர்க்க வேண்டியது நமது கடமையாகும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

(12-13 ம் நூற்றிண்டில் எழுந்ததாகச் சொல்லப்படும் பக்தி இயக்கம், கர்நாடகாவில் உருப்பெற்றதை குறிப்பிடுகிறது. ஆழ்வார்கள், நாயன்மார்களால் குறிக்கப்படும் பக்தி இயக்கம், கேரளாவின் ஒரு பகுதியையும் உள்ளடக்கிய தமிழ்நாட்டில் 7ம் 8ம் நூற்றாண்டுகளில் எழுந்தது. -மொழிபெயர்ப்பாளரது குறிப்பு)

லிபரேஷன், பிப்ரவரி 2022                                            தமிழாக்கம் -செந்தில்